செக்யூரிட்டிகள் – சோற்றுக்கான போராட்டம்!

“செக்யூரிட்டி…” என சத்தம் கத்திக் கொண்டே, “யார் இவர்களை உள்ளே விட்டது” என அதிகாரத் தோரணையில் மிரட்டும் அதிகாரிகளையும், வீட்டு உரிமையாளர்களையும் பார்க்கும் போது நமக்கு என்ன தோன்றும்? “என்ன, நாய் போல கத்துறா”ன்னு நாமும் முறைச்சி பார்ப்போம். ஆனால் கேட்டில் இருக்கின்ற செக்யூரிட்டியோ, “சார் போய்டுங்க இல்லன்னா என் வேல போய்டும்” என் நம்மை பார்த்து கெஞ்சுவார். இது நம் எல்லோருக்கும் நடந்து இருக்கும். செக்யூரிட்டி தருகின்றவர்களின் வேலையோ அல்லது வாழ்க்கையோ செக்யூர் இல்லாமல்தான் உள்ளது.

செக்யூரிட்டிகள் பலவகை! சம்பளம் மட்டும் ஒரே வகை!

எஸ்.ஓ.விலிருந்து சாதாரண வாட்ச்மேன் வரை வேலை பார்க்கும் இந்தத் துறையில் படிப்பை விட சகிப்புத்தன்மை, பொறுமை, உரிமையாளனை விட அதிக பொறுப்பு என பல தகுதிகள் தேவைப்படுகிறது. இந்த தகுதிகள் கூட கீழ்மட்டத்தில் இருக்கின்ற செக்யூட்டிகளுக்குதான் அதிகமாக பொருந்தும்.

வேலைகிடைக்காதவர்களுக்கும், உடலுழைப்பு அதிகமாக செலுத்த இயலாதவர்களுக்கும் புகலிடமாக உள்ளது இத்துறை. இதையே சாதகமாக தங்களுக்கு பயன்படுத்திக் கொண்டு இப்படி வாழ்க்கையின் விளிம்பில் உள்ளவர்களின் உழைப்பைச் சுரண்டி தங்க முட்டையிடும் வாத்து போல இத்துறை வளர்த்து உள்ளது. பெரும்பாலும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகளோ அல்லது போலீசில் உயர்மட்ட இடத்தில் இருப்பவர்களோ நடத்துகிறார்கள். இதில் நிரந்தரம் என்ற பேச்சுக்கே இடமில்லை. மீறிப் பேசினால் காவல் நாய்கள் கடித்துக் குதறும்.

ஆளரவமற்ற இடங்களிலும், ரோட்டில் நின்று கொண்டு விசிலடித்தும் ஹோட்டலுக்கு சாப்பிட அழைப்பது. பெட்ரோல் பங்க் நுழைவு வாயிலில் தானியங்கி இயந்திரதை போல பச்சை விளக்கை ஆட்டிக் கொண்டே இருப்பவர்கள் என் இன்னும் பல இடங்களில் பல வண்ண உடைகளில் ரோபாட்களைப் போல இயங்குவதைப் பார்த்திருப்போம் கடந்தும் இருப்போம்!

இவர்கள் முறையற்ற சம்பளம், விடுமறையற்ற வேலை, சொந்த ஊர்களுக்கு செல்ல அனுமதி தராதது என பல கொடுமைகளை எதிர்கொள்கின்றனர். இதனால் பணிநேரத்தில் தூக்கம், உயிரிழப்பு, மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை என பல காரணங்கள் அவர்களை துரத்துகிறது.

புற்றீசல் போல பெருகி வரும் தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களை கண்காணிக்கின்ற பொறுப்பில் உள்ள அதிகாரிகளே இந்நிறுவனத்தின் உரிமையாளரோகவோ அல்லது பங்குதாரதாகவோ இருப்பதால் இத் துறையில் நடைபெறுகின்ற சட்ட விரோத நடவடிக்கைகள் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்படுகிறது. 2005-ம் ஆண்டு செக்யூரிட்டி ஆக்ட் படி செயல்பட வேண்டும் என ஏட்டளவில்தான் உள்ளது.

தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான செக்யூரிட்டி ஏஜென்சிகள் லெட்டர் பேடோடு உலா வருகின்றன. இதில் பதிவு பெற்றது நூறைக்கூடத் தாண்டாது என தொழிலாளர்துறை அதிகாரிகள் சர்டிபிகேட் தருகிறார்கள். இப்படிப்பட்ட சட்டவிரோத ஏஜென்சிகளில் தான் தினக்கூலி காவலர்களாக பல்லாயிரம் பேர் புழுங்கிக் கொண்டிருக்கின்றனர்.

செக்யூரிட்டிக்கு சட்டமும் இல்லை! சந்தோஷமும் இல்லை!

செக்யூரிட்டி வேலை என்றாலே, 12 மணி நேர வேலை என்பது எழுதப்படாத சட்டமாக மாறிவிட்டது வேலைக்கு ஆளெடுக்கும் போதே 12 மணிநேர வேலை கட்டாயம், மாற்று ஆள் வரவில்லை என்றால் அடுத்தடுத்து டூட்டி பார்க்க வேண்டும் என வாய்மொழி ஒப்பந்தத்தை போட்டுத்தான் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இந்த கண்டிஷனை எந்த நேரத்திலும் தொழிலாளி மீறக்கூடாது. மீறினால் அடுத்த நொடியே உடம்பில் உள்ளதை உருவிக் கொண்டு வெளியேற்றி விடுவான், S.o. HR அதிகாரியை விடக் கொடூர மனம் படைத்தவர்கள் தான் S.o -க்கள்.

இதுவரை, தான் பார்த்த வேலையை நேசித்த, ரசித்த, நேர்மையாக இருந்த செக்யூரிட்டிக்கு இத்தகைய பரிசுதான் கிடைத்திருக்கிறது.

போதாக்குறைக்கு யூனிபார்ம், சேப்டி ஷீ, பெல்ட் என பட்டியலிட்டு முதல் மாத சம்பளத்தில் பாதி பணத்தை டெபாசிட்டாக பிடித்து விடுவார்கள். அந்த உளுத்துப்போன, ‘கலைப் பொக்கிஷத்தை’ எடுத்துச் சென்றுவிட்டால் உலகத்தில் வேறெங்கும் கிடைக்காது அல்லவா? கண் விழித்து வேலைபார்த்தும், தனக்கு மரியாதை கிடைக்க விட்டாலும் தனக்கு ஒதுக்கப்பட்ட வேலையைச் செவ்வனே செய்கின்ற செக்யூட்டிக்கு PF/ESI போன்ற உரிமைகளாவது இருக்கிறதா என்றால் அப்படி ஏதும் இல்லை!

சரி… சம்பளமாவது சரியாகத் தருவார்களா என்றால், பிரதிமாதம் 10-ம் தேதி முதல் பீல்டு ஆபிசர் எப்போது வருவார் என எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும். அவராகக் கூப்பிட்டு கொடுத்தால் சம்பளம், நாமாக கேட்டால் வேலை காலி!

இது போன்ற சமயங்களில் இந்த ‘உத்தரவாதமான’ வேலையைக் காப்பாற்றிக் கொள்ளவும், இன்றைக்கு சம்பளம் தருவார்களா இல்லையா என தெரிந்து கொள்ளவும் பீல்டு ஆபிசர் வந்த பிறகு, விறைப்பாக ஒரு சல்யூட் அடித்து விட்டு கொஞ்சம் நேரம் கழித்து தலையை சொறிந்து கொண்டு நின்றால் போதும் அவருடைய கருணை பார்வை செக்யூரிட்டி மீது விழுந்து சம்பளமோ அல்லது அட்வான்சோ கிடைக்கும்!

வேலையும் காப்பாத்திக்கிட்டு, சம்பளத்தையும் பெற இப்படித்தான் செய்கிறோம் என தங்களின் சம்பள பட்டுவாடா சட்டத்தின் யோக்கியதையைப் போட்டு உடைக்கிறார்கள்!

பாதுகாப்பு அவசியம் யாருக்கு?

சமூக விரோதிகளால் பாதிப்பு, பொருள் சேதம் போன்ற பாதிப்பு ஏற்படும் போதும் பாதிக்கப்படுவது செக்யூரிட்டிகள்தான். எப்படி ஆலைகளில் நிரந்தரமாவதற்குள் எத்தனை பேரை அனுப்ப வேண்டும் என முடிவு செய்து வெளியேற்றுகிறார்களோ, அதே போல செக்யூரிட்டியிலும் செய்கிறார்கள். இதனால் வேலைகிடைக்காத ரிசர்வ் பட்டாளம் அதிகமாக உள்ளது.

சாதாரண மனிதன் தூங்கும் அளவிற்குக் கூட அவர்கள் தூங்குவது கிடையாது. உடலுழைப்பு செலுத்தக் கூடிய வேலையிலிருந்து வெளியேற்றப் பட்டவர்களுக்கு புகலிடமாக உள்ள இந்தத் துறையிலதான் கொத்தடிமைத்தனமும், உழைப்புக்கேற்ற ஊதியத்தில் முறைகேடுகளும், சட்டப்படியாகவே நடந்து வருகின்றன.

தற்போது வட மாநிலத்தவரான பீகார், அஸ்ஸாம் கணிசமாக எண்ணிக்கையில் செக்யூரிட்டியாக பணிபுரிகின்றனர். அதே சமயம் தங்களுக்கு கிடைத்த இந்த வேலையே போதுமானது எனக் கருதுவதால் சுரண்டுபவர்களுக்கு இவர்கள் என்றைக்குமே தங்கச்சுரங்கம்தான்!

செல்வம் கொழிக்கும் செக்யூரிட்டி பீல்டு! வேட்டைக்காக காத்திருக்கும் ஓநாய்கள்!

அண்மையில் காப்பரேட் சாமியார் பாபா ராம்தேவ் நடத்தும் நிறுவனமான பதஞ்சலி சார்பாக நாடெங்கும் தனியார் செக்யூரிட்டி நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. ’பராக்ரம் சுரக்ஷா’ எனப்படும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் பாதுகாப்புப் பணி என்கிற பெயரில் ஆளெடுக்கும் பணிகள் ஏரியாவாரியாக நடந்து வருகிறது. இவ்வாறு தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு, முன்னாள் ராணுவ வீரர் மற்றும் ஒய்வு பெற்ற போலீசு அதிகாரிகளின் உதவியோடு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது குறித்து ராம்தேவ் பேசுகையில், “ஏற்கெனவே யோகா, ஆயுர்வேத பொருட்கள் மூலம் சுதேசி உணர்வை வளர்த்து வருகிறோம். இந்த செக்யூரிட்டி நிறுவனம் மூலம் தேசபக்தியை வளர்க்கப் போகிறோம்” என நாட்டு மக்கள் மீது அக்கறை இருப்பதை போல பேசியுள்ளான். ஆனால் உண்மை நிலைமை வேறாக உள்ளது. நாடெங்கும் பரவி வரும் மோடி அரசுக்கு எதிராக போராட்டங்களை ஒடுக்க சட்டப்பூர்வமாக கட்டப்பட்டு வரும் சட்டவிரோதமான இந்து மதவெறி குண்டர் படையே தவிர வேறொன்றுமில்லை!

மேலும், வணிக ரீதியாக தனியார் செக்யூரிட்டி நிறுவனங்களின் வருவாய் மிகப் பெரியதாக வளர்ந்து வருகிறது. இந்திய வர்த்தக மற்றும் தொழிற்சங்கம் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தத் துறையில் ஆண்டு வருவாயாக ரூ 40,000 கோடியை ஈட்ட முடியும். 2020-ம் ஆண்டில் இது ரூ 80,000 கோடியாக உயருமென மதிப்பிடப்பட்டுள்ளது.

நம் உழைப்பை உறிஞ்சிக் கொழுக்க கார்ப்பரேட் சாமியார்களும், முதலாளிகளும் ஒன்றிணைந்து, அவர்களுக்கான ஒரு குண்டர்படையைக் கட்டும் போது நாம் மட்டும் ஏன் சாதி, மதம் ஊர் எனப் பிரிந்து கிடக்க வேண்டும்? நாமும் ஒன்றிணைவோம் உழைக்கும் வர்க்கமாய்! நாமும் கட்டுவோம் நமக்கான ஒரு தற்காப்புப் படையை!

– ம.சி.சு

புதிய தொழிலாளி, ஆகஸ்ட் 2017

Permanent link to this article: http://new-democrats.com/ta/securities-exploited-mercilessly/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐடி நிறுவனங்களின் புதிய லே ஆஃப் (lay off) முயற்சி : தொழிலாளர் கூடம்

இதைப் பற்றி கொஞ்சம் யோசியுங்கள்- விப்ரோவின் WASE திட்டம் சுரண்டல் திட்டமான NEEM திட்டத்தை விட வேறுபட்டதா என்ன?

முதலாளி பெருசா, தொழிலாளி பெருசா!

இந்த ஊழியர்களைப் போல அவர்களது முன் உதாரணத்தை பயன்படுத்திக் கொண்டு நாம் சங்கமாக அணி திரண்டு உரிமைகளுக்காக போராட வேண்டும். அனைத்து தகவல் தொழில்நுட்ப ஊழியர்களும் பு.ஜ.தொ.மு...

Close