பச்சமுத்துவின் குற்றம் 75 கோடி மோசடி மட்டும்தானா?

எஸ்.ஆர்.எம் பச்சமுத்து கைது செய்யப்பட்டிருக்கிறார். எஸ்.ஆர்.எம்-ல் மெடிக்கல் சீட் தருவதாகக் கூறி 111 பெற்றோர்களிடமிருந்து சுமார் ரூ 75 கோடி வாங்கி ஏமாற்றி விட்டதாக, வேந்தர் மூவீஸ் (பச்சமுத்துவின் பட்டப் பெயர் பாரிவேந்தர்) மதன் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்ததை அடுத்து மதன் தலைமறைவாகி விட்டார். மதனுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்றும் அவர் எஸ்.ஆர்.எம் பெயரைச் சொல்லி ஏமாற்றி விட்டதாக “பாரிவேந்தர்” கொடுத்த புகாரையும் போலீஸ் பதிவு செய்தது. மதனின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணையில் போலீசுக்கு நீதிமன்றம் குடைச்சல் கொடுக்கவே இப்போது பச்சமுத்து கைதாகியிருக்கிறார்.

pachamuthu‘வேண்டுமென்றால் 75 கோடி டெபாசிட் செய்து விடுகிறேன் என்னை விட்டு விடுங்கள்’ என்று வாதாடி ஜாமீன் வாங்கி விட்டார் பச்சமுத்து, அவரிடம் இருக்கும் சொத்துக்கு 75 கோடி என்ன, 750 கோடி கூட தருவதாக சொல்ல முடியும். இந்த 75 கோடி ரூபாய் மோசடி மட்டும்தான் பச்சமுத்துவின் குற்றமா?

சென்ற டிசம்பர் மாதம் சென்னை நகரம் தண்ணீரில் முழுகி லட்சக் கணக்கான மக்கள் அவதிப் பட்டதற்கு பச்சமுத்துவும் ஒரு காரணம் என்பதிலிருந்து ஆரம்பிக்கலாம். காட்டங்கொளத்தூர் ஏரியை ஆக்கிரமித்தும், ராமாபுரம் ஏரியை ஆக்கிரமித்தும் பொறியியல் கல்லூரிகளும், மருத்துவக் கல்லூரியும் கட்டியிருக்கிறார் பச்சமுத்து. பச்ச முத்துவைப் போன்ற கல்வி மாஃபியாக்களாலும், தனியார் மருத்துவமனை கொள்ளையர்களாலும், கார்ப்பரேட் சூறையாடல்களாலும் மழைநீர் வடிவதற்கான நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்க, மழை வெள்ளம் குடியிருப்புகளில் புகுந்து மக்கள் வாழ்க்கையை மூழ்கடித்தது. இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நீதிமன்றங்கள் யாரும் கடந்த 30 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனிமேலும் எடுக்கப் போவதில்லை. இந்த கிரிமினல் குற்றத்துக்கு பச்சமுத்து எப்போது தண்டிக்கப்படப் போகிறார்?

pachamuthu-kalam

பச்சமுத்துவை யார் தண்டிக்கப் போகிறார்கள்?

மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்குவதற்கு மதனிடம் ரூ 50 லட்சம் கொடுத்தாகக் கூறும் பெற்றோர்கள் யாரிடமாவது அதற்கான ரசீது இருக்கிறதா என்று கேட்டால் இருக்காது. கடந்த 30 ஆண்டுகளாக இதே போன்று எஞ்சினியரிங் சீட்டுக்கும் சரி, மெடிக்கல் சீட்டுக்கும் சரி துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து லட்சக் கணக்கில் கருப்புப் பணத்தை வசூலித்துக் கொண்டிருக்கிறார் பச்சமுத்து. அவரது சொத்து மதிப்பு ரூ 20,000 கோடி என்று மதிப்பிடுகிறார்கள். பச்சமுத்து தனது கருப்புப் பணத்தை பாதுகாக்க ஆரம்பித்த கட்சியுடன் கூட்டணி வைத்துதான் மத்தியில் ஆளும் மோடியின் பா.ஜ.க 2014 நாடாளுமன்ற தேர்தலிலும் 2016 சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டது. கருப்புப் பணத்தை மீட்டுக் கொண்டு வந்து ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ 15 லட்சம் போட்டு விடுவதாகச் சொன்ன மோடியும் சரி, இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த மன்மோகனும் சரி பச்சமுத்துவின் கருப்புப் பணப் பொருளாதாரத்தை கண்டு கொள்ளவில்லை, இனிமேலும் கண்டு கொள்ளப் போவதில்லை. ஹெல்மெட் போடுவதில் கூட தானாக தலையிட்டு நாட்டாமை செய்யும் நீதிமன்றங்களுக்கும் இவ்வளவு பெரிய கருப்புப் பண புழக்கம் கண்ணில் படவில்லை. நாட்டையே சூறையாடும் கருப்புப் பணவேந்தர்களில் ஒருவரான பச்சமுத்துவை தண்டிப்பது யார்?

“லட்சக் கணக்கில் பணம் இருந்தால்தான் பொறியியல் படிக்க முடியும், மருத்துவம் படிக்க முடியும்” என்பதுதான் பச்சமுத்துவின் பிசினஸ் மாடல். பல கோடி சொத்துக்களை குவித்து வைத்திருக்கும் பணக்காரர்கள் அதில் ஒரு சிறு பகுதியை கொடுத்து தமது குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். மற்றவர்கள் நிலத்தை வைத்தோ, நகைகளை அடகு வைத்தோ படிக்க வைக்கின்றனர். எதற்கும் வக்கில்லாத பெரும்பான்மை உழைக்கும் மக்கள் தமது குழந்தைகளுக்கு எஞ்சினியரிங், மெடிக்கல் கனவுகளை மறந்து கூலி வேலைக்கு அனுப்பி விடுகின்றனர். இது ஜனநாயகத்துக்கு எதிரான, அனைவருக்கும் சம வாய்ப்பு என்ற கோட்பாட்டை மாணவப் பருவத்திலேயே சிதைக்கும் நடைமுறை. 1990-கள் முதல் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் அமல்படுத்தப்பட்டு வரும் கல்வி தனியார் மயக் கொள்கை உருவாக்கிய இந்த நடைமுறையை பயன்படுத்திக் கொண்டு சொத்து குவித்த கல்வி ‘வள்ளல்’களில் முக்கியமான ஒருவர் பச்சமுத்து. நம் நாட்டு இளைஞர்களுக்கு அடிப்படை உரிமையான கல்வியை மறுப்பதில் முன்னின்று வேலை செய்த பச்சமுத்துவுக்கு என்ன தண்டனை வழங்கப்பட வேண்டும்?

pachamuthu-2

பல ஆயிரக் கணக்கில் குவித்த கருப்புப் பணத்தை பாதுகாக்க பச்சமுத்துவே புதிய தலைமுறை என்ற பத்திரிகையும், தொலைக்காட்சியும் நடத்துகிறார். ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பனீய ஆதரவாளர்களும், பத்திரிகைகளும் பச்சமுத்துவின் “பணக்காரர்களுக்கு 100% இட ஒதுக்கீடு” என்ற ஊழலை எதிர்க்கவில்லை. அது உருவாக்கிய கருப்புப் பண வெள்ளத்தை அம்பலப்படுத்தவில்லை. மாறாக, பச்சமுத்து கொள்ளை அடித்த பணத்தில் வழங்கும் விருதுகளை வாங்கிக் கொள்ள அவரது வாசலுக்கு அணிவகுத்து சென்றிருக்கின்றனர் பல முன்னணி எழுத்தாளர்களும், அறிவுத் துறையினரும். இப்படி சமூகத்தை ஊழல்படுத்திய பச்சமுத்து எப்படி தண்டிக்கப்பட வேண்டும்?

நமது நகரங்களை மீட்க, இளைஞர்களின் கல்வி உரிமையை மீட்க
“பச்ச முத்து”களை ஒழித்துக் கட்டுவோம்!
தனியார்மயம், தாராளமயம் என்ற ஊழல்மய, ஜனநாயக விரோத கொள்கையை முறியடிப்போம்!

Permanent link to this article: http://new-democrats.com/ta/srm-pachamuthu-arrest-his-crimes-notice-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
“ஓரிரு பலாத்கார சம்பவங்களை பெரிதுபடுத்தக் கூடாது” – பா.ஜ.க அமைச்சர்

நாடுமுழுவதும் நடக்கும் பாலியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் அதிகமாக உள்ளனர். ஏனென்றால், இந்துத்துவத்துடன் பிரிக்க முடியாமல் இணைந்திருப்பது பெண்களை  ஆணுக்கு  அடிபணிந்து சேவை...

பெரும்பான்மை உழைப்பாளர்களை ஒதுக்கி வைக்கும் முதலாளித்துவ தானியக்கம்

தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்படுத்தப்போகும் சிக்கல்கள், நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். அவை, இந்தியத் தொழிலாளர் சந்தையின் நிலைமைகளை மேம்படுத்தாது. மாறாக, அவர்களது சமூகப் பாதுகாப்பு குறித்த புதிய சிக்கல்களை...

Close