உட்காரும் உரிமைக்காக தொழிலாளி வர்க்கத்தின் போராட்டம்

மது நாட்டில் காலில் செருப்பு போடுவதற்கு போராட்டம், தெருவில் நடப்பதற்கு போராட்டம், சட்டை போடுவதற்கு போராட்டம், ஏன் மாராப்பு போடுவதற்குக் கூட போராட்டம் என்று கடும் போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒடுக்கப்பட்ட சாதியினர் தமது ஒவ்வொரு அடிப்படை மனித உரிமையையும் நிலைநாட்ட வேண்டியிருக்கிறது.

இன்றைக்கும் உணவகங்கள் முன்பும், பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியிலும் வாடிக்கையாளர்களை வரவேற்று கடைக்குள் அனுப்பும் வேலை செய்யும் செக்யூரிட்டியில் இருந்து கடைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் வரை வேலை நேரத்தில் உட்காருவதற்கு அனுமதி இல்லை. அப்படி உட்காருவது எஜமானர்களாகிய முதலாளிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் மரியாதை குறைவு என்று அதட்டப்படுவார்கள்.

அதாவது, இன்று முதலாளித்துவ முறையிலான கூலிக்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் “முதலாளித்துவ வளர்ச்சியால் மட்டுமின்றி அந்த வளர்ச்சியின் அரைகுறை நிலையினாலும் அவதிப்படுகின்றனர். நவீன காலத் தீமைகளோடு கூடவே, பாரம்பரியமாய் வந்த அவலங்களின் முழு வரிசையும் நம் நாட்டு தொழிலாளர்களை வருத்துகிறது….. வாழ்பவற்றால் மட்டுமின்றி செத்துப் போனவற்றாலும் தொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.” (காரல் மார்க்ஸ், மூலதனம் முதல் பதிப்புக்கு முன்னுரையிலிருந்து)

துணிக்கடைகள், நகைக்கடைகளுக்குச் செல்லும் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் தாங்கள் வாங்க வந்திருக்கும் பொருட்களைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பார்களேயன்றி அவற்றைத் தங்களுக்குக் எடுத்துக் காட்டும் கடை ஊழியர்களைப் பற்றி எதுவும் கவனிக்க மாட்டார்கள். வாடிக்கையாளர் எத்தனை முறை துணிகளை மாற்றி மாற்றிக் கேட்டாலும் முகம் சுளிக்காமல் அவர்களுக்குத் தேவையானதை எடுத்துத் தரும் பணியாளர்கள் நாள் முழுவதும் நின்று கொண்டு வேலை செய்வது பற்றி யாரும் கவலைப்பட்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராடி, கேரளாவின் துணிக்கடை, மற்றும் நகைக்கடைகளில் வேலை செய்யும் பெண் பணியாளர்கள், வேலை செய்யும் உரிமையை வென்றிருக்கிறார்கள். கேட்கும் போது ஏதோ சாதாரண விசயம் போன்று தோன்றினாலும், இந்த வெற்றியானது அந்தத் தொழிலாளர்களுக்கு அவர்களது பணியிடத்தில் அனுபவித்து வந்த நரக வேதனையிலிருந்து, விடுதலையைப் பெற்றுத் தந்துள்ளது.

நாள் முழுவதும் உட்காராமல் நின்று கொண்டே இருக்க வேண்டும், தண்ணீர் குடிக்கவோ, சிறுநீர் கழிக்கவோ கூட அனுமதி கிடையாது. உணவு அருந்த பத்து நிமிடம் இடைவேளை, அதற்குள் சிறுநீர் கழித்துக் கொள்ளவேண்டும். வாரத்தின் ஏழு நாளும், ஏன் வருடத்தின் அனைத்து நாட்களிலும் கூட இதுதான் நிலைமை. வாடிக்கையாளர் வந்தாலும் வராவிட்டாலும் நின்றுகொண்டேதான் இருக்க வேண்டும். திருவிழாக் காலங்களிலோ வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பதுபோல இவர்களது துயரமும் பலமடங்காகிவிடும், பணியாளர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ளவோ, சுவற்றில் சாய்ந்து ஓய்வெடுக்கவோ கூடாது. எல்லா நேரமும் கடைக்குள் இருக்கும் கேமரா இவர்களைக் கண்காணித்துக் கொண்டேதான் இருக்கும்.
தப்பித் தவறி உட்கார்ந்து விட்டாலோ, தாங்க முடியாமல் கழிப்பறைக்குச் சென்று விட்டாலோ சூப்பர்வைசர் என்ற கங்காணியின் காது கூசும் அளவுக்கான வசவுகளை கேட்க வேண்டி வரும்.

இப்படிப்பட்ட பணிச்சூழலில் தினமும் 10 முதல் 12 மணிநேரம் வரை உழைக்கும் இந்தத் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய எந்தவொரு தொழிலாளர் சட்டமும் கிடையாது. நடைமுறையில், அவர்களுக்கு சங்கம் வைக்கும் உரிமையும் மறுக்கப்படுகிறது.

இதனால் பெண் பணியாளர்கள் சொல்லொணாத் துயரத்திற்கு ஆளாகிறார்கள். அதிக நேரம் நிற்பதாலும், தண்ணீர் குடிக்காததாலும், கடுமையான கால் வலி, நர‌ம்பு ‌வீ‌க்க நோ‌ய் (Varicose Veins), சிறு‌நீ‌ர்‌ப்பாதை நோ‌ய்‌த்தொற்று (Urinary Tract Infection) ஆகிய உடல் உபாதைகளுக்கும், மாதாவிடாய் காலங்களில் கடுமையான வலியை அனுபவிப்பதுடன், கருப்பை சம்பந்தமான நோய்களுக்கும் ஆளாகின்றனர்.

இதனை எதிர்த்து முதலில் கலகம் செய்தவர் கேரளாவைச் சேர்ந்த மாயாதேவி என்ற தொழிலாளிதான். இவர் பணியிடத்தில் அமரவும், கழிப்பறை இடைவேளைகள் வேண்டுமெனவும் புகார் அளித்த போது, கேரள வணிகர் சங்கமும், கடை உரிமையாளர்களும், அவரின் கோரிக்கைகளைக் கண்டு கேலி செய்ததோடு மட்டுமன்றி, ‘உட்காரவும், கழிப்பறைகளைப் பயன்படுத்தவும் வேண்டுமெனில், பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்’, என்று ஏளனம் செய்தனர்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய மற்ற தொழிற்சங்கங்கள் பெண்களின் பிரச்சனையைக் கையிலெடுக்க மறுத்துவிட்ட நிலையில், பெண்கூட்டு’ என்ற பெண்கள் அமைப்பின் உதவியை நாடினார் மாயாதேவி. இந்த “பெண்கூட்டு” அமைப்பு ஏற்கெனவே 2010-ம் ஆண்டு பெண்களுக்கு போதிய கழிப்பறைகள் வேண்டும் என்று போராடியிருக்கிறது. பெண்கூட்டு அமைப்பின் தலைவர் விஜியும் மாயாதேவியும் இணைந்து பெண் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்கம் ஒன்றைத் தொடங்கி, அதன் மூலம் தங்களது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடினார்கள்.

அவர்களது தொடர் போராட்டத்திற்குப் பிறகு அவர்களது கோரிக்கைகளுக்கு கேரள மாநில அரசு கடந்த ஏப்ரல் மாதம் செவிசாய்த்தது. ஏற்கனவே, பாலியல் வன்முறையைத் தவிர்க்கவும், பணியிடத்தில், வேலைசெய்பவர்களுக்கு, குறிப்பாக, பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை வழங்கவும் இயற்றப்பட்ட ‘கேரள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான’ சட்டத்தைத் திருத்தி, பெண்கள், வேலை நேரங்களில் உட்காருவதற்கும், போதிய இடைவெளிகளை எடுப்பதற்கும் அனுமதிக்க வேண்டும் என்று புதிதாக ஒரு விதியை, கேரள அரசு சேர்த்துள்ளது.

தொழிலாளர் சட்டம் வந்துவிட்டாலும் அதனை நடைமுறைக்குக் கொண்டுவர பெண் தொழிலாளர்களுக்கு தங்களது உரிமை குறித்த புரிதலை ஏற்படுத்த, அவர்களைச் சங்கமாக அணிதிரட்டப் போவதாக விஜி கூறுகிறார். கேரள மாநில தொழிலாளர்களின் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது, தமிழகத்தில் உள்ள அனைத்து துணிக்கடை, நகைக்கடைத் தொழிலாளர்களும் தங்களது உரிமைகளுக்காகப் போராடினால் இந்த கொடுமையிலிருது வெளிவர முடியும் என்ற உத்வேகத்தை தருகிறது கேரள தொழிலாளர்களது இந்த போராட்டம்.

இந்தப் போராட்டம் கேரளத்து பெண் தொழிலாளர்களது போராட்டமாக சுருங்கவிடக் கூடாது. நாடு முழுவதும் இன்னும் சொல்லப் போனால், உலகம் முழுவதும் பணியிடத்தில் வழங்கப்பட வேண்டிய அற்ப, சொற்ப பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்காக போராடித்தான் ஆக வேண்டும் என்கிற நிலையைத்தான் முதலாளித்துவம் உருவாக்கியுள்ளது. ஆண் – பெண் என்கிற பேதமின்றி பணியிட பாதுகாப்பற்ற சூழல், ஒவ்வொரு ஆலையிலும், ஒவ்வொரு தொழிலிலும் அவற்றுக்கே தனித்தன்மையுடன் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.

தொழிலாளி வர்க்கம் தன்னை “சுரண்டியும் ஒடுக்கியும் வரும் வர்க்கமாகிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், அதே போது சமுதாயம் முழுவதையுமே எல்லாவிதமான சுரண்டல்களிலிருந்தும் ஒடுக்குமுறையிலிருந்தும் வர்க்கப் பாகுபாடுகளிலிருந்தும் வர்க்கப் போராட்டங்களிலிருந்தும் முற்றாகவும் முடிவாகவும் விடுவித்தே ஆக வேண்டும்” என்று பாட்டாளி வர்க்க பேராசன் எங்கெல்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் முன்னுரையில் சொல்வதை நினைவு கூர்வோம். பெண்கள் மீதான ஆணாதிக்க சுரண்டல், நிலப்பிரபுத்துவ சாதிய முறையிலான சுரண்டல் உட்பட அனைத்து விதமான சுரண்டல்களுக்கும் எதிரான போராட்டத்தை ஆதரித்து அவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக் கடமையின் ஒரு பகுதியாகும்.

– வின்சென்ட்

புதிய தொழிலாளி செப்டம்பர் 2018

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/struggle-for-the-right-to-sit/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
நெடுவாசல் விவசாயிகளுக்கு ஆதரவாக MEPZ ஐ.டி ஊழியர்கள்

"ஐ.டி துறை ஊழியர்களுக்கும் சமூகப் பொறுப்பு நிறையவே இருக்கிறது என்பதை இந்தக் கூட்டம் காட்டுகிறது. நாம் விவசாயிகளின் துயர் துடைக்க நம்மால் ஆன பணிகள் அனைத்தையும் செய்ய...

பெரியார் : வதந்திகளும் உண்மைகளும் – வீடியோ

எச்.ராஜாவின் பேச்சுக்கு களத்தில் எழுந்த எதிர்ப்பைக் காட்டிலும் பெரும் அளவில் சமூக வலைதளங்களில் தமிழர்கள் கொத்தி எடுத்துவிட்டார்கள். பெரியாரின் கருத்துக்கள் மீம்ஸ்-களாகவும் ஸ்டேட்டஸ்-களாகவும் வலம் வந்தன.

Close