இந்திய ரிசர்வ் வங்கி கொரோனா 2-வது அலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சரி செய்யத் தீவிரமாகப் பணியாற்றி வரும் நிலையில் கடந்த 31/05/2021 அன்றுபங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை விடுத்திருந்தது .
இந்தியாவில் கொரோனா தொற்று இந்திய வர்த்தகம், பொருளாதாரத்தைப் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையிலும் மும்பை பங்குச்சந்தை புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் ரிசர்வ் வங்கி பங்குச்சந்தையில் உருவாகியுள்ள குமிழி எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என எச்சரித்துள்ளது.
நாட்டின் வர்த்தகம், வேலைவாய்ப்பு, உற்பத்தி, நுகர்வு என அனைத்தும் கொரோனா தொற்றால் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள வேளையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
கொரோனா 2-வது அலை துவங்கிய சில நாட்கள் பங்குச்சந்தை சரிவைச் சந்தித்தாலும் அது வெறும் தடுமாற்றமாகவே இருந்தது. இதன் வாயிலாகக் கடந்த சில வாரங்களாக மும்பை பங்குச்சந்தையில் முதலீடு குவிந்து வரும் நிலையில் சென்செக்ஸ் 52,000 புள்ளிகளைத் தாண்டியுள்ளது. இதுபோலவே நிஃப்டியும் புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது.
மேலும் ஜிடிபி(GDP) என்று சொல்லக்கூடிய மொத்த உள்நாட்டு உற்பத்தி – 7.2 க்கு கீழே சென்றுள்ளது. நாட்டின் பொருளாதாரம் மோசமான நிலைக்கு அதுவும் சுமார் 40 வருட சரிவுக்குத் தள்ளப்பட்டுள்ள இந்த சூழ்நிலையிலும் வெறும் 2.56 புள்ளிகள் மட்டுமே சென்செக்ஸ் சரிந்துள்ளது.
இதன் மூலம் பங்குச்சந்தையும், இந்தியப் பொருளாதாரமும் சற்றும் தொடர்பு இல்லாமல் இயங்கி வருவது தெளிவாக வெளிப்படுகிறது. இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி இந்த வருடத்தின் இறுதிக்குள் ஒரு சரிவு அதாவது Market Correction ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதுகாப்பான துறையிலும், நிறுவனத்திலும் செய்ய வேண்டியது கட்டாயமாகியுள்ளது மட்டுமில்லாமல் வரவிருக்கும் பாதிப்பை சமாளிக்க கட்டாயம் தயாராக வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.
கொரானாவினால் நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் வேலை இழந்து, வாழ்க்கை இழந்து லட்சக்கணக்கான மக்கள் கொரானாவினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஆக்சிஜன் கிடைக்காமல், போதிய படுக்கை வசதி இல்லாமல், மருத்துவ உபகரணங்கள் மருந்துகள் இல்லாமல், தடுப்பூசி இல்லாமல் நாடே திண்டாடி வருகிறது. ஆனால் இந்த சூழ்நிலையிலும் முதலீட்டாளர்களின் பங்கு சந்தை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
இது இரண்டும் நேரெதிராக இருக்கிறது
இன்று மோடி தலைமையிலான பிஜேபி அரசு சமூக வலைத் தளங்கள் மீதும், ஓடிடி(OTT) தளங்கள் மீதும் கடுமையான அடக்குமுறையை ஏவி வருகிறது. தங்களுக்குத் தேவையான பதிவுகளை அதிகமாக போடுவது தங்களுக்கு எதிராக உள்ள பதிவுகளை, கருத்துக்களையும் படங்களையும் அவர்களே நீக்கிவிடுவது என்று சமூக வலைத்தளங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள்.
பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை தங்களுக்கு எதிரான கருத்துக்களை எதிர்கொள்ளத் துணிவற்றவர்கள் மட்டுமல்ல, அதை அடக்கி ஒடுக்கி இல்லாமல் செய்வதற்கும் முயல்பவர்களும் ஆவர்.
ஏனெனில், தங்களது பாசிச ஆட்சியை நிறுவுவதற்கு கருத்துரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற ஜனநாயக உரிமைகளை இல்லாமல் செய்வது அவர்களுக்கு முன்தேவையாக உள்ளது. அந்த வகையில் அதற்கான ஏற்பாடாகத் தான் சமூக ஊடகங்கள், மின்னணு செய்தி ஊடகங்கள், ஓ.டி.டி. தளங்களுக்கான இந்த புதிய விதிமுறைகளும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இந்த விதிமுறைகள் அமுலுக்கு வரும்பட்சத்தில் மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களுக்கு எதிரான கருத்துக்களே இல்லாத இந்தியாவை நாம் பார்க்கலாம் !
மேலும் காவி பாசிஸ்டுகளான ஆர்எஸ்எஸ் கும்பலின் நிகழ்ச்சி நிரலில்(Agendas) ஒன்றான லட்ச்சத்தீவை கைப்பற்ற துடிப்பது, லட்சத்தீவில் இஸ்லாமியர்களின் மீது ஒடுக்குமுறையை ஏவி வருகிறது.
தற்போது குஜராத்தின் முன்னாள் உள்துறை அமைச்சராக இருந்த பிரஃபுல் படேலை இலட்சதீவின் ஆட்சியாளராக(Administrator) நியமித்துள்ளது ஒன்றிய அரசு. மோடி – அமித்ஷா கும்பலுக்கு நெருக்கமான இந்த சங்கி பொறுப்பேற்றதிலிருந்து காவி-கார்ப்பரேட் நலனுக்காக இலட்சத்தீவுகளை அபகரித்துக் கொள்ளும் நோக்கத்திலான விதிமுறைகளைத் திணித்து வருகிறார்.
இலட்சத்தீவில் காய்கறிகள் விளைவிக்கும் சூழல் இல்லாததால் அம்மாநில மக்களின் பிரதான உணவு ஆட்டுக்கறி மாட்டுக்கறி ஆகும், ஆனால் தற்பொழுது மாட்டுக்கறி உணவுக்கு தடை செய்திருக்கிறார் மேலும் இலட்சத்தீவில் உள்ள மக்கள் வணிக நடவடிக்கைகளுக்காக கேரளாவில் உள்ள பெய்பூர் துறைமுகத்தைத்தான் பயன்படுத்துவார்கள். இவர் பொறுப்பு ஏற்றதில் இருந்து பிஜேபி ஆளும் கர்நாடகாவில் உள்ள மங்களூர் துறைமுகத்தை மட்டும்தான் வணிக பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டிருக்கிறார்.
இவ்வாறு இலட்சத்தீவை இன்னொரு காஷ்மீராக மாற்றத் துடிக்கும் ஆர் எஸ் எஸ்- ன் அஜெண்டாவை அவர்கள் தமது போக்கிலேயே எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளும் தங்களது லாபத்தை சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையிலும் காவி பாசிஸ்டுகளின் நிகழ்ச்சிகளுக்கும் எந்த பிரச்சனை இல்லை இல்லாமல் முன்னேறிக் கொண்டு போய் இருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளும் மக்களை உறிஞ்சி சம்பாதித்து கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மோடி அரசு ஏவிவிட்டுள்ள காவி – கார்ப்பரேட் பாசிசத்தை பாட்டாளி வர்க்கமாக அணிதிரண்டு, எதிர்த்து முறியடிக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவோம்!
-ராமசாமி.
புஜதொமு ஐ. டி. ஊழியர்கள் பிரிவு.