செய்தி: முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க வகை செய்யும் “லோக் ஆயுக்தா” சட்டம் தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
கருத்து : சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று சொல்கிறார்கள். ஆனால், இப்போதுதான் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க தனியாக சட்டம் இயற்றுகிறார்கள். இருந்தாலும், காலம் காலமாய் ஏமாந்து போன மக்களாகிய நாம் இந்த சட்டத்தின் மூலம் நல்லது நடக்கும் என்று நம்புவதுதான் அவர்களது வெற்றி.
இதுவரைக்கும் எண்ணிலடங்கா குற்றச்சாட்டுகள் அமைச்சர்கள் அதிகாரிகள் செய்தும், அவற்றில் சில நீதிமன்றங்களிலேயே நிரூபிக்கப்பட்டும் கூட ஏற்கனவே அவர்களை தண்டிக்க சட்டங்கள் இருந்தும் அவர்கள் தண்டிக்கப்படாமல் இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் சட்டங்கள் எல்லாம் பணம் உள்ளவருக்கு அதிகாரத்தில் உள்ளவருக்கு சாதகமாக இருக்குமே தவிர சாதாரண மக்களுக்காக இல்லை. அவ்வாறு இருக்கும் என்று சொல்பவர்களின் நோக்கம், சட்டம் நீதிமன்றம் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை முழுமையாக போய்விடக் கூடாது என்பதும் அவ்வாறு நம்பிக்கை இழக்கும் பட்சத்தில் மக்களை அடக்கி பல்வேறு கொள்ளைகளை நடத்த முடியாது என்பதும்தான். ஆதலால் அவர்களின் பொய்யான பரப்புரையை நம்மை நம்பச் சொல்கிறார்கள்.
திருட்டை விசாரிக்க திருடனே ஆட்களை தேர்ந்தெடுப்பது போல யாரெல்லாம் குற்றவாளிகள் என்று விசாரிக்க அந்த அமைப்பை உருவாக்குகிறார்களோ அதே குற்றவாளிகளான அமைச்சர்களை கொண்டு “லோக் ஆயுக்தா” அமைப்பின் நிர்வாகிககளை தேர்ந்தெடுக்கிறார்கள் அப்படி இருக்கும் பட்சத்தில் எவ்வாறு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று நாம் நம்ப முடியும்.
பல அமைச்சர்கள், அதிகாரிகள் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டாலும்பணியிடை மாற்றம், பணியிடை நீக்கம் இதைத்தவிர வேறென்ன செய்தார்கள். உண்மையாகவே சட்டமும் நீதிமன்றங்களும் வெளிப்படைத்தன்மையுடன் மக்களுக்கு நேர்மையாக இருந்திருந்தால் சாதாரண மக்கள் சிறிய குற்றம் செய்தாலும் பாரபட்சம் இல்லாமல் தண்டிப்பது போல ஆளும் நபர்களையும் தண்டித்திருக்க வேண்டும். குற்றம் செய்த அதிகாரிகள் அமைச்சர்களின் சொத்துக்கள் முழுவதும் பறிக்கப்பட்டிருக்க வேண்டும்; தகுந்த தண்டனையை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.இந்த அரசு கட்டமைப்பில் அவ்வாறு என்பது நடக்கப் போவதில்லை என்பது வெட்ட வெளிச்சமாக உள்ளது. ஏனென்றால் நேர்மையான கருத்துக்கள் தெரிவித்தால் கூட இப்போது குற்றம் என்று தண்டிக்கப்படும்படி அரசு கட்டமைப்பு சீரழிந்து சின்னாபின்னமாகிவிட்டது.
ஆவின்பால், மின்சாரத்துறை, போக்குவரத்துத்துறை, வங்கிகள் என்று பல்வேறு துறைகளில் ஊழல்கள் நடந்ததும் அதை அப்படியே மூடிமறைக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பித்தது நாடறிந்த உண்மை. குற்றவாளிகள் பணபலத்தில் உயர்ந்தும் அதிகாரத்தில் இருப்பதாலும் தடயங்கள் எளிதாக அழிக்கப்பட்டு நிரபராதிகள் போல வேஷம் போடுவதுதான் நடந்துகொண்டிருக்கிறது. அதற்கு எதிராக மக்கள் போராடினால் அதே பணவலிமையினால் அதிகாரத்தால் ஆயுதங்களை பயன்படுத்தி அடக்கி ஒடுக்கிறார்கள் சுட்டுக் கொலை செய்கிறார்கள்.
அரசு கொண்டுவரும் திட்டங்கள் மக்களுக்கானதாக இருக்க வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாக இருக்க வேண்டும். மாறாக, இங்கே வாழ்வாதாரத்தை அழிக்கும்படியான திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு காரணம் அதிகாரிகள் அமைச்சர்கள் லஞ்சம் வாங்கி கொண்டு திட்டங்களை செயல்படுத்துகிறார்கள்.
இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளை லோக் ஆயுக்தா அமைப்பு விசாரிக்குமா அல்லது விசாரித்துதான் தண்டனை கொடுக்கப்படுமா? இல்லவே இல்லை. படித்துக்கொண்டிருக்கும் பாமரன் உனக்கும் எனக்கும்தான், “சட்டம் அதன் கடமை செய்யும்”. அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வாலாட்டும் நாயாகத்தான் இருக்கும்.
ஒரு சில விபரங்களை பார்க்கலாம்
விசாரணை நடக்கும் போது குற்றம்சாட்டப்பட்டவரை பணியிடை நீக்கம் செய்ய முடியுமா?
அப்படி ஒரு தேவை எழுவதாக லோக் ஆயுக்தா கருதினால், அரசு ஊழியரின் மேல் அதிகாரிக்கு பரிந்துரை செய்யலாம். அந்த பரிந்துரையை, எழுத்துப்பூர்வ வாதங்களை அளித்து நிராகரிக்க அரசுக்கு உரிமை உண்டு. இந்த சரத்து முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு பொருந்தாது.
நடவடிக்கை எடுக்க அதிகாரம் கொண்ட அமைப்பு எது?
அரசு ஊழியருக்கு தமிழக அரசு, சட்டமன்ற உறுப்பினருக்கு சபாநாயகர், அமைச்சர்களுக்கு முதலமைச்சர், முதலமைச்சருக்கு ஆளுநர்.
போதுமா!
– சுகேந்திரன், செயலாளர்
பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு,