2010-ம் ஆண்டு வினவு தளத்தில் வெளியான “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்! என்ற கட்டுரையை நவம்பர் 7 தினத்தை ஒட்டி 5 பகுதிகளாக வெளியிடுகிறோம். கட்டுரையில் 8 ஆண்டுகளுக்கான தகவல் அப்டேட்களும் கூடுதல் குறிப்புகளும் சேர்த்துள்ளோம்.
3.
சோவியத் ஆட்சி முறை
கம்யூனிச ஆட்சி என்பதே மக்கள் மீதான சர்வாதிகாரம் என்றும். கம்யூனிச ஆட்சியில் மக்களுக்கு எந்த உரிமைகளும் இருக்காது என்றும் இன்னும் இது போன்ற விதவிதமான கதைகளையெல்லாம் முதலாளித்துவவாதிகள் பரப்பி வைத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் எத்தகைய பச்சை பொய்கள் என்பதை இந்த தலைப்பின் கீழ் காணலாம்.
1917ல் புரட்சி நடந்த சில நாட்களுக்கு பிறகு இரசிய மக்களை நோக்கி தோழர் லெனின் கூறினார்.
“உழைக்கும் மக்களே இப்பொழுது நீங்கள் தான் ஆட்சி பீடத்தில் இருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அனைத்து அரசியல் விவகாரங்களையும் நீங்கள் உங்களுடைய கைகளில் எடுத்துக் கொள்ளாவிடில் உங்களுக்கு யாரும் துணை புரியப்போவதில்லை. இப்பொழுது முதல் உங்களுடைய சோவியத்துகள் தான் அரசு அதிகார உறுப்புகள், முழு அதிகாரம் படைத்த சட்ட மன்றங்கள். உங்களுடைய சோவியத்துகளின் மூலம் ஒன்று திரளுங்கள், அவற்றை பலப்படுத்துங்கள், நீங்களே நேரில் பணிகளில் இறங்குங்கள்” (லெனின் நூல் திரட்டு, ஆங்கிலம், தொகுதி 26 பக்கம் 297)
சோவியத்தில் ஒன்றியத்தில் யார் வேண்டுமானாலும் உள்ளாட்சி துறை, மற்றும் சுப்ரீம் சோவியத் தேர்தலில் போட்டியிடலாம். தகுதியானவர்களை மக்களே தேர்ந்தெடுப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே மக்கள் பிரதிநிதிகளாக பாராளுமன்றத்திற்கு சென்றனர். இவர்கள் ஒரு தொழிற்சாலையின் தொழிலாளியாகவோ அல்லது மாட்டுப் பண்ணையில் பால் கறப்பவர்களாகவோ கூட இருந்தார்கள்.

காலம் காலமாக ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு வந்த பெண்களுக்கு சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் சம உரிமையை வழங்கியதோடு அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஒரே நாடு சோவியத் இரசியா மட்டும்தான்.
மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் இந்திய ஓட்டுப்பொறுக்கிகளை போல ஏதேனும் சிறு தவறு செய்தால் கூட உடனடியாக அவர்களை திருப்பியழைக்கும் உரிமையும் உடனடியாக வேறு பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் உரிமையும் அந்த மக்களுக்கு இருந்தது. இது வெறுமனே ஏட்டில் எழுதி வைத்துக்கொள்வதற்காக அல்ல. அவ்வாறு தவறிழைத்தவர்கள் திருப்பியழைக்கப்பட்டிருக்கிறார்கள். சோவியத் வரலாற்றில் அவ்வாறு சில ஆயிரம் உள்நாட்டு பிரதிநிதிகளையும் சில நூறு சுப்ரீம் சோவியத் பிரதிநிதிகளையும் மக்கள் திருப்பியழைத்திருக்கின்றனர்.
எல்.சூசயெவா என்பவர் கூட்டுப்பண்ணையில் பால்காரப் பெண்ணாக வேலை செய்பவர். மக்கள் அவரை சுப்ரீம் சோவியத்துக்கு பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து அனுப்பினர். அங்கே அவர் உரையாற்றுகையில் ஒரு சுவையான அனுபவத்தை கூறினார்.
“இரண்டு ஆண்டுகளுக்கு முன் நான் சோவியத் இளந்தலைமுறையினர் தூதுக்குழுவில் ஓர் உறுப்பினராக அமெரிக்காவிற்கு சென்றிருந்தேன். அங்கே எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.
அமெரிக்கர்கள் எவ்வளவு சுதந்திரமாக வாழ்கிறார்கள் என்பதை எங்களுக்குக் காட்ட வேண்டுமென்று அமெரிக்க செனட்டர்களை நாங்கள் நேரில் சந்தித்து பேசுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். ஜன்நாயகத்தைப் பற்றி இந்த செனட்டர்கள் நிறையவே பேசினார்கள். அமெரிக்க ஜனநாயகத்தின் சிறப்புகளை சொல்லி தமது சமூக அமைப்பை வானளாவ புகழ்ந்து கொண்டார்கள்.
ஆனால் இங்கேதான் அவர்கள் தோல்வியடைய நேர்ந்தது. நான் யார் என்று என்னிடம் கேட்டார்கள். இரசிய சமஷ்டிக் குடியரசின் சுப்ரீம் சோவியத்தில் ஓர் உறுப்பினர், பசு பராமரிக்கும் பால்காரியாக கூட்டுப்பண்ணையில் பணி புரிகிறேன் என்று சொன்னேன். அமெரிக்க செனட்டர்கள் வியப்புற்றுவிட்டனர், அவர்களுடைய செனட்டில் பால்காரிகள் யாரும் இல்லை. அவர்களுடைய ஜனநாயகம் அதற்கு இடம் தரவில்லை.
நான் சொல்வது உண்மைதானா என்று சோதித்து பார்ப்பது என்று அவர்கள் முடிவு செய்து கொண்டார்கள், சைராக்கியூசில் திரு லீ என்னுடைய கைகளை காட்டுமாறு கேட்டார். என் கைகளை திறந்து அவரிடம் காட்டி இதோ பாருங்கள் உழைக்கும் பெண்ணின் கைகள் என்றேன்.
ஆனால் அவர்கள் திருப்தியடையவில்லை. திரு லெஷர் என்ற அமெரிக்க விவசாயியின் பால் பண்ணைக்கு நாங்கள் சென்றிருந்த போது, பால் கறந்து காட்டும்படி சொன்னார்கள். நான் கறந்து காட்டினேன். சோவியத் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பால் கறக்கவும் தெரிகிறது என்று புரிந்து கொண்டார்கள்.
(சோவியத் நாட்டில் மனித உரிமைகளும் சுதந்திரங்களும். ரா.கிருஷ்ணையா, பக்கம் 33)
அதே போல சோவியத் நாட்டில் ஜனநாயகம் எவ்வளவு பரந்து விரிந்ததாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள இன்னொரு விசயத்தையும் கூறலாம். சோவியத்தின் புதிய அரசியலமைப்புச்சட்டம் எழுதப்பட்டு அதன் நகல் விவாதத்திற்காக மக்களிடையே சுற்றுக்கு விடப்பட்டது. கிட்ட்த்தட்ட நான்கு மாதங்களாக இது தொடர்பான விவாதங்கள் நடைபெற்றன. பதினான்கு கோடிக்கு மேற்பட்ட சோவியத் மக்கள் இந்த விவாத்த்தில் பங்கெடுத்துக்கொண்டனர். மாஸ்கோவில் மட்டும் ஐம்பத்தைந்து லட்சம் பேர் விவாதித்தார்கள். அரசியல் சட்ட ஆணைக்குழுவுக்கு நான்கு லட்சம் ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டன.
விவாதம் நடைபெற்ற் மாதங்களில் இது குறித்து பிராவ்தா செய்தியேட்டுக்கு 30,510 கடிதங்கள் வந்தன. இவ்வாறு ஒரு நாட்டின் சட்டம் குறித்து நாட்டு மக்களிடம் கருத்து கேட்டு, நான்கு மாதம் விவாதம் நடத்தி அதன் பிறகு அதை அமுல் படுத்திய சோவியத் யூனியன் ஜனநாயக நாடா ? அல்லது இந்த நாட்டு மக்களுக்கே தெரியாமல் பல இலட்சம் கோடி ரூபாய் மதிப்புமிக்க கனிம வளங்களை உள்ளடக்கிய மாபெரும் மலைகளை யாருடைய அனுமதியும் பெறாமல் பன்னாட்டு கம்பெனிகளுக்கு எழுதிக்கொடுப்பது ஜனநாயகமா ?
பெண்களின் நிலை, குழந்தை வளர்ப்பு மற்றும் கல்வி
காலம் காலமாக ஆணாதிக்கத்தால் ஒடுக்கப்பட்டு வந்த பெண்களுக்கு சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் சம உரிமையை வழங்கியதோடு அதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்திய ஒரே நாடு சோவியத் இரசியா மட்டும்தான். ஆண்களைப் போலவே அனைத்து துறைகளிலும் பெண்கள் வேலை செய்தார்கள். உடல் உழைப்பு மூளை உழைப்பு இரண்டிலும் ஈடுபட்டார்கள். வேலைகளில் ஆண்களுக்கு நிகரான ஊதியமும் பெண்களுக்கு கொடுக்கப்பட்டது.
பெண்களை இழிவு படுத்தும் பத்திரிக்கைகளோ, சினிமாவோ, நாடகங்களோ எதுவும் சோவியத்தில் கிடையாது. அவ்வாறு பெண்களை இழிவுபடுத்தியோ அல்லது ஆபாசமாகவோ சித்தரித்தால் அதற்கு சட்டப்படி கடும் தண்டனை உண்டு. நமது வீட்டுப் பெண்களை ஆபாசமாக சித்தரிக்கும் படங்களையும், நாடகங்களையும் நாம் அனுமதிக்க முடியுமா? முடியாதல்லவா? அதே போலத் தான் சோவியத் அரசாங்கம் தனது நாட்டு பெண்கள் எந்த விதத்திலும் ஆபாசப் பொருளாகவோ, போகப் பொருளாகவோ சித்தரிக்கப்படுவதை அனுமதிப்பதில்லை. அங்கே பெண்களை இழிவுபடுத்தும் அனைத்தும் தடை செய்யப்பட்டிருந்தன. வறுமையையும், தற்குறித்தனத்தையும் ஒழித்துக்கட்டியதைப் போலவே விபச்சாரத்தையும் ஒழித்துக்கட்டிய ஒரே நாடு சோசலிச இரசியா மட்டும் தான்.
பெண்களுக்கு அவர்கள் கருவுற்றிருக்கும் காலங்களில், குழந்தை பிறப்பதற்கு முன்னால் 52 நாட்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு 52 நாட்களுக்கும் முழுமையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்பவர்களுக்கு ஊக்கத்தொகைகளும் பல்வேறு சலுகைகளும் அளிக்கப்பட்டன. கர்ப்பகாலத்தில் வீடு தேடி வந்து மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கான சத்துணவு மிகக் குறைந்த விலைகளில் விற்கப்பட்டன.
இன்றைய ரசியாவில் பெண்களுக்கு குழந்தை பிறப்பதற்கு முன்னால் 70 நாட்களுக்கும், குழந்தை பிறந்த பிறகு 70 நாட்களுக்கும் முழு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படுகிறது. தாய்மார்கள் ஒன்றரை ஆண்டுகள் வரை 40% சம்பளத்தில் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். வேலையை இழந்து விடுவோம் என்ற பயம் இல்லாமல் 3 ஆண்டுகள் வரை மகப்பேறு தொடர்பான விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். இதை இன்றைக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு என்று சட்டம் வந்தவுடன், கர்ப்பமான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கி விடுவது, பெண்களை வேலையில் அமர்த்துவதே தடுப்பது என்ற கார்ப்பரேட் நடைமுறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு சம உரிமை என்பதால் பெண்கள் நாட்டின் அனைத்துத் துறையிலும் தலைசிறந்து விளங்கினர். சமூகத்தில் சோவியத் பெண்கள் ஈடுபடாத துறையே இல்லை என்பதை அகிலனின் கீழ்கண்ட சித்திரம் எடுப்பாக உணர்த்துகிறது.
“ஆல்மா ஆட்டாவில் ஓட்டல் ஆல்மா ஆட்டா வின் எட்டாவது மாடியில் இருந்த என் அறையில் நின்றபடி தெருவில் பெய்து கொண்டிருந்த மழையை வேடிக்கை பார்த்தேன். காலை நேரத்தில் இளம்வெயில் அடித்தபின் திடீரென பெருமழை பிடித்துக்கொண்ட்து. தெருவில் தண்ணீர் ஓடியது. அந்த நேரத்தில் எங்கிருந்தோ ஒரு லாரி வந்து தெருவில் நின்றது. அதிலிருந்து மழைக்கோட்டும் குல்லாயும் கால்களில் நீண்ட்தொரு பூட்சும் அணிந்த ஒரு பெண்மணி குதித்தார். கையில் நீண்ட ஒரு கம்பி.
தெருவிலிருந்த மழை நீர் வடிகால் பள்ளத்தின் இரும்பு மூடியைத் திறக்கத் தம் கடப்பாறையால் போராடி நெம்பினார். மூடியை நகர்த்தியவுடன் நீர் உள்ளே பாய்ந்தது. பிறகு மூடியை முன் போல் இணைத்து விட்டு, கடப்பாறையை லாரியில் போட்டார். அவர் ஏறிக்கொண்டவுடன் லாரி நகர்ந்தது.”
(அகிலனின் மேற்கூறிய நூல், பக்கம் 69)
சோவியத்தில் பெண்கள் வேலை செய்யாத துறை என்று ஒன்றுமே இல்லை என்பதை புரிந்து கொள்வதற்கு மேற்கூறிய ஒன்றே போதுமானது.
(தொடரும்…)
#நவம்பர்7
#சோவியத்சாதனைகள்
#சோசலிசதீர்வுகள்