தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதலில் கொலை செய்யப்பட்ட வீரர்களை நினைவிலேந்தும் கூட்டம் ஜூன் 3, 2018, ஞாற்றுக்கிழமை காலை பத்து மணிக்கு அமெரிக்காவின் இலியனாய் மாநிலத்தில், ப்ளூமிங்டன் (Illinois, Bloomington) என்ற ஊரில் அமெரிக்கா வாழ் தமிழர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் ஒன்று கூடி நடந்தேறியது.
அனைவரும் கருப்பு ஆடை அணிந்து வருமாறு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. வந்திருந்தவர்களை வரவேற்ற பிறகு, அமைதி பேரணியில் கொல்லப்பட்ட வீரர்களை பற்றிய சிறிய உரையுடன் கூட்டம் தொடங்கியது. முக்கியமாக, ஸ்னோலின், தோழர் ஜெயராமன் பற்றியும் அவர்களின் போராட்டக்குணம், குடும்பச் சூழ்நிலை, அவர்களின் இழப்பை ஈடு செய்யமுடியாமல் தவிக்கும் குடும்பத்தின் தற்போதய நிலை ஆகியவற்றை பகிர்ந்து கொண்டு, தமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தனர்.
வந்திருந்தவர்களில் ஒருவர் தூத்துக்குடியை சேர்ந்தவர். அவர் கூறியதாவது “1993 ஆம் ஆண்டு என்னுடன் படித்த முந்நூறு மெகானிக்கல் இன்ஜினீரிங் பட்டதாரிகள் வேலை தேடிக்கொண்டிருந்த போதும் மக்கள் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கொண்டிருந்தனர். அனைத்து அரசியல்வாதிகளும், குறிப்பிட்ட சில எம்.எல்.ஏக்களும் (பெயர் குறிப்பிட விரும்பவில்லை) லாரி, மணல் காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வந்தனர். இது அங்கிருக்கும் மக்களுக்கு அனைத்தும் தெரியும். அதனால்தான் இந்த போராட்டத்தில் அத்தகைய அரசியல்வாதிகள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அதையும் மீறி வர விரும்புவார்கள் அனைத்து காண்ட்ராக்ட்களையும் மூடிவிட்டு வரவேண்டும் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க மக்களால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்ட போராட்டம்தான். இவ்வாறு முடிந்தது மிகவும் வேதனைக்குரியது.
தூத்துக்குடியை நினைத்தாலே மிகவும் கவலையாக இருக்கிறது. நூறாவது நாள் போராட்டத்திற்கு முன் எனது நண்பர்கள், உறவினர்களிடம் தினமும் பேசுவேன் அவர்களின் வேலை, அலுவலகம், கல்லூரி முடித்துவிட்டு போராட்டத்தில் வந்து உட்காருவார்கள். அப்படித்தான் அமைதியாக அறவழியில் தான் நடந்தது”
என்று ஆரம்பித்து அவரது அனுபவங்களையும், ஸ்டெர்லைட் ஆலையின் தொடர் அநீதிகளையும் தோலுரித்து பேசினார். தூத்துக்குடி கள நிலவரங்களை அவருடைய நண்பர்கள் குடும்பத்தினரிடம் மூலமாக கேட்டறிந்து மனமுடைந்து போனதை விவரித்தார்.
நினைவேந்தல் கூட்டத்தில் வேற்றுமைகளை தூக்கியெறிந்து ஒருமித்த எண்ணத்துடன் அனைவரும் கூடியிருந்தனர். இறந்தவர்களின் புகைப்படங்கள் முன் அனைவரும் மெழுகுவர்த்தி ஏந்தி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். குழந்தைகளும் தமது பிஞ்சு கைகளில் போராட்டச் சுடரை ஏந்தி நின்றது எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைத்தது.
மெழுகுவர்த்தி ஏந்திய தருணத்தில் அனைவரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரையும், அதற்கு பின்னரும் போராடும் மக்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
சொந்த நாட்டையும், மக்களையும் உடலால் விட்டு விலகி வெகுதூரத்தில் இருந்தாலும் தமிழ்நாட்டுடன் உணர்வால் இணைந்து உறுதியோடு அவர்களுடன் துணை நிற்போம் என்று சூளுரைத்தனர்.
போராட்டங்கள் கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும், மக்கள் அவர்களது வாழ்வாதாரத்திற்குத்தான் போராடுகின்றனர். எனவே, அதை வரவேற்க வேண்டும் என்று ஒருவர் அவரது கருத்தை பதிவு செய்தார்.
தொடர்ந்து தூத்துக்குடியில் நடக்கும் கள நிலவரங்களை பற்றி வாட்ஸ் ஆப் குழுவில் அனைவரும் பகிர விருப்பம் தெரிவித்தனர். யாரும் அந்த குழுவில் இருந்து வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது மாதத்திற்கு இரண்டு நாட்கள் பொது இடத்தில் கூடி தூத்துக்குடியில் அடுத்தக்கட்ட விவரங்களை கேட்டறிந்து கொள்ளலாம் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது, அதற்கு வந்திருந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர்
இதற்கு முன்பு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாகவும் காவிரி மேலாண்மை அமைக்கவும் அமைதி போராட்டங்கள் இந்தப் பகுதியில் நடத்தியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று நினைவேந்தல் கூட்டம் அமெரிக்காவின் பிற நகரங்களானChicago, Dallas, Columbus, Bentonville, Bellevue ஆகிய இடங்களில், தமிழர்களை ஒருங்கிணைத்து நடத்த நண்பர்களுடன் திட்டமிடப்பட்டுள்ளது.
– ராஜ்