1917 : ஐரோப்பிய பிற்போக்கின் கொத்தளம் தகர்க்கப்பட்டது

2010-ம் ஆண்டு வினவு தளத்தில் வெளியான “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்! என்ற கட்டுரையை நவம்பர் 7 தினத்தை ஒட்டி 5 பகுதிகளாக வெளியிடுகிறோம். கட்டுரையில் 8 ஆண்டுகளுக்கான தகவல் அப்டேட்களும் கூடுதல் குறிப்புகளும் சேர்த்துள்ளோம்.

1.

சோவியத் யூனியனில் பெண் தொழிலாளர்கள்

நூறு ஆண்டுகளுக்கு முன்பு தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களுக்கான ஒரு பொன்னுலகு இந்த பூமியில் கட்டியமைக்கப்பட்டது. அந்த சோசலிச சமூகத்தில் விவசாயிகளும், தொழிலாளர்களும் சுரண்டலற்ற புதியதொரு தலைமுறையையே உருவாக்கினார்கள். சுரண்டல் என்றால் என்ன என்றே அறியாத, முதலாளிகளை நேரிலேயே பார்த்தறியாத சமூகமாக கம்யூனிசத்தின் புதிய தலைமுறை உருவாக்கப்பட்டது.

இன்று சோசலிசம் பின்னடைவுக்குள்ளாகியிருப்பதால் கம்யூனிசம் தோற்றுவிட்டது என்றோ, முதலாளித்துவம் வென்று விட்டது என்றோ அர்த்தம் அல்ல. முதலாளித்துவம் வெல்லவில்லை அது மக்களை கொல்லும் என்பதற்கு தமிழகத்தில் நாம் அறிந்த சமீபத்திய உதாரணம் நோக்கியா நிறுவனத்தால் படுகொலை செய்யப்பட்ட அம்பிகா. அது மட்டுமல்ல உலகெங்கும் அமெரிக்காவில் டிரம்ப், துருக்கியில் எர்டோகன், இந்தியாவில் மோடி என்று இனவெறியையும், மதவெறியையும் தூண்டி விட்டு மக்களை பிரித்து வன்முறை வெறியாட்டத்தை தூண்டி விடும் அமைப்பாக முதலாளித்துவம் சீரழிந்து, உலக மக்களின் வெறுப்புக்கு இலக்காகி நிற்கிறது.

எண்ணற்ற கொலைகளும் தற்கொலைகளும் முதலாளித்துவ லாபவெறியின் காரணமாக ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டேயிருக்கிறது. பாபிலோன் நாகரீகத்தை உருவாக்கிய ஈராக்கின் புதல்வர்கள் நாகரீகமற்ற ஏகாதிபத்தியவாதிகளால் நம் காலத்தில், நம் கண்களுக்கு முன்பாகவே அடிமைகளாக்கப்பட்டு குரூரமாக சித்திரவதை செய்யப்பட்டார்கள். லிபியா நாடு தாக்கப்பட்டு அந்த நாடு போரிடும் குழுக்களின் வதைக் களமாக மாற்றப்பட்டுள்ளது. சிரியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கொலைவெறி ஐ.எஸ் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது அமெரிக்கா.

1931-ல் டிஃப்ளிஸ் மருத்துவ கல்லூரி படிகளில் விளையாடும் குழந்தைகள் (source : https://thecharnelhouse.org/2015/12/16/margaret-bourke-white-in-the-ussr-1931/)

நமது நாட்டிலோ கனிம வளங்களை எல்லாம் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகள் கொள்ளையடித்துச் செல்வதற்காக மத்திய இந்தியாவின் பழங்குடி மக்கள் கூட்டம் கூட்டமாக ஆடு மாடுகளை போல தமது தாய் நிலத்திலிருந்து அடித்து விரட்டப்பட்டு அகதிகளாக்கப்படுகிறார்கள்.

கார்ப்பரேட் உலகமயமாக்கம் காரணமாக இதுவரை இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது மோடி அரசு விவசாயிகள் தற்கொலை பற்றிய புள்ளிவிபரங்களையே திரட்டக் கூடாது என்று உத்தரவிட்டு அமல்படுத்தியிருக்கிறது.

படித்த இளைஞர்கள் முறையான வேலை வாய்ப்பு கிடைக்காமல் கொத்தடிமைகளாக வேலை வாங்கப்படுகிறார்கள்.

இவ்வாறு உலகம் முழுவதிலும் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களை முதலாளித்துவத்தின் லாபவெறி பிணங்களாக்கியிருக்கிறது, உயிரோடு உள்ளவர்களை நடை பிணங்களாக்கிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் கொல்லும் என்பதற்கும் கம்யூனிசமே வெல்லும் என்பதற்கும் மேற்கூறிய உதாரணங்களும் உலகெங்கிலும் உழைக்கும் மக்களின் போராட்டங்களும் இன்றைய சான்றுகள்.

லாபத்திற்காக மக்களை கொல்லும் இந்த கார்ப்பரேட் ஏகாதிபத்தியவாதிகள் தான் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக கம்யூனிசம் தோற்றுவிட்டது என்று அவதூறு செய்து கொண்டிருக்கிறார்கள்.

லெனின் – ஓவியத்தில்

“கம்யூனிசம் ஆட்சிக்கு வந்தால் சர்வாதிகாரம் தான், வீட்டில் துவங்கி ஆடு, மாடு, கோழி என்று அனைத்தையும் அபகரித்துக்கொள்வார்கள்” என்று மக்களை பயமுறுத்தி பூச்சாண்டி காட்டுகிறார்கள்ழ
நாலு மாடுகளை வைத்து விவசாயம் செய்து கொண்டிருக்கிற ஒரு விவசாயியிடம் இதை சொன்னால் என்ன ஆகும்? அதை உண்மை என்று பயந்து போய் முதலாளித்துவ பொய்ப் பிரச்சாரத்தையே அவரும் தனக்கு தெரிந்த நான்கு பேரிடம் சொல்லிக்கொண்டிருப்பார்.

நம்முடைய நாட்டில் கம்யூனிசம் பற்றிய முதலாளித்துவ அவதூறுகள் இவ்வாறும் இன்னும் பல வழிகளிலும் பரப்பிவிடப்படுகிறது.

உண்மையில் கம்யூனிசம் தோற்றுவிட்டதா? இல்லை. சோவியத் குடியரசு உடைபட்டு விட்டதாலேயே கம்யூனிசம் தோற்று விட்டது என்று கூறுவது ஒரு பந்தலுக்கு கீழே நின்று கொண்டு சூரியனை காணோம் என்று கூறுவதற்கு சமமானது. மேற்கு ஐரோப்பாவில் முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ, நிலவுடைமை வர்க்கத்தின் அதிகாரத்தை வீழ்ச்சி ஆட்சியை கைப்பற்றி அதிகாரத்தை முழுமையாக நிலைநாட்டுவதற்கு 300 ஆண்டுகள் நீண்ட நெடும் போராட்டம் தேவைப்பட்டது. அது போல 20-ம் நூற்றாண்டில் பாட்டாளி வர்க்கத்தின் முதல் அரசு நிறுவப்பட்டு, சீனா, வியட்னாம், அல்பேனியா, கிழக்கு ஐரோப்பா என்று அடுத்தடுத்து அமைக்கப்பட்ட சோசலிச அரசுகள் பின்னடைவை சந்தித்தாலும்,  வரலாற்றின் ஓட்டம் தவிர்க்க இயலாமல் முதலாளித்துவத்தை நிராகரித்து சோசலிசத்தை நோக்கி இட்டுச் செல்கிறது.

எனினும், கம்யூனிசம் எப்படி அறிவியல் பூர்வமானது, சரியானது என்பதை நிறுவுவது இக்கட்டுரையின் நோக்கம் அல்ல, மாறாக கம்யூனிசத்தை பற்றியும், சோசலிச நாடுகளை பற்றியும் முதலாளித்துவவாதிகள் பரப்பி வைத்துள்ள பொய்களையும், அவதூறுகளையும் உண்மை என்று நம்புபவர்களுக்கு திரையை விலக்கிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஸ்டாலின்

ஸ்டாலின்

சோவியத் நாட்டில் நிலவிய ஆட்சி முறையையும்,மக்களுக்கு வழங்கப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகளையும், மக்களின் வாழ்க்கைத்தரத்தையும் உள்ளது உள்ளபடி அறிந்து கொண்டால் மட்டுமே கம்யூனிசம் குறித்த முதலாளித்துவ பொய்களால் கட்டப்பட்டிருப்பவர்கள் அதிலிருந்து விடுபட முடியும். இதற்கு நாம் சோவியத் நாட்டின் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் இருந்து எந்தத் தரவுகளையும், மேற்கோளையும் இங்கே கொடுக்கப் போவதில்லை. அனைத்தும் இந்த நாட்டிலிருந்து இரசியாவிற்கு சென்று வந்தவர்கள் கூறியவற்றிலிருந்தே எடுத்தாளப்பட்டிருக்கின்றன.

பிழைப்புவாத சாக்கடைக்குள் முக்குளிக்கும் நமது சமூகத்தில் பக்கத்து வீட்டுக்காரனுக்கு பிரச்சனை என்றால் தன் வீட்டுக் கதவை சாத்திக் கொள்ள பயிற்றுவிக்கப்பட்டுள்ள மனிதனின் மனநிலைக்கும், சோவியத்தில் ஒரு கூட்டுப் பண்ணையின் நடுவே நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் பற்றிக் கொண்ட தீயினால் முழு பண்ணையும் எரிந்து நாசமாகி விடக்கூடாதே என்றெண்ணி அடுத்த நொடியே எரிந்து கொண்டிருந்த டிராக்டரில் ஏறி அதை வயலுக்கு வெளியில் ஓட்டிக் கொண்டு வந்து விட்டு விட்டு தனது உயிரையும் விட்ட, அப்போது தான் புதிதாக திருமணம் ஆன 28 வயது சோசலிச இளைஞனின் மனநிலைக்கும் உள்ள வேறுபாட்டை நாமும் அவனும் மனிதன் என்கிற வகையில் நாம் உரசிப் பார்த்துக்கொள்வதற்கும் இந்த உண்மைகள் நமக்கு உதவும்.

இரசியா: ஐரோப்பிய பிற்போக்கின் கோட்டையை பிளந்தது மார்க்சிய லெனினியம்

ரசியா

ஐரோப்பாவில் பாதி ஆசியாவில் பாதியை கொண்டிருந்த நாடு

இரசியா, ஐரோப்பாவில் பாதி ஆசியாவில் பாதியை கொண்டிருந்த நாடு. அங்கே இல்லாத கொடுமையில்லை தொழிலாளிகளுக்கும், விவசாயிகளுக்கும். ஒருமுறை தொழிலாளர்கள் முதலாளிகளின் கொடுமைகளை தாங்க முடியாமல் ஜார் மன்னனிடம் மனு அளிப்பது என்று முடிவெடுத்து சில இலட்சம் பேர் அணி திரண்டு அரண்மனையை நோக்கிச் சென்றனர். ஜார் மன்னனுக்கு இந்த முதலாளிகள் செய்யும் கொடுமைகள் தெரியவில்லை, எனவே அதை தெரியப்படுத்துவதோடு சில கோரிக்கைகளையும் மனுவாக கொடுக்கலாம் என்று கொண்டு சென்றிருந்தனர். காலம் 1905.

அரசன் வெளியே வருவான் என்று கூட்டம் வாயிலை நோக்கி நெருங்க, நெருங்க சுற்றி வளைத்தது ஜாரின் குதிரைப்படை. அடுத்த நொடி துப்பாக்கிகள் சரமாரியாக தோட்டாக்களைப் பொழிந்தன. சற்று நேரத்திற்குள் பல்லாயிரக்கணக்கான மக்கள் சுட்டுப் பொசுக்கப்பட்டனர். அந்த நாளை இன்றும் இரத்த ஞாயிறு என்றே இரசியர்கள் அழைக்கிறார்கள். இது தான் 1917-க்கு முன்பு இரசியாவில் இருந்த அரசியல் நிலைமை.
1917 அக்டோபர் 25 (இரஷ்ய காலண்டரின் படி இருந்த இந்த நாள் பின்பு மேற்கத்திய காலன்டர் படி நவம்பர் 7 என மாற்றப்பட்டது.) அன்று தோழர் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் கீழ் அணி திரண்ட லட்சக்கணக்கான இரசிய மக்கள் பிற்போக்கு ஆட்சியை தூக்கியெறிந்துவிட்டு உலகிலேயே முதல் முறையாக உழைக்கும் மக்களின் ஆட்சியை ஏற்படுத்தினார்கள்.

(தொடரும்…)

நன்றி : வினவு (“பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்! By சர்வதேசியவாதிகள் – November 7, 2010)

Series Navigationவிவசாயி, தொழிலாளி, தொழில்நுட்ப வளர்ச்சி : நாடு முன்னேற என்ன வழி? >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/soviet-socialist-achievements-1/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி துறையில் தொழிற்சங்கம் : கார்ப்பரேட்டுகளது பூச்சாண்டி

திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக, “ஆட்குறைப்பே செய்யவில்லை. வழக்கு போட்டிருப்பவர்கள் எல்லோரும் தாமாக ராஜினாமா செய்து விட்டு வெளியேறியவர்கள்தான்" என்று பச்சைப்பொய்யை வாரியிறைத்தது,  விப்ரோ நிர்வாகம்.

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் : அதிகாரத்தின் கேளாக் காதுகளை எப்படி திறப்பது?

அங்கே உட்கார்ந்திருந்த வயது முதிர்ந்த விவசாயிகளின் முகங்களைக் காணும்போது மனம் கனத்துவிட்டது. " அய்யா நீங்க இதையெல்லாம் டிவில பேசுங்கய்யா" என்று அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னபோது...

Close