சீமான், மே 17 தமிழ் தேசியம் – லெனின் சொல்லும் தேசியம்

சீமான் முதல் மே 17 இயக்கம் வரை தமிழ் தேசியத்தை முன் வைத்து பேசி வரும் இந்த தருணத்தில் லெனின் முதலாளித்துவ தேசிய இனவாதத்துக்கு எதிராக முன் வைக்கும் பாட்டாளி வர்க்க தேசிய இன சமத்துவம், பாட்டாளி வர்க்க சர்வதேசியம் பற்றிய சில குறிப்புகளை பார்ப்போம்.

1.  தேசிய கலாச்சாரம் பற்றி

தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் முழக்கம் “தேசிய இனக் கலாச்சாரம்” அல்ல; ஜனநாயகத்தின், உலகு தழுவிய தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வ தேசியக் கலாச்சாரம் ஆகும்.

தேசிய இனக் கலாச்சாரம் என்னும் முழக்கம் முதலாளித்துவ ஏமாற்றாகும். நம்முடைய முழக்கம்: ஜனநாயகத்தின், உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசிய கலாச்சாரமாகும்.

தேசிய இனக் கலாச்சாரம் ஒவ்வொன்றிலும் – வளர்ச்சியடைந்த வடிவில் இல்லை என்றாலும் – ஜனநாயக சோஷலிசக் கலாச்சாரத்தின் கூறுகள் எப்படியும் இருக்கவே செய்கின்றன. ஏனென்றால் ஒவ்வொரு தேசிய இனத்திலும் உழைப்போரும் சுரண்டப்படுபவோருமான மக்கள் திரளினர் இருக்கிறார்கள், இவர்களது வாழ்க்கை நிலைமைகள் தவிர்க்வொண்ணாதவாறு ஜனநாயக, சோஷலிச சித்தாந்தத்தை உதித்தெழச் செய்கின்றன.

ஆனால் ஒவ்வொரு தேசிய இனத்திலும் முதலாளித்துவ கலாச்சாரமும் இருக்கிறது. கூறுகளாக அல்ல, ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரத்தின் வடிவில் இருக்கிறது. ஆகவே பொதுவான “தேசிய இனக் கலாச்சாரம்” என்பது நிலப்பிரபுக்கள், சமய குருமார்கள், முதலாளி வர்க்கத்தார் ஆகியோரது கலாச்சாரம் ஆகும்.

“ஜனநாயகத்தின் உலகத் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேசியக் கலாச்சாரம்” என்ற முழக்கத்தை முன் வைக்கும் நாம், தேசிய இனக் கலாச்சாரம் ஒவ்வொன்றின் இடமிருந்தும் அதன் ஜனநாயக சோஷலிசக் கூறுகளை மட்டும்தான் எடுத்துக் கொள்கிறோம். ஒவ்வொரு தேசிய இனத்துக்கான முதலாளித்துவ கலாச்சாரத்தையும் முதலாளித்துவ தேசியவாதத்தையும் நிபந்தனையின்றி எதிர்ப்பதற்காக மட்டும்தான் அவற்றை எடுத்துக் கொள்கிறோம்.

2. மொழிப்பிரச்சனை குறித்து

மொழிப்பிரச்சினை குறித்தும் இதையொத்த பிற பிரச்சினைகள் குறித்தும் பல்வேறு முதலாளித்துவ கட்சிகளும் நடத்தும் தேசியவாதச் சச்சரவுகளுக்கு எதிராகத் தொழிலாளி வர்க்க ஜனநாயகம் என்ன கோருகிறது என்றால், எந்த விதமான முதலாளித்துவ தேசியவாதத்துக்கும் நேர் மாறான முறையில் எல்லா தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களும் எல்லாத் தொழிலாளி வர்க்க நிறுவனங்களிலும் – தொழிற்சங்கங்களிலும், கூட்டுறவுக் கழகங்களிலும் நுகர்வாளர் சங்கங்களிலும் கல்விக் கழகங்களிலும் ஏனைய எல்லாவற்றிலும் – நிபந்தனையின்றி ஐக்கியமடையவும் ஒருங்கிணையவும் வேண்டும்.

எந்த ஜனநாயகவாதியும், இன்னும் அதிகமாக எந்த மார்க்சியவாதியும் மொழிகளது சமத்துவத்தை மறுக்கவோ, சொந்த மொழியிலே “சொந்த நாட்டு” முதலாளி வர்க்கத்தாருடன் வாக்குவாதம் புரிவதும், “சொந்த நாட்டு” விவசாயிகளிடையிலும் குட்டி முதலாளித்துவப் பகுதியோரிடையிலும் சமய குருமார் எதிர்ப்பு அல்லது முதலாளித்துவ எதிர்ப்புக் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்வதும் அவசியமென்பதை மறுக்கவோ இல்லை.

இம்மாதிரியான ஐக்கியத்தாலும் ஒருங்கிணைவாலும் மட்டுமே ஜனநாயகத்துக்காக முனைந்து நின்று பாடுபட முடியும்; மூலதனத்துக்கு எதிராக போராட முடியும் (மூலதனம் ஏற்கனவே சர்வதேசியத் தன்மையைப் பெற்றுள்ளது., மேலும் மேலும் சர்வதேசியத் தன்மையைப் பெற்று வருகிறது); தொழிலாளர்களது நலன்களைப் பாதுகாத்து நிற்க முடியும்; எல்லாத் தனியுரிமைகளுக்கும் எல்லாச் சுரண்டல்களுக்கும் அன்னியமான புதிய வாழ்க்கை முறையை நோக்கி மனிதகுலம் வளர்ச்சியுறுவதற்காகப் போராட முடியும்.

3. முதலாளித்துவ தேசியவாதமும், பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும்

மிதவாத முதலாளித்துவ தேசியவாதம் எல்லாம், தொழிலாளர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் சீர்கேட்டை உண்டாக்குகின்றன. சுதந்திர இலட்சியத்துக்கும் பாட்டாளிகளின் வர்க்கப் போராட்ட இலட்சியத்துக்கும் மிகப்பெரிய அளவில் தீங்கு இழைக்கின்றன. இந்த முதலாளித்துவ போக்கானது (மற்றும் முதலாளித்துவ-நிலவுடைமை) போக்கானது “தேசிய இனக் கலாச்சாரம்” என்ற முழக்கத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இருப்பதால், இது மேலும் அதிக அபாயம் விளைவிப்பதாகி விடுகிறது.

முதலாளித்துவ தேசியவாதமும் பாட்டாளி வர்க்கச் சர்வேதேசியவாதமும் இணக்கம் காண முடியாத பகைமை கொண்ட இருவேறு கோஷங்களாகும். இவை முதலாளித்துவ உலகில் முழுமையிலும் நிலவும் மாபெரும் இரு வேறு வர்க்க முகாம்களுக்கு ஏற்ப அமைந்து, தேசிய இனப் பிரச்சினையில் இருவேறு கொள்கைகளின் (மேலும் இருவேறு உலகக் கண்ணோட்டங்களின்) வெளிப்பாடுகளாக விளங்குகிறவை.

வளர்ந்து செல்லும் முதலாளித்துவமானது, தேசிய இனப் பிரச்சினையில் இரண்டு வரலாற்றுப் போக்குகளை அறிந்திருக்கிறது. ஒன்று: தேசிய இன வாழ்க்கையும் தேசிய இன இயக்கங்களும் துயிலெழுதலும், எல்லா விதமான தேசிய இன ஒடுக்குமுறைக்கும் எதிராக போராட்டம் மூளுதலும், தேசிய இன அரசுகள் அமைக்கப்படுதலும். இரண்டாவது: எல்லா வடிவங்களிலும் தேசிய இனங்களிடையே ஒட்டுறவு வளர்ந்து மேலும் மேலும் துரிதமாதலும், தேசிய இனப் பிரிவினைச் சுவர்கள் தகர்க்கப்படுதலும், மூலதனத்தின், பொதுவாகப் பொருளாதார வாழ்வின், அரசியல், விஞ்ஞானம் முதலானவற்றின் சர்வதேச ஒற்றுமை உருவாக்கப்படுதலும்.

இவ்விரு போக்குகளும் முதலாளித்துவத்தின் உலகு தழுவிய விதியாகும். முன்னது முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பத்தில் ஆதிக்க நிலையில் உள்ளது. பின்னது முதிர்ச்சியடைந்து சோஷலிச சமூகமாக உருமாற்றம் பெறுவதை நோக்கிச் செல்லுகின்ற முதலாளித்துவத்தின் இயல்பினை வெளிப்படுத்துவதாகும்.

4. தேசிய இன வேலைத்திட்டம்

மார்க்சியவாதிகளது தேசிய இன வேலைத் திட்டம் இவ்விரு போக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, பின்வருவனவற்றுக்காக பாடுபடுகிறது.

  • முதலாவதாக, தேசிய இனங்களின், மொழிகளின் சமத்துவத்துக்காகவும், இங்கு எந்த விதமான தனியுரிமைகளும் அனுமதிக்கப்படலாகாது.
  • இரண்டாவதாக, சர்வதேசிய வாதம் என்னும் கோட்பாட்டுக்காகவும், முதலாளித்துவ தேசியவாதத்தால் (மிக மிக நயமானதாலுங் கூட) பாட்டாளி வர்க்கம் நச்சுப்படுத்தப்படுவதை எதிர்த்து இணக்கத்துக்கு இடமில்லாப் போராட்டம் நடத்த வேண்டும்.

எல்லா விதமான “நேர்முக” தேசிய இன வேலைத் திட்டங்களையும் கொண்டு முதலாளி வர்க்கம் மக்களை ஏமாற்றட்டும். வர்க்க உணர்வு படைத்த தொழிலாளி அதற்குக் கூறும் பதில் இதுதான்: தேசிய இனப் பிரச்சினைக்குரிய தீர்வு (முதலாளித்துவ உலகில், இலாபத்துக்கும் சண்டை சச்சரவுக்கும் சுரண்டலுக்குமான உலகில், பொதுவாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்படியான அளவுக்கு) ஒன்றே ஒன்றுதான்; முரணற்ற ஜனநாயகம் ஒன்றேதான் அந்தத் தீர்வு.

தொழிலாளி வர்க்க ஜனநாயகத்தின் தேசிய இன வேலைத்திட்டம் வருமாறு:

  • எந்த தேசிய இனத்துக்கும் எந்த மொழிக்கும் எந்தவிதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை;
  • தேசிய இனங்களது அரசியல் சுயநிர்ணயப் பிரச்சினை, அதாவது அவை அரசுகளாகப் பிரிந்து செல்லும் பிரச்சினை, முழு அளவுக்குச் சுதந்திரமான, ஜனநாயகமான வழியில் தீர்க்கப்படுதல்;
  • எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எந்த விதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ, தேசிய இனங்களது சமத்துவத்துக்கு அல்லது தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைகளுக்கு ஊறு செய்வதாக இருக்கும்படியான எந்த நடவடிக்கையும் சட்ட விரோதமானதென்றும் செயலுக்கு வர முடியாததென்றும் அறிவித்தல்;
  • இம்மாதிரியான நடவடிக்கை அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானதாக அறிவிக்கப்பட்டு நீக்கப்படுதல்;
  • இதனைச் செயல்படுத்த முயலுவோர் குற்றவாளிகள் எனத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கோருவதற்கு எந்தக் குடிமகனுக்கும் உரிமை அளித்திடும் சட்டம் ஒன்றை பிறப்பித்தல்.

– தேசிய இனப் பிரச்சினை பற்றிய விமர்சனக் குறிப்புகள் (முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1979ல் வெளியிடப்பட்டது) என்ற நூலிலிருந்து.
மொழிபெயர்ப்பாளர் : ரா கிருஷ்ணையா

#NDLFCelebratesLenin

Permanent link to this article: http://new-democrats.com/ta/seeman-may17-lenin-shows-the-way-to-working-class/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வேலையை விட்டால் 5 மடங்கு சம்பளம் வெகுமதி

சென்ற ஆண்டு (2015) இறுதியில் இன்ஃபோசிஸ் நிதித்துறை தலைமை அலுவலர் ராஜீவ் பன்சால் பதவியை விட்டு, டாக்சி அழைப்பு நிறுவனம் ஓலாவின் நிதிப் பிரிவின் தலைவராக சேர்ந்தார்....

ஐ.டி ஊழியர்கள் சங்கம் அமைக்க தடை தகர்ந்தது!

அநீதிக்கும், அடக்குமுறைக்கும் முடிவு கட்டுவோம்! அன்பார்ந்த நண்பர்களே! வணக்கம், நாங்கள் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற தொழிற்சங்கத்தின் ஐ.டி. ஊழியர்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒன்றரை...

Close