பாசிசம் குறித்த இந்தக் கட்டுரையை எழுதிய கட்டுரை ஆசிரியர் சமாதானவாதம் பேசுபவர். அகிம்சையை வழிபடும் இந்தப் பிரிவினர், பாசிசத்தை எதிர்கொள்ளும் மக்கள் உண்ணா விரதம் இருந்தோ, வாக்குவாதம் புரிந்தோ அதை முறியடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், நடைமுறையில் ஆயுதம் ஏந்திய உழைக்கும் வர்க்கப் படையால் மட்டுமே. பாசிசமும் அதன் போர் எந்திரமும் முறியடிக்கப்பட்டுள்ளது; முறியடிக்கப்பட முடியும்.
இதைத் தவிர்த்து இந்தக் கட்டுரை முசோலினி, ஹிட்லர் மற்றும் அவர்களது இன்றைய வாரிசுகளின் சித்தாந்தம் பற்றிய பல முக்கியமான கருத்துக்களை முன் வைக்கிறது.
Strutting Fascism And Swaggering Militarism
பா சிசமும்,போரும் ஜாடிக்கேத்த மூடி. இரக்கமற்ற, தேசத்தின் சிதைந்து போன பிம்பங்கள் பாசிஸ்டுகளை இயல்பாகவே வரித்துக் கொள்கின்றன.
இராணுவ அதிகாரிகள், கூலிப்படைகள், அவர்களை ஏவும் முதலாளிகள், அவர்களது ஆடம்பர பதக்கங்கள், அலங்காரங்கள் யாவும் கொலைக்கு வழங்கப்பட்ட சன்மானங்கள். அரசியல் பாசிசவாதிகள்! அனைத்து நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் எதிராக இவர்கள் தங்களது நாடியை முன்னோக்கி உந்தி, வலிமையான உள்ளங்கைகளை உயர்த்திக் கொலைகளை ஆதரிக்கின்றனர்.
கடவுளின் பெயரால், “நமது துருப்புக்களை ஆதரிக்கும்” பிரச்சாரத்திலோ, அமெரிக்க விழுமியங்களைப் பாதுகாக்கவோ, நம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியோ, பயங்கரவாதத்தின் மீதான போர் குறித்தோ நாம் வார்த்தைகளையோ, நேரத்தையோ வீணாக்க வேண்டாம். தளபதிகளும், தொழில்துறை இராணுவ அதிகாரிகளும் தங்களது சண்டைகள் மூலம் வெற்றுத்தனமாக எங்கள் மகன்களைப் பாதுகாப்பதில் ஏகபோகம் வகிப்பதாக கருதிக்கொள்கின்றனர். எங்கள் மகன்களை சொந்த நாட்டுக்குத் திருப்பி அழைப்பதன் மூலமே அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இயலும்.
பாசிசத்தின் போற்றுதல் பற்றிய கனவுகள் மீதும் அதன் பெருநிறுவன பங்காளிகளின் புதிய உலக ஒழுங்கின் கனவுகள் மீதும் கவனத்தை திருப்புவோம். முற்போக்கான எழுத்தாளர்களே பெரும்பாலும் பாசிசம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். இத்தாலிய பாசிஸ்டுகளுக்குப் பிறகு இன்று பலவகையான பாசிச பிரிவுகள் – புரோட்டோ-பாசிஸ்ட், கிரிப்டோ-பாசிஸ்ட், நவ-பாசிஸ்டுகள் என்ற சொற்களை நம் எழுதுக்களில் ஆங்காங்கே தெளிக்கிறோம். பழையதன் சாராம்சம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தபோதும், பாசிஸ்ட்டுகள் தங்களின் பாரம்பரியத்தை மறுக்கின்றனர். சமீபத்தில் ரோம் நகரின் புதிய மேயர், புதிய பாசிஸ்ட் ஜியானி அலெமான்னோ, ஆங்கிலேய பத்திரிகையாளர்களுடனான நேர்காணலில் அவர் எப்பொழுதும் ஒரு பாசிசவாதியல்ல என்று கூறினார். சீடரான பேதுரு தன்னுடைய எஜமானராகிய இயேசுவை எப்போதும் அறிந்ததில்லை என்பதைப் போன்றது இந்த மறுப்புரை.
இத்தாலியின் பாசிஸ்டுகள் தங்களை இடதுசாரிகள் என்றே கூற விரும்பினர். அது சமூக – அரசியல் – கோட்பாட்டு யதார்த்தத்துக்குப் புறம்பான ஒரு பாசிச கூற்று என்று நினைவில் கொள்ள வேண்டும். சோசலிசத்தைப் போன்று பாசிசம் ஒரு வெகுஜன இயக்கம் என்பதாலே அது இடது சாரிஆகி விடாது. ஜெர்மனியில் நாசிசமும், இத்தாலியின் பாசிசமும் இடதுசாரி இயக்கங்களுடன் அரசியல் போட்டியில் ஈடுபட்டிருந்ததால் பரந்த மக்கள் இயக்கங்கள் என்று கூறிக்கொள்ள வேண்டியதாகியது. தாங்கள் மக்களுக்கு கடமைப்பட்டவர்கள் என்று நிறுவ ஒரு பரந்த கூட்டுவாத இயக்கமாக தொடங்கியது, முசோலினி கார்ப்பரேடிசம் என்ற எல்லையைத் தொடும் வரலாற்றுக் கட்டம் வரையில் மட்டுமே அவ்வாறு நீடித்தது.
அதிகாரத்திற்கு வந்த பின், பாசிசம் அதன் உண்மையான முகத்தைக் காட்டுகிறது: கார்ப்பரேட்டிசம் – உயர்குடிகளின் நிறுவனமாகி மக்களை ஆட்கொள்கிறது. அனைத்து வெகுமக்கள் இயக்கங்கள்-அமைப்புகள்-சித்தாந்தங்களும் ஒன்றல்ல. உண்மையில், பாசிசமும், நாசிசமும் கம்யூனிசத்தை எதிர்த்தே எழுந்தன. நடைமுறையில் பாசிசம் எப்பொழுதும் வலது சார்புடையது, சோசலிசம்-கம்யூனிசம் இடது சார்புடையது.

Many people mistook him for a clown at first, but he proved lethal. And people have been helped to forget that fascism is an offshoot
of capitalism.
இருபது ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ரசியா வீழ்ந்தது. அதன் பின்னர், சில ஐரோப்பிய அறிவுஜீவிகளும், அரசியல் விஞ்ஞானிகளும் சித்தாந்தங்கள் அனைத்தும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இடது – வலது சார்புகள் இனிமேலும் அர்த்தமற்றவை என்றும் அறிவித்தனர். இது ஆபத்தான ஊகம், பொய் ! பிரெஞ்சு புரட்சியின் துவக்கம் முதல் அமெரிக்க எதிர் புரட்சி வரையிலான காலங்களில் தமது நடவடிக்கைகள் தவறு என அமெரிக்க பழைமைவாதிகள் அரசியல் ரீதியாக அறிவிக்கும் வரை, இரண்டு எதிர் அரசியல் நிலைப்பாடுகளுக்கான வார்த்தைகள் ஒன்றாகவே பயன்படுத்தப்பட்டன. அமெரிக்காவில் உள்ள ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் இடது – வலது குணாதிசயங்களைக் கொண்டிருந்தாலும் (வலதில் கொஞ்சமும் – இடதில் கொஞ்சமும்) – இதன் விளைவாக இரு கட்சிகளும் ஒரே மாதிரியானவை என்று கருதவியலாது. உண்மையான சிந்தனையுடன் எந்த அரசியல் இயக்கமும் இல்லை எனவே , வலதை இடதும் , இடதை வலதும் உறுதிப்படுத்தும் ஒரு எதிர்மறையாகவே அமைந்தன ! அது இன்றளவும் அவ்வாறே அமையும் !
பிரெஞ்சு புரட்சி வரை சமூகம் செங்குத்தாக பிரிக்கப்பட்டிருந்தது. அதிகாரம் மேலிருந்து விவசாய அடிமைகள் வரை கீழிறங்கியது. அன்றைய நிலவுடைமையாளர்களுக்கும்-நிலமற்றவர்களுக்கும்; இன்றைய தொழிலாளி வர்க்கத்திற்கும் – முதலாளிகளுக்கும்; சுருங்கக் கூறினால் செல்வந்தர்களுக்கும் – ஏழைகளுக்கும் இடையேயான சமூகப் பிளவு எப்போதும் இருந்தது. புரட்சியானது அதிகாரத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு ஒரு ஜனநாயக ரீதியான இடது-வலது பிரிவை நிறுவியது. பாசிசம்-கார்பரேட்டிச அதிகார வெறி பழைய முறைக்குத் திரும்புவதற்கு – செங்குத்துச் சமுதாயத்திற்குத் திரும்பத் தேவையான எதிர்வினையை ஆற்றியது (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் கூறப்பட்டது போல்) ஆக இருப்போரும் (வலது)-இல்லாதோரும் (இடது) எப்பொழுதும் முரண்படும் வர்க்கமாகவே வரையறுக்கப்படுவார்கள்.
முசோலினியின் இழிவான முடிவு
பாசிசத்தின் ஒரு அவதாரம் இறந்து விட்டது, ஆனால் பாசிசக் கிருமிகள் உயிர்த்திருக்கின்றன. ஏனென்றால் அது முதலாளித்துவ ஆளும் வர்க்க இயக்கங்களின் உயிர்வாழ்வில் இருந்து தொடர்கிறது. வலதுசாரிகள் அல்லது பாசிசம், அதன் கலாச்சார பாரம்பரியத்தின் மேன்மையிலும் தேசியம், மக்கள், இனம் ஆகியவற்றிலும் பெருமிதம் கொள்கிறது. அவற்றைக் காத்துக்கொள்ள இராணுவவாதத்தை முன்னிறுத்துகிறது.
[பா.ஜ.க பல சந்தர்பங்களில் இராணுவத்தை முன்னிறுத்தி தேசவெறி ஊட்டியதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். எ.கா – பணமதிப்பிழப்பின் போது -சியாச்சின் பனிமலையில் தேசத்தைக் காக்க வீரர்கள் நிற்கும்போது , வங்கியிலும், ஏடிஎம் வாசலிலும் வரிசையில் நிற்பதற்கு என்ன கேடு என்று கேட்டது]
ஒரு தீவிர வலதுசாரி சிந்தனை சமத்துவத்தை நிராகரிக்கிறது, முடிந்தவரை சிறிது மாற்றத்தையே விரும்புகிறது, அரசியல் அமைப்புகள் – சர்வதேச விதிகள் பற்றி சிரத்தை கொள்ளாது, தகுதி அடிப்படையிலான ஒரு சமூகத்தின்பால் நாட்டம் கொண்டு வரவேற்கிறது.
இடது, சீர்திருத்தவாத அல்லது புரட்சிகர சித்தாந்தங்கள் கடந்த காலத்திலிருந்து விடுதலைபெறவும், மாற்றத்திற்காகவும் நிற்கின்றன. ஆனால், மாற்றத்திற்கான வாதத்தை வைத்து ஒருவரை இடதுசாரி என்பது முட்டாள்தனமானது. இத்தாலியின் , பாசிசம் அதன் “புரட்சியை” நிறைவேற்ற பிற புரட்சிகர இயக்கத்தின் கலைகள் மீது தாக்குதலை நிகழ்த்தியது. ஒரு புரட்சியை நிகழ்த்திவிட்ட காரணத்தாலேயே அது இடது சார்பு என்றாகிவிடாது. கடந்த காலத்தை மகிமைப்படுத்தி வணங்குவதன் மூலம் பாசிசமும் (பழைய வடிவிலான) ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க விரும்பியது . உண்மையில், இது ஒரு வகையான சிசிலியனிஸம் – எல்லாவற்றையும் மாற்றுவதாகக் காட்டுவதன் மூலம் எதுவும் மாறாமல் பார்த்துக் கொள்வது.
[இந்துத்துவத்தின் பண்டைய இந்தியா பற்றிய வழிபாட்டை இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்]
சில மனப்பான்மை, நிலைகள் மற்றும் மதிப்பீடுகள் ஒன்றுக்கொன்று மாற்றாக இருந்தாலும், ஒரு வரம்பு உள்ளது. போர் வெளிப்படையாக வலதுசாரிகளுக்குச் சொந்தமானது. போர் என்பது இராணுவவாதம் மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றை ஆராதிப்பதன் ஒரு பாசிச வெளிப்பாடு. போர் ஒரு சிறிய அரசியல் சரிவு அல்ல என்று அமெரிக்க ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இப்போது தெரிந்து கொண்டிருப்பார்கள். வரலாற்று ரீதியாக, யுத்தம் என்பது உறுதியானது. போர் ஏற்கனவே அமெரிக்க குடியரசின் அடிப்படைகளை அழித்து, அமெரிக்க ஜனநாயகத்தை மட்டுப்படுத்தியது. இன்று அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சிக்கு போர் குறித்த நிலைப்பாடும், சமூக நீதி பற்றிய நிலைப்பாடும் ஒன்றுதான்.
வலதுசாரி நிலைப்பாடு தவிர்க்க முடியாமல் சமூக அநீதிகளை அதிகரிக்கிறது. சமூக மோதல்கள் மற்றும் போரை ஏற்படுத்துகிறது. அதேபோல், முதல் உலகப் போர் வெடித்தபோது, ஐரோப்பிய சமூக ஜனநாயகம் போருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது அதன் அரசியல் சரிவுக்கு காரணமாகியது. பாசிசம்-நாசிசமும், போல்ஷிவிக்குகளின் இடது மேலாதிக்கத்திற்கு நேரடியாக வழிவகுத்ததன் மூலம் மறைமுகமாக சோசலிச / ஸ்டாலினிசத்தை தோற்றுவித்தது.
நார்பர்டோ பாபியோ (1909-2004), ஒரு முக்கிய இத்தாலிய அரசியல் தத்துவவாதி. இடதுக்கும் வலதுக்குமான முக்கிய வேறுபாடு அவர்கள் சமத்துவதுடன் கொண்ட உறவை வைத்து வேறுபடுகிறது என்றார். ஒவ்வொரு சமுதாய-அரசியல் பார்வையும் வலது – இடது என வகைப்படுத்தப்படாவிட்டாலும், ஒரு விதியாக, மனிதர்களிடையே சமத்துவத்திற்காகப் போராடும் அனைத்தும் இடது என்ற வரையறைக்குள் வருகிறது ; வலது சமத்துவமின்மையை நோக்கி செல்கிறது. நடைமுறையில் அதிகமாக சமத்துவத்தை நிராகரிப்பவர்கள் அதிகமாக வலதுசாரிகளாகின்றனர் அல்லது, இன்னும் பலமாக, மக்களைப் பிளவுபடுத்தும் படிநிலைகளை ஆதரிக்கிறார்கள். ஒன்று இடது அல்லது வலது. ஒன்றுக்கு மற்றது மாற்று இல்லை. அதேபோல், நடுநிலை என்பதும் போலியானது !
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சில அரசியல் தத்துவவாதிகள் இடதுக்கும் வலதுக்கும் இடையே உள்ள முரண்பாடுகளை முறையே முற்போக்கு பிற்போக்கு என்று விவரிக்கின்றனர். என் கருத்தில் அந்த பொதுவான வார்த்தைகள் திருப்திகரமாக இல்லை. வலது, குறிப்பிட்ட சில வரம்புக்குட்பட்ட விஷயங்களில் முற்போக்காக விளங்கும். அரசியல் அதிகாரத்தை அடையவும், பராமரிக்கவும் (அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் அல்லது சமகால ஐரோப்பிய சோசலிசத்தில் காணக்கூடிய விதத்தில்) இடதுசாரி பிற்போக்காகவும் செயல்படும். நாசிசம் , ஸ்டாலினிசம் இரண்டுமே சோசலிஸ்ட் என்ற வார்த்தையைப் பயன்படுத்தின. இறுதியில் அது சோசலிச அரசுகளின் சிதைவில் முடிந்தது.
இன்று, இடதுசாரிகள் – நடுநிலையாளர்களை முகமூடியிட்ட வலதுசாரி என்றும் ; வலதுசாரிகள் – நடுநிலைமையை இடதுசாரிகளின் மறைவிடம் என்றும் கருதுகின்றனர்.
இன்று நிலவும் இத்தாலியின் அரசியல் குழப்பத்தில், புதிய பாசிச வலது மற்றும் சோசலிச இடது இரண்டும் படிப்படியாக மைய நிலைப்பாடுகளுக்கு நகர்ந்தது.
நடுநிலை அல்லது மூன்றாவது வழியானது பெரும்பாலும் இடது அல்லது வலது ஏதேனும் ஒரு நிலைப்பாட்டையே குறிக்கிறது. “பழமைவாதப் புரட்சி” என்று அழைக்கப்படும் மூன்றாவது வழி காலப்போக்கில் இடது – வலது ஏதேனும் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இடது அல்லது வலது ஏதேனும் ஒன்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் கோலோச்சும். இதனால் மற்றொன்று அழிந்துபோய்விடுவதில்லை. காலப்போக்கில் மாற்றங்கள் நிகழ்ந்தாலும் இந்த இரு சார்புகளும் நிலவும்.
இடது-வலது அரசியல் யதார்த்தத்தை புறக்கணிப்பதற்கான மிகவும் அப்பட்டமான உதாரணம், ஒரு கட்சி அமைப்பு முறையால் கட்டுப்படுத்தப்படும் உலகின் மிக சக்தி வாய்ந்த நாடான அமெரிக்கா. இது உண்மையில் இடது-வலது வார்த்தைகளைப் புறக்கணிக்கிறது. அமெரிக்காவின் குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சிகள் வலது நிலைப்பாட்டில் தோளோடு தோள் நிற்கின்றன. இக்கட்சிகள், மத தீவிரவாதிகள், இரகசியப் போராளிகள், பொய்யான தேசபக்தர்களின் பலத்தில் இயங்குகின்றன. இடது – வலது இரண்டின் தன்மைகளையும் ஒருங்கே கொண்டுள்ளது. இரு கட்சிகளும் நடைமுறையில் ஒரே மாதிரியானவை – ஒரு உண்மையான சிந்தனையுடன் எந்த அரசியல் இயக்கமும் இல்லை. இடது மற்றும் வலதுசாரிகளாக இருக்கலாம். சில நிலைகள் மற்றும் மதிப்பீடுகள் ஒருங்கிணைக்கப்படலாம். ஆனால் ஒரு வரம்பு உள்ளது.
நேர்மையான இடது சார்பு இல்லாத யாரும் (ஜனநாயகக் கட்சி, தாராளவாதிகள், சமூக ஜனநாயகவாதிகள்) ஆங்கிலோ-அமெரிக்க பழமைவாதத்தை அல்லது தாராளவாதம்-பழமைவாதம்-கார்ப்பரேட்டிசம்-இராணுவவாத-பாசிச கூட்டணியை பாதுகாக்க முடியும். அரசியல் சாதிக்க முடிந்த எல்லை வரம்புக்குட்பட்டது என்பது மறக்கப்படுகிறது.
அமெரிக்க அரசியல் அமைப்பின் வெற்றிடம் வெளிப்புற, நவீன சக்திவாய்ந்த, உயர்குடி, மனித விரோத, போர்க்குணமிக்க மற்றும் இராணுவவாத தொழில்துறை அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், கலவரம் சர்வாதிகார அமைப்பை உருவாக்குகிறது. பாசிசத்திற்கும் மக்களுக்குமான இடைவெளி உருவாக்கும் அரசியல் வெற்றிடம் ஒரு உண்மையான இடது இருக்க வேண்டிய இடமாகும். அமெரிக்காவில் இருக்கும் ஒன்றுக்கொன்று சார்புடைய இரு கட்சிகளும் அரசியல் சமூக மதிப்பீடுகளை விற்பனை சரக்காக்கி விட்டன. இதன் விளைவாக, இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரே கட்சி அமைப்பு அமெரிக்க எதிர்ப்புரட்சி சக்தியாகிவிட்டது.
வரலாற்று பாசிசம்

Mussolini’s ignominious end. Fascism’s incarnation died for a moment but the fascist virus continued, since it lives off of capitalist ruling class dynamics.
பாசிசம் என்ற வார்த்தை எப்போதும் அரசியல் ரீதியாக வெறுக்கப்படவில்லை. கடந்த நூற்றாண்டில், ஐரோப்பாவில் இதேபோன்ற தேசியவாத இராணுவவாத இயக்கங்களின் ஒரு கூட்டத்திற்கு பாசிசம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. இவற்றில் மிகவும் முக்கியமானது இத்தாலிய பாசிசம் மற்றும் ஜெர்மனியின் நாசிசம்.
(முதலாம் உலகப் போர் ஏற்படுத்திய அழிவிலிருந்து உருவான நாசிசம்). புரட்சிகர தேசியவாத அலைகளின் ஊடாக இத்தாலியில் முதன்முதலில் பாசிசம் உருவானது.
சோசலிசத்துக்கும், கம்யூனிசத்துக்கும் 19-ம் நூற்றாண்டு முன்னோடிகள் இருந்தது போல பாசிசத்துக்கு இருந்ததில்லை. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவற்றை ஒத்த இயக்கங்கள் உருவாகின.
1930 களில் வில்லியம் டுட்லி பெல்லியின் நாசி ஆதரவான சுமார் 2 மில்லியன் உறுப்பினர்கள் கொண்ட “வெள்ளி சட்டை” அமெரிக்க பாசிச அமைப்புகளில் மிகச் செல்வாக்கு மிகுந்த, மிகவும் வன்முறை நிறைந்த, யூத-விரோத ஒன்றாகும் (கருப்பின மக்களைக் கருவறுக்க அமெரிக்க அரசு உருவாக்கிய klu klux klan ஐ விடவும் கொடியது). இன்றைய வலதுசாரிகளுக்கு அவ்வமைப்போடு இன்னும் சித்தாந்த பிணைப்புகள் உள்ளன. அமெரிக்காவின் பாசிஸ்டுகள் இரண்டாம் உலகப் போரில் நாசி ஜெர்மனியையும் பாசிச இத்தாலியையும் ஆதரித்தனர்.
மதமும் சிறுபான்மையினர் மீதான வெறுப்பும் – கிறித்துவ அடையாளமும் வலதுசாரி தீவிரவாத சார்பும் சில்வர் ஷர்ட் இயக்கத்துடனான பிணைப்பின் காரணிகள். பாட் ராபர்ட்சன் மற்றும் ஜெர்ரி ஃபால்வெல் போன்ற தொலைக்காட்சி சுவிசேஷகர்கள் , பெருநிறுவன-மதகுரு அரசிற்கு ஆதரவாக – கம்யூனிசம், யூதர்கள், கருக்கலைப்பு , ஓரின சேர்க்கை, தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் மீதான வெறுப்பு போன்ற பாசிசத்தின் அதே வடிவத்தை பின்பற்றுகின்றனர்.
ஒருங்கே நடந்த பெருநிறுவனங்களின் அதிகாரம், நவீன இராணுவ-போலீஸ் தொழிற்துறையின் எழுச்சி ஆகியன ஒரு புதிய வடிவத்தில் செயலாற்றத் தொடங்கின. முன்னாள் பேரரசர்களைப் போல், நவீன பெருநிறுவனங்களும் அவற்றின் பங்குதாரர்களும், மக்கள் போராட்டங்களை ஒடுக்கவே இராணுவ-போலீஸ் கட்டுப்பாட்டு பொறியமைவைப் பயன்படுத்தினர். அவர்களின் இந்த இணைவே பாசிசத்தின் இதயம். நடைமுறையில் பாசிசம் என்பது கார்ப்பரேட்டிசத்தின் பாதுகாப்பு கவசம் ஆகும். ஒவ்வொரு கார்ப்பரேட்-பாசிச அரசும் தன்னை ஒழுங்குபடுத்தவும் , இறுதியில் மக்களை அடிமைப்படுத்தவும் போலீஸ் படையை ஏவுகிறது
[டாஸ்மாக், ஜல்லிகட்டு, நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்களை அரசு கையாண்ட விதம்].
கடந்த நூற்றாண்டில் இத்தாலியும் ஜெர்மனியும் மிகவும் வியக்கத்தக்க வரலாற்று உதாரணங்கள். இன்று, இது உலகம் முழுவதும் அமெரிக்கா மற்றும் அதன் கைப்பாவை அரசாங்கங்களாக பரிணமித்திருக்கின்றன.
பண்டைய ரோமாபுரிக் குடியரசின் அதிகாரத்தை அடையாளப்படுத்தும் பாசிசம் என்ற சொல் இத்தாலியன் “ஃபாஸியோ” அல்லது லத்தீன் சொல்லான “ஃபேஸஸ்” என்பதிலிருந்து பெறப்பட்டது. 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுந்த வலுவான தேசியவாதம், ஆக்கிரோஷமான செயற்பாடு, வன்முறை ஆகியன இத்தாலிய பாசிசவாதிகளோடு இணைந்த புதிய தீவிர இயக்கங்களுக்கு, சில சமயம் பெர்லுஸ்கோனிய இத்தாலியின் சமகாலத்தில் காணப்பட்ட அறிகுறிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், புரட்சிகர இத்தாலிய தேசியவாத இயக்கத்தை ஃபாசியோ என்றழைத்தனர். அதுவே 1921-ல் பாசிஸ்ட் கட்சி ஆனது .
பெனிட்டோ முசோலினி, பாசிசத்தின் குறியீடான நிறத்தில் கருப்பு சட்டை [கமலஹாசன் இதைத்தான் கருப்புக்குள் காவியும் அடக்கம் என்றாரோ] அணிந்த” பாஸ்கியோ டி காம்பட்டீமண்டோ” என்ற போர்க்குழுவை நியமித்தார்.
முசோலினி இத்தாலிய பாசிசத்தை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் தலைமையை நோக்கி முன்னேறி அதன் உயர் தலைவரானார். சர்வாதிகாரத்தின் தன்மையும் தோற்றமும் ஒரு புதிய சூழலை உருவாக்கியது. இது, பரவலாக கலகம் நிறைந்த இத்தாலியின் இரட்சகனாகக் கருதப்பட்டது. அதன் தாக்கம் பெர்லுஸ்கோனிய இத்தாலியில் இன்று எதிரொலிக்கிறது. முசோலினி நவீன ஐரோப்பாவின் முதல் பாசிச தலைவராகவும், 1922 முதல் 1943 வரை இத்தாலியின் பிரதம மந்திரியாகவும் ஆனார்.
ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் முசோலினியின் புரட்சிகர தத்துவமும் பாசிச முன்மாதிரியும் பரவியது. ஒரு பெருநிறுவன சர்வாதிகார அரசியலின் அடிப்படையில், பாசிசம் இன்றும், முதலாளித்துவத்திற்கும், சோசலிசத்திற்கும்-கம்யூனிசத்திற்கும் இடையே ஒரு மூன்றாவது வழி என்று கருதப்படுகிறது.
பெனிட்டோ முசோலினி பாசிசத்தின் அதிகாரபூர்வமான வரையறையை இவ்வாறு முன்வைத்தார்: “பாசிசம் என்பது பொருள் மற்றும் ஒழுக்க சக்திகளின் ஒரு பெரும் அணிதிரள்வு. இது என்ன முன்மொழிகிறது? தேசத்தை ஆளுவதற்கு என்ன திட்டம்? இத்தாலிய மக்களுடைய ஒழுக்கம் – மேன்மைக்குத் தேவையான ஒரு திட்டத்துடன் நாம் தெளிவாக பேசுவோம்: நம் நாட்டின் தொழில்நுட்ப, நிர்வாக, அரசியல் மறுசீரமைப்பு சம்பந்தமாக சோசலிஸ்டுகள் எங்களது நிகழ்ச்சி நிரலுக்கு ஒத்துழைக்கவில்லை. ஏனென்றால் சோசலிஸ்டுகள் புறக்கணித்து வெறுக்கிற தார்மீக மற்றும் பாரம்பரிய மதிப்புகளுக்காக நாங்கள் வேலை செய்கிறோம். … ”
பெரு நிறுவன அதிகாரம் (கார்ப்பரேடிசம்) இத்தாலிய பாசிசத்தின் இதயமாக இருந்தது. முசோலினி பாசிசம் உண்மையில் கார்ப்பரேடிசம் என அழைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஏனென்றால் அது தேசியவாத-இராணுவ அரசு மற்றும் பெருநிறுவன அதிகாரத்தின் ஒரு கூட்டாகும். 1930-40 கள் தொட்டு இன்று வரை, ஐரோப்பிய , அமெரிக்க முதலாளித்துவவாதிகளின் இதயங்களில் அவரது வார்த்தைகள் ஒலிக்கின்றன. பாசிசத்தின் கூறுகள் கார்ப்பரேட்டிசத்தில் மிக அதிகமாக காணப்படுகின்றன.
பெரு நிறுவனங்கள் தனிநபர்களையும் விட சட்டபூர்வமாக அதிக உரிமைகளை பெற்றுள்ளன. இயல்பிலேயே பெருநிறுவனங்கள் அதிகார வேட்கை கொண்டவை. வளர்ச்சி மற்றும் அதிகாரம் அவர்களின் குறிக்கோளாக உள்ளன. பெருநிறுவனங்கள் அதிக அதிகாரம் பெறுவதால், அவர்களும், அவர்களது தரகர்களும் அரசாங்கத்தை கைப்பாவையாக்கி கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகின்றன
[மோடி ஆற்றும் அதானி-அம்பானி சேவைகள்]
இதனால் இரத்தமும்-சதையுமான மக்களது உரிமைகள் அழிகின்றன. இலாபம் மற்றும் மேலதிக இலாபமே பெருநிறுவனங்களின் இலக்குகள், அவர்களின் இருப்பை உறுதி செய்து வளர்ச்சியைத் தாங்கி நிற்கும் இரட்டைத் தூண்கள். முதலாளித்துவ அரசில் “மக்களின் அரசாங்கம்” என்பது ஒரு கற்பனையே. அது என்றுமே பெருநிறுவன விதிமுறைக்கு ஏற்றவாறே இயங்குகிறது. அந்த அர்த்தத்தில் அமெரிக்க தாராளவாதம் பாசிசத்துடன் கணிசமாக ஒத்துப்போகிறது. கார்ப்பரேடிசம் என்ற வார்த்தை இன்று அமெரிக்காவிலும் பெரும்பாலான ஐரோப்பாவிலும் சமூக-அரசியல் அமைப்புமுறைக்கு பொருந்துகிறது. அந்த அர்த்தத்தில், அந்நாடுகள் பாசிசத்தின் வாரிசுகளாகும்.
முசோலினி, நேட்டோ-ஐரோப்பிய ஒன்றியம்-அமெரிக்கா-ஐரோப்பிய அரங்கில் இன்று மிகவும் பிரபலமாக உள்ளார் என்று நான் நம்புகிறேன். அமெரிக்காவின் இராணுவ-தொழில்துறையுடன் அரசியல் உலகின் இணைப்பு என்பது கூட்டுறவு-பாசிசத்தின் கருத்துக்கு மிகவும் சமகால உதாரணம். அமெரிக்கா, ஐரோப்பிய அரசாங்கங்கள் சமூக-பொருளாதார வாழ்வில் ஊடுருவி, பெருமளவில் அதிகரித்துவரும் சர்வாதிகார தலையீடுகளால், பாசிசத்தை நடைமுறைப்படுத்துகின்றன. உலகமயமாக்கல் என்பது முசோலினியின் பாசிசம்-கார்பரேடிசத்தை விட எந்த வகையிலும் குறைந்தது இல்லை.
பாசிசம் அதன் தொடக்க காலம் முதலே சோசலிசத்தையும் கம்யூனிசத்தையும் வன்முறையாக எதிர்த்தது. 19-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தொழிலாளர்கள் இயக்கங்கள் எழுந்ததில் இருந்து, சோஷலிச-கம்யூனிச எதிர்ப்பு அமெரிக்கப் பெருநிறுவன அரசியல் கொள்கையாக இருந்துவருகிறது. ரஷ்ய புரட்சிக்கும்-தாராளவாத ஜனநாயகத்தின் இலட்சியத்தின் எழுச்சிக்கும் எதிர்வினையாகவே பாசிசம் தோன்றியது. ஆரம்பத்தில் இருந்தே பாசிசம், தேசியவாதம், இராணுவவாதம், விரிவாக்கம், மேன்மையுரிமை (பெர்லுஸ்கோனிய இத்தாலியில் தற்போது பின்தங்கிய நிலையில் உள்ளது) போன்ற தீவிர வலதுசாரிகளின் கருத்தியல் அம்சங்களை ஒருங்கிணைத்து, உழைப்பு, சமூக மற்றும் முன்னுரிமை போன்ற தொழிலாளர்கள் இயக்கங்களிலிருந்து பெற்ற தொழிற்சங்க புரட்சி போன்ற கருத்தியல் கூறுகள் என அனைத்தையும் தன்னுள் கொண்டிருந்தது.
ஹிட்லரின் தேசிய சோசலிஸ்ட் கட்சியின் பெயரிலிருந்து பெறப்பட்ட நாஜி என்ற வார்த்தை, குட்டி முதலாளித்துவ (நடுத்தர வர்க்க) ஆதரவை பிரதிபலிக்கிறது. இன்றும், இத்தாலிய நியோ-பாசிஸ்டுகள் தங்கள் இயக்கத்தை சமூகமயமானது என்று கூறுகின்றனர். முஸோலினிக்கு பிந்திய அரசியல் கட்சி, இத்தாலிய சமூக இயக்கம் என்றும் அழைக்கப்பட்டது.
இத்தாலியன் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய அரசியல் சிந்தனையாளர் அன்டோனியோ கிராம்சி, ஜனவரி 2, 1921 அன்று எழுதிய “லிட்டில் பாசிஸ்டுகள்” (பிட்கோலி பாசிஸ்டி) என்ற கட்டுரையில், பாசிசத்தை குட்டி முதலாளித்துவத்தோடு இணைத்து கடைக்காரர்களின் வர்க்கம் என்றார். இது இன்றைய அமெரிக்க தாராளவாத உயர் நடுத்தர வகுப்பினரைக் குறிக்கும் நெருக்கமான சொல்லாக உள்ளது.
பாசிசத்தின் கடைசி அரசியல் அவதாரமான குட்டி முதலாளித்துவத்தின் இயல்பு – முதலாளித்துவத்தின் அடிமையாகவும் – சொத்துடைமையின் தன்மையையும் வெளிப்படுத்தியுள்ளது. ஆனால் எந்த வரலாற்றுப் பாத்திரத்தையும் ஆற்ற திறமையற்றது என்பதைக் காட்டியுள்ளது: அவர்கள் வரலாற்றை உருவாக்கவில்லை. மாறாக செய்திகளை நிரப்பும் அளவிலேயே செய்தித்தாள்களில் தடங்களை விட்டுச்செல்கின்றன. குட்டி முதலாளித்துவ வர்க்கம், பாராளுமன்றத்தை நாசமாக்கிய பின்னர், சட்டத்தின் அதிகாரத்தை தனியார் வன்முறைக்கு மாற்றுவதன் வாயிலாக நிலவும் முதலாளித்துவ அரசை அழித்து வருகிறது.
கிராம்சியின் புகழ்பெற்ற மேற்கோள் ஒன்றில் பாசிசம், “உற்பத்தி – வர்த்தகம் தொடர்பான பிரச்சினைகளை “இயந்திர துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி சூடு” மூலமே தீர்க்க முயற்சி செய்யும்” என்கிறார்.
“உற்பத்தி சக்திகள் ஏகாதிபத்திய போரில் விரயமாகி அழிந்து போயுள்ளன: இளைஞர்களின் ஆற்றல் மற்றும் இருபது மில்லியனுக்கும் அதிகமான ஆண்கள் கொல்லப்பட்டனர்; ஒன்றுபட்ட உலகச் சந்தைகளை இணைக்கும் ஆயிரக்கணக்கான தொடர்புச் சங்கிலிகள் வன்முறையாக அழிக்கப்பட்டன; கிராமங்கள் – நகரங்களுக்கிடையேயும் பெருநகரங்கள் – காலனிகளுக்கு இடையிலுமான உறவுகள் தலைகீழாக மாறியுள்ளன; இடைவிடாமல் நிகழும் குடியேற்றங்கள் ஏற்படுத்தும் உற்பத்திக் கருவிகளின் ஆற்றலுக்கும் மக்கள்தொகைக்கும் இடையேயான சமமின்மை, உற்பத்தியை இனி சரிவர இயங்க முடியாத நிலைக்குத் தள்ளியுள்ளது. அனைத்து நாடுகளின் – சிறிய மற்றும் நடுத்தர முதலாளித்துவ வர்க்கம் இந்த மிகப்பெரிய பிரச்சனைகளை இயந்திர துப்பாக்கிகள் மற்றும் துப்பாக்கி குண்டுகள் மூலம் சரி செய்துவிட முடியுமென நம்புகிறது. இந்த சிறிய எண்ணிக்கையிலான மக்கள்தொகை பாசிசத்தின் எரிபொருளாகவும், பாசிசத்திற்கு மனிதவளத்தைக் கொடுப்பதாகவும் உள்ளது.”
இரண்டாம் உலகப் போரில் தோல்வியடைந்த ஐரோப்பிய நாடுகளான இத்தாலி-ஜெர்மனியின் அரசியல் பொருளாதார பலவீனத்தின் ஊடாக பாசிசத்தின் வேர்கள் முளைத்தன. தாமஸ் மான் சகாப்தத்தின் “ஐரோப்பாவின் அறநெறி நோயை” பிரதிபலித்த பாசிசம், இத்தாலியிலும் ஜெர்மனியிலும் வளம் பெற்றது. பாசிசம் எந்த ஒரு வர்க்கத்தையும் சார்ந்ததல்ல. யுத்தத்தின் கொடூரங்களால் சீரழிந்த மனசாட்சியின் விளைபொருளே பாசிசம். இது மோதலில் கலந்து கொண்ட பெரும்பாலான உலக நாடுகளை பாதித்தது.
கிராம்ஸ்கி குறிப்பிட்டுள்ளபடி, குட்டி முதலாளித்துவமே மிக தீவிரமான பாசிச ஆதரவு சக்தியாக விளங்கியது. பாசிசத்துக்கும்-மத்தியதர வர்க்கத்துக்குமான இந்த உறவு அனைத்து முக்கிய நிலப்பகுதிகளிலும் பாசிசத்தின் தன்மையைப் புரிந்து கொள்வதற்கு முக்கியமானது. இது இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும் பொதுவான கண்ணியாக இருந்தது. இந்த உறவே பாசிசத்துக்கும் பிற இயக்கங்களுக்குமான வேறுபாடு. இந்த உறவின் அடிப்படையில் இத்தாலிய பாசிசமும் ஜெர்மன் நாஜிசமும் வெகுமக்கள் இயக்கங்கள் என்று கருதப்பட்டன. பயங்கரவாதம், வெகுமக்கள் பிரச்சாரத்தில் ஏகபோகம், போலீஸின் அதிகாரம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட அரசாட்சிக்கு அடிப்படை இதுவே.
பாசிசம் என்னும் பெருநிறுவனமயம்
தாராளவாதம் பாசிசத்தை உருவாக்கியது என்பதில் உண்மையும் உள்ளது. இத்தாலிய குட்டி முதலாளித்துவ வர்க்கம் முசோலினிய பாசிசத்தை உருவாக்கியது, இன்றும், 2008-ம் ஆண்டு, ரோமின் போர்கேட், பரந்த ஏழை மற்றும் தொழிலாளர்களின் மாவட்டங்களில் உள்ள அதே குட்டி முதலாளித்துவ வர்க்கம் இத்தாலியின் நியோ பாசிசம் மற்றும் பெர்லுஸ்கோனிய மக்கள் மத்தியில் முதுகெலும்பாக உள்ளது. முசோலினியின் காலத்தில் செல்வந்த உயர் வகுப்புகள் பாசிசத்தின் தோற்றத்தை ஊக்குவித்தன, அதை கட்டுப்படுத்த முடியும் என்றும் நம்பின. ஒரு குறிப்பிட்ட அளவிற்கும் – காலத்திற்கும் அது சாத்தியமானது.
அதிகாரத்தைப் பிடித்தவுடன் பாசிசம் அதன் உண்மையான முகத்தை காட்டியது – கட்டுப்படுத்துவோரை கட்டுப்படுத்தத் துவங்கியது. முசோலினி பாசிசத்திற்கு பதிலாக கூட்டுறவு என்ற பெயரையே வலியுறுத்தினார். இன்று, முதலாளித்துவமானது, அமெரிக்க பெருநிறுவன பாசிசத்தின் பங்குதாரர்களுக்கான கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகும்.
கடந்த நூற்றாண்டின் முற்பகுதியின் பெருநிறுவன பாசிசம்-நடுத்தர வர்க்க கூட்டு , இன்றைய அமெரிக்க கார்ப்பரேடிச வடிவத்தை ஒத்திருக்கிறது. இன்னும் பரவலாக அடையாளம் காணப்படவில்லை என்றாலும், பாசிசம் ஏற்கனவே சக்திவாய்ந்த பெருநிறுவன அரசாக அதிகாரத்தில் உள்ளது. அமெரிக்க போலீஸ் அரசு தனது அடிப்படையாக, பாசிச இத்தாலி – நாஜி ஜெர்மனி செய்தது போல், கார்ப்பரேட் வாதத்தை உருவாக்கியுள்ளது. அரசு தன்னை உருவாக்கிய வெளிநாட்டு எதிரிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள பயங்கரவாதத்தை நம்பியுள்ளது. பெர்லினின் ரெய்ச்ஸ்டாக்கை எரித்ததாக கம்யூனிஸ்டுகள் குற்றம் சாட்டப்பட்டனர். மாறாக அது ஹிட்லரின் நாஜிகளின் சதி ஆகும்.
[RSS அலுவலகங்களையும் இந்துத்துவ தலைவர்களையும் எதிரிகள் கொலை செய்வதாக பிரச்சாரம் செய்வது].
அமெரிக்க பெருநிறுவன கார்ப்பரேட் அரசு அமெரிக்க சித்தரிப்பு தொடர்பான கோயபல்சு (அவதூறு) பிரச்சாரத்திற்காக ஊடகங்களையும் அறிவுத்துறையினரையும் பயன்படுத்துகிறது. ஊடகங்களும், அரசுக்கு இணக்கமான அறிவுஜீவிகளும் அமெரிக்கவாதத்தை உருவாக்கி – செல்வம், சக்தி, சிறப்புரிமை ஆகிய நலன்களைப் பேண, மக்களின் அங்கீகாரத்தை உற்பத்தி செய்தனர்.
பாசிசம் என்பது முதலாளித்துவ சமுதாயத்தின் ஒரு விளைவாகும். முதலாளித்துவ உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் சமூக உறவுகளை பாதுகாப்பதற்கான ஒரு பாட்டாளி வர்க்கத்தை எதிர்ப்பதற்கான ஆயுதம்.
இத்தாலியின் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி மூலதனத்தின் நலன்களுக்காக தொழிலாளர்கள் இயக்கங்களை உடைக்க வேண்டுமென்று பேசுகிறார். முசோலினியின் பாசிசம் – ஜெர்மன் நாசிசம் ஆகியவை தேசத்தை , ஆழ்ந்த தீவிரவாத ஆன்மீக ரீதியான பிரச்சாரத்தால் , இராணுவ கட்டமைப்பை உருவாக்கி, வெகுமக்கள் சமூக அடித்தளத்தையும் மையப்படுத்தப்பட்ட அரசாங்கத்தையும் உருவாக்கியது. 1980 களின் மார்கரெட் தாட்சர் மற்றும் ரொனால்ட் ரீகன் அரசாங்கங்களின் கார்ப்பரேட்டிச மறுமலர்ச்சி செயல்பாடுகள் அமெரிக்காவின் மக்கள் நல அரசின் பிரமைகளை நசுக்கி, கிரேட் பிரிட்டனில் சமூக ஜனநாயகத்தின் அடிப்படைகளை பலவீனப்படுத்தியது.
உறுதியான அதிகாரத்தை நிறுவிய பின் பாசிசம் வெகுமக்களை வென்றெடுப்பதற்காக அரண்மனை புரட்சியை முன்னெடுத்துச் செல்கிறது. இந்த அர்த்தத்தில், பெருநிறுவன அரசாங்கம் வர்க்கப் போராட்டத்தை நசுக்குகிறது; மூலதனத்தின் ஏகபோக அமைப்பை உத்தரவாதம் செய்கிறது. 1930 களின் முற்பகுதியில் முசோலினி தனது அதிகாரத்தின் உச்சக்கட்டத்தில் இருந்தபோது, சில ஆண்டுகளுக்குள் ஐரோப்பா முழுவதும் பாசிசமயமாகி விடும் என்கிறார்.
முசோலினிக்கும் லெனினுக்கும் இடையில் உள்ள ஒற்றுமைகள் பற்றி பேச நான் பேச நினைக்காவிட்டாலும், 20-ம் நூற்றாண்டில் பெரும் கருத்தியல் இயக்கங்கள் வெகுமக்களின் ஆன்மாக்களுக்காகப் போட்டியிட்டன. உலக சோசலிசப் புரட்சியில் லெனின் செய்ததற்கு மாறாக உலகத்தை பாசிசமயமாக்குவதை முசோலினி உறுதியாக நம்பினார். அந்த வகையில், பாசிசம், புரட்சிகரமான சமூக நடவடிக்கை என்று தன்னை கூறிக் கொண்ட போதிலும், அது பிற்போக்குத்தனமான எதிர்ப்புரட்சி நடவடிக்கையாகவே வரலாறு நெடுகிலும் அமைந்தது.
ஒரு கேள்வி உள்ளது: பாசிசம் மற்றும் நாசிசம் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடு. அவை வடிவத்தில் வேறுபட்டாலும், உள்ளடக்கத்தில் ஒரே மாதிரியானவையா? அல்லது வெவ்வேறு உள்ளடக்கம் கொண்ட இயக்கங்களா? முசோலினி தான் வித்தியாசமாக இருந்ததாக நம்பினார். அடுத்தடுத்த வரலாறு அவர்களுக்கிடையில் இருந்த வேறுபாட்டைப் பறைசாற்றியது. போலிஷ் போப் ஜான் பால் II நாசிசம் நூற்றாண்டின் மிகப்பெரிய தீமை என்று அவரது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் கூறினார்.
மற்ற சர்வாதிகார ஆட்சிகளிலிருந்து பாசிசத்தை வேறுபட்டதாகக் கருதினாலும், இன்றைய அமெரிக்காவிற்கு மிக நெருக்கமான அரசியல் அதிகார அமைப்பாக பாசிசத்தைக் கூறலாம். அமெரிக்காவும் – பாசிசமும் ஒருவர் கையில் ஒருவர் அணைந்துகொண்டு மற்றவர்களை ஆறுதல்படுத்தட்டும் என அவர்களை விட்டுவிட நான் விரும்புகிறேன் !
சோஷலிசத்திற்கு முரணாக, பாசிசம் மற்றும் நாசிசம் ஆரம்பம் முதலே தேசியமயம், ஒரு தேசம், ஒரு இனத்தின் பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளையே மேற்கொண்டன
[பாஜக வின் செயல்பாடுகள் தவிர்க்கவியலாமல் நினைவுக்கு வரும்].
சோசலிசம்-கம்யூனிசம், அதன் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தோல்வியுற்ற போதிலும், அது சர்வதேசியத்தைப் போற்றியது;
நீண்டகால சோவியத் கம்யூனிசம் தேசியவாதமாக மாறியது என்று குற்றம் சாட்டப்பட்டாலும், அதன் மீதான முதலாளித்துவ சுற்றிவளைப்பு உண்மையானது. பயங்கரவாதம் – பாதுகாப்பு என்பன போல் சோளக்காட்டு பொம்மைகளில்லை.
மறுபுறம் , பாசிசம் பாரம்பரிய தேசியவாதத்திற்கு அப்பாற்பட்டு தேசத்தின் அதிகார அமைப்பாகவும் வருங்காலமாகவும் தன்னை உணர்கிறது. பாசிசம், வரலாற்று மதிப்பீடுகளுக்கு விசுவாசமாகத் தன்னை உணரவில்லை. மாறாக வரலாற்றின் தொடர்ச்சியான நிறைவேற்றத்தில் குறுக்கிடும் எதையும் நசுக்குவது அவசியம் என்றது. ஹிட்லரின் பார்வையில் பிற்போக்குத்தனமான கண்ணோட்டத்தில் இருந்தபோதும் மார்க்சியத்திற்கும் கம்யூனிசத்திற்கும் எதிரான முதல் இயக்கமாக இத்தாலிய பாசிசத்தை ஏற்றுக் கொண்டார், .
அமெரிக்காவில், சமூக நீதிக்கும் அரசியல் அதிகாரத்திற்கும் தகுதியான ஒரு திடமான நிலையான தொழிலாளர்கள் இயக்கத்துக்கும் – சமூக வளர்ச்சி / சமூக நீதிக்கும் ஒத்திசைவின்றி உள்ளது. ஐரோப்பாவில் பல்வேறு தொழிலாளர்கள் இயக்க வரலாறுகளுக்கும் தேசிய அரசுகளின் எழுச்சிக்கும் நெருங்கிய உறவு இருந்தது.
புனிதமான ஒளிவட்டமாக சித்தரிக்கப்படும் கற்பனையான அமெரிக்கக் கனவும் அமெரிக்கவாதமும் ஒரு நீடித்த பாசிச-கார்ப்பரேட்டிச அரசுக்கான நிரந்தர அடிப்படையை வழங்குகிறது
(கெய்டெர் ஸ்டீவர்ட் ஒரு மூத்த பத்திரிகையாளர், அரசியல், இலக்கியம், மற்றும் பண்பாடு பற்றிய அவரது எழுத்துக்கள் பல முன்னணி இணையதளங்களிலும் , பத்திரிக்கைகளிலும் பிரசுரிக்கப்பட்டன (மற்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன)
Courtesy : The Greanville Post
மொழிபெயர்த்தவர் : பிரியா
சதுர அடைப்புக் குறிக்குள் மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் தரப்பட்டுள்ளன.