நாதியற்றவர்கள்: அமைப்புசாராத் தொழிலாளர்களின் அவல வாழ்வு!

This entry is part 5 of 7 in the series தொழிலாளர் வாழ்க்கை

“இனி என்னங்க இருக்கு. எல்லாமே போச்சு தெருவுல நடக்கும்போதுகூட ஒரு காலை இழுத்துக்கிட்டேதான் நடக்க வேண்டியிருக்கு.. இன்னும் மூணு மாசத்துக்கு வேலைக்குப் போகக் கூடாதுனு டாக்டர் சொல்லிட்டார். அதுவரைக்கும் எப்படி சோறு சாப்பிடறது?… செப்டிக் டேங்க் உள்ளே விழுந்ததால என்னால எழுந்து நடமாடக்கூட முடியல. நிறையக் கழிவுத்தண்ணி வாய்க்குள்ள போயி, நுரையீரல்ல ஓட்டை விழுந்துருச்சு. எதுக்கு உயிர் வாழணும்னு விரக்தியா இருக்கு. ரெண்டு குழந்தைங்க முகங்களைப் பார்த்துட்டு உயிரோடு இருக்கேன். அவங்க எதிர்காலம்தான் ரொம்பப் பயமுறுத்துது…..” பேசும் போதே குரல் உடைந்து அழுகை ஊற்றெடுக்கிறது.

கடந்த சனவரியில்(2016) சென்னையின் புறநகர் பகுதியல் ஒரு ஹோட்டலின் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விசவாயு தாக்கியதால் முடமாகிப் போன கூலித்தொழிலாளி விஜயகுமாரின் துயரக் குரல் இது. நான்கு தொழிலாளிகள் விசவாயு தாக்கி உயிரழக்க, எஞ்சியவர் இவர் மட்டுமே. ஏற்கனவே முன்பு வேலை பார்த்த மரக்கடையில் அறுவை இயந்திரத்தில் கை சிக்கியதால் நான்கு விரல்களை இழந்த மாற்றுத்திறனாளி இவர்.

“….இவரோட மருத்துச் செலவுக்குக் கூட பணம் இல்ல. இறந்து போனவங்க குடும்பத்துக்குப் பணம் கொடுத்தாங்க. எங்க குடும்பத்தை எட்டிக்கூடப்பார்க்கல. செத்துப் போனாத்தான் பணம் தருவாங்களா? இப்படி உயிரோட வெச்ச சாகடிச்சுட்டாங்களே, நாங்க எங்க போய் நிக்கிறது?…” விம்மி அழுகிறார் அவரது மனைவி.

நாடு முழுவதுமுள்ள 40 கோடிக்கும் அதிகமான அமைப்புசாரத் தொழிலாளர்கள் என்றழைக்கப்படும் நவீன அடிமைகளின் துயர வாழ்க்கைக்கு ஒரு சிறிய உதாரணம் இது.

இது மட்டுமல்ல.. தறியோட்டி இளைத்த உடம்பில் சிறுநீரகத்தை அறுத்தெடுத்த வரியோடு உழலும் நெசவாளிகள், தீப்பெட்டித் தொழிலின் கந்தக நெடியில் கருகும் இளம் மொட்டுக்கள், ஆலைகளின் பாய்லர் வெடிப்பிலும், பட்டாசுத் தொழிற்சாலை விபத்துகளிலும் உடல் சிதறி வீழும் உழைக்கும் மக்கள், ஜவுளி ஆலைகளின் ’சுமங்கலி’ த் திட்டம் சீரழிக்கும் இளம்பெண்கள், அடுக்குமாடிக் கட்டிடங்கள், அதிவேகச் சாலைகள், மேம்பாலங்களுக்கு அடித்தளமாகப் புதைக்கப்படும் கட்டுமானத் தொழிலாளர்கள், மூலதனத்தின் இலாபவெறிக்காக பாதுகாப்புக் கவசங்களின்றி வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டு இயந்திரங்களின் சிக்கி கை, கால்களை இழந்து முடமாகும் தொழிலாளர்கள், அனைத்துக்கும் மேலாக உயிரோடு சாக்கடையில் புதைக்கப்படும் துப்புரவுத் தொழிலாளர்கள.. …. இப்படியாய் இன்னும் பலவுமாய் தொடர்கின்றன்.. ‘பாரத மாதா’ வின் வஞ்சிக்கப்பட்ட குழந்தைகளான அமைப்புசாராத் தொழிலாளர்கள் படும் சொல்லிமாளாத துன்ப, துயரங்கள்.

உத்தரவாதமற்ற வேலை நிலைமைகள்

பெரிய ஆலைகள் மற்றும் அரசுத் துறைகளில் பணிநாற்றுவோரை (வரையறுக்கப்பட்ட ஒப்பந்தங்களின்படி மாதாந்திர ஊதியம் மற்றும் பிற சலுகைகளைப் பெறுபவர்கள்) தவிர இதர உழைக்கும் மக்களனைவரும் சுயதொழில் செய்வோர் உள்ளிட்டு அமைப்புசாராத் தொழிலாளர்கள் என வகைப்படுத்தப்படுகின்றனர்.

சுமார் 50 கோடிக்கும் அதிமான இந்தியத் தொழிலாளர்களில் 90 சதவீத்த்திற்கும் அதிகமானோர் அமைப்புசாராத் தொழிலாளர்களே ஆவர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் விவசாயத்துறையிலும், சுமார் 5 கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் உற்பத்தி, சேவைத்துறை சார்ந்த பல்வேறு, வேலைகளிலும் ஈடுபட்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

நிலமற்ற விவசாயக் கூலித் தொழிலாளர்கள், விவசாயம் சார்ந்த உபதொழில்களில் ஈடுபட்டுள்ளோர், மீன்பிடிப்பு, கிராமக் கைவினைஞர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சுமை தூக்குபவர்கள், மரம் ஏறுவோர், துப்புரவுப் பணியாளர்கள், வீட்டு வேலை செய்வோர், சலவை- முடிதிருத்தும் தொழிலாளர்கள் , தெருவில் காய்கறி, செய்தித்தாள் விற்போர், சலவை- முடிதிருத்தும் தொழிலாளர்கள், அப்பளக்கட்டு, உப்பளம் முதல் அண்ணாச்சி கடை, ஆட்டோ மெக்கானிக் ஷாப் வரையிலான எண்ணற்ற சிறுதொழில்களில் பணிபுரிபவர்கள், ஆட்டோ,கால்டாக்சி, லாரி ஓட்டுநர்கள், தங்க ஆபரண வேலை செய்வோர், வாழ்க்கைத் தேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள்… என பலதரப்பட்ட பிரவினரும் இதில் அடங்குவர்.

கடந்த கால் நூற்றாண்டு காலமாக ஆளும் வர்க்கங்களால் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கையின் விளைவாக உருவெடுத்து நாள்தோறும் பெரும் எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்ற ஒப்பந்தத் தொழிலாளர்கள் பட்டாளம் முற்றுப்பொறாத இந்தப் பட்டியலின் பின்னிணைப்பு.

மூர்க்கத்தனமாக முன்னெடுக்கப்படும் மறுகாலனியத் திட்டங்களால் நமது விவசாயமும், கைத்தொழில்களும், சிறுதொழில்களும் சீரழிக்கப்பட்டு அழிவுக்குத் தள்ளப்படுகின்றன. இதனால் இவற்றை நம்பி வாழ்ந்த பல்லாயிர்க்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்பட்டு நகர்புற உழைப்புச் சந்தைகளில் வீசியெறிப்படுகின்றனர். கேட்பாரற்ற அனாதைகளாக, நவீனக் கொத்தடிமைகளாக, ஆண்டுதோறும் 50 இலட்சத்திற்கு மேற்பட்டோர் வேலைதேடி உள்நாட்டுக்குள்ளே புலம்பெயர்வதாகக் கூறுகின்றன மேலும் சில புள்ளிவிவரங்கள். இதுதான் அமைப்புசாராத் தொழிலாளர்கள் உருவாகின்ற புள்ளி.

பிழைப்புக்காக வேலை தேடி நகரங்களை நாடி வரும் இம்மக்களின் வாழ்க்கை வாணலிக்குத் தப்பி அடுப்பில் விழுந்த கதையாக முடிகிறது. நகரங்களில் இவர்களுக்கு உத்திரவாதமான, நிரந்தர வேலைகள் எதுவும் கிடைப்பதில்லை. சித்தாளாகவும், கொத்தனாரவும், வாட்ச்மேன், செக்யூரிட்டி கார்டுகளாகவும், சாக்கடையைச் சுத்தம் செய்வது, வீட்டு வேலைகள் எனக் கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு அதில் கிடைக்கும் குறைந்த கூலியைக் கொண்டு வாழ வேண்டிய நிர்ப்பந்த்தில் தள்ளப்படுகின்றனர். குறைந்த படிப்பறிவுகொண்ட, படிக்காத பாரமர்களின் நிலை இது.

ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டங்களோடு வேலை தேடிவரும் இளைஞர்களின் நிலையோ இதைவிட படுமோசமான உள்ளது. இவர்களில் பெரும்பாலானோருக்கு நிரந்தர வேலை கிடையாது. பணி நிரந்தரம் ஏதுமின்றி பல்லாண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இருத்தப்பட்டு, குறைவான கூலியில் சக்கையாகப் பிழியப்பட்டுக் குப்பைகளென வீசியெறிப்படுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் ஆலைகளில் நிரந்தரத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதோடு ஒப்பந்தத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பிரம்மாண்டமாக வளர்ந்திப்பதையும் பல்வேறு ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

கந்தலாகிப் போன வாழ்க்கை

இந்தியத் தொழிலாளர்களின் எண்ணிக்கை சுமார் 50 கோடி ஆகும். சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிகமான தொழிலாளர்கள் இந்தியாவில்தான் உள்ளனர். அதிலும் இளம் தொழிலாளர்கள் எண்ணிக்கை ஒப்பிட்டளவில் இந்தியாவில் அதிகம். ஒவ்வொரு வருடமும் 50 இலட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் புதிதாக உழைப்புச் சந்தைக்கு வருகின்றனர் அவர்களில் 94% பேர் அமைப்புசாராத் தொழில்களில் தான் வேலை செய்கிறார்கள், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50%-த்திற்கும் அதிகமாகப்பங்களிப்பவர்கள் அமைப்புசாராத் தொழிலாளர்களே. உலகளவில் அதிவேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் இரண்டாமிடத்தில் உள்ளது இந்தியா, ஆனால், இந்த வளர்ச்சிக்குப் பாடுபடும் பெரும்பான்மை உழைக்கும் மக்களை சமூகத்தின் அடித்தட்டில் இருத்தி, அவர்களது வாழ்வை அதல பாதாளத்தில் தள்ளியுள்ளது இந்நாட்டை ஆளும் ஏகாத்திபத்திய அடிமைச் சேவக, பிற்போக்கு ஆளும் வர்க்கக் கும்பல்.

இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு சாலைப் போக்குவரத்து, கட்டுமானம், இரயில்வே சாலை அமைப்பு, பாலங்கள் கட்டுதல், கட்டிடக்கட்டுமானப் பணிகள் பல்லாயிரம் கோடிகளைத் தாண்டும் நிலையில் உலகளாவிய ஒப்பந்த அடிப்படையில் முடிவு செய்யப்படுவதால் ஒப்பந்தப்புள்ளி எடுத்து பணி மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் அமைப்பு சாராத் தொழிலாளர்களை மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயரச் செய்து தகரக் கொட்டகைகளில் ஆடு, மாடுகளைப் போல அடைத்துவைத்து வேலை வாங்குகின்றனர். இத்தொழிலாளர்களும் தங்களின் வேலையின்மை, அறியாமை, வறுமை ஆகியவற்றின் காரணமாக தங்களின் உரிமைகள் குறித்து பேசவோ, மாறுபட்ட இடம், மதம், மொழி காரணமாக யாருடனும் இணைந்து தொடர்ந்து குரல் எழுப்பவோ முடியாத அவலநிலையில் உள்ளனர்.

இவர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட குறைந்தபட்சக் கூலிச் சட்டம் 1948, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதுகாப்புச் சட்டம் 1979, கட்டிடக் கட்டுமானத் தொழிலாளர்கள் நலச் சட்டம் 1996 ஆகிய அனைத்தும் ஏனைய தொழிலாளர் நலச் சட்டங்களை போலவே கழிப்பறைக் காகிதமாக்கப்பட்டுள்ளன. இந்தியத் தொழிலாளர்களில் அமைப்புரீதியில் அமைத்துள்ள மிகச் சிறுபான்மையோருக்குத்தான் 8 மணி நேர வேலை உள்ளிட்ட உரிமைகள் கிடைக்கின்றன என்ற நிலைமையில், அவையும் கூடப் புதிய பொருளாதாரக் கொள்கை, தாராளமயமாதல் ,உலமயமாதல் ஆகியவற்றின் பெயரில் மீண்டும் பறித்து கொள்ளப்படுகின்றன.

குறைவான கூலியில் அதிக நேரம் உழைத்திடவும், போதுமான காற்றோட்டமற்ற, கழிவறை வசதிகளற்ற இடங்களில் தங்கிடவும், இயற்கை அழைப்புகளைக் கூட உரிய காலத்தில் செய்ய முடியாத அவல நிலைக்குத் தள்ளப்பட்டும் வருகின்றனர். இதிலும், பெண் உழைப்பாளிகளின் நிலையோ படுமோசம். ஆண்களுக்கு நிகரான கூலி தரப்படாமை, பாலியல் வன்கொடுமைகள், அழும் குழந்தைக்குப் பாலூட்டக் கூட அனுமதிக்கப்படாத பணி நிலைமை உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.
உத்திரவாதமான, நிரந்தர வேலையின்றி நாள் முழுவதும் பாடுபட்டும் அரைவயிற்றுக் கஞ்சிக்கும் வழியற்றவர்களாக பெரும்பான்மையான தொழிலாளர்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். அமைப்பு சாரா நிறுவனங்களுக்கான தேசியக் குழுவின் தலைவர் அர்ஜீன் சென்குப்தா என்பவர் 80% சதவீத அமைப்புசாராத் தொழிலாளர்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பதாகச் சொல்லுகிறார். உலகிலேயே வறுமை கோரத்தாண்டவமாடும் சில ஆப்பிரிக்க நாடுகளை விடவும் மோசமான நிலையில் வயதுக்கேற்ற எடையின்றி மெலிந்து நோஞ்சான்களாக, நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைக் கொண்டிருப்பதோடு, சிசு மரணம் அதிகம் நிகழும் நாடாக இந்தியா சீரழிந்துள்ளதை எடுத்துக்கூறி சர்வதேசப் புள்ளிவிவரங்கள் காறித்துப்புகின்றன.

அமைப்புசாராத் தொழிலாளர்களின் அறியாமை, படிப்பறிவின்மை மற்றும் திறன் குறைந்த கல்வியறிவு ஆகியவற்றால் இடம்விட்டு இடம் பெயர்ந்து வேலை தேடிச் செல்ல வேண்டிய நிலையே உள்ளது. குறைந்த கூலி, வேலைக்கேற்ற கூலியின்மை, பணியிடங்களில் பாதுகாப்பின்மை, ஆபத்துக்கால உதவியின்மை, கடனுதவி போன்றவற்றைப் பெறமுடியாத நிலையிலேயே இவர்கள் இருக்கின்றனர். இதன் விளைவாக நோய்வாய்ப்படுதல், விபத்துகளால் முடமாகிப்போதல், முதுமை போன்ற நிலைமைகளை எதிர்கொள்ள வழியின்றி கந்து வட்டிக்குக் கடன்பெற்று வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் 1 கோடியே 26 லட்சம் பேர்; அவர்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கல்குவாரிகளிலும், அரிசி ஆலைகளிலும், செங்கற்சூளைகளிலும் கொத்தடிமைகளாக பல்லாயிரம் பேர் உழல்கின்றனர்.
நாடு முழுவதும் சுமார் 50 லட்சம் பேர் கொத்தடிமை நிலையில் இருப்பாதாக சேவை அமைப்புகள் தெரிவிக்கின்றன. அவர்களில் தலித் மக்களும், பழங்குடிகளுமே அதிகமாக உள்ளனர். இந்திய தொழிலாளி வர்க்கம் மத ரீதியாகவும், சாதிகளாவும் உடைந்து நொறுங்கியுள்ளது.

அடிமைத்தனத்தின் நீட்சியாக கையால் மலம் அள்ளும் வேலையே ஐ.நா சபை அறிவித்துள்ளது. இந்தியாவில் இந்த வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் என்று அரசு சொல்கிறது. ஆனால், ஐ.நா வின் சர்வ தேசத் தொழிலாளர் அமைப்பு, இந்தியாவில் ஏழு இலட்சம் பேர் இந்த இழிவில் சிக்கிக்கொண்டிருப்பதாகச் சொல்கிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தலித் பெண்கள்தான். இதேபோல துப்புரவுப் பணிகளிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

கண்டு “கொல்லும்” அரசும், கண்டுகொள்ளாத தொழிற்சங்கப் பீடங்களும்

ஏழைகளின் வரப்பிரசாதமாகத் கூறப்படும் சமூக நலத்திட்டங்களுக்கான நிதியை படிப்படியாக வெட்டிக் குறைத்து வருகின்றன மத்திய, மாநில அரசுகள். முதலாளிகளுக்குப் பல இலட்சம் கோடிகளை வரிச் சலுகைகளாக வாரியிறைக்கும் இந்த முதலாளித்துவ அடிவருடிகள் சமூக நலத்திட்டங்களுக்கான மானியங்களை தேவையற்ற சுமையென ஒதுக்கித் தள்ளுவதால் அமைப்பு சாராத் தொழிலாளர்களுக்கென அமைக்கப்பட்ட பல்வேறு நலவாரியங்களும், பெயரளவுக்கு இயற்றப்பட்ட சட்டங்களும் செயல்பாடின்றி முடங்கிக்கிடக்கின்றன.

எந்த ஒரு நாட்டில் அமைப்பு சாராத் தொழிலாளர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்களோ, அந்த நாட்டில் தொழிலாளர்களது உரிமைகள் மதிக்கப்படுவதில்லை என்று அர்த்தம். அமைப்பு சார்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவதாலேயே அமைப்புசாரா தொழிலாளர்கள் அதிகரிக்கின்றனர். பலமுனைத் தாக்குல்களை எதிர்கொண்டுள்ள அமைப்புசாராத் தொழிலாளர்களை அணிதிரட்டி அவர்களது முறைப்படியான உரிமைகளுக்காகப் போராடும் கடமையை புறந்தள்ளியுள்ளன பிழைப்புவாதத் தொழிற்சங்கப் பீடங்கள்.

பெரும்பான்மை உழைக்கும் மக்களை, சமூகத்தின் பெரும்பகுதியை ‘அமைப்புசாராத் தொழிலாளர்கள்’ என முத்திரை குத்தி அவர்களுடைய உரிமைகளைப் பறித்து, வாழ்வாதாரங்களைச் சிதைத்து, நிர்க்கதியான நிலைக்குத் தள்ளியுள்ள இந்தப் போலி ஜனநாயகக் கட்டமைவு அவர்களுக்கு எதிரானதுதான் என்பதை தனது செயல்பாடுகள் மூலமாக நிரூபித்துக் கொண்டிருக்கின்றன மத்திய,மாநில அரசுகள்.

எனவே, உழைக்கும் மக்களின் எதிரியாக மாறிப் போன இந்த அரசமைப்பைச் சார்ந்து நில்லாமால், தமது உரிமைகளை மீட்டெடுக்கும் போராட்டக்களத்தில் உழைக்கும் வர்க்கமாக அணிதிரண்டு அதிகாரத்தைக் கையிலெந்திப் போராடுவதன் வாயிலாகவே அமைப்புசாரத் தொழிலாளர்கள் தமது துயரவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

-மருதமுத்து

புதிய தொழிலாளி மார்ச் 2016 இதழிலிருந்து

தட்டச்சு உதவி – வீரன்

Series Navigation<< ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள்: வண்ணமிழக்கும் வாழ்க்கை கந்தல் துணியாகும் அவலம்!வாகன ஓட்டுநர்கள்: நகர மறுக்கும் வாழ்க்கை…! >>

Permanent link to this article: http://new-democrats.com/ta/supportless-unorganized-sector-workers/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
தொழிலாளி வர்க்கத்தின் திருநாள் எது?

சரவணா ஸ்டோர்ஸ் முதலாளிக்கும், கார்ப்பரேட் பண முதலைகளுக்கும் தீபாவளி புதிய ஆண்டின் தொடக்கமாக, புதிய லாபத்தின் குவிப்பாக இருக்கலாம். ஆனால், தொழிலாளி வர்க்கத்தைப் பொறுத்தவரையில் எது உண்மையில்...

டி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி!

இந்தியாவில் ஒரு ஊழியர் குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கப்பட்டு அதன் பலன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு லாபமாக கடத்தப்படுகிறது. இதன் விளைவாக கணிசமான மதிப்பு வாய்ந்த அந்நியச் செலாவணியை...

Close