ஐ.டி.துறையில் அடிமை வியாபாரம்!

முன்னொரு காலத்தில் உலகெங்கும் அடிமை முறை இருந்ததாகவும், அடிமைகளுக்கு சொந்தக்காரர் தன் வசமுள்ள அடிமைகளை இன்னொருவருக்கு விற்கவும், வாங்கவும் செய்யலாம் எனவும், இப்படி வாங்கி விற்கப்படும் அடிமைகளுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதும் நம்மில் பலர் அறிந்திருக்கலாம். அந்த அடிமை முறை ஐ.டி துறையில் கோலோச்சுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

வெரிசான் என்ற அமெரிக்க தொலைத் தொடர்புத் துறை நிறுவனம் இந்தியாவின் இன்ஃபோசிஸ் உடன் 70 கோடி டாலர் (இந்திய ரூபாய் அளவில் சுமார் ரூ 5,000 கோடி) மதிப்பிலான ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியாவில் 1,000 ஊழியர்களும், அமெரிக்காவில் 2,500 ஊழியர்களும் வெரிசானிலிருந்து இன்ஃபோசிஸ்-க்கு மாற்றப்பட உள்ளனர். இது தொடர்பாக ஊழியர்களிடம் எந்தக் கருத்தும் கேட்காமல் நிறுவனத்தின் லாப நோக்கத்தை மட்டுமே அடிப்படையாக வைத்துக் கொண்டு இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுகிறது. பண்டைய காலத்தில் அடிமைகளை உடைமையாக வைத்திருந்த ஆண்டைகள் அடிமைகளை சந்தைகளில் விற்பது போல, கலந்தாலோசிக்கப்படாமலேயே ஐ.டி ஊழியர்கள் ஒரு முதலாளியிடம் இருந்து மற்றொரு முதலாளிக்கு மாற்றம் செய்யப்படுகின்றனர்.

வெரிசான் அமெரிக்காவின் மிகப் பெரிய தொலைத் தொடர்புத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனம் $10,000 கோடி (இந்திய ரூபாய் மதிப்பில் 7.5 லட்சம் கோடி) ஆண்டு வர்த்தகம் செய்யும் பெரிய நிறுவனமாகும்.

இந்த வெரிசான் – இன்ஃபோசிஸ்-ன் ஒப்பந்தத்தின்படி வெரிசான் ஊழியர்கள் வெரிசானில் தங்கள் வேலையை ராஜினாமா செய்ய வேண்டும். அவர்களுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் புதிய பணி வழங்கல் கடிதம் வழங்கப்படும். முதல் ஒரு ஆண்டுக்கு மட்டும் ஊழியர்களுக்கு வெரிசானில் வாங்கிய ஊதியம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. இன்ஃபோசிஸ்க்கு மாறுவதற்கு விருப்பம் இல்லை என்றால் வெரிசானில் வேலை இல்லை. எனவே, ஊழியர்கள் இன்ஃபோசிஸ் வேலையை ஏற்பதைத் தவிர அவர்களுக்கு வேறு மாற்று வழி இல்லை.

இவ்வாறு ஐ.டி ஊழியர்கள் அடிமைகளாக நடத்தப்படுவதற்கான துலக்கமான உதாரணம் இது. தொழிற்சங்கங்கள், தொழிலாளர் உரிமை பற்றிய விழிப்புணர்வும் செயல்பாடும் இல்லாத ஐ.டி துறையில் ஆரம்பம் முதலே ஊழியர்கள் அடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர்.

அடிமைகள் தங்கள் சக அடிமைகளுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்பட முடியுமா? ஆண்டான் ஒரு அடிமையை கொடூரமாக தாக்கும் போது மற்ற அடிமைகள் தலை குனிந்து எதுவும் நடக்காததைப் போல தங்கள் வேலையை செய்து கொண்டிருப்பார்கள். இப்படித்தான் போன வருடம் இந்திய வெரிசானில் 1000 ஊழியர்கள் பௌன்சர்களை வைத்து வேலையை விட்டு துரத்தப் பட்டபோது பிற ஊழியர்கள் அதை எதிர்த்து போராடவில்லை. அதற்கு முன்னர் டி.சி.எஸ்-ல் 25,000 ஊழியர்கள், விப்ரோவில் 6,000 ஊழியர்கள், காக்னிசன்டில் 10,000 ஊழியர்கள் கொத்துக் கொத்தாக வெளியேற்றப்பட்ட போதும் பிற ஊழியர்கள் தமது கருமமே கண்ணாக இருந்தனர்.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு முன்னணி ஐ.டி நிறுவனம் கர்ப்பமாக இருந்த ஒரு பெண் ஊழியரை, மகப்பேறு விடுப்பு கொடுக்க மறுத்து, எச்.ஆர் மூலம் அச்சுறுத்தி, மிரட்டி வேலையை விட்டு கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்து வெளியேற்றியது. அந்த ஊழியரின் மேலாளரோ, சக ஊழியர்களோ அதற்கு எந்த மறுப்பையும் காட்டவில்லை.

ஊழியர்களுக்கு விடுப்பு என்பது அவர்களது தேவைக்காக வழங்கப்படும் உரிமை. ஆனால் ஐ.டி நிறுவனங்களில் அமெரிக்க, ஐரோப்பிய வாடிக்கையாளர் நிறுவனங்களில் அந்நாட்டு பண்டிகைகளான கிருஸ்துமஸ் போன்ற விடுமுறை விடப்படும் போது அந்த புராஜக்ட்களில் பணி புரியும் இந்திய ஊழியர்கள் கட்டாயமாக விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை அமலில் உள்ளது. இதை எதிர்த்து யாரும் குரல் எழுப்புவதில்லை.

சக அடிமைகள் அல்லது தானே சாகும் வகையில் சித்திரவதை செய்யப் பட்டாலும் அதை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் அடிமைகள் இருந்தார்கள். ஒரு ஆய்வின் படி, தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் 8000 க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். சட்டவிரோத பணிநீக்கம்தான் இதற்கு முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. இதைக் கண்டித்து சட்ட விரோத பணிநீக்கத்துக்கு எதிராக போராட முன்வராமல் தங்கள் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் ஐ.டி ஊழியர்கள்.

ஆண்டான்களின் பேராசையை பூர்த்தி செய்ய அடிமைகள் நேர வரம்பின்றி நாள் முழுக்க வேலை செய்ய வேண்டி கட்டாயப்படுத்தப் பட்டார்கள். ஐ.டி ஊழியர்களும் நாள் முழுக்கவும் வார விடுமுறையிலும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். வீட்டுக்குப் போன பிறகும் தொலைபேசி மூலம் அலுவலக கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இதை எல்லாம் எதிர்த்து கேட்காமல் தொடர்கிறது ஐ.டி ஊழியர்களின் கார்ப்பரேட் சேவை.

அடிமைகளில் விசுவாசமானவர்கள் என தேர்ந்தெடுக்கப்பட்ட கங்காணிகள் வேலையில் சுறுசுறுப்பாக வைக்க பிற அடிமைகளை வதைத்து துன்புறுத்தினார்கள். கொடூர தண்டனைகளை நிறைவேற்றினார்கள். ஆனால் கங்காணிகள் எப்போதும் ஆண்டைகளாக மாற முடியாது. ஐ.டி துறையிலும் ஊழியர்களை கண்காணித்து அச்சுறுத்துவது, வேலை நீக்கத்தை அமல்படுத்துவது என்று எச்.ஆர் அதிகாரிகள் நவீன கங்காணிகளாக இருக்கிறார்கள்.

அடிமைகள் தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக அணி திரண்டு தங்கள் உரிமைகளுக்காக கூட்டாக போராடுவதில்லை. சமீபத்தில் யமஹா நிறுவனம் 2 ஊழியர்களை பணிநீக்கம் செய்த போது சக தொழிலாளர்கள் ஒற்றுமையாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். ஆனால், தன் தலைமீது இடியே விழுந்தாலும், ஐடி ஊழியர்கள் சங்கத்தில் சேர்வதற்கும் தங்கள் அடிப்படை உரிமைகளுக்காக போராடுவதற்கும் தயங்குகிறார்கள்.

இவ்வாறு ஊழியர்கள் அடிமைகளாக நடத்தப்படும் நிலையில்தான் வெரிசான் நிர்வாகம் ஊழியர்களின் விருப்பமோ ஒப்புதலோ இல்லாமலே அவர்களை இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் பேரம் பேசி விற்றிருக்கிறது. ஊழியர்களின் நலன்கள் காக்கப் படாமல் கூட்டாக விற்கப் பட்டிருக்கிறார்கள்.

அதுவும் இந்த ஒப்பந்தம் ஒரு ஆண்டே செல்லத்தக்கது. இன்ஃபோசிஸ் நிறுவனம் ஒரு ஆண்டிற்கு பிறகு தொடர்ந்து வேலையில் வைத்திருக்குமா என்ற நிச்சயமின்மை உள்ளது. இது கடந்த ஆண்டு போல மற்றொரு வழியில் நடக்கும் ஆட்குறைப்பு நிகழ்முறை என்ற அச்சம் ஊழியர்களுக்கு உள்ளது. மேலும் வெரிசானில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் ஊதிய உயர்வு டிசம்பர் மாதம் வழங்கப்படும். அக்டோபர்-நவம்பர் மாதத்தில் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மாற்றப்படுவதால் அவர்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு நிலையும் ஏற்படும்.

விடுமுறை நாட்கள், கிராச்சுவிட்டி, போனஸ் போன்றவற்றுக்கான பணம் பணி மாற்றத்திற்கு முன்பே வெரிசானால் வழங்கப்பட்டு விடும் என்றாலும், புதிய ஊழியர்களாக இன்ஃபோசிஸ்-ல் சேரும் ஊழியர்களின் பணி தொடர்ச்சியும் மூப்பும் துண்டிக்கப்பட்டு விடும்.

அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்களில் பலர் இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு மாறுவதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தியாவிலோ குறைந்த பட்ச எதிர்ப்பைக் கூட ஊழியர்கள் காட்டவில்லை. எனவேதான், இந்திய ஐ.டி நிறுவனங்கள் எந்த சட்டதிட்டத்திற்கும் பயப்படாமல் மிரட்டி ஊழியர்களை வேலை வாங்குகின்றன.

ஒரு ஆட்டோ ஓட்டுனரையோ, கூலித் தொழிலாளரையோ அடித்தால் தட்டிக் கேட்பதற்கு சங்கம் உள்ளது. ஆனால், இந்தியாவின் ‘வளர்ச்சி’யில் பெரும் பங்கு உடையதாக சொல்லப்படும் தகவல் தொழில் நுட்பத் துறையில் பல லட்சம் பேர் வேலை செய்தாலும் அவர்களுக்கு வலுவான சங்கம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், 2015-ல் பு.ஜ.தொ.மு ஐ.டி. ஊழியர்கள் பிரிவு துவங்கப்படும் வரை ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கம் அமைக்க முடியுமா என்பதே கேள்விக்குறியாக இருந்தது. ஐ.டி. ஊழியர்களது தொழிற்சங்க உரிமையை பு.ஜ.தொ.மு நிலைநாட்டிய பின்னரும், வேலைபறிப்பு என்ற பயத்தைவிட நாஸ்காம் கருப்புப் பட்டியலில் சேர்த்து, எதிர்காலத்தில் வேலையே கிடைக்காமல் செய்துவிடுவார்களோ என்கிற அச்சம்தான் ஐ.டி ஊழியர்களை ஆட்டிப்படைக்கிறது. தொழிற்சங்கத்தில் அணிதிரள விடாமல் அவர்களை தடுக்கிறது.கடந்த காலங்களில் அடிமை முறையானது இழப்புகளுக்கு அஞ்சாத போராட்டங்களால்தான் உடைத்தெறியப்பட்டுள்ளது என்பது வரலாறு. இந்த வரலாறு மீண்டும் திரும்ப வேண்டாமா?

– சியாம் சுந்தர்

புதிய தொழிலாளி (அக்டோபர்-நவம்பர்’18)

Permanent link to this article: http://new-democrats.com/ta/slave-trade-it-industry-putho-nov2018/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி ஊழியர்கள் என்ன கிள்ளுக்கீரையா?

ஐ.டி துறையில் மட்டும் பெரிய நிறுவனங்கள் ஒவ்வொரு காலாண்டிலும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை, நிறுவனத்தை விட்டு வெளியேறிய/வெளியேற்றப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை, புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை என்று அறிவித்துக்...

ஊழியர்களின் உழைப்பை துச்சமாக மதிக்கும் ஐ.டி/ஐ.டி சேவை நிறுவனங்களின் திமிருக்கு என்ன பின்னணி?

ஐ.டி நிறுவனங்களுக்காக உழைத்து பல லட்சம் கோடி மதிப்பிலான துறையாக மாற்றிய ஊழியர்களின் நலனையும், கருத்துக்களையும் துச்சமாக மதித்து ஒவ்வொரு காலாண்டு நிதி அறிக்கையிலும், ஆண்டு நிதி...

Close