பங்குச் சந்தை முதலீடு : விலை உயரும் என்ற பந்தயம்

This entry is part 3 of 6 in the series பந்தய மூலதனம்

பந்தய மூலதனம் – 3

ம்ம அமித் பாய் தன்னுடைய 10 லட்சம் ரூபாயை என்ன செய்தார் என்று இப்போது பார்க்கலாம். புடவை வாங்கி விற்று சம்பாதிப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை; வாடிக்கையாளரிடம் ஆர்டர் பிடித்து பொருள் செய்து கொடுத்து சிரமப்படுவதையும் அவர் விரும்பவில்லை; உற்பத்தி அல்லது வணிகம் செய்பவருக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிப்பதில் இறங்கவும் அவர் தயாராக இல்லை. நோகாமல் அடுத்தவர் தோள் மீது சவாரி செய்து பணத்தை பெருக்குவதற்கு என்ன வழி என்று பார்க்கிறார்.

நியூயார்க் பங்குச் சந்தை

நியூயார்க் பங்குச் சந்தை

முந்தைய பகுதியில் குறிப்பிட்ட டி.சி.எஸ், விப்ரோ, எச்.சி.எல் போன்ற மென்பொருள் நிறுவனங்கள் தமது மூலதனத்தை சிறு பகுதிகளாக பிரித்து பங்குகளாக விற்றுள்ளன. ரெனால்ட் நிசான், டி.வி.எஸ், ஹீரோ, மாருதி போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்களும் அவ்வாறு பங்குகளை வெளியிடுகின்றன. பாரத ஸ்டேட் வங்கி, முத்தூட் ஃபைனான்ஸ் போன்ற வட்டிக்குக் கடன் கொடுக்கும் நிறுவனங்களும் தமது மூலதனத்தில் ஒரு பகுதியை பங்குகளாக விற்கின்றன.

இதை நமது எளிய உதாரணத்துடன் பொருத்தி பார்க்கலாம். இஷா 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஒரு வருடத்தில் ரூ 2 லட்சம் லாபம் ஈட்டியுள்ளார். அடுத்த ஆண்டில் அருந்ததியிடமிருந்து 10 லட்ச ரூபாய் கடன் வாங்கி தொழிலை இன்னும் விரிவாக்கியிருக்கிறார். இந்த அடிப்படையில், தான் முதலீடு செய்த ரூ 10 லட்சத்தில் 10%-ஐ (ரூ 1 லட்சம் மதிப்பு) பங்குகளாக அமித்துக்கு விற்கிறார். அதற்கு ரூ 10 லட்சம் விலை வைக்கிறார்.

“இஷா நல்ல திறமையாக வியாபாரம் செய்கிறார், இன்னும் ரூ 10 லட்சம் அவர் கையில் போனால் அவரது லாபம் அதிகரிக்கும், எனவே இந்த பங்குகளை வாங்கிக் கொள்ளலாம்” என்று அமித் தனது 10 லட்சத்தை இஷாவின் பங்குகளை வாங்க பயன்படுத்துகிறார்.

நாஸ்டாக்

அமெரிக்காவின் நாஸ்டாக் பங்குச் சந்தை

இனிமேல், இஷா நிறுவனத்தின் லாபத்தில் இருந்து ஒரு பகுதியை ஈவுத் தொகையாக அமித்துக்கு கொடுப்பார். அதை விட முக்கியமாக சுறுசுறுப்பாக வளரும் வியாபாரத்தைப் பார்க்கும் நரேன் என்பவர் இஷாவின் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டினால், அமித் தன் கைவசம் இருக்கும் பங்குகளை ரூ 15 லட்சத்துக்கு அவரிடம் விற்று விடுவார். அமித்துக்கு ரூ 5 லட்சம் லாபம்.
நிறுவன பங்குகளை வெளியிடுவது என்பது இப்படி எளிமையாக ஓரிரு முதலீட்டாளர்கள் மூலம் நடைபெறுவதில்லை என்பது உண்மைதான்.

டி.சி.எஸ் முதலான பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கான பங்குகளை வெளியிடுகின்றன. அதை வாங்குவதற்கு லட்சக்கணக்கான சிறிய, பெரிய முதலீட்டாளர்களும், நிதி நிறுவனங்களும் விண்ணப்பிக்கின்றனர். டி.சி.எஸ்-ன் கடந்த கால செயல்பாடுகள், ஆண்டு வருமானம், ஆண்டு லாபம், லாப வீதம், எதிர்கால சாத்தியங்கள், நிர்வாகக் குழுவின் திறமை, அது செயல்படும் சந்தையில் உள்ள வாய்ப்புகள் என்பதை எல்லாம் பார்ப்பார்கள். அதன் அடிப்படையில் அந்நிறுவனத்தின் பங்குகளை கூடுதல் விலை கொடுத்து வாங்குவது வொர்த்-தான் என்று முடிவு செய்கிறார்கள். அதாவது ரூ 10-க்கான பங்குகளை ரூ 100 கொடுத்து வாங்கும் அளவுக்கு நிறுவனத்தின் எதிர்கால வருவாயும், லாபமும் இருக்கும் என்று தனது பணத்தை பந்தயம் கட்டுகிறார் முதலீட்டாளர்.

இவற்றைப் போன்ற நூற்றுக் கணக்கான நிறுவனங்களின் பங்குகள் அவற்றின் முக மதிப்பை விட (1000 ரூபாய் நோட்டின் முக மதிப்பு ரூ 1000) சில, பல மடங்கு அதிகமான விலையில் வெளியிடப்பட்டுள்ளன. முதல் முறை நிறுவனத்திடமிருந்து பங்குகளை வாங்கிய பிறகு பிற முதலீட்டாளர்களிடம் அவற்றை விற்கவோ, புதிய பங்குகளை வாங்கவோ பயன்படும் சந்தைதான் பங்குச் சந்தை. இங்கும் குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்கு விலை எதிர்காலத்தில் ஏறுமா, இறங்குமா என்பதற்கான நூற்றுக்கணக்கான முதலீட்டாளர்களுக்கிடையேயான போட்டியின் மூலம் பங்கு விலை ஏறி இறங்குகிறது. இங்கும் வாங்குபவரின் முதலீடு என்பது நிறுவனத்தின் எதிர்கால செயல்பாடு மீது பந்தயம் கட்டுவதாகவே இருக்கிறது.

மும்பை பங்குச்  சந்தை

மும்பை பங்குச் சந்தை

நிறுவனம் லாபம் ஈட்டினால் மொத்த லாபத்தில் ஒரு பகுதி ஈவுத் தொகையாக முதலீட்டாளருக்குக் கிடைக்கும். அதை விட முக்கியமாக, இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் பிரமாதமாக இருக்கும் என்று இன்னும் பல பேர் அதன் மீது பந்தயம் கட்டி அதன் பங்குகளை வாங்க முன் வந்தால், பங்குச் சந்தையில் அதன் விலை ஏறும். அந்த நேரத்தில் கூடுதல் விலைக்கு கைவசம் வைத்திருக்கும் பங்குகளை விற்று லாபம் சம்பாதித்துக் கொள்ளலாம்.

அமித் தனக்குக் கிடைத்த 10 லட்சம் ரூபாயை மும்பை பங்குச் சந்தையில் இது போன்ற பல்வேறு நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் செலவிட்டார். இந்த நிறுவனங்கள் ஒவ்வொன்றும் பிரகாஷ் போலவே, இஷா போலவோ, அருந்ததி போலவோ வியாபாரத்திலோ, உற்பத்தியிலோ, கடன் கொடுப்பதிலோ தமது பணத்தை போட்டு (அதாவது முதலீடு செய்து) லாபம் ஈட்டும் தொழிலில் உள்ளன. அவர்கள் லாபம் ஈட்டுவார்கள் என்ற பந்தயம்தான் அமித்-ன் முதலீடு.

இவ்வாறு அமித் வாங்கிய பங்குகளில் பலவற்றின் விலை ஏறிவிட ஒரு ஆண்டு இறுதியில் அவரது கைவசம் இருக்கும் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ 15 லட்சமாக உள்ளது. அதாவது பங்குகள் மீது அவர் கட்டிய பந்தயத்தில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்த 5 லட்சம் அதிகரித்தது பிரகாஷ் போலவோ, இஷா போலவோ, அருந்ததி போலவோ ஈட்டிய லாபத்தினால் அல்ல. தான் வாங்கிய பங்குகளுக்கு சொந்தக்கார ஹீரோ மோட்டார், ஹிந்துஸ்தான் யூனிலீவர் அல்லது இன்ஃபோசிஸ் ஈட்டிய லாபத்திலிருந்து கிடைத்த ஈவுத்தொகையாலும் இல்லை. இதில் பெரும்பகுதி அமித் போன்று இந்நிறுவனங்களின் எதிர்கால செயல்பாடு மீது பந்தயம் கட்டிய பிற முதலீட்டாளர்கள் அதிக விலை கொடுத்து பங்குகளை வாங்கியதன் விளைவு.

தேசிய பங்குச் சந்தை

தேசிய பங்குச் சந்தை

உதாரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பங்கு விலை அடிப்படையிலான டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ 6.8 லட்சம் கோடியை ($10,000 கோடி) தாண்டியது. ஆனால், 2017-18-ம் ஆண்டில் அந்நிறுவனத்தின் மொத்த ஆண்டு வருவாயே ரூ 1.03 லட்சம் கோடி, அதன் லாபம் ரூ 25,000 கோடி. அதாவது அதன் பங்கு விலை லாபத்தை விட சுமார் 27 மடங்கு. லாப ஈவுத் தொகை அடிப்படையில் கணக்கிட்டால், பங்குகளை வாங்கியவருக்குக் கிடைக்கும் லாபம் ஆண்டுக்கு சுமார் 3% தான் (இது வங்கி ஃபிக்சட் டெப்பாசிட் வட்டி வீதத்தை விட குறைவு). ஆனால், பலரும் பங்குகளை வாங்குவது டி.சி.எஸ்-ன் பங்கு விலை தொடர்ந்து ஏறும், அதை எதிர்காலத்தில் அதிக விலைக்கு விற்று விடலாம் என்ற நம்பிக்கையில் கட்டும் பந்தயம்தான்.

அவர்கள் அனைவரின் நம்பிக்கையும், கணிப்பும் இந்த நிறுவனங்கள் ஏதோ பொருளை உற்பத்தி செய்து விற்று, அல்லது வாங்கி விற்று அல்லது அப்படி விற்பவர்களுக்கு கடன் கொடுத்து லாபத்தை ஈட்டுவதன் மீது இருக்கின்றன.

இந்த பங்குச் சந்தை என்பது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், லட்சக்கணக்கான நபர்கள், அரசுகள், வங்கிகள், கோடிக்கணக்கான மக்களோடு தொடர்புடையது. பல ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி வளர்ந்து வந்த வரலாற்றைக் கொண்டது. இவை அனைத்தையும் சுருக்கமாக எளிமையாக புரிந்து கொள்ள முயற்சிக்கும் போது கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். இதை எளிதாக புரிந்து கொள்வதற்கு உலகிலேயே முதல் முறை பங்குகளை வெளியிட்ட நிறுவனம் ஒன்றின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

மூலதனம் பற்றி சுருக்கமாக இன்னொரு முறை சொல்ல வேண்டுமானால், சங்கரின் பணம் செலவாகி விட்டது. பிரகாஷின் பணம் உற்பத்தி மூலதனமாகி பெருகியது, இஷாவின் பணம் வணிக மூலதனமாக பெருகியது, அருந்ததியின் பணம் வட்டி மூலதனமாக பெருகியது. அமித்-ன் பணமோ இது போன்ற நிறுவனங்களின் செயல்பாடு மீது பந்தயம் கட்டப்பட்டு பெருகியுள்ளது. இதை பந்தய மூலதனம் (speculative capital) என்று அழைக்கிறோம்.

என்னவாக இருந்தாலும் சரி, தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும்படியான பணத்தைத்தான் மூலதனம் என்று அழைக்கிறோம். அந்த வகையில் உற்பத்தி மூலதனமும், வணிக மூலதனமும், வங்கி மூலதனமும், பந்தய மூலதனமும் வெவ்வேறு வழிகளில் பெருகினாலும் ஒரு பொதுவான தன்மையை, ஒன்றோடொன்று இணைப்புகளும் உறவுகளும் கொண்டுள்ளன.

(தொடரும்)

Series Navigation<< செலவழித்தால் பணம், பெருக்கிச் சென்றால் மூலதனம்18-ம் நூற்றாண்டின் வாரன் பஃபெட் – பங்குச் சந்தை முன்னோடி ஜான் லோ >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/speculative-capital-3/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – என்ன செய்ய வேண்டும்?

அரசு கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்காக, விவசாயத்தையும், தொழிலாளிகளையும், சிறு முதலாளிகளையும் ஒடுக்குவது தான் இது போன்ற குற்றங்களுக்கு மூல காரணமாக உள்ளது. வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகளும் சிறு உடைமையாளர்களும்...

முகமூடி 2.0

குஜராத்தில் நடந்த முஸ்ஸிம் இனப்படுகொலைகளுக்குப் பிறகு எவ்வாறு அப்துல்கலாம் என்ற முகமூடி தேவைப்பட்டதோ அவ்வாறு இன்று நாடு முழுவதும் தலித் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் இவர்களுக்கு...

Close