டி.சி.எஸ்-ஐ கறந்து ஆட்டம் போடும் டாடா குடும்ப அரசியல்!

குடும்ப அரசியல், வாரிசு அரசியல் தொல்லை தாங்க முடியவில்லை என்று அலுத்துக் கொள்கிறவரா நீங்கள்? அப்படிப்பட்டவராக இருந்தால் உத்தர பிரதேசத்தில் அப்பா முலாயம் சிங் யாதவ், மகன் அகிலேஷ் யாதவ், மாமாக்கள் ராம் யாதவ், ஷிவ்பால் யாதவ் இவர்களுக்கிடையே குடுமிப்பிடி சண்டை நடப்பது குறித்து ஸ்டேட்டஸ் போட்டிருப்பீர்கள். ‘அதெல்லாம் வேண்டாம், தமிழ்நாட்டுக்குள்ளேயே நடப்பதைத்தான் பேச வேண்டும்’ என்று நினைப்பவராக இருந்தால், தமிழ்நாட்டின் தலைபோகும் பிரச்சனைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு ‘கருணாநிதி, ஸ்டாலின்தான் என்னுடைய வாரிசு’ என்று சொல்லி விட்டதாக பொங்குவது பல வகைகளில் வசதியானதாகவும், பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

உத்தர பிரதேசத்தில் முலாயம்-அகிலேஷ் குடும்ப அரசியல்

உத்தர பிரதேசத்தில் முலாயம்-அகிலேஷ் குடும்ப அரசியல்

ஆனால், அங்கெல்லாம் பொங்கி முடித்து விட்டு இந்தப் பக்கமாக கொஞ்சம் வாருங்கள். 6 லட்சம் ஊழியர்கள், $100 பில்லியன் ஆண்டு வருமானம் கொண்ட டாடா குழுமத்தை யார் ஆள்வது என்று 2 குடும்பங்களுக்கிடையே நடக்கும் இழுபறி சண்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். டாடா நிறுவனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தி ஆதிக்கம் செலுத்தும் டாடா சன்ஸ் நிறுவனத்தில் நடக்கும் அதிகார பேரங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.

மற்ற நிறுவனங்களில் எல்லாம் சுமார் 30% அளவு பங்குகளை வைத்தே கட்டுப்படுத்தும் டாடா, டி.சி.எஸ்-ல் மட்டும் 70%-க்கும் மேல் பங்கு வைத்திருக்கிறது. டி.சி.எஸ்-தான் ஒட்டு மொத்த டாடா குழுமத்தின் பசிக்கும் இரை போடுவதற்காக பணத்தை சுரக்கும் கறவைப் பசு; டி.சி.எஸ் ஊழியர்கள் “வேலை போகிறது, ஹைக் கிடைக்கவில்லை, அப்ரைசல் சரியில்லை” என்றெல்லாம் புலம்புவதன் பின்னால் டி.சி.எஸ் பணம் பிற டாடா குழும நிறுவனங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்பதும் இருக்கிறது.

tcs-chandrasekaran

ஒட்டு மொத்த டாடா குழுமத்தின் பசிக்கும் இரை போடுவதற்காக பணத்தை சுரக்கும் கறவைப் பசு டி.சி.எஸ்

டாடா குடும்ப அரசியல் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இருப்பதை விட நீண்ட வரலாறு கொண்ட, டாடா ஊழியர்களோ, பொதுமக்களோ தலையிட முடியாத குடும்ப ஆட்சி. ஆனால், இந்தக் குடும்ப அரசியலை கண்டித்து, ஜனநாயகம் கோரி எந்தப் பத்திரிகையிலும் கண்டன தலையங்கங்களை நீங்கள் படிக்கப் போவதில்லை. முதலாளித்துவ அறிஞர்கள் இதை எதிர்த்து பொங்கப் போவதில்லை.

விஷயம் இதுதான். 2012 செப்டம்பரில், ’75 வயதுக்கு மேல் 1 நாள் கூட பதவியில் இருக்கக் கூடாது என்பது டாடா விதி’ என்று அறம் பேசி டாடா சன்ஸ் சேர்மன் பொறுப்பிலிருந்து விலகிய ரத்தன் டாடா இப்போது மீண்டும் இடைக்கால சேர்மனாக நாற்காலியை பிடித்திருக்கிறார்.

உலக அளவில் கார்ப்பரேட் சந்தையில் வலைவீசி அடுத்தத் தலைவரை பிடிக்கப் போகிறார்களாம். அதற்கு ரத்தன் டாடா தலைமையில் ஒரு குழுவையும் அமைத்திருக்கிறார்களாம். அடுத்த தலைவராக பெப்ஸி கோ நிறுவனத்தின் தலைவராக இருக்கும் இந்திரா நூயி (ரத்தன் டாடாவுக்கு அவரது திறமை மீது மதிப்பு உள்ளதாம்), வோடஃபோன் முன்னாள் தலைவர் அருண் சாரின் போன்ற வெளியாட்களிலிருந்தோ அல்லது டாடா குழுமத்துக்குள்ளேயே இருக்கும் டாடா இன்டர்நேஷனல் சேர்மன் நோயல் டாடா (டாடா குடும்ப பெயர் ஒரு பிளஸ்சாம்), டி.சி.எஸ் சி.ஈ.ஓ சந்திரசேகரன் (டி.சி.எஸ் ஊழியர்களை கறந்து டாடாவுக்கு பணம் திருப்புவதில் சமர்த்தர்), டாடா ஸ்டீல் துணைத் தலைவர் பி. முத்துராமன் போன்றவர்கள் மத்தியிலிருந்து ஒருவர் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ஹேஸ்யங்கள் சொல்கின்றன ஊடகங்கள்.

tcs-ceo-n-chandrasekarans-salary-jumps-14-to-rs-21-crere

2015 நிதியாண்டில் ரூ 21 கோடி ஊதியம் வாங்கிய டி.சி.எஸ் சந்திரசேகரன்

2012-ல் இதே போன்று, ‘புதிய சேர்மனை தேர்ந்தெடுக்க உலகளாவிய திறமை வலைவீச்சு நடத்தப் போகிறோம்’ என்றெல்லாம் படம் காட்டி விட்டு கடைசியில் டாடா சன்ஸ் நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை (18.5%) வைத்திருந்த பல்லோன்ஜி மிஸ்திரி என்பவரின் மகனான சைரஸ் மிஸ்திரி கையில் பதவியை கொடுத்தார்கள். அதன் பிறகும், ரத்தன் டாடா கௌரவமாக ஒதுங்கிப் போய், ரிட்டயர் ஆகி விடவில்லை. டாடா சன்ஸ் பங்குகளில் 66%-ஐ தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் டாடா டிரஸ்ட் என்ற அறக்கட்டளையின் சேர்மனாக ஆட்டத்தை திரைக்குப் பின் தொடர்ந்து கொண்டிருந்தார். டாடா டிரஸ்டுக்கு ரத்தன் டாடாதான் உயிரோடு இருக்கும் வரை சேர்மன், அங்கு ரிட்டையர்மென்ட் வயது அறம் எல்லாம் செல்லுபடியாகாது போலிருக்கிறது.

டிரஸ்ட் என்ற பெயர் இருப்பதாலேயே அதை நம்பி விட வேண்டும் என்று அப்பாவியாக யோசிக்கக் கூடாது. “டாடா குழும நிறுவனங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும், தம்மையும் பங்காளிகளையும் மேல்தட்டு தரகு முதலாளிகளாக (2ஜி ஊழல் புகழ் டாடா-நீரா ராடியா உரையாடல்களை நினைவு கூரவும்) தக்க வைத்துக் கொள்ள வேண்டும் ஆனால் யோக்கியனாகவும் காட்டிக் கொள்ள வேண்டும்.” அதற்குத்தான் கொள்ளை அடித்த மக்கள் பணத்தை தாம் கட்டுப்படுத்தி நிர்வகிப்பதற்கு “டிரஸ்ட்” வைத்திருக்கின்றனர்.

niiraradia-ratantata

மேல்தட்டு தரகு முதலாளியாக டாடா (2ஜி ஊழல் புகழ் நீரா ராடியாவுடன்)

சைரஸ் மிஸ்திரி சேர்மன் ஆன பிறகு, ‘டாடா வாங்கிப் போட்ட பிரிட்டிஷ் ஸ்டீல் நிறுவனமான கோரஸ்-ஐ விற்க முடிவு செய்தார்’, ‘டாடா கெமிக்கல்ஸ்-ன் யூரியா பிரிவை விற்று விட்டார்’, ‘இந்தியன் ஹோட்டல்ஸ் நிறுவனத்தின் சில ஹோட்டல்களை விற்று விட்டார்’, ‘டோகோமோவுடனான உறவை சொதப்பி விட்டார்’ என்று வரிசையாக’டாடா தனது சாதனைகளாக காட்டியவற்றில் ஓட்டை போட்டார், அதனால் டாடா கோபம் அடைந்தார்’ என்கின்றன ஊடக கிசு கிசுக்கள்.

மேலும், ‘டி.சி.எஸ் தொழில்நுட்ப சேவைகளைத்தான் மற்ற குழும நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தார்’, டாடா மோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் கார்ல் சிம் தாய்லாந்து ஹோட்டல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது’, ‘மென்பொருள் திருட்டு குற்றத்தில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்று டி.சி.எஸ்-க்கு $1 பில்லியன் (சுமார் ரூ 6,700 கோடி) அபராதம் விதித்திருப்பது’ என்று பிற காரணங்களையும் அடுக்குகின்றன. டி.சி.எஸ் பணத்தையே விட்டுக் கொடுப்பது என்றால் டாடாவுக்கு வலித்திருக்கத்தான் செய்யும்.

tcs-software-stealing

டி.சி.எஸ் மென்பொருள் திருட்டு வழக்கு

உண்மையில் இது டாடா – மிஸ்திரி பங்காளிகளுக்கு இடையேயான குடுமிப்பிடி சண்டை மட்டும்தானா?

ரத்தன் டாடா 1980-களில் கட்டவிழ்த்து விடப்பட்ட தனியார்மய-தாராளமய-உலகமய அலையின் மீது நீர்ச்சறுக்கு விளையாடியவர். அதற்கு முன்பு ரத்தன் டாடாவுக்கு முந்தைய சேர்மன் ஜே.ஆர்.டி டாடா தலைமையின் கீழ் அரசை அண்டி, லாபியிங் செய்து இந்திய மக்களை சுரண்டி வெளிநாடுகளுக்கு படைப்பது என்ற முறையில் ஒவ்வொரு டாடா நிறுவனத்திலும் தத்தமது சொந்த சாம்ராஜ்யங்களை கட்டியமைத்து வைத்திருந்த பெருச்சாளிகளை துரத்தி விட்டு, புதிய உலகின் விதிகளுக்கேற்ப டாடாவின் லாப வேட்டையை தகவமைத்துக் கொண்டவர். உதாரணமாக, இந்தியப் பொதுத்துறை நிறுவனமாக இருந்த விதேஷ் சன்சார் நிகாமை (வீ.எஸ்.என்.எல்.) ரத்தன் டாடா கைப்பற்றியபொழுது, அந்நிறுவனத்தின் சேமிப்பாக இருந்த 1,000 கோடி ரூபாயை நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த தனது தொலைதொடர்பு நிறுவனத்தைக் காப்பாற்றக் கடத்திக் கொண்டு போனார், அவர்.

வி.எஸ்.என்.எல் விற்பனை

பொதுத்துறை நிறுவனமான வி.எஸ்.என்.எல்-ஐ குறைந்த விலைக்கு வாங்கி ஏமாற்றிய டாடா.

2004-க்குப் பிறகு உலகெங்கும் பாய்ந்து வந்த அமெரிக்க நிதி மூலதனத்தின் மீது மிதந்து, இங்கிலாந்தின் மிகப்பெரிய ஏகபோக இரும்புத் தொழிற்சாலை கோரஸ் நிறுவனத்தை வாங்குதல் ($12 பில்லியன் – இன்றைய மதிப்பில் சுமார் ரூ 80,000 கோடி), ஜாகுவார்-லேண்ட் ரோவர் (ஜே.எல்.ஆர்) கார் நிறுவனத்தை வாங்குதல் என்று உலக அளவில் டாடா குழுமத்தின் ஆதிக்கத்தை விரிவாக்கி சாதனை புரிந்தவர் என்று ஊடகங்களாலும், இந்திய ஆளும் வர்க்கங்களாலும் கொண்டாடப்பட்டார். இந்த ஏகபோக நிறுவனங்களை டாடா கைப்பற்றியதை, இந்தியா வல்லரசாகிவிட்டதன் வெளிப்பாடாக ஊதிப் பெருக்கிய இந்திய அரசு, சர்வதேச நிதி நிறுவனங்களிடம் டாடா கடன் வாங்குவதற்குப் பக்கபலமாக நின்றது.

டாடா-கோரஸ் டீல்

டாடா-கோரஸ் டீல்

2006-ஆம் ஆண்டு கொல்கத்தாவுக்கு அருகாமையில் உள்ள சிங்கூரில் 900 ஏக்கர் வளமான பூமி மேற்கு வங்க அரசாங்கத்தால் டாடா மோட்டார் நிறுவனத்துக்கு கையளிக்கப்பட்டது. லட்சம் ரூபாய்க்கு ஒரு கார் உற்பத்திக்கான ஆலை அமைப்பதுதான் திட்டம். கட்டாயமாக நிலங்களைப் பறித்து, அவற்றை டாடாவுக்குக் கையளிப்பதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். டாடாக்கள் தார்க்குச்சி போட்டதால், மேற்கு வங்க அரசாங்கம் சிங்கூர் விவசாயிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் மீது கடுமையான தாக்குதல் தொடுத்தது.

சிங்கூரில் நிலக்கொள்ளை

சிங்கூரில் நிலக்கொள்ளை

2008 உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து டாடா குழுமத்தின் மேற்படி வெளிநாட்டு முதலீடுகள் தடுமாறத் தொடங்கின. உலகெங்கிலும் தொழில்துறை முடக்கம் ஏற்பட்டு வேண்டல் வீழ்ச்சியடைந்தது. இங்கிலாந்தில் உருக்கு ஆலை நடத்துவது லாபமற்றதாகி வந்தது. அதை சரிகட்ட, ஆலைகளை மூடி விடப் போவதாக மிரட்டி இங்கிலாந்து அரசு, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றிடமிருந்து பணம் வாங்குவது, இந்திய அரசிடமிருந்து, இந்திய மக்களிடமிருந்தும் கப்பம் திரட்டுவது என்று நிதி சூதாட்டம் நடத்தினார் ரத்தன் டாடா.

pallonji-mistry

தன் மகன் சைரஸ் மிஸ்திரிக்கு முடி சூட்டிய பல்லோன்ஜி மிஸ்திரி

இந்நிலையில்தான் சைரஸ் மிஸ்திரி தனது தகப்பனாரின் பங்கு சதவீதத்தின் வலிமையில் 6 லட்சம் பேருக்கு வழிகாட்டும் “ஜனநாயக” உரிமைக்கு முடிசூட்டப்பட்டார். உலக முதலாளித்துவ பொருளாதாரமே தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையில், ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுனராக வங்கிக் கடன்களை கட்டி முடிக்கும்படி கிடுக்கிப் பிடியின் கீழ், பிற இந்திய தரகு முதலாளிகளைப் போலவே ஊதாரியாக கடன் வாங்கி, சேர்த்த பல நிறுவனங்களை விற்று கடன் அடைக்கும் கட்டாயம் டாடா குழுமத்துக்கும் ஏற்பட்டது.

அந்தப் பின்னணியில்தான் கோரஸ் ஸ்டீல் விற்பனை, யூரியா பிரிவு விற்பனை, ஹோட்டல்கள் விற்பனை என்று தொழிலை சுருக்கிக் கொண்டிருந்தது மிஸ்திரி தலைமையிலான டாடா சன்ஸ் சர்வாதிகாரம். அந்த சுருக்கத்தின் ஒரு பகுதிதான் 2014 இறுதியில் குழுமத்தின் பணங்காய்ச்சி மரமான டி.சி.எஸ் 25,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கை எடுத்தது. பணம் பாய்ந்து கொண்டே இருக்க வேண்டும், எத்தனை ஆயிரம் வாழ்க்கைகளை பலி கொடுத்தாலும் கவலை இல்லை என்பதுதான் முதலாளிகளின் தாரக மந்திரம்.

tcs-layoff

2014 இறுதியில் குழுமத்தின் பணங்காய்ச்சி மரமான டி.சி.எஸ் 25,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கை எடுத்தது

காற்றடிக்கும் திசையில் தூற்றி செல்வத்தை குவித்து, அதிகாரத்துக்கு நெருக்கமாக இருப்பது டாடாவின் பிசினஸ் மாடல். அதற்கிடையில் நேர்மை, தூய்மை, நம்பிக்கை என்று பிராண்ட் பில்ட் அப் செய்து கொள்வார்கள். 1850-களில் இந்தியாவிலிருந்து கிழக்கிந்திய கம்பெனி சீனாவுக்கு கஞ்சா (அபின்) ஏற்றுமதி செய்த போது அந்த ஏஜென்சிக்கு போட்டி போட்டவர் ஒரு டாடா. ஆங்கிலேய அரசின் நேரடி ஆட்சி வந்து, ஆங்கிலேய முதலாளிகள் இந்தியாவில் மூலதனம் இட்டு லாபம் சம்பாதிக்கலாம் என்று செயல்திட்டத்தை மாற்றியதும் வர்த்தகத் தரகராக இருந்த டாடா குடும்பத்தினர், மகாராணியார் மில் என்ற பெயரில் நூல் ஆலை ஆரம்பித்து பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்துக்கு விசுவாசம் காட்டி சேவை செய்தனர். அடுத்து, 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பழங்குடி மக்களின் நிலத்தை தந்திரமாகவும், அடாவடியாகவும் பறித்து டாடா ஸ்டீல் ஆரம்பித்து முதல் உலகப் போரின் போது ஏகாதிபத்திய போர் தேவைகளுக்கு ஸ்டீல் உற்பத்தி செய்து கொடுத்து கொழுத்தனர்.

டாடாவின் பிரிட்டிஷ் விசுவாசம் - மகாராணியார் மில்

டாடாவின் பிரிட்டிஷ் விசுவாசம் – மகாராணியார் மில்

அதன் பிறகு தொடர்ந்து காலனிய ஆட்சியாளர்களின் மனம் நிறையும்படி நடந்து கொண்டு, கூடவே காலனிய ‘எதிர்ப்பு’ என்று சொல்லிக் கொண்ட காங்கிரஸ் கட்சியுடனும் இணக்கமாக இருந்தனர் டாடா குழுமத்தினர். 1947-க்குப் பின்னர் இந்திய தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ கட்டமைப்பில், லைசன்ஸ், பெர்மிட், கோட்டா என்று இந்தியப் பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளிலும் கால் பதித்தனர்.

புறநிலை எப்படி மாறினாலும், தமது கொள்ளைப் பங்கு குறைந்து விடாமல் பார்த்துக் கொள்ளும் கரப்பான் பூச்சிக் கூட்டம்தான் இந்தக் குழுமம். இப்போது, கட்டமைப்பு நெருக்கடியில் சிக்கி மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் ஏகாதிபத்திய பொருளாரத்துக்கு இந்தியாவை படையல் வைக்கும் இந்திய தரகு முதலாளிகளின் திருப்பணியில் திறமையாக ஈடுபட வேண்டிய கட்டாயம் டாடாவுக்கு. 10 ஆண்டுகளாக சேவை செய்த மன்மோகன் சிங்கை தூக்கி எறிந்து விட்டு, இன்னும் துடிப்பாக இந்தியாவை விற்க உதவுவதற்காக மோடி கும்பலை பதவிக்குக் கொண்டு வந்த இந்திய முதலாளிகளைப் போல, மிஸ்திரியை நீக்கி விட்டு இன்னும் பொருத்தமான நபரை உட்கார வைக்க ரத்தன் டாடாவை இடைக்கால தலைமையாக அமர்த்தியிருக்கிறது டாடா கும்பல்.

ஆனால், மிஸ்திரி தரப்பும் சீக்கிரம் விட்டுக் கொடுத்து விடப் போவதில்லை. பல்லோன்ஜி மிஸ்திரி தனது மகனை நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடுப்பார் என்று பத்திரிகைகள் அலறுகின்றன. அதை எதிர்கொள்வதற்கு ப.சிதம்பரம், ஹரீஷ் சால்வே, கபில் சிபல், அபிஷேக் மானு சிங்வி முதலான பெரிய வழக்கறிஞர்களை (எல்லோருக்கும் காங்கிரஸ் பின்னணி) டாடா தரப்பு நியமித்திருப்பதாகவும், சைரஸ் மிஸ்திரி மோடியை சந்திக்க நேரம் கேட்பாரா என்ற ஹேஸ்யத்துடனும் செய்திகள் வெளியாகின்றன. சைரஸ் மிஸ்திரியை தடாலடியாக நீக்கியதன் மூலம் டாடாவின் நற்பெயரை களங்கப்படுத்தி விட்டார்கள், அவர் நல்லவர், திறமையானவர், அமைதியானவர் என்று புகழ் பாடுவதற்கான அரசவை புலவர்களும் மிஸ்திரி தரப்பில் ஊடகங்களில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.

tata-family-tree

டாடா குடும்ப வாரிசு அரசியல்

ரத்தன் டாடா டி.சி.எஸ் சேர்மன் சந்திரசேகரனை டாடா சன்ஸ் இயக்குனர்கள் குழுவில் சேர்த்து நியமனம் செய்துள்ளார். அது டி.சி.எஸ் ஊழியர்களை சுரண்டிய அவரது திறமைக்குக் கிடைத்த வெகுமதி.

இப்படி இருதரப்பும் வரிந்து கட்டிக் கொண்டு தத்தமது தரப்பை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

சமாஜ்வாதி கட்சி குடும்பச் சண்டையில் அகிலேஷ் யாதவ், முலாயம் சிங் யாதவ், அமர் சிங் என்று யார் ஜெயித்தாலும் தோற்கப் போவது உத்தர பிரதேச மக்கள்தான் என்பது போல, டாடா குழும குடும்பச் சண்டையில் மிஸ்திரி ஜெயித்தாலும், டாடா ஜெயித்தாலும் தோற்கப் போவது 6 லட்சம் டாடா குழும ஊழியர்களும், இந்திய மக்களும்தான் என்பதில் ஐயமில்லை.

Permanent link to this article: http://new-democrats.com/ta/tata-group-dynastic-politics/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
சி.டி.எஸ்-க்கு பிரச்சனையா? உண்மையாகவா?

தான் லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆதாரங்களை வெற்றிகரமாக மறைத்து உயர்மட்ட மேலாளர்களுக்கோ, முதலீட்டாளர்களுக்கோ எந்த சேதமும் இன்றி சி.டி.எஸ் தப்பித்து விடலாம். சி.டி.எஸ் ஊழியர்களும், பொதுமக்களும் மட்டும்தான்...

சொந்த கிராமப் பிரச்சனைகளுக்காக ஒரு ஐ.டி ஊழியரின் போராட்டம் – 1

மனுக்களுக்கு நடவடிக்கை எடுப்பதாக பதில் மட்டும் போடுவார்கள். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் யாரெல்லாம் மக்களுக்காக ஒதுக்கும் பணத்தை ஆட்டைய போடுகிறார்களோ அவர்களிடமே...

Close