டி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல் சேவை திருப்பணி!

1914-ம் ஆண்டில் ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு 5 டாலர் கூலி வழங்க ஹென்றி ஃபோர்டு முடிவு செய்த போது, அவர் தொழிலாளர்களை ஈர்த்து தக்க வைத்துக் கொள்ள முயற்சித்தார்.

ஃபோர்ட் ஸ்பான்சர் செய்த 1953-ம் ஆண்டு சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட் கட்டுரை

“இந்த நடவடிக்கை மிகவும் இலாபகரமானதாக நிரூபிக்கப்பட்டது; தொழிலாளர்களுக்கு கூடுதல் கூலி கொடுப்பதன் மூலம் டெட்ராய்ட்டில் சிறந்த தொழிலாளர்கள் ஃபோர்டுக்குச் சென்றனர், உற்பத்தித்திறனை உயர்த்தினர், அது பயிற்சி செலவுகளைக் குறைத்தது. போட்டியாளர்கள் ஊதியங்களை உயர்த்த நிர்பந்திக்கப்பட்டனர். இல்லாவிடில் அவர்கள் சிறந்த தொழிலாளர்களை இழப்பார்கள்.. ஃபோர்டின் கூடுதல் கூலி கொள்கை, ஃபோர்டு தொழிலாளர்களை தாங்கள் உற்பத்தி செய்யும் கார்களை வாங்கும் அளவுக்கு வளப்படுத்தவும் உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்தும்படியாகவும் அமைந்தது”.

இது போல 2001-ம் ஆண்டில் இந்தியாவில் உள்ள ஐ.டி நிறுவனங்கள் புதிதாக சேரும் ஒரு ஊழியருக்கு சராசரியாக ஆண்டுக்கு ரூ 3.3 லட்சம் சம்பளம் கொடுக்க ஆரம்பித்தனர். ஹென்றி ஃபோர்டைப் போலவே, மற்ற துறைகளிலிருந்தும் திறமையான பொறியாளர்களை மென்பொருள் துறைக்கு ஈர்க்கும் நோக்கம் உடையதாக இது இருந்தது. பணவீக்கத்தையும் வளர்ச்சி வீதத்தையும் அந்நியச் செலாவணி மாற்றங்களையும் கணக்கிட்டு பார்த்தால் இது இன்றைய மதிப்பில் ஆண்டுக்கு ரூ 11.5 லட்சமாகும். ஒருவர் 2001-ம் ஆண்டில் ரூ 3.3 லட்சத்துக்கு வாங்கும் பொருளை, 2018-ம் ஆண்டில் 11.5 லட்ச ரூபாய் கொடுத்தால்தான் வாங்க முடியும். 2018-ல் ஐ.டி துறையில் ரூ 11.5 லட்சம் ஆண்டு வருமானம் என்பது 2001-ல் சராசரி மென்பொருள் பொறியியலாளரின் ஊதியத்தை விடக் குறைவானதாகும். 2018-ல் ஐ.டி துறையில் ரூ 11.5 லட்சம் ஆண்டு சம்பளத்திற்கு குறைவாக வாங்குபவர்கள், 2001-ல் உள்ள சராசரி மென்பொருள் பொறியியலாளரின் ஊதியத்தை விட குறைவாக வாங்குபவர்களே.

இடைப்பட்ட காலத்தில், இந்திய ஐ.டி ஊழியர் சந்தை அதிக எண்ணிக்கையில் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குவதாக மாறியது. ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலான பொறியாளர்கள் பட்டம் பெற்று வெளிவருவதால், ஐ.டி நிறுவனங்கள் குறைவான சம்பளத்துக்கு ஊழியர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள முடிந்தது. தேவையை திட்டமிடாமல் நூற்றுக்கணக்கான தனியார் பொறியியல் கல்லூரிகளை அனுமதித்த அரசாங்கத்தின் கொள்கையாலேயே இது சாத்தியமானது. இதனால் இலாப வேட்டையை அடிப்படையாகக் கொண்ட தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிகரித்தன. இலட்சக் கணக்கான மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு பெரும் தொகையை செலவிடுகிறார்கள். குடும்ப சொத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோ கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால் அவர்கள் படித்து முடித்த பின் வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். அல்லது மிகக் குறைவான ஊதியம் பெறும் வேலையையே பெறுகின்றனர். கடினமாக உழைக்கும் ஒரு டீ மாஸ்டர் மாதம் ரூ. 60,000 வரை சம்பாதிக்கிறார். ஆனால் ஒரு சராசரி பொறியியல் பட்டதாரி மாதத்திற்கு ரூ 30,000 சம்பளத்திலான வேலை பெறுவதே அரிதாக உள்ளது. இலாப வேட்டை அடிப்படையிலான இந்த சந்தை வேண்டல்/வழங்கல் நிலைமை தொடர்வதால் எதிர்கால தலைமுறையினரும் இதே போன்ற பிரச்சனையை எதிர்கொள்வார்கள். கார்ப்பரேட்டுகளை மேலும் லாபம் குவிக்கவும், உழைக்கும் வர்க்கத்தை மேலும் மேலும் வறுமையாக்கும் இந்த போக்கு எதிர்காலத்திலும் தொடரும். இப்போது கார்ப்பரேட்டுகள் நீண்ட கால அனுபவம் ஈட்டிய ஊழியரின் இடத்தில் குறைந்த சம்பளத்துக்கு புதிய பட்டதாரியை வேலைக்கு அமர்த்துகின்றனர். இதனால் நாட்டின் உற்பத்தித் திறனும், தொழில்நுட்ப வலிமையும் பலவீனமடைகிறது.

இந்த உழைப்பாளர் சந்தையில் உழைப்பாளர் சேமப் பட்டாளம் நிரம்பியுள்ளது.

இந்தியாவில் பிற துறைகளில் ஊதிய விகிதங்கள் ஐ.டி துறையை விட குறைந்த அளவிலேயே உள்ளன. ஐ.டி துறையிலேயே ஆண்டுக்காண்டு ஊதியங்கள் வீழ்ச்சி அடைவதால், பிற துறையிலும் தொழிலாளர்களின் பொருளாதார நிலைமை ஆண்டுக்காண்டு நலிந்து வருகிறது.

இந்திய தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றான ஒருவரான டி.சி.எஸ், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் மொத்த விற்பனையில் 12.5 சதவிகிதத்தை கட்டுப்படுத்துகிறது. டி.சி.எஸ் இத்துறையில் குறைந்த சம்பளம் கொடுப்பது பொதுவாக அறியப்பட்ட உண்மையாகும். மிகப்பெரிய நிறுவனம் குறைந்த சம்பளம் வழங்குவது பிற நிறுவனங்களும் அதே முன்மாதிரியை பின்பற்றுவதற்கான அடிப்படையாக உள்ளது. பிற நிறுவன பங்குதாரர்கள் ஊழியர்களின் ஊதியத்தை குறைக்கும்படி மேலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர். “டி.சி.எஸ் குறைந்த சம்பளத்துக்கு ஊழியர்களை எடுத்துக் கொள்ள முடியும் போது, நாமும் ஏன் அதே அளவில் ஊழியர்களை அமர்த்தக் கூடாது” என்று வாதிடுகின்றனர்.

இதன் காரணமாக, வெளிநாட்டு நிறுவனங்களான ADP, JP Morgan Chase, Bank of America, Pega Systems, Amazon, Google போன்றவை சராசரி இந்திய ஐ.டி துறை ஊதியத்தை விட சிறிதளவு கூடுதல் ஊதியம் கொடுத்து தமது வேலைகளை செய்து முடித்துக் கொள்கின்றன. இந்திய ஐ.டி துறையில் சுமார் 75% வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கும் அயலகப் பணி நிறுவனங்களும், சுமார் 25% தமது சொந்த நிறுவனத்துக்கு சேவைப் பணி செய்து வாங்கும் நிறுவனங்களின் கிளைகளும் உள்ளன. இந்த அன்னிய நிறுவனங்கள் இந்திய ஊழியர்களுக்கு இவ்வாறு குறைந்த ஊதியம் கொடுப்பதன் மூலம் ஈட்டும் லாபத்தை தமது நாட்டுக்கு எடுத்துச் சென்று விடுகின்றன. அயலக பணி செய்து தரும் இந்திய நிறுவனங்களும் குறைந்த சம்பளம் மூலம் செய்யும் செலவுக் குறைப்பில் பெரும்பகுதியை ஐரோப்பிய, அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கு குறைந்த பில்லிங் கட்டணம் மூலம் அவர்களுக்கு கடத்த வைக்கப்படுகின்றன.

இவ்வாறாக, இந்தியாவில் ஒரு ஊழியர் குறைந்த சம்பளத்தில் வேலை வாங்கப்பட்டு அதன் பலன் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு லாபமாக கடத்தப்படுகிறது. இதன் விளைவாக கணிசமான மதிப்பு வாய்ந்த அந்நியச் செலாவணியை நமது நாடு இழப்பதோடு மட்டும் இல்லாமல் நாம் தொடர்ந்து ஒப்பீட்டு வறிய நிலையில் வைக்கப்படுகிறோம்.

இது யார் குற்றம்? நிச்சயமாக டி.சி.எஸ் தான் – இந்திய ஐ.டி துறையின் பெரியண்ணன். டி.சி.எஸ் ஊழியர்களின் சராசரி சம்பளத்தை அதிகரித்து கொடுக்காதவரை பிற நிறுவனங்கள் சம்பளத்தை அதிகரிக்கப் போவதில்லை. டி.சி.எஸ் தன்னிடம் உபரியாய் உள்ள ரூ 50,000 கோடி தொகையை, புதிய நிறுவனங்களை உருவாக்கவும், ஜாகுவார் லேண்ட் ரோவர், புஷான் ஸ்டீல் போன்ற நிறுவனங்களை வாங்குவதற்கும் திருப்பி விடுகிறது. ஊழியர்களுக்கு இதன் பலன்களை கொடுக்காமலே ஏய்த்து வருகிறது. இது நம் நாட்டை மேலும் மேலும் பொருளாதார ரீதியில் பலவீனமாக்குகிறது. மென்பொருள் சேவை சந்தையில் 12.5%-ஐ கட்டுப்படுத்தும் டி.சி.எஸ், இந்த நிலைமையை மாற்றி நாட்டை வளப்படுத்தும்படி விரும்பினால் ஊழியர்களின் ஊதிய விகிதங்களை உயர்த்துவதை செய்ய முடியும்.

ஒரு அதீத கற்பனையாக டி.சி.எஸ் இந்திய ஊழியர்களுக்கு மணிக்கு $30 என்ற வீதத்தில் சம்பளம் கொடுக்கிறது என்று வைத்து கொள்வோம். இதன் பொருள் டி.சி.எஸ் எந்தவொரு இலாபமும் இல்லாமல் அல்லது கணிசமாக குறைந்த இலாபம் மட்டுமே ஈட்டுவதாக அமையும். அதாவது வாடிக்கையாளர்களுக்கு பில்லிங் செய்து பெறும் தொகையில் பெரும்பகுதியை ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்குவதாக அமையும். இதன் விளைவாக பிற இந்திய நிறுவனங்களும் இந்த அளவு சம்பளம் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தப்படும். பல சிறு, நடுத்தர நிறுவனங்கள் தாக்குப் பிடிக்க முடியாமல் டி.சி.எஸ் போன்ற பெரிய நிறுவனங்களுடன் இணைய வேண்டி வரும். இந்தியாவில் மலிவான உழைப்பை பயன்படுத்தி லாபம் ஈட்டும் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களது கிளைகளை உள்ளூர் நிறுவனங்களுக்கு விற்று விட்டு வெளியேறி விட நேரிடும். டி.சி.எஸ் போன்ற நிறுவனங்கள் தற்போதைய அளவை விட 4 மடங்கு அதிகமான லாபத்தை ஈட்ட முடியும். ஒரு மணி நேர உழைப்புக்கு குறைவான இலாபம் ஈட்டினாலும், மொத்த வருவாயில் அதிகமான லாபத்தை விளைவிக்கும். நிறுவனத்தின் மதிப்பீடு குறுகிய காலத்திற்கு பாதிக்கப்படலாம் ஆனால் நீண்ட கால நோக்கில் மீண்டும் அது மீட்டெடுக்கப்பட்டு விடும்.

ஒரு வேளை டி.சி.எஸ் அதன் நுழைவு நிலை ஊழியர்களுக்கு ஆண்டுக்கு ரூ 12 லட்சம் சம்பளம் என்ற அளவிலாவது நிர்ணயித்தால் என்ன நடக்கும்? அதன் அடிப்படையில் அடுத்தடுத்த மட்டங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கூடுதல் ஊதியம் தர வேண்டியிருக்கும். ஒரு ஆண்டுக்கு ஒரு ஊழியருக்கு சுமார் ரூ 8 லட்சம் ஊதிய உயர்வு என்பது மணிக்கு $5.55 அதிகரிப்புக்கு சமமாகும். மேலே சொன்னது போல மணிக்கு $30 சம்பளம் இல்லை என்றாலும் இந்த குறைந்த அளவு உயர்வு கூட கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், தடையற்ற சந்தைப் போட்டி, பெருமளவு சந்தையில் நிற்கும் பொறியிலாளர் சேமப்படை ஆகியவற்றை பயன்படுத்தி முதலாளிகள் ஊழியர்களுடன் பேரம் பேசி ஊதியங்களை குறைத்து விடுகின்றனர். எனவே, இதில் இந்திய அரசு இதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.

அனைத்து வளர்ந்த நாடுகள் போன்று, நம் அரசும் ஒவ்வொரு திறனுக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை நிர்ணயிக்கவேண்டும். இது சரியான முறையில் அமல்படுத்தப்பட்டால், தொழிலாளர்கள் ஒரு சரக்காக நடத்தப்படமாட்டார்கள். தகுதி வாய்ந்த ஊழியர்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளதானாலேயே குறைந்த சம்பளத்துக்கு வேலை வாங்குவதை அனுமதிக்க முடியாது என்று அரசு கார்ப்பரேட்டுகளுக்கு உணர்த்த வேண்டும்.

அரசு குறைந்தபட்ச ஊதிய வீதத்தை நிர்ணயித்தால் எல்லா நிறுவனங்களும் கூடுதல் சம்பளம் கொடுக்க ஆரம்பித்து, அதற்கேற்றபடி வெளிநாட்டு பில்லிங் கட்டணங்கள் உயர்த்தப்படும். நமது நாட்டுக்கு கூடுதல் அன்னியச் செலாவணி கிடைக்கும். நமது நாட்டு ஊழியர்களின் உழைப்பின் பலன் நம் நாட்டிலேயே தக்க வைக்கப்படும். இதனால் உள்நாட்டில் பொருட்களின் வேண்டல் அதிகரிக்கும். வீடு, வாகனங்கள், வீட்டு பயன்பாட்டு பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும். அது மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதனால் நான் அனைவரும் ஒன்றாக முன்னேறுவோம்.

ஆனால், ஒட்டு மொத்த அரசு கட்டமைப்பும் டாடா, போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்வதாகவே இயங்குகிறது. எனவே, நாம் எந்த மாற்றமும் தானாக நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. நமது நாடு பல பிரச்சனைகளை தீர்க்க வேண்டியிருக்கிறது. நம் நாட்டின் தலைவர்கள் மேற்கத்திய நாட்டு தலைவர்களை விட சுயநலம் மிகுந்தவர்களாகவும் நாட்டின் நலனை புறக்கணிப்பவர்களாகவும்தான் உள்ளனர். ஆனால் நிறுவனங்களின் மேல்மட்ட, இடைமட்ட மேலாளர்கள் நாட்டின் நலனையும், மனிதநல பொறுப்புகளையும் புறக்கணித்து, முதலீட்டாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் கொள்கைகளை அமல்படுத்துவது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இந்த நச்சுச் சுழற்சியை உடைப்பது தொழிலாளி வர்க்கம் தொழிற்சங்கங்களில் ஒன்றிணைவதன் மூலமும், அரசுகளும் கார்ப்பரேட்டுகளும் ஊழியர்களின் நலனையும், நாட்டின் நலனையும் முன்நிறுத்தி செயல்படும்படி கட்டாயப்படுத்துவதன் மூலமுமே சாத்தியமாகும்.

– ஆங்கிலத்தில் பிரசாந்த்
மொழிபெயர்ப்பு – கோகுல்

பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு தலைவர் சியாம் சுந்தர் எழுதிய இந்தப் புத்தகத்தை வாங்கி படியுங்கள்.

“ஐ.டி ஊழியர் வாழ்க்கை ஜாலியா பிரச்சனைகளா?” புத்தகம் கிடைக்குமிடங்கள்

Permanent link to this article: http://new-democrats.com/ta/tcs-pushing-india-back-in-favour-of-foreign-companies-ta/

1 ping

  1. […] சமமானதாகும். மேலும் விவரங்களுக்கு டி.சி.எஸ் : இந்தியாவை ஏழையாக்கும் அயல்… என்ற கட்டுரையை படிக்கவும்.  டி.சி.எஸ் […]

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
தரமான மருத்துவக் கல்வியை, மருத்துவத்தை கொல்வதற்கே “நீட்” : தெருமுனைக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் - ஐ.டி ஊழியர்கள் பிரிவின் சார்பில் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தெருமுனைக் கூட்டம் நாள் : 15-09-2017...

பா.ஜ.க.-வை எரிக்கும் தலித் கோபம்

"இந்தப் போராட்டத்துக்கு வன்முறைக்கும் எஸ்.சி,எஸ்.டி சட்டத்தை உச்சநீதிமன்றம் திருத்தியது மட்டும் காரணம் இல்லை. இது வரை இல்லாத அளவில் தலித் மக்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியும் கடும்...

Close