சட்டப்படி ஸ்டெர்லைட் பிரச்சினையை அணுகியிருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால் இந்த உயிரிழப்புகளைத் தடுத்திருக்கலாம் என்கிறார்கள் சில அறிவுஜீவிகள். அவர்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை, தூத்துக்குடி மக்கள் இந்திய அரசியலமைப்பு சட்டம் வழங்கியிருக்கும் உரிமையின் அடிப்படையில் தான் இத்தனை நாளும் போராடி வந்திருக்கிறார்கள்; மே 22 அன்றும் மக்கள் சட்டப்படிதான் முறையாக அறிவித்துவிட்டு மாவட்ட ஆட்சியரை சந்திக்க பேரணியாக சென்றார்கள்.
ஆனால், சட்டப்படி வந்து பதில் சொல்ல சம்பந்தப்பட்டவர்கள் யாரும் இத்தனை நாட்கள் வரவில்லை, சட்டப்படி மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய ஆட்சியர் தப்பி வெளியூர் செல்கிறார். துப்பாக்கிகளோடு காவல்துறை வந்து “சட்டப்படி” சுட்டுத் தள்ளுகிறது. நடந்தேறிய அரச பயங்கரவாத படுகொலைகளுக்கு பிறகு இப்போது “சட்டப்படி” நடக்கவேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களையும் பல்வேறு அமைப்புகளையும் பார்த்து அறிவுரை சொல்கிறார்கள் இவர்கள்.
யார் சட்டத்தை துளியும் மதிக்கவில்லையோ, யார் அத்தனை சட்டங்களையும் காலில் போட்டு மிதித்துவிட்டு காட்டுமிராண்டித்தனத்தை அரங்கேற்றியிருக்கிறார்களோ அவர்களை விட்டுவிட்டார்கள்; சட்டவிரோதமான முறையில் ஆலையை அமைத்து சுற்றுச்சூழலை சீரழித்து மக்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையையும், அனில் அகர்வாலையும் விட்டுவிட்டார்கள்.
அமைதியான முறையில் சட்டத்தை மதித்து நடந்த பொதுமக்களைப் பார்த்து இன்று தேசவிரோதிகள், சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் என்று சொல்கிறார்கள்.
சட்டப்படி 22 ஆண்டுகள் போராடியுள்ளார்கள் அம்மக்கள், அதற்கு சட்டம் அவர்களுக்கு அளித்த நீதி கேன்சர் கொலைகளும் சுற்றுச்சூழல் சீரழிவும்?
சட்டப்படி நடந்த கிரானைட் ஊழல் வழக்கு, தாதுமணல் கொள்ளை வழக்கு என்ன ஆனது? அதில் செத்த உயிர்கள் எத்தனை? சட்டப்படி நடந்ததால் கேன்சர் உட்பட பல்வேறு நோயால் செத்தவர்களுக்கு நீதி என்ன?
அதே சட்டப்படிதான் காவிரிப் பிரச்சினையில் தமிழகம் இன்று வஞ்சிக்கப்படுகிறது. சட்டப்படி தான் நீட் தேர்வும், மீத்தேன், ஹைட்ரோகார்பன், பெட்ரோகெமிக்கல் மண்டலம் உட்பட அனைத்து கனிமவளக் கொள்ளைகளும் நடைபெறுகின்றன. ஸ்டெர்லைட்டுக்கு அடிபணிந்து செல்வதுதான் இவர்கள் சொல்லும் “சட்டப்படி” நடப்பது.
சட்டப்படி நட என்று சொல்பவர்கள் சிந்தனை திறன் அற்றவர்கள் அல்லர், நன்றாக சிந்தித்து தனது வர்க்க நலனையும், கட்சி ஆட்சி அதிகார நலனையும் வைத்துதான் இந்த ஆலோசனைகளை வழங்குகிறார்கள். சாமானிய மக்களுக்குத் தெரியும் – அனில் அகர்வால் சட்டத்துக்கு என்ன விலை வைப்பார் என்று.
– பிரவீன்