போராட்டக் களத்தில் கிராமப்புற அஞ்சலக ஊழியர்கள்

மூன்று மத்திய தொழிற்சங்கங்கள் தலைமையில் கிராமப் புற தபால் சேவை ஊழியர்கள் 16 நாட்களாக நடத்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஜூன் 7-ம் தேதி முடிவுக்கு வந்திருக்கிறது. தொழிலாளர்கள் அமல்படுத்த கோரிய கமலேஷ் சந்திரா கமிட்டி அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.

மே 22-ம் தேதி தொடங்கிய இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள 2.76 லட்சம் கிராமப்புற தபால் சேவை ஊழியர்கள் பங்கேற்றனர். அரசு ஊழியர்களிலேயே மிகவும் மோசமாக சுரண்டப்படும் பிரிவினர்களில் உள்ள கிராமப் புற தபால் சேவை ஊழியர்கள் அரசின் மோசடி பிரச்சாரங்களையும், மிரட்டல்களையும் மீறி 16 நாட்கள் உறுதியாக போராடி அரசை பணிய வைத்திருக்கின்றனர். வேலை நிறுத்தத்தை கைவிட்டால்தான் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்ற அச்சுறுத்தலுக்கு பணியாமல், பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் நாடெங்கிலும் உள்ள 1.29 லட்சம் கிராமப் புற தபால் நிலைய கிளைகளில் பணி புரியும் இந்த ஊழியர்கள் போராட்டத்தை வெற்றி பெறச் செய்திருக்கின்றனர்.

தபால் துறையில் 150 ஆண்டுகளுக்கு முன்பு காலனிய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட “துறைக்கு வெளியிலான முறை” கிராமப்புற தபால் சேவை ஊழியர் என்று பெயர் மாற்றப்பட்டு இன்றும் தொடர்கிறது. இந்த ஊழியர்கள் வேறு ஏதாவது தொழில் செய்து கொண்டே ஒரு நாளைக்கு 3 – 5 மணி நேரம் தபால் சேவைக்கான வேலைகளை செய்ய வேண்டும் என்பது இந்த வேலை வாய்ப்பின் அடிப்படை. ஆனால், நிர்ணயிக்கப்படும் இலக்குகளை எட்டுவதற்கு 8 – 10 நேரம் வேலை செய்ய வேண்டியிருப்பதால், இதையே முழுநேரமாகத்தான் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், முழு நேர வேலைக்கேற்ற ஊதியம் கொடுக்கப்படுவதில்லை. இந்த இலட்சணத்தில் தரப்பட்டுள்ள வேலை நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை எட்டாத தபால் நிலையங்கள், வேலை நேரத்துக்கு அப்பால் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் தபால் நிலையத்தை இயக்க வேண்டும் என்று சொல்கிறது கமலேஷ் சந்திரா அறிக்கை. ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும், ஓய்வூதிய உரிமைகள், குழந்தைப் பேறு விடுப்பை 3 மாதத்திலிருந்து 6 மாதமாக அதிகரித்தல் உள்ளிட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரைகளைக் கூட நிறைவேற்றாமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இழுத்தடித்து வந்த அரசு வேலைநேரத்தை மட்டும் அதிகரிப்பது அயோக்கியத்தனமல்லவா?

ஆறு மாதங்களுக்கு முன்பு இது போன்ற வேலை நிறுத்தத்தின் போது கோரிக்கைகள் 2 மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் என்று தபால் துறை இயக்குனர் வாக்குறுதி அளித்தும் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதைத் தொடர்ந்துதான் சமீபத்திய வேலை நிறுத்தம் நடத்தப்பட்டு மத்திய அரசு கோரிக்கைகள் ஏற்பதாக பணிந்திருக்கிறது. இந்தத் துறையால் கிடைக்கும் பலன்களே இவ்வாறு பணிந்திருப்பதற்குக் காரணம். கிராமப் புறங்களில் தகவல் தொடர்புக்கும் நிதி சேவைகளுக்கும் அடிப்படையாக இந்த தபால் நிலையங்கள் இருப்பதாக மத்திய அரசின் தகவல் குறிப்பு தெரிவிக்கிறது. கிராமப் புற மக்களை வங்கி வளையத்துக்குள் கொண்டு வருவதற்கான இந்தியா தபால்துறை பணப் பட்டுவாடா வங்கி (India Post Payment Bank) திட்டத்துக்கு இந்த தபால் நிலைய வலைப்பின்னல் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அது குறிப்பிடுகிறது.

நாடெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளையும், கிராமப்புற தொழிலாளர்களையும் வங்கித் துறைக்குள் கொண்டு வருவது, அதன் மூலம் மக்களின் சேமிப்புகளையும், பண பரிவர்த்தனைகளையும் நிதித்துறை சூதாட்டத்துக்குள் ஈடுபடுத்த வசதி செய்வது என்ற மோடி அரசின் திட்டத்தை அமல்படுத்துவதற்கான காலாட்படையாக அரசு இந்தத் துறை ஊழியர்களை அரசு பார்க்கிறது.

எனவே, இந்த வேலை நிறுத்தத்தின் வெற்றி தொழிலாளி வர்க்கத்தின் நீண்ட போராட்ட பயணத்தின் ஒரு சிறிய அடிதான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கார்ப்பரேட், நிதி மூலதன ஆட்சியானது இவர்களை பயன்படுத்துவதும், தேவைகள் முடிந்தபின்னர் தூக்கி எறிந்து விடுவதும் எப்போதும் நடக்கக் கூடியவை. இந்த வேலை நிறுத்த அனுபவத்தை தொகுத்துக் கொண்டு தமது அடுத்த போராட்டத்துக்குத் தயாராக வேண்டும்.

– குமார்

புதிய தொழிலாளி, ஜூன் 2018 இதழில் வெளியானது

Permanent link to this article: http://new-democrats.com/ta/rural-postal-workers-struggle/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ரிசர்வ் வங்கி கவர்னர் : உர்ஜித் படேல் போய் சக்திகாந்த தாஸ்

உர்ஜித் படேல் ராஜினாமா பற்றி பதறும் முதலாளித்துவ ஆதரவாளர்கள் பங்குச்சந்தை வீழ்ச்சியை நினைத்தும், ஐ.எம்.எஃப் பிரநிதித்துவப்படுத்தும் நிதி மூலதனத்துக்கு ஆதரவாகவும் பதறுகிறார்கள். உழைக்கும் வர்க்கத்தின் அக்கறையே வேறு.

டிஜிட்டல் பொருளாதாரம்? யாருக்காக?

உளவுத் துறை, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, பல டஜன் போலீஸ் படைகள் வைத்திருக்கும் நீங்கள் அதைச் செய்ய முடியாத கையாலாகாத்தனத்தை எங்கள் மீது சுமத்தாதீர்கள்

Close