கல்வியும், குடியிருப்பும் அடிப்படை உரிமைகள்

2010-ம் ஆண்டு வினவு தளத்தில் வெளியான “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்! என்ற கட்டுரையை நவம்பர் 7 தினத்தை ஒட்டி 5 பகுதிகளாக வெளியிடுகிறோம். கட்டுரையில் 8 ஆண்டுகளுக்கான தகவல் அப்டேட்களும் கூடுதல் குறிப்புகளும் சேர்த்துள்ளோம்.

4

ப்படியானால் குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வது? என்கிற கேள்விக்கு விடை தான் ”யாஸ்லிகள்” . இந்த யாஸ்லிகள் என்பது குழந்தைகளை வளர்க்கும் நம்ம ஊர் பாலவாடிகள் போன்றது (ஆனால், நம்ம ஊர் பாலவாடிகளை போன்று கேவலமாக இருக்காது) இவை அரசாங்கத்தால் நடத்தப்படுபவை. பெற்றோர்கள் வேலைக்கு செல்கையில் இந்த யாஸ்லிகளில் தமது குழந்தைகளை விட்டுச் செல்கின்றனர். யாஸ்லிகளில் குழந்தைகள் மகிழ்ச்சியோடு இருப்பதற்கான சூழலில் அமைக்கப்பட்டிருக்கும். ஒரு தாய் தன்னுடைய குழந்தையை கவனித்துக் கொள்வதை போலவே அக்கறையோடு வளர்க்க பல தாதியர்கள் யாஸ்லிகளில் இருக்கின்றனர். அவர்கள் குழந்தைகளைத் தாலாட்டி தூங்க வைப்பதிலிருந்து குளிப்பாட்டி, உணவூட்டி, விளையாட்டுப் பொருள்களை கொடுத்து அவர்களோடு விளையாடுவது வரை இன்முகத்துடன் செய்கின்றனர்.

அங்கு தவறாது குழந்தைகளுக்கும் சரிவிகித உணவு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு யாஸ்லிகளிலும் பல மருத்துவர்கள் இருப்பார்கள். அங்கு இருக்கும் குழந்தைகளுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து அவர்களில் ஏதேனும் நோயுற்ற குழந்தை இருந்தால் அக்குழந்தையை மட்டும் தனியே வைத்து மருத்துவம் செய்கிறார்கள். அந்த குழந்தையின் உடல் நிலை முழுமையாக சரியான பிறகு தான் மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாட அனுமதிப்பர்.

எல்லாம் சரி தான். தாயைப் போல் அன்பு செலுத்தலாம். அக்கறை காட்டலாம், ஆனால் தாய்ப்பால்? அதையும் திட்டமிட்டுத்தான் இந்த யாஸ்லிகள் அனைத்தும் தொழிற்சாலைகளுக்கு அருகிலேயே அமைக்கப்பட்டிருந்தன. தொழிற்சாலைகளில் அக்குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேளை குழந்தைகளுக்கு பால் கொடுக்க சென்று வர அனுமதிக்கப்படுகிறது. ஒரு வேளைக்கு அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு போய் வரும் 1 மணி நேரமும் அவர்களுடைய வேலை நேரத்தில் சேர்த்தே கணக்கிடப்படுகிறது.

முதல் மூன்றாண்டுகள் இந்தக் குழந்தைகள் யாஸ்லிகளில் வளர்க்கப்படுகிறார்கள். இந்தப் பொழுதில் குழந்தைகளுக்கு தெளிவாக பேசுதல், எந்த வேலையையும் சீராகச் செய்தல் போன்ற பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த யாஸ்லி முறை குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கூட்டுணர்வை ஏற்படுத்தி அவர்களுடைய மனதில் கூட்டுறவு சிந்தனை முறையையும், கூட்டுறவு வேலை பாணியையும் கற்றுத்தருகிறது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு குழந்தையின் ஏழாம் வயது வரை இக்குழந்தைகள் தோட்டப்பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். தோட்டப் பள்ளிகளில் குழந்தைகளை யாரும் படி.. படி.. என்று கொடுமைப்படுத்தி மொக்கைகளைப் போல புத்தகப் புழுக்களாக வளர்ப்பதில்லை! குழந்தைகளுக்கு விருப்பமான கலைகளில் அவர்கள் சிறந்து வளர உதவப்படுகிறது. மாதமொரு முறை காடு, மலை, அருவி போன்ற பகுதிகளுக்கு தக்க பாதுகாப்புடன் அழைத்துச் சென்று அவர்களுக்கு நேரடியாக இயற்கையை பற்றிய அறிவு ஊட்டப்படுகிறது. இங்கு கூட்டாக சுத்தம் செய்தல், தாம் சாப்பிட்ட பாத்திரங்களைத் தாமே கழுவுதல் போன்ற வேலைகளைக் குழந்தைகளையே செய்யச் சொல்லி சுய ஒழுங்கு கற்றுத்தறப்படுகிறது. எந்தத் தொழிலும் இழிந்தது அல்ல என்ற உணர்வு குழந்தை பருவத்திலேயே ஊட்டப்படுகிறது.

தோட்டப் பள்ளிப் படிப்பு முடிந்ததும் இவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு அவர்களது தாய்மொழி, ரஸ்ய மொழி, மற்றுமொரு கட்டாய அயல்நாட்டு மொழி சொல்லித்தரப் படுகிறது. இது தவிர அறிவியல், கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்கள் நேரடியான பல சோதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டப்பட்டு பயிற்றுவிக்கப் படுகிறது.

இவர்களுக்கு ஆசிரியர்களாக இருப்பவர்கள் சாதாரண ஆட்களாக இருக்க முடியாது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல அவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் பரீட்சை உண்டு. அவர்கள் அங்கு தேர்ச்சியடைந்தால் தான் குழந்தைகளுக்கு ஆசிரியராக நீடிக்க முடியும். மாணவர்கள் படிக்கும் போதே பகுதி நேரமாக தொழிற்கூடங்களில் நேரடிப் பயிற்சி பெறும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுகிறது. அதன் மூலம் அவர்கள் படிக்கையில் அந்த அந்தப் பாடத்தில் உள்ளவற்றை நடைமுறையோடு பொருத்தி தெளிவாக புரிந்து கொள்கிறார்கள்.

பத்தாம் வகுப்பு வரையிலான கல்வி கட்டாயமாக்கப்பட்ட ஒன்று. இங்கு கல்வி அரசாங்கத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் இலவசமாக சொல்லித் தரப்படுகிறது. இதன் காரணமாக சோசலிச இரசியாவில் இரு பத்தாண்டுக்குள்ளாகவே படிக்காதவர்கள் இல்லை என்னும் நிலை உருவானது. முதியவர்களும் கூட இரவு நேர கல்விக் கூடங்களில் கற்றனர்.
இத்தகைய அறிவியல் பூர்வமான கல்வியைப் கற்று வளர்ந்த மாணவர்கள் தான் அறிவியல் விஞ்ஞானத் துறையில் சோவியத் நாடு தலை சிறந்து விளங்க காரணமானவர்கள்.

அனைவருக்கும் வீடு

சோவியத் நாட்டில் அனைவருக்கும் அரசாங்கம் வீட்டு வசதி செய்து தந்தது. வீட்டிற்கு வாடகை எவ்வளவு தெரியுமா? அந்த வீட்டில் வசிக்கும் குடும்ப உறுப்பினர்களில் யார் அதிக சம்பளம் வாங்குகிறார்களோ அவர்களுடைய சம்பளத்தில் வெறும் 4 சதவீதம் மட்டுமே வாடகை. அதாவது, 4000 ரூபாய் வாங்கினால் 160 ரூபாய் வீட்டு வாடகை. சோவியத்தில் சொந்த வீடு கட்டிக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை என்று கூறி பலர் பூச்சாண்டி காட்டுகிறார்கள். ஆனால் அங்கு கூட்டு மாடி வீடுகளை (apartments) கட்டிக் கொள்ள அரசாங்கமே 60சதவீத தொகையை கடனாகக் கொடுக்கிறது. அந்த கடனை 10 முதல் 15 வருடங்களில் திருப்பி செலுத்தினால் போதுமானது. ஆனால், ஒருவருக்கு ஒரு வீடு மட்டுமே உரிமையாக இருக்க முடியும்.

இந்த வீடு பிரச்சினை குறித்தும் அகிலன் எழுதியுள்ளார். அவர் கூறுவதாவது,

”உறைவிடத்தைப் பொறுத்த வரையில் நான் அங்கு கண்டது இதுவே, வீடில்லாமல் எந்த குடிமகனும் எந்த நகரத்திலும் கிராமத்திலும் நடுத்தெருவில் திரிந்து அலையவில்லை. வசதியான வீடு இன்னும் சிலருக்கு கிடைக்காமல் இருக்கலாம், ஆனால் எல்லோருக்குமே அங்கு உணவும், உடையும் கிடைத்துள்ளதை போல உறைவிடமும் கிடைத்துள்ளது என்பது தான் முக்கியமானது.” (அதே நூல், பக்கம் 61)

மேலும் சில விசயங்கள்..

இரசிய மக்கள் என்றுமே தங்கள் தாய்நாட்டை எதற்காகவும் விட்டுத்தராதவர்களாய் இருந்தனர். ஏனெனில் அவர்களுக்கு நாடு என்றால் மனிதர்களும் சேர்ந்ததே ஒழிய அவர்கள் வரைபட தேசபக்தர்கள் அல்ல. இங்கோ எரியும் இந்தியக் கொடியை அணைப்பவனே மிகப் பெரிய தேசபக்தன். அங்கு ஒவ்வொருவனும் தேசப் பற்றாளன் தான். சோசலிச சமுதாயத்தை அவர்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்தார்கள். உதாரணத்திற்கு பல நிகழ்வுகளைக் கூறலாம்.

ஒருமுறை என்.எஸ்.கிருஷ்ணனும் அவருடைய நண்பரும் சோவியத்தின் பிரபல எழுத்தாளர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். இதனை ஒரு மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்துக் கூறிக் கொண்டிருந்தார். என்.எஸ்.கேயின் நண்பர் “எங்கள் நாட்டின் காந்தியமும் உங்கள் நாட்டின் சோசலிசமும் ஒன்று தான்” என்று கூறினார். மொழிபெயர்ப்பாளர் இதனை மொழிபெயர்க்க மறுத்து விட்டார். பொய் சொல்கிறார்கள் என்று கூறி மொழிபெயர்க்க முடியாது என்றும் கூறிவிட்டார். இதிலிருந்து தெரியவில்லையா அவர்கள் சோசலிசத்தை எவ்வளவு நேசித்தார்கள் என்று.

(தொடரும்…)

#நவம்பர்7
#சோவியத்சாதனைகள்
#சோசலிசதீர்வுகள்

Series Navigation<< இதுதான் ஜனநாயகம், இதுதான் பெண்ணுரிமை!நாட்டின் வளங்களை உழைக்கும் மக்களுக்கு சொந்தமாக்கும் சோசலிசம் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/soviet-socialist-achievements-4/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“நீட்”, உறுப்பினர் சேர்க்கை இயக்கம் : பு.ஜ.தொ.மு ஐ.டி சங்கக் கூட்டம்

நமது சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் சனிக்கிழமை செப்டம்பர் 16, 2017 அன்று நடைபெறும். இடம் : பெரும்பாக்கம் நேரம் : மாலை 4 மணி முதல் 8...

நெடுவாசல், விவசாயம், ஐ.டி பிரச்சனைகள் – ஐ.டி சங்கக் கூட்ட விவாதங்கள்

அரசியல் பேசுவது அடிப்படை பேச்சுரிமை. சாப்பிட்ட உணவகம் பற்றி பேசுகிறோம், கிரிக்கெட் பேசுகிறோம், சினிமா பேசுகிறோம். ஆனால், மக்களை பாதிக்கும் பிரச்சனைகளை பற்றி பேசுவதற்கு ஏன் பயப்பட...

Close