நெடுவாசல் : போராடும் மக்களை ஆதரிப்போம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் மக்களை ஒடுக்குவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் முழுக்க போலீசின் கட்டுப்பாட்டில் உள்ளது. போராடும் மக்கள், போராட்டக் களம் நோக்கி வரும் மக்கள் அனைவரையும் தீவிர சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்த்து களமிறங்கியுள்ளார்கள். “அன்றைய சோத்துக்கு அன்றைய வேலை” என்று வாழ்க்கையோடு போராடும் மக்கள் போராட்டக் களம் நோக்கி விரைகிறார்கள், சொகுசான வாழ்க்கையை விட்டுவிட்டும் பலர் போராட்டத்துக்கு ஆதரவு தர விரைகிறார்கள்.

இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் எப்படி வளர்ந்தது என்று யோசித்துப் பாருங்கள். ஊடகங்கள் இன்று எப்படி நடந்துகொள்கின்றன என்பதையும் பாருங்கள். ஊடகங்கள் ஒருபோதும் மக்கள் பிரச்சினைகளையும் அதற்கான சரியான தீர்வையும் காட்டப் போவதில்லை. அவை எப்போதும் ஆட்சியாளர்களின் கைப்பாவைதான்.

ஊருக்கே சோறுபோட்ட படிக்காத விவசாய பெருமக்கள் தாம் உண்ண முடியாமல் பட்டினியாய் கிடந்த போது பேசாத நாம், அவன் மருந்தைக் குடித்து நெஞ்சு வெடித்து சாகும்போது பேசாத நாம் இப்போதாவது நமது குரலை உயர்த்துவோம்.

யாருக்காக மீத்தேன் எடுக்கப் போகிறார்கள்? யார் சாகப்போகிறார்கள்? எது அழியப்போகிறது? கொள்ளை லாபம் என்ற வெறி பிடித்து அலையும் முதலாளிகளின் நலனுக்காக நமது விவசாயிகளும் விவசாயமும் அழிக்கப்படப் போகின்றன. இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுத்த அரசும், காண்டிராக்ட் எடுத்த அரசியல்வாதிகளும், அமல்படுத்தும் அதிகாரிகளும் ஆயிரக்கணக்கான விவசாயிகளின் வாழ்வைப் பற்றி கவலைப்படவில்லை. இது போன்ற திட்டங்கள் குறித்த தகவல்களைக் கூட வெளிப்படையாக மக்கள் முன் வைப்பதை தவிர்க்கிறார்கள். ஜனநாயகம் என்பதற்கு எந்த மதிப்பும் இல்லாமல், நாங்கள் எடுப்பதே முடிவு என்று டெல்லியிலிருந்து திட்டங்களை மக்கள் மீது திணிக்கிறார்கள்.

இதை எதிர்க்கும் மக்களுக்கு உறுதுணையாக நிற்பது சமூக அக்கறை கொண்ட, எதிர்கால சந்ததி மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கடமை.

இன்னும் நிறைய போராட்டங்களை நமது நாடு சந்திக்கக் காத்திருக்கிறது. குழந்தைகளுக்காக, எதிர்காலத்திற்காக பணம் சம்பாதிக்க வேண்டும் என்று ஓடுபவர்களிடம் நாம் வைக்கும் கேள்வி: எதிர்காலமே சுடுகாட்டில்தான் என்றால் அங்கு நாம் சேர்த்து வைக்கும் பணத்தின்/சொத்தின் மதிப்பு என்ன? நம் குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டியது ஒரு ஆரோக்கியமான, ஜனநாயகமான சமூகத்தை. அதற்கான மக்கள் போராட்டங்களுக்கு துணை நிற்க வேண்டியதுதான் நமது முதன்மையான பணி.

நாடு முழுவதும் பல்வேறு பிரச்சனைகளுக்காக வெடிக்கும் போராட்டங்களை ஆதரித்து நம்மைச் சுற்றியுள்ள பகுதிகளை போராட்ட களமாக்குவோம். மக்களின் ஒவ்வொரு போராட்டத்தின்போதும் அந்த இடங்களை நிரம்பி வழியச்செய்வோம். ஒட்டுமொத்த சமூகத்தின் எதிரிகளிடமிருந்து மக்களை விடுதலை செய்வதுதான், சமூகத்தை முன்நோக்கி கொண்டு செல்ல, ஆரோக்கியமான திசையில் வழி நடத்துவதற்கான ஒரே வழி.

– பிரவீன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/support-to-protesting-neduvasal-villagers/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கிராமப்புற தபால் ஊழியர்களின் வேலை நிறுத்தம் : உரிமைக்கான போராட்டம்

இவர்களில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு ரூ.5,000 முதல் ரூ.8,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. "நாங்கள் எந்தவொரு மருத்துவத் திட்டத்தின்கீழும் வருவதில்லை" என்ற அவர் "மொத்த தபால் ஊழியர்களின் எண்ணிக்கையில்...

“ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை” புத்தகம் – வாங்கி வினியோகியுங்கள்

ஐ.டி ஊழியர்களும், மாணவர்களும் புத்தகத்தின் பிரதிகளை பெற்று நண்பர்களிடையேயும், சக ஊழியர்களிடையேயும் வினியோகிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். தமிழ் தெரியாத பிற மாநில ஊழியர்களுக்கு ஆங்கில நூலை வினியோகிக்கலாம். உங்களுக்கு...

Close