ஐ.டி ஊழியர்களின் சமூகப் பணிகள் – தேவை ஒரு புதிய பார்வை

ம்ம நாட்டுல யாருக்குமே சமூக அக்கறை இல்லை என்று சொல்ல முடியுமா? ஐ.டி துறையில் யாருக்குமே சமூக அக்கறை இல்லை என்று சொல்ல முடியுமா? ஐ.டி துறையில் இருப்பவர்கள் எல்லாரும் சுயநலவாதியா இருக்காங்க என்று பலர் சொல்கிறார்கள்.
ஐடி துறையில் சுயநலவாதிகள் இருக்கிறார்கள், ஆனால் ஐடி துறையில் இருக்கவங்க எல்லோரும் சுயநலவாதிகள்இல்லை.

பல்வேறு உதாரணங்களை இதற்கு சொல்ல முடியும்.

எனக்கு தெரிந்த வகையில் சில நண்பர்கள் ஒன்றாக இணைந்து பெண் குழந்தைகளை காப்போம் என்று வாரா வாரம் அல்லது கிடைக்கும்போது அதற்கான சில வேலைகளை தங்களால் இயன்ற வரையில் செய்து வருகிறார்கள். அதற்காகவே ஒரு குழு, அமைப்பு அதற்கு ஒரு பெயரிட்டு செயல்படுகிறார்கள். தங்களால் இயன்ற அளவு நேரம் பணம் பொருள் போன்றவற்றை செலவிடுகிறார்கள். Facebook, whatsapp என்று சமூக ஊடகங்களிலும், நேரிலும் தங்களது கருத்துக்களை, சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறார்கள்.

மற்றொரு பக்கம் சில நண்பர்கள் கல்வியை வலியுறுத்தி அதற்கான பிரச்சாரங்கள் செய்கிறார்கள். அரசுப் பள்ளிகள், ஆசிரமங்கள், தாங்கள் வசிக்கும் பகுதி என்று பல இடங்களில் நேரில் சென்றும், சமூக ஊடகங்களின் வழியாகவும் தங்களது கருத்துக்களை பிரச்சாரம் செய்கிறார்கள். இவர்களும் தங்களது வருவாயில் ஒரு பகுதியை, நேரத்தை இதற்காகவே செலவு செய்கிறார்கள்.

மற்றொரு பக்கம் பாலியல் கல்வி, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பற்றி பிரச்சாரம் செய்கிறார்கள். சிறுசிறு குறும்படங்கள், நாடகங்கள் கூட நடத்துகிறார்கள். புகைப்படக் கலையை இதற்காக பயன்படுத்துகிறார்கள்.

இன்னும் சிலர் பெண்ணுரிமை, ஆணாதிக்கம் பற்றி பேசுகிறார்கள். சமூகத்தின் பிற்போக்குத்தனங்களை எதிர்ப்பதற்காக தங்களது குடும்பத்துடன் முரண்படவும் தயாராகவே இருக்கிறார்கள் இவர்கள்.

இன்னும் சிலர் சாதி எதிர்ப்பு, சமூக முன்னேற்றம் பற்றியெல்லாம் பேசுகிறார்கள். இதற்காக குடும்பத்தில், உடன் பணிபுரிபவர்கள், மேலதிகாரிகள் மத்தியில் வரும் எதிர்ப்பு என்று அனைத்தையும் எதிர்கொண்டு தங்களது கருத்துக்களை நேரிலும் சமூக ஊடகங்களிலும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

இவர்களெல்லாம் எங்கோ ஒரு மூலையில் இருக்கவில்லை, நம்முடன் தான் இருக்கிறார்கள். எனவே ஐ.டி துறையில் பணிபுரிபவர்களுக்கு சமூக அக்கறை இல்லை என்று சொல்வது அபத்தமாகும். அவரவர்களது சமூகப் புரிதல், அனுபவம், கண்ணோட்டம் களுக்கு ஏற்ப ஏதாவது ஒரு குழுவில் தங்களை இணைத்துக் கொள்கிறார்கள். தொடர்ச்சியாக இதுபோன்ற செயல்பாடுகளின் ஊடாக சிலர் தங்களது அரசியல், சமூக புரிதல்களை வளர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் சமூக அக்கறை இல்லாதவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மேலே சொன்ன எந்தக் குழுவிலும் இல்லாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து விடுகிறார்கள். சமூக அக்கறையே இல்லாதவர்களை விடுங்கள், பிறகு பார்த்துக்கொள்ளலாம்.

சமூகத்தில் ஏன் எந்த பெரிய மாற்றமும் நிகழாமல் உள்ளது? எவ்வளவு பிரச்சினைகள் நடக்கின்றன? அதற்கெல்லாம் பேசுகிறார்கள், எழுதுகிறார்கள் ஆனால் எந்த மாற்றமும் தெரியவில்லையே என்று பலர் இதுபோன்ற செயல்பாடுகளிலிருந்து விலகிக் கொள்கிறார்கள். அவர்கள் விட்டுச் சென்ற இடத்தில் புதிதாக சிலர் இணைந்து கொள்கிறார்கள்.

சமூகத்தில் மாற்றம் நடக்கவேயில்லை என்று சொல்லமுடியாது. நிறைய மாற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றது. ஆனால் எதிர்பார்ப்பது போன்ற பெரிய மாற்றம் வரவேண்டும் என்றால் சமூக அக்கறை உள்ளவர்களது செயல்பாடுகளை கொஞ்சம் பரிசீலித்தால் நல்லது. இதனை சமீபத்தில் நடந்த ஒரு துயரச் சம்பவத்துடன் பார்க்கலாம்.

சில தினங்களுக்கு முன்னர் தேனி மாவட்டத்தில் 14 வயது மதிக்கத்தக்க பள்ளி செல்லும் பெண் குழந்தை பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். காவல் நிலையத்தில் இது பற்றி அவரது குடும்பத்தார் புகார் கொடுக்க சென்றபோது புகாரை ஏற்காமல் தட்டிக் கழித்துள்ளனர் காவல்துறையினர். அவர் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதே இதற்கு காரணம். இந்த துயரச் செய்திக்குள்,

1. பெண் குழந்தை நலன்
2. பெண் கல்வி
3. பெண்கள் பாதுகாப்பு
4. பாலியல் வக்கிரம்
5. சாதி ஆதிக்கம்
6. ஆணாதிக்கம்

என்று மேலே சொன்ன சமூக அக்கறையுள்ள அத்தனை பிரிவினரும் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்யும் தேவையுள்ள ஓர் துயரச் சம்பவம் இது. ஆனால் எத்தனை நண்பர்கள் இதைச் செய்தார்கள் என்று தெரியவில்லை.

“நாங்கள் பெண் கல்விக்காக போராடுகிறோம் அதை மட்டும்தான் நாங்கள் பார்ப்போம் வேறு வேறு விசயங்களில் தலையிட்டால் எங்களது நோக்கம் சிதறிவிடும், இலக்கு விலகிவிடும்” என்று சொல்லலாம். ஆனால், இந்த சம்பவம் ஒரு பெண் குழந்தையின் கல்வியை பறித்துவிட்டதே! அதை எதிர்க்க வேண்டாமா?

“குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் சொல்லிக்கொடுப்போம்” என்பவர்களுக்கு இந்தச் செய்தி தேவையற்றதா? அவர்களது இலக்கை தடுக்கக்கூடியதா?

சாதி சமூகநீதி பேசுவோருக்கு, ஆணாதிக்கம், பெண் அடிமைத்தனம் பற்றி பேசுவோருக்கு இது சம்பந்தமில்லாததா?

திட்டமிட்டு எதிர்க்கக்கூடாது என்பதல்ல இவர்களது நோக்கம். அவர்களது குழுவின் சட்ட வரையறைகள் இதை ஏற்பதில்லை என்பதே இதற்கான முதன்மையான காரணம். அவ்வாறுதான் பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.

இப்படி தனித்தனியாக நம் சமூக அக்கறையுள்ள நண்பர்கள் சிதைந்து நிற்கும் வரையில் நாம் எதிர்பார்க்கும் பெரிய மாற்றம் நிகழாது.

“அதெப்படி சொல்லலாம், நாங்கள் இத்தனை பேருக்கு கல்வி, பாலியல் கல்வி, பெண் சிசு கொலை தடுப்புக்களை செய்துள்ளோம்” என்று சிலர் கோபப்படலாம்.

“கொஞ்சம் நில்லுங்கள். உங்கள் அளவில் நீங்கள் செய்த நல்ல செயல்கள் பலருக்கு சென்றுள்ளதை மறுக்கவில்லை அதே நேரம், அத்தனைபேரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் இதைவிட இன்னும் பலநூறு மடங்கு சாதிக்க முடியுமா? முடியாதா? சமூகத்தின் எதார்த்தம் பற்றி ஓர் ஒட்டுமொத்த புரிதல் உண்டாகுமா ஆகாதா? உங்களது பிரச்சாரமும், பயிற்சியும், செயல்பாடும் இன்னும் பல நல்ல வழிமுறைகளை கற்றுக்கொடுக்குமா? கொடுக்காதா?”

காலில் காயம் என்று ஒருவர் மருத்துவமனைக்குச் சென்றால், உங்களுக்கு சர்க்கரை வியாதி உள்ளதா? என்று மருத்துவர் கேட்பார். காயத்திற்கு மட்டும் மருந்து போட்டு ஆறச் செய்வது ஒரு வழி, சர்க்கரை உள்ளதா என்று கேட்டுவிட்டு அதற்கேற்ப மருத்துவம் கொடுப்பது மற்றொரு வழி. இரண்டாவது வழிதான் காயத்தை விரைவாக குணப்படுத்தும். ஆகவே சமூக அக்கறை உள்ள நண்பர்கள் அனைவரும் கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். ஒன்றாக இணைந்து செயல்படுவோம் வாருங்கள்.

– பிரவீன்

(படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை, உதாரணத்துக்காக மட்டும் தரப்பட்டுள்ளன)

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தலைவர் சியாம் சுந்தர் எழுதிய இந்தப் புத்தகத்தை வாங்கி படியுங்கள்.

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/social-work-by-it-employees-a-new-perspective/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி.துறையில் அடிமை வியாபாரம்!

ஊழியர்கள் அடிமைகளாக நடத்தப்படும் நிலையில்தான் வெரிசான் நிர்வாகம் ஊழியர்களின் விருப்பமோ ஒப்புதலோ இல்லாமலே அவர்களை இன்ஃபோசிஸ் நிறுவனத்திடம் பேரம் பேசி விற்றிருக்கிறது. ஊழியர்களின் நலன்கள் காக்கப் படாமல்...

டி.சி.எஸ் ஊழியர்கள் ஈட்டுவது பெருமளவு லாபம், பெறுவது சொற்ப ஊதிய உயர்வு

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அதிக வருமான வந்துள்ளது என்று சொல்லும் தலைமை அதிகாரி அதெல்லாம் அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் புதிய தொழில்நுட்பத்தை படித்து புரிந்துகொண்டு கடுமையான உழைப்பில்...

Close