நீங்கள் சிறப்பாக வேலைகளை முடித்ததாய் சொல்லி உங்கள் மேலாளர் உங்கள் தோள்மீது தட்டிக்கொடுப்பது நட்பு எல்லையை மீறுகிறதா?
சகஊழியர் உங்களுடன் தொடர்பு கொள்ள அடிக்கடி தொந்தரவு செய்து கொண்டே இருப்பதால் உங்களுக்கு வேலைக்குச் செல்லவே பயமாக இருக்கிறதா?
இதைப்பற்றி வெளிப்படையாக பேச இதுதான் சரியான நேரம்!
வேலைக்குப் போகும் பெரும்பான்மையான பெண்களுக்கு இதுதான் பணியிட நிலைமை. தேவையில்லாமல் பார்வைக் கணைகள் தொடுப்பது, தவறான கண்ணோட்டத்துடன் தொடுவது, வேலைக்கு பதிலாக அப்பட்டமாக பாலியல் ரீதியான சேவைகளை கேட்பது என்று வேலைச் சூழலில் பெண்கள் எதிர் கொள்ளும் பகைமை அதிகரித்துக் கொண்டே போகிறது.
பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்கள் பொதுவாக அமைதியாகவே இருந்து விடுகிறார்கள். அமைதியாக இருப்பதைத் தவிர வேறுவழியில்லை என்று நினைத்துக் கொண்டு யாரிடமும் அவர்களுடைய குறைகளை சொல்வதில்லை. ஆனால், பெண்கள் விழித்துக் கொண்டு கொள்ளவும் இவற்றைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள். இதன்மூலம் மற்ற பெண்களையும் பாதுகாக்கலாம் என்பதால் இது முக்கியமானது.
வேலை செய்யுமிடத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண்களுக்கு விசாகா (Vishaka) கமிட்டி வகுத்திருக்கும் சட்ட வழிமுறைகள்
நேரடியாகவோ மறைமுகமாகவோ பின்வரும் வகையிலான தொந்தரவுகள் பாலியல் தொந்தரவுகள் என கருதப்படும்:
அ. உடலைத் தொட்டு முயற்சி செய்வது
ஆ. பாலியல் உறவுக்கு அழைப்பது
இ. பாலியல் ரீதியாக பேசுவது
ஈ. பாலியல் படங்களை காட்டுவது
உ. மற்ற வரவேற்க தகாத உடல்மொழியிலான, வாய்மொழியிலான பாலியல் தொந்தரவு
சட்டத்தை அறிந்துகொள்ளுங்கள்
பின்தொடரல், அவமானப்படுத்துதல் மற்றும் இணையத்தில் தொந்திரவு செய்தல் போன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை எதிர்த்து போராட இந்திய குற்றவியல் பிரிவு சட்டத்தில் பின்வரும் ஐந்து பிரிவுகள் உள்ளன.
பிரிவு 509
இந்தப் பிரிவின் படி, பெண்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலான வார்த்தை, சைகை அல்லது செயல் ஆகியவை பாலியல் ரீதியிலான துன்புறுத்தலாகும். ஆரம்பத்தில் பெண்களை பொதுவெளியில் பாலியல் ரீதியாக கேலி (அல்லது ஈவ்டீசிங்கின் நீர்த்துப் போன வடிவம் ) செய்பவர்களை தண்டிக்கவே உருவாக்கப்பட்டது என்றாலும் இந்தப் பிரிவு இணையத்தில் நடக்கும் பெண்களின் மீதான தாக்குதலுக்கும் பொருந்தும். 2001-ம் ஆண்டு 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன் தனது வகுப்பில் படிக்கும் மாணவிகளைப் பற்றி இணையத்தில் தரக்குறைவாக பதிவிட்டதற்காக இப்பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது இணையத்தில் செய்யப்பட்ட குற்றத்தை கட்டுப்படுத்த பிரிவு 509-ன் வெற்றிகரமான பயன்பாடு மட்டுமல்ல, சிறார் தண்டிக்கப்பட்டதும் இதுவே முதல்முறையாகும்.
குற்றவியல் சட்டம் (திருத்தம்) 2013-ல், பிரிவு 354A-ஐ சேர்த்ததன் மூலம் பாலியல் தொந்தரவு என்பது மேலும் விரிவாக வரையறுக்கப் பட்டிருக்கிறது. இந்த பிரிவு தொட்டு பேசுவது, உறவுக்கு அழைப்பது, பாலியல் ரீதியாக பேசுவது, பாலியல் படங்களை காட்டுவது, வரவேற்கதகாத உடல்மொழியிலான, வாய்மொழியிலான பாலியல் தொந்தரவு, பாலியல் சாயம் கலந்த பேச்சு போன்றவற்றை குற்றங்களாக்கி இருக்கிறது.
பிரிவு 354D
இந்த பிரிவின் படி பெண்களை ‘பின்தொடர்வது’ அல்லது ‘துரத்துவது’ குற்றமாகும். பெண்களின் மின்னணு தகவல் தொடர்பை வேவு பார்ப்பதும் குற்றமாகும்.
பிரிவு 507
அடையாளம் தெரியாத விதத்தில் பெண்களை தொடர்பு கொள்வதன் மூலம் தொந்தரவு செய்வது. இணைய வழியான தொந்தரவுகள், பயமுறுத்தல்கள் போன்றவற்றிற்கு எதிராக இந்த பிரிவை பயன்படுத்தலாம்.
பிரிவு 499
இந்த பிரிவு அவமானப்படுத்துவதைப் பற்றியது. ஒரு பெண் இணையத்தில் அவமானப்படுத்தப் பட்டால் அவர் இந்த பிரிவைப் பயன்படுத்தி சட்டப்படியான நடவடிக்கை எடுக்கலாம்.
நன்றி: Time of India, Chennai Times
மொழிபெயர்த்தவர் : வெளிச்சம்