பங்குச் சந்தை குரங்குகளை வாங்கி விற்கும் சூதாட்டம் மட்டும்தானா?

This entry is part 1 of 6 in the series பந்தய மூலதனம்

பந்தய மூலதனம் – 1

நாம் ஏன் பங்குச்சந்தை பற்றி புரிந்துகொள்ள வேண்டும் , தொழிலாளர்களாகிய நமக்கும் பங்குச் சந்தைக்கும் என்ன சம்பந்தம்? – கேள்விக்கு விடை தெரிய தொடர்ந்து படியுங்கள்.

ங்குச் சந்தை எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றிய ஒரு கதையை ஃபேஸ்புக்கிலோ, வாட்ஸ் ஆப் ஃபார்வேர்ட் தகவலாகவோ படித்திருப்பீர்கள்.

இந்தியாவின் சொத்து படிநிலை

இந்தியாவின் சொத்து படிநிலை – 92% இந்தியர்களின் சொத்து மதிப்பு $10,000 (ரூ 6.5 லட்சம்) -க்குக் குறைவு – 2017 தரவுகள்

“ஒரு ஊருக்கு அருகில் இருந்த காட்டில் நிறைய குரங்குகள் வசித்தன. அந்த ஊருக்கு தன் உதவியாளன் சுப்பிரமணியுடன் வந்து சேர்ந்த வெளியூர்காரன் ஏகாம்பரம் ஒரு தகவலை கசிய விட்டான். ஏகாம்பரம் தன் ஊரில் செய்யும் தொழிலுக்கு குரங்குகள் நிறைய தேவைப்படுகின்றன எனவும் ஒரு குரங்குக்கு ரூ 100 விலை கொடுத்து வாங்கிக் கொள்ள அவர் தயாராக இருப்பதாகவும் செய்தி பரவியது. ஊர் மக்கள் பலர் குரங்கு பிடிக்கும் வேலையில் இறங்கி, ஒரு நாளைக்கு ஏழெட்டு குரங்குகளை கூட பிடித்து வந்து தலா ரூ 100 வீதம் சம்பாதித்தார்கள். தன்னிடம் வந்து சேரும் குரங்குகளை அடைத்து வைத்து பாதுகாத்தார் ஏகாம்பரம். “ஊருக்குப் போகும் போது மொத்தமாக எடுத்துச் செல்வார் என்றும் அவர்கள் ஊரில் இத்தகைய குரங்குகளுக்கு நல்ல டிமாண்ட்” என்றும் சுப்பிரமணி சிலரிடம் கிசுகிசுத்தான்.

ஒரு சில நாட்களில் காட்டில் எஞ்சியிருக்கும் குரங்குகளின் எண்ணிக்கை குறைந்தது. எனவே, ஏகாம்பரத்திடம் விற்பனைக்கு வரும் எண்ணிக்கையும் குறைந்தது. “ஒரு குரங்குக்கு ரூ 200 தருகிறேன்” என்று விலையை உயர்த்தினார் ஏகாம்பரம். இன்னும் அதிக முயற்சி எடுத்து இரவு பகல் பாராமல் குரங்கு வேட்டை நடத்தினார்கள், மக்கள். விலையை படிப்படியாக ஏற்றி ஏகாம்பரம் ஒரு குரங்குக்கு ரூ 500 தரும் நிலை வந்த போது காட்டில் குரங்குகளை பிடிப்பதே அரிதாகி போனது.

இதற்கிடையில் சுப்பிரமணி, ஒரு சிலரிடம் ரகசியமாக டீல் போட ஆரம்பித்தான். ரூ 500-க்கு விற்க குரங்குகளை தேடி தவிக்கும் அவர்களுக்கு தன் கட்டுப்பாட்டில் இருக்கும் குரங்குகளை (ஏகாம்பரத்திற்கு தெரியாமல்) ஒவ்வொன்றாக விற்க ஆரம்பித்தான். அவனது விலை ஒரு குரங்குக்கு ரூ 400. ரூ 400-க்கு வாங்கி ஏகாம்பரத்திடம் ரூ 500-க்கு விற்கலாமா என்ற ஆசையில் அவர்கள் அதை வாங்கி விற்க ஆரம்பித்தார்கள்.

பங்குச் சந்தை - குரங்கு கதை

பங்குச் சந்தை – குரங்கு கதை

அப்படி ஒரு சிறு எண்ணிக்கையிலான குரங்குகளை வாங்கிய பிறகு, ஏகாம்பரம், தன்னிடம் கைவசம் இருந்த பணம் தீர்ந்து விட்டதாகவும், இன்னும் அதிக எண்ணிக்கையில் குரங்குகளை வாங்குவதற்கு பணம் திரட்டிக் கொண்டு 10 நாட்களுக்குப் பிறகு வரப் போவதாகவும், அப்போது குரங்குகளை தலா ரூ 1000 விலைக்கு வாங்கப் போவதாகவும் என்று சொல்லி விட்டு பண்ணையை சுப்பிரமணி பொறுப்பில் விட்டு விட்டு போய் விட்டார். இதுதான் வாய்ப்பு என்று சுப்பிரமணி கைவசம் இருந்த எல்லா குரங்குகளையும் ரூ 700, ரூ 800 வீதத்துக்கு விற்று விட்டான். ஒரு குரங்குக்கு ரூ 300, ரூ 200 லாபம் பார்க்கலாம் என்ற ஆசையில் ஊர்க்காரர்கள் பக்கத்து வீட்டுக்காரர்களுக்குக் கூடத் தெரியாமல், நகை நட்டுகளைக் கூட விற்று ஆளுக்கு 10-12 குரங்குகளை வாங்கி மறைத்து வைத்துக் கொண்டார்கள்.

7-8 நாட்களுக்குப் பிறகு ஒரு நாள் சுப்பிரமணி இரவோடு இரவாக ஊரை விட்டு போய் விட்டான். அடுத்த நாள் குரங்கு வாங்க பேரம் பேச வந்தவர்களுக்கு ஆள் கிடைக்கவில்லை. குரங்கு பண்ணை பூட்டிக் கிடந்தது. சரி, வந்த வரை லாபம், கையில் இருக்கும் குரங்குகளை ரூ 1000 விலைக்கு விற்று லாபம் பார்த்துக் கொள்ளலாம் என்று ஏகாம்பரம் வருவதை எதிர்நோக்கி காத்திருந்தார்கள், ஊர் மக்கள்.

10 நாள் கழிந்த பிறகு ஏகாம்பரம் வரவில்லை, 15 நாட்களுக்குப் பிறகும் வரவில்லை, 20 நாட்கள் காத்திருந்தும் பலனில்லை. குரங்கு பண்ணையின் பூட்டை உடைத்து உள்ளே போய் பார்த்தால் குரங்குகளின் கழிவுகள் மட்டும்தான் மிஞ்சியிருந்தன. சும்மா கிடந்த குரங்குகளை எல்லாம் பிடித்து ஏகாம்பத்திடம் ரூ 100 முதல் ரூ 500 வரை விலைக்கு விற்ற ஊர்க்காரர்கள், பின்னர் அவற்றையே சுப்பிரமணியிடம் ரூ 700 முதல் ரூ 900 வரை விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார்கள்.

இவ்வாறாக ஏகாம்பரமும், சுப்பிரமணியும் ஊர் மக்களின் சேமிப்புப் பணத்தை எல்லாம் அபேஸ் செய்து கொண்டு மாயமாகி விட்டார்கள்.”

குதிரை பந்தயத்தில் பணம் கட்டுவதையும் இதனோடு ஒப்பிடலாம்

இது கதை. பங்குச் சந்தை ஊக வணிகம் இப்படித்தான் செயல்படுகிறது, அப்பாவிகளின் சேமிப்பை சூறையாடி விடுகிறது என்பது கதையின் நீதியாக சொல்லப்பட்டது.

விலை ஏறும் என்று நம்பி பங்குகளை வாங்கி அவற்றின் விலை வீழ்ச்சி அடைந்தோ, அல்லது மதிப்பே இல்லாமல் போயோ தமது சேமிப்புகளை எல்லாம் இழந்தவர்களின் நிலையை இந்தக் கதை சொல்கிறது. ஆனால், பங்குச் சந்தை இது மட்டும் இல்லை, இந்த அளவில் மட்டும் இல்லை.

பங்குச் சந்தை முதலீடு என்பதை சேவல் சண்டையின் போது சுற்றி நின்று கொண்டு குறிப்பிட்ட சேவல் மீது பந்தயம் கட்டுவதோடு ஒப்பிடுவது இன்னும் பொருத்தமாக இருக்கும். பந்தயம் கட்டுபவர் சேவலை வளர்க்கவும் இல்லை, அதை சண்டைக்கு பதிவு செய்து இறக்கி விடவும் இல்லை. சுற்றி நின்று கொண்டு கைவசம் இருக்கும் பணத்தை எந்த சேவல் ஜெயிக்கும் என்று பந்தயம் கட்டுகிறார். ஜெயித்தால் காசு கூடுதலாகும், தோற்றால் காசை இழந்து விடுவார்.

குதிரை பந்தயத்தில் பணம் கட்டுவதையும் இதனோடு ஒப்பிடலாம். எந்தக் குதிரை வேகமானது, எந்த ஜாக்கி திறமையாக ஓட்டுவார், குதிரைகளின் கடந்த கால ரிக்கார்ட் என்ன, இந்த மைதானத்தில் குறிப்பிட்ட குதிரை எப்படி ஓடியிருக்கிறது என்று பல விபரங்களை சேகரித்து, பரிசீலித்து, நிபுணர்களின் கருத்துக்களை தெரிந்து கொண்டு ஒரு அல்லது பல குதிரைகளின் மீது பந்தயம் கட்டி சீட்டு வாங்கிக் கொள்கிறார்கள். பணம் கட்டிய குதிரை ஜெயித்தால் பணம் பல மடங்காகும். தோற்றுப் போனால், கட்டிய பணம் போச்சு.

உலகளாவிய பங்குச் சந்தைகள்

இன்று பங்குச் சந்தைகள் உலகளாவியவையாக மாறி விட்டன.

ஆனால், “பங்குச் சந்தையை இப்படி கொச்சையாக பார்க்க வேண்டாம். பங்குச் சந்தையை இவ்வளவு எளிமையாக புரிந்து கொள்ள முடியாது, அது இன்னும் சிக்கலானது, இன்னும் ஆழமானது, நிஜ பொருளாதாரத்தோடு தொடர்புடையது. உற்பத்தி, வியாபாரம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் வளர்ச்சியோடு தொடர்புடையது. பங்குச் சந்தையில் முதலீடு செய்ய திறமையும், அறிவும் வேண்டும். உலகின் மிகச்சிறந்த அறிவாளிகளில் பலர் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்கிறார்கள். இன்று பங்குச் சந்தைகள் உலகளாவியவையாக மாறி விட்டன.”

என்று நீங்கள் கருதினாலோ, எங்காவது படித்திருந்தாலோ, யாராவது சொல்லியிருந்தாலோ, அது நூற்றுக்கு நூறு உண்மை. சேவல் சண்டை போலவோ, குதிரை பந்தயம் போலவோ சும்மா பொழுது போக்கு இல்லை பங்குச் சந்தை. அது உலகெங்கிலும் கோடிக் கணக்கான மக்களின் வாழ்க்கையை தீர்மானிக்கக் கூடியதாக உள்ளது.

எப்படி என்று இன்னும் விபரமாக பார்க்கலாம்.

(தொடரும்)

Series Navigationசெலவழித்தால் பணம், பெருக்கிச் சென்றால் மூலதனம் >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/speculative-capital-1/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
தொழில்நுட்பம் சமூகப் பிரச்சனைகளை தீர்க்க முடியுமா?

தொழில்நுட்பம் அனைவருக்கும் கூடுதல் வாய்ப்புகளையும், பல வசதிகளையும் ஏற்படுத்தித் தருகிறது என்பது உண்மைதான். ஆனால், சமூகத்தில் ஊறிப் போயிருக்கும் பாகுபாடுகள், வெறுப்புகள், அநீதிகள் இவற்றை தொழில்நுட்பம் மூலம்...

கார்ப்பரேட் தாக்குதல்களும், அரசு வன்முறையும் – பு.ஜ.தொ.மு அரங்குக்கூட்டம்

அரங்கக் கூட்டம் பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு நாள் : மே 20, 2017, சனிக்கிழமை நேரம் : மாலை 4 மணி முதல் 7...

Close