சங்கத்தை வலுப்படுத்துவோம், ஒப்பந்த ஊழியர்களை ஆதரிப்போம், விவசாயிகளுக்கு துணை நிற்போம் – ஐ.டி சங்கக் கூட்டம்

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவை வலுப்படுத்துவோம்

ஜூன் 17 அன்று நடந்த சங்கக் கூட்டத்தில் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் நிர்வாகிகளும் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகக் குழு ஜூலை 8, 2017 அன்று சந்தித்து நூற்றுக்கணக்கான ஊழியர்களை இணைத்து நமது சங்கத்தை வலுப்படுத்துவது என்று முடிவு செய்தது. 20-30 பேர் கொண்ட தலைமைக் குழு ஒன்றை உருவாக்கி இந்த முயற்சியை முன்னெடுத்து செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.

ஊழியர்கள் சங்கம் என்பது வேலை இழப்பு சம்பந்தமான பிரச்சனைகள், தொழிலாளர் துறையில் வழக்கு பதிவு செய்வது இவற்றுக்கு மட்டுமானது இல்லை. ஊழியர் சங்கத்தின் முக்கிய பங்களிப்பு தினசரி பணி வாழ்வில் எதிர்கொள்ளும் அப்ரைசல் முறை, வேலை நேரம், ஏன் வேலை செய்ய கணினி கிடைப்பது போன்ற பல்வேறு பிரச்சனைகளில் ஊழியர்களின் நலனை உறுதி செய்வது ஆகும்.

வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் சங்கத்தின் மாதாந்திர கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். இந்தக் கூட்டத்தில் சங்கத்தை வலுப்படுத்துவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும். இந்த முடிவுகள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி, இந்திய முழுவதும் ஐ.டி நிறுவனங்களில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒப்பந்தத் தொழிலாளர்களின் பரிதாப நிலை

நண்பர்களே, ஊழியர் சங்கம் அமைப்பது, பணியிடத்தில் ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வது போன்ற உரிமைகளை ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல பத்தாண்டுகள் போராடி பெற்ற சட்டங்களின் கீழ் நாம் அனுபவிக்கிறோம். இந்த சட்டங்கள் பணியிடத்தில் ஊழியர்களின் ஜனநாயக உரிமைகளை உறுதி செய்வதற்கானவை.

ஆனால், பொதுத்துறை, அல்லது கார்ப்பரேட் நிரந்தர வேலையில் உள்ள தொழிலாளர்களுக்கும் ஊழியர்களுக்கும் மட்டுமே இவை கிடைக்கின்றன. இவர்களின் எண்ணிக்கை இந்தியாவின் மொத்த தொழிலாளர் தொகையில் சுமார் 8% மட்டுமே. எஞ்சிய 92% ஊழியர்களும் தொழிலாளர்களும் நினைத்த நேரத்தில் வேலையை விட்டு நீக்கப்படுவது, அதிக நேரம் வேலை வாங்கப்படுவது, குறைந்த சம்பளத்துக்கு வேலை வாங்கப்படுவது என்று எந்த உரிமைகளும் இன்றி அவதிப்படுகின்றனர். நிரந்தர ஊழியர்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு நாம் ஒப்பந்தத் தொழிலாளர்களின் நலனுக்காக குரல் கொடுக்க வேண்டும்.

அந்த வகையில் நாம் ஐ.டி நிறுவனங்களில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி விவாதிப்போம்

விவசாயிகள் எதிர் கொள்ளும் நெருக்கடி.

எல்லாவற்றையும் விட முக்கியமாக, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நிலைமை அனைவருக்கும் கவலையளிக்கக் கூடியதாக உள்ளது. 10 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களும் சுமார் 25 கோடி விவசாய கூலித் தொழிலாளர்களும் கடினமான, துயரமான வாழ்வை எதிர் கொள்கின்றனர்.

சென்ற ஆண்டு தமிழகத்தில் நடந்ததைப் போல பருவமழை பொய்த்து விட்டால் கால்வாய்கள் வறண்டு, பயிர்கள் வாடி, நிலங்கள் காய்ந்து போய் கிராமப் புற விவசாய பொருளாதாரம் நைந்து போகிறது. அரசிடமிருந்து வறட்சி நிவாரணமாக உருப்படியாக எதுவும் கிடைக்காத நிலையில் விவசாயிகள் கந்து வட்டி கும்பல்களிடம் சிக்கி கடனில் மூழ்குகிறார்கள்.

சென்ற ஆண்டு வட இந்தியாவின் பல மாநிலங்களில் பருவமழை பொய்க்காமல் பெய்த போதும், விளைபொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்து விவசாயிகள் அல்லல் படுகிறார்கள். விதைகள், உரங்கள், பூச்சிக் கொல்லி, எந்திரங்களை வாடகைக்கு எடுப்பது என்று கார்ப்பரேட் ஏகபோக நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்டு விவசாய உள்ளீட்டு செலவுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. மறுபக்கமோ, பன்னாட்டு சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ள விவசாய விளைபொருட்களுக்கான சந்தையில் தமது விளை பொருளை விற்கும்படி விவசாயிகள் விடப்படுகின்றனர். அறுவடை காலத்தில் விலை அதள பாதாளத்துக்கு வீழ்ச்சியடைந்த போதும், வேறு வழியில்லாமல் கிடைக்கும் விலைக்கு பொருளை விற்று விட்டு கடனில் மூழ்குகிறார்கள் விவசாயிகள்.

வரும் வாரங்களில் விவசாயிகளின் பிரச்சனையை ஐ.டி ஊழியர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வது என்று பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு திட்டமிட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள, குறிப்பாக தமிழக விவசாயிகள் எதிர்கொள்ளும் நெருக்கடி தொடர்பான பதிவுகளை நமது தளத்தில் வெளியிட உள்ளோம். அனைத்து ஐ.டி ஊழியர்களும் விவசாயிகளுக்கு உறுதுணையாக நிற்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு

அறைக்கூட்டம்

1. பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவை வலுப்படுத்துதல்

2. ஐ.டி துறையில் ஒப்பந்த ஊழியர்களின் நிலை

3. விவசாயிகள் வாழ்வை பாதுகாப்போம்

நாள் : சனிக்கிழமை ஜூலை 15, 2017
நேரம் : மாலை 4 மணி முதல் 7 மணி வரை
இடம் : பெரும்பாக்கம்

Permanent link to this article: http://new-democrats.com/ta/strengthen-union-support-contract-employees-stand-with-farmers-it-union-meeting-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
“நீட்”ஐ ரத்து செய் – போஸ்டர்கள்

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தெருமுனைக் கூட்டம் நாள் : 15-09-2017 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6 மணி முதல் 9 மணி...

முதலாளி மல்லையாவின் ஜேப்படியும், ஜேப்படி நீரவ் மோடியின் முதலாளித்துவமும் – மோடி அரசின் சாதனைகள்

மோடி அரசின் digital முகத்தை மோசமாக கிழித்திருக்கிறது நீரவ் மோடி – சோக்சி கும்பல். ஆனால், இத்தகைய ஜேப்படி நபருடன்தான் டாவோசில் நரேந்திர மோடி புகைப்படம் எடுத்துக்...

Close