ஐ.டி ஊழியர்களை போலவே 1990-களுக்கு பின்னர் உருவான புதிய உழைக்கும் பிரிவினர்களில் பலருக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டமும் பல்வேறு மத்திய/மாநில சட்டங்களும் உழைப்பாளர்களுக்கு வழங்கும் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்தன.
தனியார் கல்வி நிறுவனங்களில் பணி புரியும் வாகன ஓட்டுனர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் இத்தகைய ஒரு பிரிவினர் ஆவார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகள், சுமார் 25 தனியார் மருத்துவக் கல்லூரிகள், நூற்றுக் கணக்கான துணை மருத்துவ, பட்டயப் படிப்பு மற்றும் பட்டப் படிப்பு கல்லூரிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு தனியார் கல்வி நிறுவனமும் கற்பிக்கும் ஆசிரியர்களோடு கூடவே வாகன ஓட்டுனர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், அலுவலக ஊழியர்கள், மேலாளர்களை அமர்த்தி வேலை வாங்கி வருகின்றன.
அத்தகைய ஒரு நிறுவனமான சென்னை சத்தியபாமா பல்கலைக் கழகம், ‘தாம் ஒரு லாபம் ஈட்டாத அறக்கட்டளை’ என்று சொல்லி தொழிலாளர்களுக்கு தற்காலிக விடுப்பு, ஊதியத்துடன் விடுப்பு, மருத்துவ வசதிகள் ஆகி உரிமைகளை மறுத்து வந்தது. இந்த ஊழியர்களின் பணி விபரங்களைக் கூட முறையாக பராமரிக்காமல் அவர்களை பயன்படுத்தி தூக்கி எறியும் காகிதங்கள் போல நடத்தி வந்தது சத்தியபாமா நிர்வாகம்.
இந்தத் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக 2008-ம் ஆண்டு புதிய ஜனநாயக வாகன ஓட்டுனர்கள் மற்றும் டெக்னிஷியன்கள் சங்கம் அமைக்கப்பட்டது. நிர்வாகம் தொடுத்த அனைத்து வகையான தாக்குதல்கள், பொய் பிரச்சாரம், தந்திரங்கள் இவற்றை எதிர் கொண்டு ஊழியர்களின் உரிமைகளை ஒன்றன்பின் ஒன்றாக வெல்வதில் வெற்றி பெற்று வருகிறது, தொழிற்சங்கம்.
அனைத்து ஊழியர்களுக்கும் முறையான பணிநியமன உத்தரவை வென்று தந்தது தொழிற்சங்கம். மேலும் ஈ.எஸ்.ஐ மருத்துவ வசதிக்கான உரிமை, அனைத்து ஊழியர்களின் பணி விபரங்களை முறையாக பராமரித்தல் ஆகியவற்றை வென்றெடுப்பதில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது.
இந்நிலையில் மார்ச் 23, 2017 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் டிரிப்யூனல் அனைத்து ஓட்டுனர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கும் போனஸ் வழங்கும்படி சத்தியபாமா பல்கலைக் கழகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. நிர்வாகத்தின் வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், இந்த தனியார் பல்கலைக் கழகம் கட்டணக் கல்வி வழங்குவதோடு, போக்குவரத்து, தங்கும் விடுதி, உணவு விடுதி, சுற்றுலா போன்ற துணை சேவைகளையும் வணிக ரீதியாக வழங்கி வருவதாக தீர்ப்பளித்தது. மேலும் சத்யபாமா போன்ற கல்வி நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், கட்டிடங்களையும், பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களையும் குவித்துள்ளன என்று தொழிற்சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது.
புதிய ஜனநாயக வாகன ஓட்டுனர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் இந்த வெற்றி அமைப்பாக்கப்பட்ட துறைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள அனைத்து முறைசாரா தொழிலாளர்களுக்கும் முக்கியமான மைல் கல்லாகும்.
தொழிற்சங்க உரிமைகளை மறுப்பதற்காக தனியார் கல்வி நிறுவனங்கள் முன் வைத்த வாதங்கள், ‘நாங்கள் சேவைத் துறையில் செயல்படுகிறோம், ஊழியர்களை அசோசியேட்டுகள், மேனேஜர்கள் என வேலைக்கு வைத்திருக்கிறோம், அமெரிக்க சந்தையில் செயல்படுகிறோம். எனவே எங்களுக்கு தொழிலாளர் சட்டங்கள் பொருந்ததாது’ என்ற ஐ.டி நிறுவனங்களின் வாதங்களுக்கு இணையானவை. “தொழிலாளர் சட்டங்கள் ஐ.டி துறைக்கு பொருந்தும், ஐ.டி ஊழியர்களுக்கு தொழிற்சங்கம் அமைக்க உரிமை உண்டு, தொழிற்தாவா சட்டத்தின் கீழ் வழக்கு பதியும் உரிமை உண்டு” என்று தமிழ்நாடு அரசை அறிவிக்க வைத்ததன் மூலம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழும், தொழிலாளர் சட்டங்களின் கீழும் உரிமைகளை மறுக்கும் இந்த வாதங்கள் அனைத்தையும் தகர்த்தெறிந்தது.
போனஸ் உரிமையை நிலைநாட்டும் வாகன ஓட்டுனர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் சங்கத்தின் இந்த வெற்றி ஐ.டி ஊழியர்களுக்கும் முக்கியமான ஒன்று. ஐ.டி ஊழியர்களின் ஊதியம், மாறுபடும் ஊதியம், வருடாந்திர போனஸ் அனைத்தும் ஊழியர்களின் உழைப்பால் ஈட்டப்பட்டவை, சட்டப்படி ஊழியர்களின் உரிமை. அவற்றை தம் விருப்பப்படி ஏதோ காரணம் சொல்லி நிறுத்தி வைக்க நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை.
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் ஐ.டி ஊழியர்களின் பணியிட உரிமைகளையும், பணி பாதுகாப்பையும், வாழ்வுரிமைகளையும் உறுதி செய்ய முடியும்.