விவசாயி, தொழிலாளி, தொழில்நுட்ப வளர்ச்சி : நாடு முன்னேற என்ன வழி?

2010-ம் ஆண்டு வினவு தளத்தில் வெளியான “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்! என்ற கட்டுரையை நவம்பர் 7 தினத்தை ஒட்டி 5 பகுதிகளாக வெளியிடுகிறோம். கட்டுரையில் 8 ஆண்டுகளுக்கான தகவல் அப்டேட்களும் கூடுதல் குறிப்புகளும் சேர்த்துள்ளோம்.

2.

பூவுலகில் ஒரு சொர்க்கத்தை படைத்த இரசிய மக்கள்

Women members of a Soviet collective farm in the Smolensk region head out to the fields for haymaking after Germany began pulling troops from the area, Russia, December 2, 1942. (Photo by Underwood Archives/Getty Images)

சோவியத்தில் மக்களாட்சி அரசதிகாரத்தை கைப்பற்றிய பிறகு ’உழுபவனுக்கே நிலம்’ என்கிற முழக்கத்தின் அடிப்படையில் கொடுங்கோலர்களான நிலப்பிரபுக்களிடமிருந்தும், மத பீடங்களிடமிருந்தும் நிலங்கள் அனைத்தும் கைப்பற்றப்பட்டு விவசாயிகளுக்கு பிரித்து வழங்கப்பட வேண்டும் என்கிற சோவியத் அரசின் முதல் அரசாணையை தோழர் லெனின் வெளியிட்டார்.

அடுத்தபடியாக நாட்டின் உற்பத்தியை பெருக்குவதற்கும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்குமான திட்டங்கள் கால இலக்குகளுடன் துரிதமாக தீட்டப்பட்டன. அவை திட்டமிட்டிருந்த காலத்திற்கு முன்பாகவே நிறைவேற்றப்பட்டன. அதில் முதன்மையானது மொத்த நாட்டையும் மின்சாரமயமாக்குவது! எந்த நாட்டை? உலகில் ஆறில் ஒரு பங்கான இரசியாவை! எந்த ஆண்டில்? 100 ஆண்டுகளுக்கு முன்னால் 1917ல்! எவ்வளவு நாட்களில்? வெறும் ஐந்தே ஆண்டுகளில்!

மன்மோகன் சிங் போன்ற உலகவங்கியின் குமாஸ்தாவின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த, அதன் பிறகு கார்ப்பரேட்டுகளின் சேவகன் மோடியின் ஆட்சியின் கீழ் வாழும் நமக்கு இவையெல்லாம் அதிசயமாகத் தான் இருக்கும், ஆனால் சோவியத் மக்கள் அந்த அதிசயத்தை நிகழ்த்தினார்கள், கால இலக்கான ஐந்தாண்டுகளுக்கு முன்னதாகவே மொத்த இலக்கையும் எட்டினார்கள். உலகின் மிகப்பெரிய நாட்டை மின்சாரமயமாக்கினார்கள். இந்தியா முழுவதும் 100% மின்சாரமயமானதைத்தான் மோடி 2017-ல் தடபுடலாக அறிவித்துக் கொண்டிருந்தார். நம் நாட்டின் சுரண்டும் வர்க்க அரசு 100 ஆண்டுகள் பின் தங்கி உள்ளது.

Sowing on a collective farm on the steppes of the Ukraine, USSR (Union of Soviet Socialist Republics). Image date: ca. 1930-1940.

அடிப்படையான சில விசயங்கள் சோவியத்தில் கட்டாய சட்டமாக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு சுட்டிக்காட்டலாம்.

  • அனைவருக்கும் இலவச கல்வி, கல்வி கற்று முடித்த பின்னர் அனைவருக்கும் வேலை
  • அனைவருக்கும் வீடு (1917 க்கு முன்பு மாஸ்கோவின் மொத்த மக்கள் தொகை பதினெட்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர். இவர்களில் மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்திற்கு மேற்பட்டோர் மரக் கொட்டடிகளில், அறைக்கு 15 பேர் வீதம் வசித்து வந்தார்கள்)
  • அனைத்து வகையான இலவச மருத்துவ உதவிகளையும் பெறும் உரிமை (சோவியத் சட்டத்தின்படி சோவியத் குடிமக்கள் மட்டுமின்றி சோவியத்தில் இருக்கக்கூடிய வெளிநாட்டவர்களுக்கும் இலவச மருத்துவ சேவை வழங்கப்பட்டது) முதியவர்களுக்கான ஓய்வுரிமை ஆகியவை அடிப்படை உரிமைகளாக வகுக்கப்பட்டிருந்தவற்றுள் ஒரு சில மட்டுமே.

இன்னும் பல்வேறு அடிப்படை உரிமைகள் சட்டங்களாக இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த உரிமைகளை உறுதி செய்யும் வகையிலும், இந்த உரிமைகளை மக்களிடமிருந்து பிறர் பறிக்க முடியாதவாறும், அப்படி பறிக்க எத்தனிப்போருக்கு கடுமையான தண்டனைகளையும் சோவியத் சட்டங்கள் உறுதி செய்தன.

உழைப்பில் ஈடுபடும் நேரமும் அடிப்படை சட்டமாக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் அனைவருக்கும் வேலை நேரம் எட்டு மணி நேரம் மட்டுமே. வாரத்தில் ஆறு நாட்கள் வேலை ஒரு நாள் விடுமுறை. இவை எல்லாம் எப்படி சாத்தியமானது?

அங்கே, மக்களின் உழைப்பையும், நாட்டின் கனிமவளங்களையும் மன்மோகன் சிங், ப.சி கும்பல் அல்லது மோடி, அருண் ஜெட்லி கும்பல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு தூக்கி கொடுப்பதைப் போல கொடுக்காமல் நாட்டின் உற்பத்தியை பெருக்க மக்களிடம் லெனின் ஒரு கோரிக்கையை வைத்தார். அதாவது, விடுமுறை நாட்களில் நாட்டுக்காக இலவசமாக உழைக்க வேண்டும் என்று கோரினார். இது சட்டமல்ல. “விருப்பம் இருந்தால் வேலை செய்யலாம் இல்லையெனில் வேண்டாம்” என்று அறிவிக்கப்பட்டது.

முதலில் சில ஆயிரக்கணக்கானவர்கள் மட்டும் தான் முன் வந்தார்கள். பின்னர் தொடர்ந்து வந்த மாதங்களில் அவ்வெண்ணிக்கை லட்சக்கணக்கில் உயர்ந்தது. உபரியாக சேர்க்கப்பட்ட உற்பத்தியில் பெறப்பட்ட செல்வங்கள் அனைத்தும் மக்கள் நலனுக்கே பல்வேறு வழிகளில் திருப்பி விடப்பட்டது. இந்த உழைப்புக்கு பெயர் ‘சப்போத்னிக்’.
தோழர் லெனினுடைய மறைவிற்கு பின் தோழர் ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றார். புரட்சிக்கு முன்பிருந்த இரசியா என்பது அனைத்துத் துறைகளிலும் மிக, மிகக் கீழான நிலையில் இருந்தது. உணவுப்பஞ்சம் ஒரு பக்கம் தலைவிரித்தாடியது. நோய்கள் மற்றொரு பக்கம் மக்களை அள்ளிக் கொண்டு போனது. இந்நிலையில் மந்திரத்தின் மூலமா நாட்டை முன்னேற்ற முடியும்? மக்களின் துணையின்றி வேறு வழி ஏது?

உழைக்கும் மக்களின் தலைவரான தோழர் ஸ்டாலினுடைய தலைமையின் கீழ் சோவியத் மக்கள் அனைத்துத் துறைகளிலும் சாதனை நிகழ்த்தினார்கள். அப்போது உலகப் பொருளாதாரத்தில் சோவியத் யூனியன் தொடர்ந்து முன்னணியில் இருந்தது. ஆம், தோழர் ஸ்டாலின் தலைமையிலான பாட்டாளி வர்க்க ’சர்வாதிகார ஆட்சி’ தான் மாபெரும் சோசலிசத்தின் சாதனைகளை படைத்தது!

கூட்டுப் பண்ணைகள்

Poland / USSR agricultural plane 1975 (Polish Aviation Museum, Cracow)

புரட்சிக்கு பின்னர் நான்கு ஆண்டுகள் சோவியத் உணவு உற்பத்தியில் மிகவும் பின் தங்கியிருந்தது. பஞ்சம் தலைவிரித்தாடியது. விவசாயத் துறையில் தன்னிறைவு பெற சோவியத் அரசாங்கம் மக்களின் ஏகோபித்த ஆதரவுடன், அணை கட்டுதல், கால்வாய் வெட்டுதல் போன்ற அடிக்கட்டுமான வேலைகளை எல்லாம் மின்னல் வேகத்தில் செய்து முடித்தது. அதன் தொடர்ச்சியாக மக்களே இணைந்து நடத்தும் கூட்டுப் பண்ணைகளை அமைத்தது.

இக்கூட்டுப் பண்ணைகள் மிகப்பிரம்மாண்டமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இருக்கும். அவற்றில் பணி புரியும் விவசாயிகளுக்கான வீடுகளையும் அவர்களுக்கு சொந்தமாக சிறு தோட்டங்களையும்

கூட்டுப்பண்ணைக்குள்ளேயே தனி ஒரு இடத்தில் அரசாங்கமே அமைத்துக் கொடுக்கும். கூட்டுப்பண்ணை உற்பத்தி என்பது குழு குழுவாக போட்டி போட்டுக் கொண்டு நடக்கும் உற்பத்தியாக இருக்கும். எந்தக் கூட்டுப் பண்ணையில் யார் அதிக மகசூல் எடுக்கிறார்கள் என்கிற போட்டி விவசாயிகளிடமிருக்கும். தமது பண்ணை தான் நாட்டிற்கு அதிகமாக உற்பத்தி செய்து தர வேண்டும் என்று ஒவ்வொரு பண்ணையும் போட்டி போட்டுக்கொண்டு உற்பத்தியில் ஈடுபடும். உற்பத்தி இலக்கை தாண்டும் பண்ணைகளை அரசு நாடு முழுவதும் மக்களிடம் அறிவித்து கவுரவிக்கும். அந்த பண்ணையைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பரிசுகளளிக்கப்படும்.

நம் நாட்டின் விவசாயிகளில் எத்தனை பேர் வானூர்தியை அருகில் நின்று பார்த்திருப்பார்கள். எத்தனை பேர் அதில் பயணம் செய்திருப்பார்கள்? சோவியத்தில் ஒவ்வொரு கூட்டுப் பண்ணைக்கும் சொந்தமாக சில பத்து குட்டி விமானங்கள் இருந்தன என்று கூறினால் நம்புவீர்களா? ஆம், அவர்கள் தமது பண்ணைகளில் விளைந்த தானியங்களை நகரத்திற்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்காக அரசு அவர்களுக்கு குட்டி விமானங்களை வழங்கியிருந்தது. ஆனால் இந்திய விவசாயிகளுக்கு மன்மோகன் சிங் பாலிடால் பாட்டில்களை நீட்டினார். அவர்களும் லட்சக்கணக்கில் மரணத்திற்கு பின்னர் வானில் பறந்தனர். இப்போது மோடியோ வாய்ச்சவடால் ஜூம்லாக்கள் மூலமே விவசாயிகளின் வாழ்க்கையை பறித்து வருகிறார்.

எங்காவது பாலைவனத்தில் பருத்தி பயிரிட முடியுமா? சோவியத்தில் மக்கள் அதையும் சாதித்திருக்கிறார்கள். சோவியத் ஒன்றியத்தின் உஸ்பெகிஸ்தான் குடியரசிலுள்ள பாலைவனத்திற்கு அருகில் சில மைல்களுக்கு அப்பால் எதற்கும் பயன்படாமல் சதுப்பு நிலத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும். அங்கேயிருக்கும் தண்ணீரை இந்தப் பாலைவனப்பகுதிக்கு வரவழைத்து பயிரிட திட்டமிட்டார்கள். அதை உடனடியாக நடைமுறைப்படுத்த கால்வாய் வெட்டும் பணியில் இறங்கி அதை துரித கதியிலும் முடித்து பாலைவனத்தில் பருத்தி கூட்டுப்பண்ணையையும் சாத்தியமாக்கினார்கள்.
அதே உஸ்பெகிஸ்தான் பகுதியிலுள்ள வேறு ஒரு கூட்டுப்பண்ணைக்கு சென்றிருந்த எழுத்தாளர் அகிலன் அதைப் பற்றி கூறியது.

“பருத்திச் செடிகள் அங்கே ஆளுயரத்திற்கு வளர்ந்திருந்தன. அளவில் இவ்வளவு பெரிய பருத்தியை இதற்கு முன் நான் கண்டதில்லை. எனவே, உள்ளே புகுந்து ஒன்றை பறிக்க முனைந்தேன். உடனே ஏதோ கத்திக்கொண்டு வேகமாக என்னைத் தடுத்தார் ஒரு உழவர். அவர் என்ன சொல்கிறார் என்று உடன் வந்த சோவியத் எழுத்தாள நண்பரிடம் கேட்டேன்.

‘பருத்திக்காய் இன்னும் முதிரவில்லையாம், பறித்து வீணாக்கிவிடாதீர்கள் என்று சொல்ல வந்தார்’ என்றார்.
நான் திகைத்து போனேன். ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள பெரிய தோட்டம் அது. நான் பறிக்கப்போனதோ ஒரே ஒரு பருத்தி. அதுவோ கூட்டுப்பண்ணையை சேர்ந்தது.

கூட்டுப்பண்ணையைத் தம் சொந்தப் பண்ணையாக ஏற்றுக்கொள்ளாத ஒருவரால் எப்படி அவ்வாறு பதறி இருக்க முடியும்? நாட்டின் சொத்தை தனது சொந்த சொத்தைப்போல் மதித்து பாதுகாக்கும் பண்பை ஒரு சாதாரண கிராமவாசியிடம் அங்கே கண்டதை என்னால் மறக்க முடியவில்லை”

(சோவியத் நாட்டில்: பயண நூல், அகிலன்,பக்கம் 52)

(தொடரும்…)

#நவம்பர்7
#சோவியத்சாதனைகள்
#சோசலிசதீர்வுகள்

Series Navigation<< 1917 : ஐரோப்பிய பிற்போக்கின் கொத்தளம் தகர்க்கப்பட்டதுஇதுதான் ஜனநாயகம், இதுதான் பெண்ணுரிமை! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/soviet-socialist-achievements-2/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
டிசம்பர் 8 முழு அடைப்புப் போராட்டதை வெற்றிபெறச் செய்வோம்!

மக்களின் உணவுப் பாதுகாப்பை பறிக்கும்  புதிய வேளாண் சட்டங்களை கிழித்தெறிவோம்! டெல்லியைப் போன்றே தமிழகத்தையும் போராட்டக்களமாக்குவோம்! கார்ப்பரேட் நலன்களுக்காக மக்கள் விரோத சட்டங்களை இயற்றும் பாசிச மோடிக்கு...

அறிமுகம்: கக்கூஸ் ஆவணப்படம்

நமது சமூகத்தின் நலனைப் பற்றி அக்கறையுள்ள ஒவ்வொருவரும் காணவேண்டிய ஆவணப்படம் கக்கூஸ். இது தமிழ்நாட்டின் மலக்குழி மரணம் மற்றும் கழிவுகளை அகற்றும் மக்களுக்கு ஏற்படும் துயரம் ஆகியவைப்...

Close