அக்டோபர் 22 ம் தேதி இரவில் சேலத்திற்கு பக்கத்தில் இருக்கும் ஆத்தூரின் தளவாய்ப்பட்டி என்ற கிராமத்தில் ராஜலட்சுமி என்ற 13 வயது தலித் சிறுமியை அச்சிறுமியின் வீட்டிற்கே வந்து அவள் தாயாரின் கண்ணெதிரிலேயே தினேஷ் குமார் என்பவன் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு தலையையும் துண்டித்து எடுத்துக் கொண்டு போய்விட்டான். அவனது ஆணாதிக்க ஆதிக்கசாதி வெறி அத்தகையது. அடுத்த நாள் இந்த செய்திகேட்டு தமிழகம் வெட்கித் தலைகுனிந்திருக்க வேண்டும். ஆனால் இந்தக் குற்றத்தைப் பற்றி எங்கும் மயான அமைதி. தலித் மக்களின் மனித உரிமைக்காக செயலாற்றும் எவிடென்ஸ் என்ற அமைப்பின் இயக்குநர் ஏ. கதிர் இதுவும் ஒரு மீடூ குற்றம் தான் என்றும் ராஜலட்சுமி அந்த வெறியனின் ஆசைக்கு பணியவில்லை என்றும் அதைப் பற்றி தன் பெற்றோருக்கு தெரிவித்திருக்கிறாள் என்றும் கூறுகிறார்.
மகளை இழந்த குடும்பத்தை முதலில் சென்று பார்த்த செயல்வீரர்களில் கதிரும் ஒருவர். ராஜலட்சுமியும் அவளின் தாய் சின்னப்பொண்ணுவும் பூக்கட்டிக் கொண்டிருந்த போது அரிவாளுடன் வந்தான் தினேஷ் குமார். அவர்களை சாதியை வைத்து கேவலமாக பேசினான். தாய் தடுக்கும் போதே அச்சிறுமியை வெட்டினான். தலையைத் துண்டித்தான். தலையுடன் தனது வீட்டிற்கு சென்றான். அவன் மனைவியின் ஆலோசனைக்குப் பிறகு தலையை எங்கேயோ போட்டுவிட்டு இருவரும் காவல் நிலையத்திற்கு சென்றனர். பிறகு அவனின் மனைவி சாரதா தனது கணவருக்கு மனநிலை சரியில்லை என்று கூறினார். இது தனது கணவனைக் காப்பாற்ற செய்யும் சதி என்று கதிர் கூறுகிறார். காவல் துறை விசாரணையில் அவன் மனநிலை பாதிக்கப்பட்டவன் இல்லை என்று தெளிவுபடுத்தப் பட்டிருக்கிறது.
குற்றம் நடந்த போது வீ்ட்டில் சின்னப்பொண்ணுவும் ராஜலட்சுமியும் மட்டுமே இருந்தார்கள். தந்தை சுடுகாட்டில் வேலை செய்பவர். அதனால் தேவைப் படும் போது அவர் இரவிலும் அங்கேயே தங்குவார். அந்த வெறியனின் முயற்சிகளைப் பற்றி ராஜலட்சுமி குடும்பத்திடம் சொல்லியிருக்கிறாள். ஆனால், ஆதிக்க சாதியினரை எதிர்த்துக் கேட்பது அவ்வளவு சுலபமல்ல என்பதால் அவர்கள் அமைதியாக இருந்திருக்கிறார்கள்.
காவல்துறை இதை சாதிக்குற்றம் என்று மட்டுமே பார்ப்பதாகவும், ஆனால் சமூகம் இதை சாதிக் குற்றமாக அல்லாமல் பாலியல் குற்றமாக மட்டுமே பார்ப்பதாகவும் கதிர் கூறுகிறார். தனது கணவனை ஆணவக் கொலையினால் இழந்த மற்றொரு செயல்வீரரான கௌசல்யா கதிரின் கூற்றை ஆமோதிக்கிறார். ராஜலட்சுமியின் உறவினர் பி. ஜெகதீஸ் இது இரண்டு குற்றங்களுமே என்கிறார். “நாங்கள் அப்படித்தான் புகார் கொடுத்திருக்கிறோம். அவன் ராஜலட்சுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறான். ஒரு தலித் பெண் எப்படி மறுக்கலாம் என்பதனால்தான் அவனுக்கு வெறி தலைக்கேறிவிட்டது. அவனை பிணையில் வெளியே விடக்கூடாது. POCSO சட்டத்தின் கீழும் அவன் தண்டிக்கப் படவேண்டும்” என்கிறார் அவர்.
கௌசல்யா, கதிர் போன்றவர்களுக்கு மர்மமாக இருப்பது என்னவென்றால் இந்தக் கொலையைச் சுற்றி நிலவும் மயான அமைதிதான். “நானும் மற்றொரு சமூகசெயல்பாட்டாளருமான வளர்மதியும் அங்கே சென்றிருந்த போது ஊடகங்கள் பாதிக்கப் பட்ட குடும்பத்திடம் மிகவும் குரூரமான கேள்விகளைக் கேட்டனர். இது போன்ற கேள்விகளை ஏன் குற்றவாளிகளின் குடும்பத்திடமோ அல்லது அரசாங்கத்திடமோ ஏன் கேட்பதில்லை என்று வியக்கிறேன்.” என்று கேட்கிறார் கௌசல்யா. இந்தக் குற்றத்தில் பொது சமூகத்திற்கு பங்கு இருக்கிறது, சமூகத்தின் அமைதி இந்த குற்றத்தைப் போன்றே கொடியது என்கிறார் கதிர்.
புதன்கிழமையின் (31/10/18) சென்னை சேப்பாக்கத்தில் நடக்கவிருக்கும் ஆர்பாட்டம் இந்த அமைதியை கிழிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் இந்நிகழ்ச்சியின் ஒரு ஒருங்கினைப்பாளர் செம்மலர் ஜெபராஜ். “மீடூ இயக்கத்தில் எழுப்பப் பட்ட குற்றங்கள் அலுவலகத்திலோ பொது இடங்களிலோ நடந்தவை. ஆனால், ராஜலட்சுமி தனது வீட்டிலேயே கொல்லப் பட்டிருக்கிறார். அதாவது ஒரு தலித் பெண் தனது சொந்த வீட்டில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாது. இது ஒரு பச்சையான ஆணவக்கொலை. அவனால் கொலையோடு நிறுத்த முடியவில்லை. தலையையும் துண்டித்து தன்னோடே எடுத்துக் கொண்டும் போய்விட்டான். அவனது சாதிவெறியின் அளவை இது காட்டுகிறது” என்கிறார் ஜெபராஜ். “இந்த அமைதியை கிழிக்க பல குரல்கள் தேவை. தலித் குரல்கள் மட்டும் போதாது. குற்றங்களை தடுப்பது மட்டுமே எங்களது இலக்கல்ல. சாதியையும் ஒழிக்கவேண்டும்” என்கிறார் ஜெபராஜ்.
ஒருங்கிணைப்பாளர்கள் சாதியை அடிப்படையாகக் கொண்டு நிறுவப்பட்ட சில வழக்கங்களையும் உடைத்தெறிய திட்டமிட்டுருக்கின்றனர். எடுத்துக்காட்டாக இறுதிச் சடங்கின் போதும் பறையும் திருமணத்தின் போது நாதஸ்வரமும் வாசி்ப்பது வழக்கம். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தங்கள் ஆதரவை தெரிவிக்க சில நாதஸ்வர கலைஞர்களும் கலந்து கொண்டு இசைக்க விருக்கிறார்கள். டி. எம் கிருஷ்ணா அவர்களும் சில பாடல்களை பாட உள்ளார்.
அல்போன்ஸ் ரத்னா, மற்றொரு ஒருங்கினைப்பாளர், அந்த சிறுமி ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று லட்சியம் வைத்திருந்ததாக கூறுகிறார். “அந்த கனவு கொடூரமாக அழிக்கப் பட்டிருக்கிறது. இது சமூகத்திற்கே அவமானம். நமது அமைதி அதைவிட கொடூரமானது” என்கிறார் அவர்.
நன்றி: கவிதா முரளிதரன் அவர்கள் எழுதிய பதிவு
மொழிபெயர்ப்பு : நேசன்
மேலும் படிக்க : தலை துண்டிக்கப்பட்ட ராஜலட்சுமிக்கு #MeTooவில் என்ன இடம்?