டி.சி.எஸ்-ன் சதுரங்க வேட்டை

“சார், உங்க நம்பரை ஒரு ஆஃபருக்கு செலக்ட் பண்ணியிருக்கோம்” என்று ஃபோன் பல பேருக்கு வந்திருக்கும். அதில் ஆரம்பித்து, ஏதாவது டைம் ஷேர், சுற்றுலா நிறுவனத்தின் பங்குகளை வாங்கவோ, திண்டிவனத்துக்கு அருகில் நிலம் வாங்கவோ பில்ட் அப் கொடுக்கும் சந்திப்புக்கு அழைப்பார்கள். போனால், உத்தரவாதமான ஒரு இலவச பொருள் உண்டு என்றும் சொல்லியிருப்பார்கள்.

tcs-2அது போல ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது செல்விக்கு. எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட்டில் வேலை செய்து வரும் (மாதச் சம்பளம் ரூ 6,000) பன்னீர்செல்வம் தனது மகளை எப்படியாவது படிக்க வைத்து விட வேண்டும் என்று வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி எஞ்சினியரிங் படிக்க வைத்திருக்கிறார். 2014-ல் படிப்பை முடித்த செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வேலை தேடி தனது விபரங்களை இணையத்தில் வேலை தேடும் தளங்களில் போட்டு வைத்திருக்கிறார். அதிலிருந்து எண் எடுத்து சி.எம்.சி (டாடா குழுமம்) என்ற நிறுவனத்திலிருந்து அழைத்திருக்கிறார்கள்.

“நாங்க சி.எம்.சி-ல இருந்து பேசுகிறோம். டி.சி.எஸ் நிறுவனத்தோட கிளை நிறுவனம். உங்க புரொஃபைல் செலக்ட் ஆகியிருக்கு. நீங்க இன்டர்வியூல பாஸ் ஆனா, வேலை உத்தரவாதத்துடன் கூடிய டிரெயினிங் புரோகிராமில் சேர்த்துக் கொள்வோம். முடித்ததும் டி.சி.எஸ்-ல் வேலை கிடைத்து விடும்” என்றிருக்கிறார்கள்.

“ஃபீஸ் எவ்வளவு ” என்று கேட்டதற்கு, “அதை இன்டர்வியூ கிளியர் பண்ணினால் சொல்லுவோம்” என்றிருக்கிறார்கள். குடும்பச் சூழலில் பணம் கட்டி வேலைக்கு முயற்சிப்பது சிரமம் என்று அதை புறக்கணித்து விட்டு வேறு வேலை தேடி அலைந்திருக்கிறார், செல்வி.

“காலேஜ் ஃபீஸ் கட்டவே கந்தலுக்குத்தான் கடன் வாங்குவோம். தினமும் பணம் கட்டணும். வீட்டுச் செலவ குறைச்சுதான் சமாளிச்சோம். தினமும் சாப்பாட்டுக்கு மோர் சோறும், நெல்லிக்கா ஊறுகாயும் கொடுத்தனுப்புவோம். ஜனவரி மாசம் கிலோ 70 ரூபாய்க்கு வாங்கி ஊறுகா போட்டு வெச்சிருவோம். அதுதான் சாப்பாடு. காய், மீனு, கறி எல்லாம் குறைச்சிட்டோம்” என்கிறார் பன்னீர்செல்வம்.

4 மாத வேலை தேடலுக்குப் பிறகு மீண்டும் சி.எம்.சி மகாராஷ்டிராவில் இருந்து அழைப்பு வருகிறது. வீட்டில் கலந்து பேசி இதற்காவது முயற்சிக்கலாம் என்று முடிவு செய்கிறார், செல்வி. கிண்டியில் உள்ள சி.எம்.சி (டி.சி.எஸ்-ன் கிளை நிறுவனம்) என்ற பலகையுடன் கூடிய அலுவலகத்துக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். (இப்போது அந்தக் கட்டிடத்தில் பெயர் டி.சி.எஸ் என்று மாற்றப்பட்டிருக்கிறது என்கிறார் செல்வி). முதல் நாள் ஆப்டிட்யூட் சோதனை. அதில் தேறியவர்களை மட்டும் அடுத்த நாள் தொழில்நுட்ப தேர்வுக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். அடுத்த நாள் ஃபீஸ் கட்ட தயாராக வரும்படி கூறியிருக்கிறார்கள்.

2 மணி நேரம் தொழில்நுட்ப சோதனை முடித்த ஒரு மணி நேரத்துக்குள் அழைத்து தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கூறிய எச்.ஆர் அதிகாரி ஜெயசங்கரி என்பவர் செல்வியையும், பன்னீர் செல்வத்தையும் சந்தித்திருக்கிறார். ஆங்கிலத்திலும், தமிழிலுமாக “இது நல்ல வாய்ப்பு, விரைவில் சி.எம்.சியானது டி.சி.எஸ்-டன் இணையப் போகிறது. இதுதான் கடைசி பேட்ச். வாய்ப்பை தவற விட்டு விடாதீர்கள்” என்று கூறியிருக்கிறார்.

tcs“ஒரு லட்சம் ஃபீஸ்” என்றதும் “அவ்வளவு கட்ட முடியாது” என்று பின் வாங்கியிருக்கிறார். பன்னீர் செல்வம். “கவலைப்படாதீர்கள் 5 தவணையாகக் கட்டுங்கள்” என்று பிரித்துக் கொடுத்திருக்கிறார். “இந்த விபரங்களை வெளியில் யாரிடமும் சொல்லி விடாதீர்கள். முதல் தவணையாக ரூ 5,000 உடனடியாகக் கட்டி விடுங்கள்” என்று சொல்லியிருக்கிறார்கள்.

செல்வியின் அம்மாவின் மருத்துவச் செலவுக்காக புரட்டி வைத்திருந்த பணம் சி.எம்.சி பெயரிலான வரைவு காசோலைகளாக மாறியிருக்கிறது. “டாடா குழும நிறுவனம்”, “டி.சி.எஸ் சப்சிடியரி” என்ற அடைமொழிகளுடன் பயிற்சியில் சேருவதற்கான கடிதத்தை வழங்கியிருக்கிறது சி.எம்.சி.

“பயிற்சி கொடுக்க ஜெமினி அருகில் வாடகைக்கு அலுவலகம் எடுத்திருக்கிறோம்” என்று அங்கு போகச் சொல்லியிருக்கிறார்கள். “20 பேர் சேர்ந்த பிறகு தொழில்நுட்ப வகுப்புகள் ஆரம்பிப்போம்” என்று சொல்லி முதல் ஒரு வாரம் பொதுவான பெர்சனாலிட்டி டெவலப்மென்ட் வகுப்பும், 20 பேர் வகுப்பு சேர்ந்த பிறகு சி, சி++, டாட் நெட் போன்ற தொழில்நுட்ப வகுப்புகளும் நடத்தியிருக்கிறார்கள். தினமும் மோர் சாதமும், நெல்லிக்காய் ஊறுகாயும் கட்டி கொண்டு போய் பயிற்சிக் காலத்தை முடித்திருக்கிறார், செல்வி.

4 மாதப் பயிற்சி என்று சொல்லியிருந்தும், 6 மாதத்துக்கு மேலாக இழுத்தடித்துள்ளனர். அதன் பிறகு, “உங்களை எச்.ஆர் தொடர்பு கொள்வார்கள்” என்று அனுப்பியிருக்கிறார்கள்.

ஒருநாள் டி.சி.எஸ்-ல் இருந்து மனித வளத்துறையினர் (எச்.ஆர்) தொடர்பு கொண்டு அம்பத்தூர் டி.சி.எஸ்-சில் நேர்முகத்துக்கு அழைத்திருக்கிறார்கள். அங்கு யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை. பின்னர் ராமானுஜன் ஐ.டி பார்க்கில் வேலைக்கு தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். ஜனவரி இறுதியில் துரைப்பாக்கத்தில் உள்ள டி.சி.எஸ்-ன் சென்னை-1 அலுவலகத்துக்குப் போய், ஆஃபர் கடிதம் வாங்கிக் கொண்டிருக்கிறார். ஆவணங்கள் சரிபார்த்தல், வங்கிக் கணக்கு தொடங்குதல், அடையாள அட்டை கொடுத்தல் முதலான நடைமுறைகளை முடித்திருக்கிறார்கள். இதன் பின்னர் புரோபேஷன் (தகுதிகாண் பருவம்) என்கிற தகுதியில் வேலையில் சேர்ந்ததிருகிறார்கள்.

அலுவலக வேலை நேரம் என்ன, மதிய உணவு நேர இடைவேளை எப்போது, விடுப்பு எடுக்கும் நடைமுறை என்ன, வார விடுமுறை, ஆண்டு விடுமுறை, விருப்ப விடுமுறை போன்ற நிர்வாக விபரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. எதையும் கேட்பதற்கு பயந்த செல்வி ஜெர்மனியைச் சேர்ந்த லுஃப்தான்சா விமான நிறுவனத்திற்கான ஒரு வேலையில் அமர்த்தப்பட்டிருக்கிறார். அந்நிறுவனத்தின் இணையதளத்துக்கான புதிய பயனர் இடைமுகம் ஐ.பி.எம் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதை சோதித்து சரிபார்க்கும் பணி டி.சி.எஸ்-டம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த புராஜக்டில் டெஸ்டிங்கில் செல்வி சேர்க்கப்பட்டிருக்கிறார்.  பயிற்சிக்கு அப்பாற்பட்ட வேலையைச் செய்யச் சொல்கிறீர்களே என்று கேட்டதற்கு, “இந்த வேலைதான் இருக்கு, இஷ்டம் இருந்தா செய்யுங்க, இல்லைன்னா கிளம்பி போயிடுங்க” என்று சிடுசிடுத்திருக்கிறார்கள்.

சம்பளமாக, பி.எஃப், ஈ.எஸ்.ஐ பிடித்தம் போக மாதம் ரூ 6,700 கொடுத்திருக்கிறார்கள். “பி.எஃப் பணமும் கிடைக்காதாம், போய் வர செலவழிச்ச பஸ் சார்ஜூக்கே பாதி போயிருச்சு” என்கிறார் செல்வியின் அம்மா. காலையில் மோர் சாதமும், நெல்லிக்காய் ஊறுகாயுடன் 2 பேருந்து பிடித்து அலுவலகத்துக்குப் போய் இரவு 9.30 வரை வேலை செய்வது நடைமுறையானது, செல்விக்கு.

tcs-layoff-banner-5இளம் வயதுக்கான துடிப்புடனும் ஆர்வத்துடனும் வேலையில் இறங்கியிருக்கிறார். ஜெர்மனியில் உள்ள டி.சி.எஸ் ஊழியர்களுடன் பேசி சந்தேகங்களை தீ்ரத்துக் கொள்வது, தேவைப்பட்டால் லுஃப்தான்சா அலுவலகத்துடனும் தொடர்பு கொண்டு பேசுவது என்று பல ஆண்டு அனுபவம் கொண்ட ஊழியர் போல திறமையாக பணியாற்றியிருக்கிறார். 3 மாதங்களுக்குப் பிறகு சனி, ஞாயிறுகளிலும் வேலை செய்வது என்பது நடைமுறையாக மாறியிருக்கிறது. எதற்கும் சளைக்காமல் சிறப்பாக பணியாற்றியிருக்கிறார். அதாவது, ஒரு முழு நேர ஊழியர் என்ற முறையில் வாடிக்கையாளருக்கு தேவையான உற்பத்தி நடைமுறையில் செல்வி பணி புரிந்திருக்கிறார். இதற்கிடையே, வேலை உத்தரவாதத்துடன் கூடிய தொழில்நுட்பப் பயிற்சியை முடித்த சான்றிதழ் செல்விக்கு டி.சி.எஸ்-லிருந்து வழங்கப்பட்டிருக்கிறது.

புரொபேஷன் எப்போது முடியும், பணி நிரந்தரம் எப்போது ஆகும் என்று கேட்ட போது முதலில் தட்டிக் கழித்தவர்கள், ஒரு கட்டத்தில் அப்படி எல்லாம் எதுவும் ஆகாது, நீங்க வெளியில நல்ல வேலை ஏதாவது தேடிக்குங்க என்று கூறி விட்டிருக்கிறார்கள். ஜூலை மாத இறுதியில், “உங்கள் பணிக்காலம் முடியப் போவதால் எச்.ஆ.ஐ சந்தித்து வேலையை விட்டு போவதற்கான நடைமுறைகளை மேற்கொள்ளவும்” என்று நிர்வாகத்தின் சார்பில் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார் எச்.ஆர் அதிகாரி தீபா. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை உணர்ந்திருக்கிறார் செல்வி. பயிற்சி முடிந்தவுடன் வேலை என்று சொன்ன நிர்வாகம் நயவஞ்சகமான முறையில் காண்டிராக்ட் தொழிலாளி என்கிற பெயரில் வேலை வாங்கியிருப்பது தெரிய வருகிறது.

ndlf-action-in-chennai-tcs-1

உப்பு முதல் மென்பொருள் வரை செய்யும் “பன்னாட்டு” நிறுவனம் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளும் டாடா குழுமம் உண்மையில் “ரைஸ் புல்லிங்”, “மண்ணுள்ளிப் பாம்பு” என்று மக்கள் பணத்தை மோசடி செய்யும் உள்ளூர் புரோக்கர்களை விட கேவலமான நிறுவனம் என்று இதன் மூலம் நிரூபித்திருக்கிறது. இதுதான் கார்ப்பரேட்டுகளது வெற்றியின் இரகசியம் என்பதை எண்ணற்றவர்களுக்கு புரிய வைத்திருக்கிறார், செல்வி.

– ரவி

(புதிய தொழிலாளி செப்டம்பர் 15 – அக்டோபர் 14, 2016 இதழிலிருந்து)

 

 

Permanent link to this article: http://new-democrats.com/ta/tcs-job-enabled-training-scam-exposure-ta/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
ஐ.டி வேலை நீக்க குறும்படம் (English)- வாழ்த்துக்கள்

இன்றைய குழப்பமான சிக்கலான கட்டமைப்புகள் அமைந்த ஐடி துறையில் எப்படி எல்லாம் ஒரு நபர் பணம் பதவிக்காக ஆசை காட்டி நிறுவனங்கள் அடியாட்கள் போல பயன்படுத்திக் கொள்கிறது...

ஸ்டெர்லைட் “ஒருத்தனாவது சாவணும்” – குறி வைத்து சுடும் கொலைகார போலீஸ்

எதிர்வினை என்ற பெயரில் PAID SOCIAL மீடியா இன்டர்நெட் wing , BJP ஜால்ராக்கள், கார்ப்பரேட் கைக்கூலிகள், வடஇந்திய ஊடகங்கள், தினமலர் ஜால்ரா நாளிதழ், பார்ப்பன முகநூல் நண்பர்கள், போலீஸ் துப்பாக்கி சூடு...

Close