வேலை வாய்ப்பு ஆசை காட்டி, உழைப்பு சுரண்டலுக்கு தரகர் வேலை பார்க்கும் அரசு

மீபத்தில் வாட்சப்பில் ஒரு வீடியோ வந்தது, அதில் ஒரு இளைஞன் வேலை தேடி செல்கிறார். ஓர் அலுவலகத்தின் வாசலில் நிற்கும் காப்பாளர், “ரெஸ்யூமை என்னிடம் கொடுங்கள். எல்லோரும் என்னிடம் தான் கொடுத்துவிட்டு செல்கிறார்கள். தேவைப்பட்டால் அழைப்பார்கள்” என்று சொல்லிவிட்டு தூரத்தில் இருக்கும் மேசையை காட்ட அங்கு பேப்பர் வெயிட்டின் கீழே பல ரெஸ்யூம்கள் இருக்கின்றன.

அடுத்த காட்சி, ஒரு பெண் தொழிற்சாலை ஒன்றினுள் செல்கிறார். பிரம்மாண்டமான நவீன ஆலையை உற்சாகத்துடன் பார்த்துக் கொண்டே  எச்.ஆர் அதிகாரியின் அறைக்குள் செல்கிறார். எச்.ஆர் அதிகாரி அப்பெண்ணின் ரெஸ்யூமை வாங்கி பார்த்துவிட்டு சொல்கிறார். “அப்போ நீங்க எஞ்சினியரிங் படிச்சிருக்கீங்க, ஆனால் அனுபவம் இல்லை. எங்களுக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள்தான் தேவை” என்று சொல்லி விட்டு இத்துடன் ஓர் அறிவுரையும் கூறுகிறார். “மத்திய அரசு ஒரு திட்டம் அறிவித்துள்ளது, பல்வேறு நிறுவனங்களில் அப்ரன்டீசாக ஒர் ஆண்டு பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. அதன் முடிவில் சான்றிதழும், பணி காலத்தில் ஸ்டைபண்டும் கிடைக்கும். அதை முடியுங்கள். பிறகு வேலை கிடைக்கும்” என்கிறார்.

2 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்த விளம்பரம், இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி, வங்காளம், மராத்தி என்ற அதிக மக்கள் பேசும் மொழிகளில் மட்டுமின்றி மிசோ, அஸ்ஸமீஸ், ஒரியா, சிக்கிமீஸ், காஸி, கொங்கணி மொழிகளிலும் யூடியூபில் காணக்கிடைக்கிறது.

“எங்களுக்கு அனுபவம் வாய்ந்த நபர்கள்தான் தேவை”

இந்த விளம்பரம், படித்து விட்டு வேலை கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்கள் மத்தியில் ஒரு புதிய நம்பிக்கையை உருவாக்கும் நோக்கத்திலானது என்பதில் சந்தேகமில்லை. கிராமங்களில், சிறு நகரங்களில் விவசாயமோ, சிறு குறுந்தொழில்களோ இனிமேல் கை கொடுக்காது என்ற நிலையில் இவர்கள் பெரு நகரங்களை நோக்கி நகர்கின்றனர். அத்துடன் ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியிலும் படித்து முடித்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கையும் லட்சக்கணக்கில் உள்ளது.

இந்நிலையில் சென்னை போன்ற பெருநகரங்கள் பற்றி கட்டமைக்கப்படும் வேலை வாய்ப்பிற்கான பிம்பம் இளைஞர்களை பெரு நகரங்களுக்கு துரத்துகிறது. தினந்தோறும் சென்னை, கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு வேலை தேடி இடம்பெயரும் இளைஞர்களை காண முடிகிறது.

ஆனால், புதிய வேலை வாய்ப்புகள் உருவாவது மிகக் குறைவாகவே உள்ளது. வேலை தேடும் இளைஞர் பட்டாளம் அதிகமாகவும், வேலை வாய்ப்பு குறைவாகவும் இருப்பதனால், நிறுவனங்கள் இதனை பலவழிகளில் இதை பயன்படுத்திக் கொள்கின்றன. அத்துடன் தன்னிடம் வேலை வாய்ப்பு இல்லை என்பதைகூட நேரடியாக கூறாமல், “உனக்கு அனுபவம் இல்லை” என்று அதை ஒரு குறையாக்கி இளைஞர்கள் மேல் சுமத்துகின்றன.

விளம்பரத்தின் இறுதியில் சில தனியார் நிறுவனங்களின் பெயர், லோகோவைப் போட்டு இங்கெல்லாம் அப்ரண்டிசாக பணியாற்றலாம் என்று முடிகிறது

இந்த விளம்பரத்தின் இறுதியில் சில தனியார் நிறுவனங்களின் பெயர், லோகோவைப் போட்டு இங்கெல்லாம் அப்ரண்டிசாக பணியாற்றலாம் என்று முடிகிறது. அவையனைத்தும் மிகப் பெரிய நிறுவனங்கள். அதுபோன்ற நிறுவங்களில் பணியாற்றினால் தனது குடும்பக்கடன், வாழ்க்கை லட்சியம் என அனைத்தையும் நிறைவேற்றிவிடலாம் என்ற ஏக்கம் மேலும் இளைஞர்களை உற்சாகப்படுத்துகிறது.

சரி, அந்த நிறுவனங்களில் தற்போது பணியாற்றும் ஊழியர்களின் நிலைமை என்ன?

ஐ.டி துறையை எடுத்துக் கொள்வோம். சமீப ஆண்டுகளாக ஐ.டி ஊழியர்கள் வேலையிழப்பு என்பது அதிகமாக நடந்து வருகிறது. அதில் பெரும்பாலும் வேலையிழப்பவர்களும், மாற்று வேலை கிடைக்காமலும் தவிப்பவர்களும் துறையில் அனுபவம் வாய்ந்தவர்கள் தான். காரணம், அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு அதிக ஊதியம் தரவேண்டியது உள்ளதால் அவர்களைத் துரத்திவிட்டு புதிய ஊழியர்களைக் கொண்டு நிரப்புகிறார்கள். புதிய ஊழியர்களுக்கான சம்பளமும் சமீப ஆண்டுகளாக வெகுவாக குறைந்துள்ளது. அனுபவம் இல்லாததால்தான் வேலை கிடைக்கவில்லை என்பது வடிகட்டிய பொய் என்பது இதனூடாக தெரிகிறது.

நிறுவனங்கள் புதிய ஊழியர்களை அப்ரண்டிஸ், டிரெய்னி என்ற பெயர்களில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு எடுப்பதற்கு கன்சல்டன்சிகளை பயன்படுத்துவது வழக்கம். சட்ட விரோதமாக அப்ரண்டிஸ்களையும், பயிற்சி பெறும் மாணவர்களையும், ஒப்பந்த ஊழியர்களையும் உற்பத்தியில் ஈடுபடுத்தும் நிறுவனங்களை தண்டிக்க, அதைத் தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை அரசு. ஆனால்,  இந்த விளம்பரத்தின் வாயிலாக அரசே கார்ப்பரேட்டுகளுக்கு கன்சல்டன்சியாகவும், ஸ்டைபண்ட் என்ற பெயரில் குறைந்த சம்பளத்துக்கு பணியாற்றும் நபர்களை பிடித்துக் கொடுக்கும் நிறுவனமாக செயலாற்றுவது தெரிகிறது.

– பிரவீன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/state-recruiting-funding-apprendices-for-corporates/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கோலமாவு கோகிலா செய்வது தவறில்லையா?

படத்தின் கோலமாவு கோகிலாவாகத்தான் இன்றைக்கு வாழ வேண்டியிருக்கிறது. கோகிலாவுக்கு அம்மா நோய் சிகிச்சைக்கு ரூ 15 லட்சம் என்றால், ஒவ்வொருவருக்கு குழந்தையின் படிப்புக்கு, எதிர்கால உயர்கல்விக்கு, வீடு...

கஜா : அரசியலை புரிய வைப்பதே நீண்ட கால கடமை

நிவாரண பொருட்களை சேகரிப்பது, பின்பு அதை பிரித்து எடுத்து சமமாக பங்கு வைத்து பின்பு பகிர்ந்தளிப்பதில் எவ்வளவு நுணுக்கங்கள் உள்ளன என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். நாங்கள்...

Close