நிறுவனத்தின் லாபத்தை அதிகரிக்க நினைக்கும் போதெல்லாம் அதிக அனுபவம் உள்ள ஊழியர்களையே முதலில் வெளியேற்ற முயற்சி செய்கிறது. அதற்கு உதாரணமாக சில நாட்களுக்கு முன்பு கூட இன்போசிஸ் நிறுவனத்தில் அதிக அனுபவம் உள்ள ஊழியர்களுக்கு குறிப்பிட்ட சில மாதச் சம்பளம் கொடுத்து வெளியேற்றியது. இவ்வாறு செய்வதால் அடுத்த சில நாட்களில் ஊழியர்கள் குடும்பச் சூழ்நிலையை சமாளிக்க முடியாமல் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
மோசஸ் ரஞ்சன் ராஜ் சிறுசேரியில் சிப்காட் பகுதியில் உள்ள டி.சி.எஸ். நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். வாடிக்கையாளருடன் நேரடியாக பேசி வாடிக்கையாளரின் தேவையை பூர்த்தி செய்யும் உயர்ந்த பொறுப்பில் (Delivery Manager) இருந்து வந்தார்.
கடந்த நவம்பர் மாதம் 22ந்தேதி இரவு வேளையில் அமெரிக்காவை சேர்ந்த வாடிக்கையாளருடன் தொலைபேசியில் வேலை சம்பந்தமாக பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென்று ரஞ்சன் ராஜனிடம் இருந்து எந்தவித பதிலும் இல்லாததால் உடனடியாக தொடர்பில் உள்ள வாடிக்கையாளர்கள் ரஞ்சன் ராஜ் உடன் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஊழியர்கள் அவர் இருக்கும் இடத்துக்கு சென்று பார்த்த போது, ரஞ்சன் கீழே விழுந்திருப்பதை பார்த்ததும் நிறுவனத்தில் உள்ள மருத்துவரை அணுக முயற்சி செய்திருக்கின்றனர். அது பலனளிக்காததால் ஆம்புலன்ஸ் மூலமாக அவரை அந்த பகுதியில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர் பரிசோதனை செய்து பார்த்த பிறகு ரஞ்சன் ராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
24/7 இயங்கும் எல்லா நிருவனகளிலும் ஊழியர்களுக்கு தேவைப்படும்போது உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கும் வகையில் தயார்நிலையில் மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு ஒரு சூழ்நிலையே இல்லை என்று அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களே சொல்கின்றனர்.
பல லட்சக்கணக்கான ஐ.டி. ஊழியர்கள் சிறுசேரி சிப்காட் பகுதியில் உள்ள மென்பொருள் நிறுவனங்களில் வேலை பார்க்கின்றனர். அதிலும் குறிப்பாக டி.சி.எஸ். நிறுவனத்தில் மட்டும் சுமார் 30,000 ஊழியர்கள் வேலை பார்க்கின்றனர். ஆசியாவிலேயே மிகப் பெரிய கட்டமைப்பு வசதி கொண்ட நிறுவனம் என்று மார்தட்டிக்கொள்ளும் அதே நேரத்தில் அங்கு ஊழியர்களுக்கு போதுமான கட்டமைப்பு வசதிகள், உதாரணமாக ஊழியர்களுக்கு இலவச அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கும் பிரிவு சரியாக உள்ளதா என்றால் இல்லை என்பதே உண்மை. இது போன்ற பணியிடப் பாதுகாப்பு முறைகளை நிறுவனங்கள் சரியாக நடைமுறைப்படுத்துகின்றனவா என்பதை அரசாங்கம் சோதனை செய்து பார்ப்பதே இல்லை என்பதை நடக்கும் அநீதியான மரணங்களின் மூலமாக நாம் புரிந்து கொள்ளலாம். ஆதலால் போதுமான பணியிடப்பாதுகாப்பு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தாத டி.சி.எஸ். போன்ற நிறுவனங்களும், சட்டத்தின்படி ஊழியர்களின் பணியிடப்பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுவனங்கள் ஏற்படுத்தி உள்ளார்களா என்று ஆய்வு செய்யாமல் இருந்த அரசும்தான் ரஞ்சன் மற்றும் இதற்கு முன்னால் நடந்த மரணங்களுக்கு காரணமான குற்றவாளிகள் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஒருவேளை முதலுதவி உடனடியாக அளித்திருந்தால் அவரை காப்பாற்றிருக்க முடியும். ஆனால் இங்கே ஊழியர்களின் உடல்நிலை பற்றி நிறுவனத்துக்கு எந்த கவலையும் இல்லை, ஏனென்றால் வேலை சிறப்பாக நடந்து முடிந்து லாபம் சேர்ந்தால் போதும் என்பதுதான் நிறுவனத்தின் முதன்மையான நோக்கமாக இருக்கிறது. அதனால்தான் எந்தவித பணிப்பாதுகாப்பும் இல்லாத ஒரு சூழ்நிலையில், இப்போது நம்மோடு வேலை பார்க்கும் சக ஊழியர்களை இழந்து கொண்டிருக்கிறோம்.
சில நாட்களுக்கு முன்பு இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த இளையராஜா என்பவர் அதிக பணிச்சுமை காரணமாக பலமணி நேரம் வீட்டுக்கு செல்லாமல் அலுவலகத்திலே தங்கி வேலைபார்த்திருக்கிறார். அவருடைய மனைவி ரேவதியை நிறுவனம் தொடர்பு கொண்டு இளையராஜாவின் உடல்நிலை சரியில்லாததால் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என்றனர். தன்னுடைய இரண்டு மகள்களோடு ரேவதி மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மறுநாள்தான் அவருடைய கணவர் இறந்துவிட்டதாக தெரிவித்து, பிறகு உடலை ரேவதியிடம் ஒப்படைத்தார்கள். அவர் எப்படி/எதனால் இறந்தார் என்பதை இன்னும் முழுமையாக விசாரிக்காமல் கிடப்பில் போட்டுவிட்டனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் செயல்படுகிறார்கள் என்பதை இதன்மூலம் நாம் புரிந்து கொள்ளலாம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பெங்களூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்த ஐ.டி. ஊழியர் அதிக பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டு மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
இது போல நிறுவனங்கள் கொடுக்கும் அழுத்தத்தின் காரணமாக மன அழுத்தம், மாரடைப்பு என்று பல்வேறு பிரச்சனையால் ஐ.டி. ஊழியர்கள் இறப்பதை சமீப காலமாக செய்திகளில் அடிக்கடி பார்க்கிறோம். இவற்றைப் பற்றியெல்லாம் அரசாங்கம் கேள்வி கேட்டதோ, ஊழியர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் நிறுவனங்களை கண்டித்ததோ கிடையாது. மாறாக என்ன நடக்கிறது என்றால் ஐ.டி. ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் உண்மையான காரணத்தை சொல்லாமல் பொய்க்காரணங்களை சொல்லி (காதல் தோல்வி , குடும்பச்சூழல் இன்னும் சில தனிப்பட்ட பிரச்சனையாக சொல்லி) நிறுவனங்களும் அரசும் சமாளித்து வருகின்றன. அதற்கு ஏற்றாற்போல் ஊடகங்களும் ஊழியர்களின் பிரச்சனையின் உண்மைத்தன்மையை ஆராயாமல் நிறுவனங்கள் சொல்லும் பொய்யை அப்படியே செய்திகளில் போடுவதால் ஊழியர்கள் மீது திணிக்கப்படும் பலவந்தமான பணிச்சுமை மற்றும் ஏமாற்றம்தான் காரணம் என்ற உண்மை காலம் காலமாக தொடர்ந்து மறைக்கப்பட்டே வருகின்றது.
ஊழியர்களுக்கு குறைவான ஊதியத்தை நிர்ணயம் செய்து லாபத்தை உயர்த்தும் நடவடிக்கை என்பது அனுபவம் உள்ள ஐ.டி ஊழியர்கள் அறிந்த ஒன்றே. ஆனால் அந்த லாபத்தில் இருந்து சிறு அளவு கூட ஊழியர்களின் பணிப்பாதுகாப்பு மற்றும் நலனுக்கு செலவு செய்வதில்லை. மாறாக அடுத்தடுத்து பல்வேறு இடங்களில் அவர்களின் நிறுவனத்தை பரவலாக்கி திறப்புவிழா கொண்டாடுகிறார்களே தவிர, ஏற்கனவே இருக்கும் இடங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எந்தவித பணிப்பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுப்பதில்லை. இதை ஐ.டி. ஊழியர்களான நாம் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஊழியர்களுக்கு நிறுவனங்கள் இலவசமாக டீ, காபி கொடுத்து வந்தார்கள். ஆனால் இப்போது அதையும் நிறுத்தி விட்டார்கள். இவ்வாறு ஊழியர்களுக்கு எந்தவித நலனும் கிடைக்காமல் இருப்பதை சகித்துக் கொண்டு வாழ்வதும் அதையே சரியென்று பேசும் பொம்மைகளாக நம்மை மாற்றி வைத்திருக்கிறார்களே அதை எப்போது நாம் உணரப்போகிறோம்?.
அப்ரைசல் ரேட்டிங் கூடுதலாக கிடைக்குமென்ற எண்ணத்தில் ஊழியர்கள் போட்டி போட்டுக் கொண்டு வேலை செய்கின்றனர், அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் நிறுவனங்கள் லாப வெறியை தீர்த்துக் கொள்கிறது. ஆனால் ஊழியர்களோ அதிக நேரம் நிறுவனத்தில் தங்கி வேலை பார்ப்பதால் தன்னுடைய உடல் நலத்தையும், குடும்பத்தையும் கவனிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இது நிறுவனங்கள் திட்டமிட்டு செயல்படுத்தும் நடைமுறையாகும்.
இதுநாள் வரைக்கும் தொழிலாளர் நலச்சட்டங்கள் எல்லாம் ஐ.டி. ஊழியர்களுக்கு பொருந்தாது என்று மாயை இருந்தது. அதை உடைத்து NDLF தான் பலவித சட்டப் போராட்டங்களுக்கு பிறகு, 1947-ல் இயற்றப்பட்ட தொழிலாளர் நலச்சட்டம் ஐ.டி ஊழியர்களுக்கும் பொருந்தும் என்ற வரலாற்று சிறப்பு மிக்க பதிலை சொல்ல வைத்தது. அந்த சட்டத்தின்படி பார்க்கும்போது ஊழியர்கள் வேலைபார்க்கும் சூழ்நிலையை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் அவர்களுக்கு ஏற்படுத்தி தரவேண்டும் என்பது நிறுவனத்தின் கடமையாகும். அவ்வாறு இருக்கும்போது அந்த சட்டத்தை கடைபிடிக்க டி.சி.எஸ். நிறுவனம் தவறியிருக்கிறது. அதனால்தான் ரஞ்சன் ராஜை இப்போது இழந்திருக்கிறோம். இதுபோல இன்னும் பல சக ஊழியர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சங்கமாக ஒன்று திரளாமல் நம் சொந்தங்களை இழக்க இருக்கிறோமா? என்ற கேள்வி எழுகிறது.
எனவே தொழிலாளர் நலச் சட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படும் நிறுவனத்தை தண்டிப்பது மட்டுமல்லாமல் அந்த சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து விதமான ஊழியர்களுக்கான நலத்திட்டங்களையும் அரசு ஆய்வு செய்து உடனடியாக அமல்படுத்திட வேண்டும்.
எந்தவித முன்னறிவுப்பும் இன்றி அடிமைகள் போல வெளியேற்றுவதையும், பென்ச்-ல் உட்காரவைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி பிறகு நிறுவனத்தை விட்டு வெளியேற்றும் முறையையும் எதிர்த்து விப்ரோ, டி.சி.எஸ். , சி.டி.எஸ் மற்றும் இன்போசிஸ் நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், 1947ல் இயற்றப்பட்ட தொழிலாளர் நலச் சட்டத்தின்படி போராடிக் கொண்டிருக்கின்றனர். அதன் காரணமாக அவர்களின் வேலை பாதுகாக்கப்படுகின்றது. இவ்வாறு ஊழியர்களின் பணியை பாதுகாக்கும் தொழிலாளர் நலச் சட்டமானது தொழிலாளர்கள் சங்கமாக திரண்டு போராடித்தான் இப்படியொரு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தார்கள். ஆகவே நண்பர்களே, அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் அராஜகமாக செயல்படும் நிறுவனத்தை எதிர்த்து நமக்கான பணிப்பாதுகாப்பை உருவாக்கிட வரும் சந்ததிகளுக்கு வழிகாட்டியாக இருக்க சங்கமாக அணி திரள்வோம் வாருங்கள்.
– சுகேந்திரன், செயலாளர்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவு