தொழிலாளர்களின் கூட்டு பேர உரிமையுடன் பிரிக்க முடியாமல் இணைந்தது வேலை நிறுத்தம் செய்யும் உரிமை. தமது கோரிக்கைகளுக்காக நிர்வாகத்துடன் நீண்ட காலம் போராடி பார்த்து, உரிய முன் அறிவிப்பு கொடுத்து வேலை நிறுத்தம் செய்வதை தொழிற்தாவா சட்டம் அங்கீகரிக்கிறது.
நீதிமன்றத் தீர்ப்புகள்/கருத்துக்கள்
- தொழிற்சாலைகளைப் பொறுத்தவரை “தொழிலாளர்கள் தொடர்ந்து பல இயக்கங்கள் நடத்திய பின்னரும்,அவர்களின் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், அவர்களின் கடைசி ஆயுதமாக வேலை நிறுத்தம் என்பது தவிர்க்க இயலாது என்பதும், அவர்களுக்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் அத்தகைய உள்ளார்ந்த அர்த்தம் பொதிந்த உரிமையை வழங்கியுள்ளது” என பாங்க் ஆப் இந்தியா–எ– டி.எஸ்.கேலவாலா (1990 (4) SCC 744)என்ற வழக்குத் தீர்வில் உச்ச நீதிமன்ற அமர்வு தெளிவு படுத்தியுள்ளது.
- பி.ஆர்.சிங் –எ– இந்திய அரசு (1990 Lab IC 389-396 SC) என்ற வழக்குத் தீர்வில் உச்ச நீதிமன்ற நீதியரசர் அஹ்மாதி கருத்து தெரிவிக்கையில், “தனி தொழிலாளியை விட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து தொழிற்சங்கமாக கோரிக்கை வைக்கிறபோது, கூட்டுப்பேர உரிமையில் அவர்கள் பலம் ஓங்கியிருக்கும். அதே சமயம் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ‘சட்டப்படி வேலை‘, ‘மெதுவாக இயக்குதல்‘, ‘உள்ளிருப்பு வேலை நிறுத்தம்‘,மற்றும் ‘வேலை நிறுத்தம்‘ போன்றவற்றை நிர்வாகம் தடைசெய்யுமானால், அவர்களின் கோரிக்கை மீதான சமரச பேச்சு வார்த்தையில் கூட்டுப் பேர உரிமையின் சக்தி குறைக்கப்பட்டதாக ஆகிவிடும்” என தெரிவித்துள்ளார்.
- குஜராத் ஸ்டீல் டியூப்ஸ் –எ– அதன் மஸ்தூர் சபா (AIR 1980 SC 1896) என்றவழக்கு உச்ச நீதிமன்றத்தின் 3 நீதிபதிகள் அமர்வினால் விசாரிக்கப்பட்டது. அதன் தீர்வில் நீதியரசர் பகவதி கருத்துத் தெரிவிக்கையில் “வேலை நிறுத்த உரிமை என்பது தொழிலாளர்களின் கூட்டுப்பேர உரிமையுடன் உட்பொதிந்த உரிமையாகும் என்றார். மேலும் இந்த உரிமையானது தொழிற்தாவாச் சட்டங்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதுடன் ஒரு சமூக நீதிசார்ந்ததும் ஆகும்” என்றார்.
- “தொழிலாளர்களின் வேலை நிறுத்த உரிமை என்பதே முதலாளிகள் தங்களின் உரிமை என கருதிக் கொள்கிற கதவடைப்பு என்பதிலிருந்து பிறந்தது” என காயர்பிட்டா எஸ்டேட் –எ– ராஜமாணிக்கம் (1960 II LLJ 275 SC) என்ற வழக்குத் தீர்வில் நீதியரசர் கஜேந்திரகட்கர் தெரிவிக்கிறார். துரதிருஷ்டவசமாக தொழிலாளர்கள் வேலை நிறுத்த உரிமையை கடுமையாக சாடிய டி.கே.ரெங்கராஜன் வழக்குத் தீர்வில் கதவடைப்பு தொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
சட்டங்கள்
தொழிற்தாவாச் சட்டம் 1947-ல் 15 நாட்கள் முன்னறிவிப்பு கொடுத்து வேலை நிறுத்தம் மேற்கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது. அதை தவிர தொழிற்சங்கச் சட்டம் 1926-ன் பிரிவுகள்18(xiii) மற்றும் 19(xiv) ஆகியவற்றில் தொழிலாளர்கள் தங்கள் சமூக பொறுப்பிலிருந்து விலகி நின்று வேலை நிறுத்தம் செய்வது பற்றி விவரிக்கிறது.
சர்வதேச உடன்படிக்கைகளின் படியான உரிமை
இவைகளுக்கு அப்பாற்பட்டு சர்வதேச தொழிலாளர் உடன்படிக்கையில் இந்தியாவும் பங்கேற்று ஒப்பமிட்ட நாடு என்ற அடிப்படையில், அதன் தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டும். அந்த சர்வதேச பிரகடனத்தின் 87-வது சரத்தானது ஒன்று கூடும் உரிமை பற்றியும், உரிமையை பாதுகாக்க ஒருங்கிணைப்பது பற்றியும் தெரிவிக்கிறது.
தவிர பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் பற்றிய சர்வதேசஉடன்படிக்கையின் உறுப்பு 8(1)(d)யில் அதில் பங்கேற்ற நாடுகள் அதன் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை பாதுகாக்கிற வகையில் செயல்பட வேண்டும் என தெரிவிக்கிறது.