ஸ்டெர்லைட் – இப்போதைய நிலவரம் என்ன?

ண்பர்களே,

மே 22-ம் தேதி நாசகார ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது போலீஸ் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டது நம் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து மகிந்த்ரா சிட்டி, சோழிங்கநல்லூர் எல்காட், சிறுசேரி சிப்காட் போன்ற இடங்களில் ஐ.டி ஊழியர்கள் திரண்டு இந்த படுகொலைக்கு எதிராக கண்டனத்தை தெரிவித்தனர்.

20 நாட்களுக்குப் பிறகு இன்றைய நிலைமை என்ன? ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான சக்திகளாக யார் உள்ளனர்? போலீஸ் என்ன செய்து கொண்டிருக்கிறது.

கார்ப்பரேட் நாசகார திட்டங்களை எதிர்த்துப் போராடினால், பொய் வழக்கில் சிறை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது, முன்னணியாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு படுகொலை – என தூத்துக்குடி மாடலை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த முயல்கிறது போலீசு. சென்னை – சேலம் எட்டு வழிச் சாலை அமைக்க விவசாயிகளிடமிருந்து நிலம் வலுக்கட்டாயமாக பறிக்கப்படுகிறது. அதை எதிர்த்து தன்னெழுச்சியாகப் போராடும் மக்களை கைது செய்கிறது போலீசு. இதுவும் தூத்துக்குடி மாடல் அடக்குமுறைதான்.

யார் சுடச்சொன்னார்கள் எனத் தெரியாதென்று புளுக ஆரம்பித்த அரசு, பின்னர் தாசில்தாரைக் கோர்த்து விட்டது, அதுவும் அம்பலமாகிப்போனது. ஸ்டெர்லைட்டுடன் கூட்டு சேர்ந்து சதித் திட்டம் தீட்டி குறிபார்த்து சுட்டு மக்களைக் கொன்ற நிகழ்வு இந்தியா முன்னெப்போதும் கண்டிராத ஒன்று. தமிழ்நாட்டில் இனிமேல் யாரும் எதற்காகவும் போராடக் கூடாது என்ற அச்சத்தை ஏற்படுத்த முயல்கிறது, அரசு. அச்சத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் போராடும் முன்னணியாளர்களை ஊபா (UAPA) என்ற ஆள்தூக்கி கறுப்பு சட்டத்தில் கைது செய்து மாதக்கணக்கில் சிறைவைக்கவும், இயக்கங்களை தடை செய்யவும் முயல்கிறது எடப்பாடி அரசு.

தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டினால் ஏற்படும் 22 ஆண்டுகால பாதிப்பை உணர்ந்து போராடி வந்துள்ளனர். அவர்களை வெளியூரிலிருந்து சென்றவர்கள் போராடத் தூண்டினர் எனக் கூறுவது அந்த மக்களின் போராட்டத்தை இழிவுபடுத்துவதாகும். அம்மக்களின் நிலத்தை, காற்றை, நீரை, ஆரோக்கியத்தை நாசமாக்கிய ஸ்டெர்லைட் முதலாளி எந்த ஊர்க்காரர்? இந்த கேள்விக்கு பதில் சொல்லமுடியுமா? இங்கிலாந்தில் வசிக்கும் வேதாந்தா அனில் அகர்வாலின் பின் நிற்கும் உலக நிதி மூலதன முதலைகள் யார் யார் என்று அவர்களுக்குத் தெரியுமா?

வேதாந்தா லிமிடெட் நிறுவனத்தின் பங்கு கையிருப்பு விபரம்

பங்குதாரர் வகை பங்குகள் % பங்கு கையிருப்பு
இந்திய உரிமையாளர் 1,60,656 0%
வெளிநாட்டு உரிமையாளர் 186,34,58,132 50.13%
வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் 67,09,34,899 18.05%
பிற 49,30,65,004 13.26%
இந்திய நிதி நிறுவனங்கள் 26,54,43,781 7.14%
வங்கிகள், பரஸ்பர நிதியங்கள்   21,87,23,231 5.88%
சிறு முதலீட்டாளர்கள் 19,61,77,065 5.28%

அதாவது, இந்நிறுவனத்தில் 68% அன்னிய நாட்டைச் சேர்நதவர்களுக்கு சொந்தமானது.

ஸ்டெர்லைட் உருவாக்கிய பாதிப்புகள் குறித்து மக்கள்  கேட்கும் கேள்விகளுக்கு அதிகாரிகளால், அமைச்சர்களால் பதில் சொல்ல முடியுமா? கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிரான போராட்டங்களை ஆதரிப்பதும் கலந்து கொள்வதும் நாட்டுப்பற்று கொண்ட ஒவ்வொருவரின் கடமை!

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மட்டுமல்ல, நியூட்ரினோ, சென்னை சேலம் எட்டு வழிச் சாலை, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம், சாகர்மாலா உள்ளிட்ட மக்கள் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டங்களுக்கெதிராக தன்னெழுச்சியாக உள்ளூர் மக்கள் அமைப்பாகத் திரண்டு போராடுகிறார்கள். இவ்வாறு தனித்தனிப் பிரச்சனைகளுக்காக நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டும். அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணமான அரசின் நாசகாரக் கொள்கைகள் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும்.

வளர்ச்சி என்ற பெயரில் 15% மக்கள் மட்டும் வளமோடு வாழவும் பெரும்பான்மை மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து அகதிகளாக்கப்படுவதும்தான் பா.ஜ.க அரசு பின்பற்றும் கொள்கை. அம்பானி, அதானி போன்ற குஜராத் பனியாக்கள், பன்னாட்டு கம்பெனிகள் இயற்கை வளங்களையும், மனித வளத்தையும், அரசு வங்கிகளையும் கொள்ளையடித்து கொழுக்க வைப்பதுதான் மோடி அரசின் கொள்கை. இயற்கையை சூறையாடி உயிரினங்கள் வாழத் தகுதியற்ற நாடாக மாற்றுவதுதான் இவர்களின் ‘வளர்ச்சி’ப் பாதை! மக்களை போராடத் தூண்டுவதும், வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதும் உண்மையில் இவர்களே! இவர்கள்தான் சமூகவிரோதிகள்! விஷக் கிருமிகள்!

போலீசு, கலெக்டர், கார்ப்பரேட்டுகளுடன் கள்ளக்கூட்டு வைத்துக் கொண்டு போராட்டத்தை முன்னின்று நடத்துவதுபோல் காட்டிக்கொடுக்கும் என்.ஜி.ஓ.க்கள் (தன்னார்வ குழுக்கள்) தூத்துக்குடி மக்களால் இனம்கண்டு புறக்கணிக்கப்பட்டனர். மக்களே தலைமைதாங்கி நடத்திய ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் நமக்கெல்லாம் ஒரு முன்மாதிரி! இதுபோல் வேறெங்கும் நடந்து விடக்கூடாது என அஞ்சுகிறது அரசு. ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் அறவழியில் அமைதியாக முடிந்து விடக்கூடாது என்ற வஞ்சக நோக்கில், துப்பாக்கிச்சூடு படுகொலை நிகழ்த்திக்காட்டி இருக்கிறது கார்ப்பரேட் அடியாள்படையான போலீசு. ஆனால் உயிருக்குப் பயந்து போராடாமல் முடங்கி விடாதீர்கள் என அறைகூவுகிறார்கள் களப்பலியில் குருதி சிந்திய 13 வீரத்தியாகிகள்!!

  • தூத்துக்குடி மக்கள் மீது போடப்பட்ட எல்லா வழக்குகளையும் திரும்பப் பெறு!
  • படுகொலைக்குக் காரணமான அதிகாரிகளைத் தண்டிக்க உயர் நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ் சிறப்புப் புலனாய்வுக் குழு உருவாக்கி கொலை வழக்கில் விசாரணை நடத்து!
  • போராடும் உரிமை, கருத்துரிமையை நசுக்கும் கார்ப்பரேட் போலீசு அடக்குமுறையை எதிர்த்து முறியடிக்க அனைவரும் வீதியில் இறங்கி போராடுவோம்.

கட்டாய ராஜினாமா,  அப்ரைசல் அநியாயங்கள், வேலைப் பளு என்று கார்ப்பரேட் உலகை   தினம் தினம் நேரடியாக எதிர் கொள்ளும்  ஐ.டி/பி.பி.ஓ ஊழியர்கள், அதே கார்ப்பரேட் தாக்குதலால் அழிக்கப்பட் டு வரும் விவசாயிகளுக்கும் உழைக்கும் மக்களுக்கும் ஆதரவாக நிற்பதுதான் இன்றைய தேவை. அதன் மூலம் தான் நம் நாட்டையும் அதன் இயற்கை வளங்களையும் அழிவிலிருந்து பாதுகாத்து எதிர் கால சந்ததியினருக்கு விட்டுச் செல்ல முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/sterlite-state-of-corporate-terror/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்!

பா.ஜ.கவினரும் அரசும் இப்போது, 'திட்டம் நல்ல திட்டம், மோடியின் நோக்கம் நல்ல நோக்கம், புதிய சிந்தனையை பயன்படுத்தி தைரியமான நடவடிக்கை எடுத்தார். அதை கருப்புப் பண பேர்வழிகளும்,...

ஐ.டி துறையில் தொழிற்சங்கம் : கார்ப்பரேட்டுகளது பூச்சாண்டி

திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக, “ஆட்குறைப்பே செய்யவில்லை. வழக்கு போட்டிருப்பவர்கள் எல்லோரும் தாமாக ராஜினாமா செய்து விட்டு வெளியேறியவர்கள்தான்" என்று பச்சைப்பொய்யை வாரியிறைத்தது,  விப்ரோ நிர்வாகம்.

Close