தொலை தொடர்புத் துறை முதலாளிகளின் கண்ணீர் துடைக்கும் மோடி அரசு

அரசு சலுகைகள், வங்கிப் பணம், தொழிலாளர் உழைப்பு – ஆட்டம் போடும் கார்ப்பரேட்டுகள்

நாம் பயன்படுத்தும் தொலைபேசி, கைபேசி, இணையதளம் உள்ளிட்ட தொலைதொடர்பு வசதிகள் வழங்கும் நிறுவனங்களுக்கு புதிய சலுகைகளை மத்திய அரசு அடுத்தமாதம் அறிவிக்கவுள்ளது. தொலைதொடர்பு துறை நிறுவனங்கள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிப்பதால் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

தற்போது கொடுக்கும் விலைக்கு கணக்கு பார்த்ததிலேயே நட்டமில்லை, லாபம் தான் குறைந்துள்ளது என்றால், இதற்கு முன்னர் ஒரு GB 250 ரூபாய்க்கு விற்றார்களே அப்போது லாபம் எவ்வளவு அடைந்திருப்பார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது.

“ஜியோ இலவசமாகவும், பின்னர் குறைந்த விலையிலும் இணையதள சேவை வழங்கியது, அதனால் நிறுவனங்களுக்கிடையில் போட்டி ஏற்பட்டு மற்ற நிறுவனங்களும் விலையை குறைத்து வழங்கியது, இதனால் அந்தத் துறையில் நட்டம் ஏற்பட்டிருக்கும். அதனால் அரசு சலுகைகள் அறிவித்துள்ளது” என்று சில அறிஞர்கள் இதற்கு விளக்கம் சொல்லலாம்.

ஆனால் உண்மை அதுவல்ல. குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்ததால் லாபம் குறந்துவிட்டது. அதனால் தான் இந்த சலுகை அறிவிக்கப்படவிருக்கிறது. கவனிக்கவும், நட்டமடையவில்லை, லாபம் குறைந்துள்ளது.
தற்போது கொடுக்கும் விலைக்கு கணக்கு பார்த்ததிலேயே நட்டமில்லை, லாபம் தான் குறைந்துள்ளது என்றால், இதற்கு முன்னர் ஒரு GB 250 ரூபாய்க்கு விற்றார்களே அப்போது லாபம் எவ்வளவு அடைந்திருப்பார்கள் என்றெல்லாம் கேட்கக்கூடாது.

அறிவிக்கப்படவிருக்கும் சலுகைகள் என்ன என்ன?

  1. அலைக்கற்றை ஏலம் எடுத்த நிறுவனங்கள் அதற்கான தொகையை 10 ஆண்டுகளுக்குள் செலுத்த வேண்டும், அது 16 ஆண்டுகளாக நீட்டிக்கப்படுகிறது.
  2. கடனை செலுத்தாத நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராத வட்டி மிகக் குறைந்த அளவா 2% மட்டும் விதிப்பது.
  3. நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் அலைக்கற்றையின் அளவை 25% முதல் 35% வரை அதிகரித்துக்கொள்ள அனுமதிப்பது. (கூடுதல் கட்டணம் இல்லாமல்?)

இதெல்லாம் ஒரு சலுகையா என்று தோன்றுகிறதா?

ஏலம் எடுத்த நிறுவனங்கள் அலைக்கற்றைக்கான கட்டணத் தொகையை உடனே செலுத்த வேண்டியதில்லை, அதனை மக்களுக்கு சேவையாக வழங்கிவிட்டு அதற்கான தொகையை மக்களிடம் வசூலித்து பின்னர்தான் அரசுக்கு கட்ட வேண்டும். அதைத்தான் தற்போது 10 ஆண்டுகளுக்குள் கட்டவேண்டும் என்றிருப்பதை, 16 ஆண்டுகளுக்குள் கட்டினால் போதும் என்கிறார்கள்.

பிற கட்டுமான, நடைமுறை செலவுகளுக்காக தொலைதொடர்புத்துறை நிறுவனங்கள் வாங்கியுள்ள நிலுவையில் உள்ள கடன் மட்டும் ரூ 4.6 லட்சம் கோடி. இதில் எந்தெந்த நிறுவனங்கள் பணம் கட்டினார்கள், கட்டவில்லை என்று நமக்குத் தெரியாது.இதற்கான வட்டி பணத்திற்கும் அறிவிக்கவிருக்கும் சலுகையில் சிறப்பு திட்டம் உள்ளது.

வங்கிக்கடன் மூலமாகவும், இதுபோன்ற 10 ஆண்டுகள் 16 ஆண்டுகள் கழித்து கட்டினால் போதும் என்ற திட்டங்கள் மூலமாகவும் தான் தனியார் நிறுவனங்கள் உயிர் வாழ்கின்றன.

மோடி உருவாக்கியிருக்கும் பக்கோடா வேலை வாய்ப்புடன் இதை ஒப்பிட்டு பார்க்கலாம். ஒரு பக்கோடா கடைக்கு அடுப்பு, எண்ணெய் சட்டி, கடலை மாவு, பட்டாணி மாவு, அரிசி மாவு, எண்ணெய், வெங்காயம் போன்றவை தான் மூலதனம். அதனை அரசிடமிருந்து வாங்கிக் கொள்ளலாம். அதற்கான பணத்தை பக்கோடா போட்டு விற்று, சுடச்சுட அந்த பணத்தை வாங்கி பிறகு சாவகாசமாக 10 ஆண்டுகளுக்குள் அரசுக்கு செலுத்தினால் போதும். இடையில் வியாபாரம் அதிகமாகி மாவு கூடுதலாக தேவைப்பட்டால் என்ன செய்வார், யாரிடம் போய் கேட்பார். அதற்கு அவருக்கு ஒதுக்கப்பட்ட மாவில் கூடுதலாக கேட்காமலேயே அரசு வழங்கும்.

தனியார் முதலாளிகள் அரசு மானியத்தில், வங்கிப் பணத்தில் தொழில் செய்து திறமையை காட்டுகிறார்கள்.

ஆனால் பாருங்கள் வெறும் அடுப்பு, எண்ணெய் சட்டி, மாவை மட்டும் வைத்து அந்த தொழிலதிபர் என்ன செய்வார்? அதற்கு கடை, இன்னும் பிற செலவுகள் இருக்கிறதே. அதற்கும் சில லட்சங்கள் கடனாக அரசின் உதவியுடன் வங்கியில் பெற்றுக்கொள்ளலாம். அதனை கட்டாமல் தள்ளிப் போட்டு கொள்ளலாம், வட்டியைக் கூட கட்டமுடியாவிட்டாலும் பரவாயில்லை, அதற்கும் மருந்து உள்ளது. வட்டியை இருப்பதிலேயே மிகக் குறைந்த அளவிற்கு அறிவித்துவிடலாம்.

இப்படித்தான் தனியார் முதலாளிகள் அரசு மானியத்தில், வங்கிப் பணத்தில் தொழில் செய்து திறமையை காட்டுகிறார்கள்.

ஆகா தனியார் முதலாளிகளின் மூளையை விட்டுவிட்டீர்களே, அவர்களுடைய சிந்தனையும், நிர்வாக திறனும் முக்கியமானவை அல்லவா? என்று சிலர் கேட்கலாம். ஆமாம், தனியார் முதலாளிகளின் சிந்தனை முக்கியமானதுதான், அவர்கள் இதற்காக என்ன சிந்திக்கிறார்கள்?

ஆண்டுதோறும் புது புது படிப்புகள் சந்தையில் கல்லா கட்டுகிறதே அதுதான் முதலாளிகளின் சிந்தனை. ஆமாம் முதலாளிகள் தமது துறைக்கு என்னமாதிரியான வேலைக்கு ஆட்கள் தேவை, எத்தனை ஆட்கள் தேவை என்று திட்டமிட்டு அதற்கான அறிவிப்புகளை மாயத் தோற்றத்துடன் பத்திரிகைகளில் வெளியிடுகிறார்கள், அதனை நமது சொந்த செலவில், சொத்தை விற்று அல்லது கடன் வாங்கி படித்துவிட்டு அந்த வேலைக்கு சென்று அமர்ந்து கொள்கிறோம்.

அந்த வேலையில் இருப்பவர் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்று திட்டமிட ஒரு குழு இருக்கும். அந்த குழுவிற்கும் ஒரு படிப்பு இருக்கும், அதனை கற்றுத்தருவதும் ஒரு படிப்புதான். அதனையும் நாம் தான் செய்கிறொம், அதற்கான மூலதனமும் மக்களது, நமது வங்கி சேமிப்பு பணம்தான்.

இப்படி தனியார் நிறுவனங்களில் உடல்  உழைப்பும் மூளை உழைப்பும் சொந்த செலவில் படித்து விட்டு சம்பளத்துக்கு உழைக்கும் ஊழியர்கள் மூலமாகத்தான் நடைபெறுகிறது.

முதலாளிகளின் கடின உழைப்பு இல்லவே இல்லை என்று சொல்லமுடியாது, பல்வேறு நாடுகளுக்கு விமானத்தில் கடினமாக பயணம் செய்வது, சூதாடுவது, கூத்தடிப்பது, வாரி சுருட்டிய மக்கள் பணத்தில் ஆடம்பர மாளிகை கட்டி கக்கூஸ் வரைக்கும் ஏசி வைத்த வீட்டில் குளிரில் நடுங்கிக்கொண்டே கும்மாளம் அடிப்பது என்று எத்தனை கடினமான வேலை.

இதற்கிடையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி போட்டி நிறுவனங்களை ஒழித்துகட்ட ஆள் வைத்து யோசிப்பது, கல்லாபெட்டி ஏன் இன்னும் நிரம்பவில்லை என்று ஊழியர்களை கடிந்துகொள்வது என்று டைம்பாஸ் வேலைகளும் இருக்கும்.

இத்தனை சலுகைகளை பெற்றுக் கொண்டு இயங்கும் தனியார் கார்ப்பரேட்டுகள்தான் சிறப்பான சேவை வழங்குவதாக நாம் நம்ப வைக்கப்படுகிறோம்.

சமூகத்துக்கு தேவையில்லாத ஒரு வர்க்கமான இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் ஆடம்பர, சூதாட்ட வாழ்க்கைக்கு பல நூறு கோடி ஏன் அழுது கொண்டிருக்கிறோம்

அந்த நம்பிக்கையை வலுப்படுத்த இன்னொரு வேலையையும் அரசே செய்கிறது. பொதுத்துறை நிறுவனமான BSNL க்கு போதுமான நிதி ஒதுக்காமல் இருப்பது, புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்தாமல் இழுத்தடிப்பது, அலைக்கற்றையில் தனியாருக்கு சிறப்பு சலுகைகள் கொடுப்பது, உயர்மட்ட அதிகாரிகளை ஊழல்படுத்துவது போன்றவற்றை உதாரணமாக சொல்லலாம். கற்பனையாக சொல்லவில்லை, சமீபத்திய BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகளை படித்தாலே இதனை புரிந்துகொள்ளலாம்.

அதே நேரம், இயற்கை சீற்றங்களின் போதும், வேறு சில சந்தர்ப்பங்களின் போதும் BSNL-ன் கடை நிலை ஊழியர்களின் உழைப்பும், சேவையும் யார் சிறந்த சேவையை வழங்குகிறார்கள், யார் லாப நட்ட கணக்கு பார்க்காமல் மக்களுக்காக சேவை செய்கிறார்கள் என்பதை நமக்கு தெளிவாக காட்டிவிடுகின்றது.

மற்ற நேரங்களில் தனியார் தொலைத்தொடர்புத்துறையின் பொய் விளம்பரங்களை நம்பியும், முதலாளிகளின் பத்திரிகைகளில் வரும் செய்திகளை நம்பியும், முதலாளித்துவ அடிவருடிகளது பொய் பிரச்சாரங்களை நம்பியும் நாமும்கூட தனியார்தான் சிறந்தது என்று நம்பத் துவங்கி விடுகிறோம். அதனையும் அவ்வப்போது தனியார் நிறுவனங்களே வடிகட்டிய பொய் என்று நமக்கு புரிய வைத்துவிடுகின்றன.

மக்களுக்கு இத்தனை ஆண்டுகள் சேவை வழங்குவதாக சிம் கார்டில் கூறிய நிறுவனங்கள் பல தாங்கள் அளித்த வாக்குறுதியை காப்பாற்றவில்லை. உதாரணமாக BPL, IDEA, DOCCOMO, UNINOR, RELIANCE, தற்போது AIRCEL வரை திவாலாகிப் போய் வாடிக்கையாளர்களை நடுக்கடலில் விட்ட அத்தனையும் தனியார் நிறுவனங்கள்தான்.

இயற்கையாக இருக்கும் நாட்டின் பொதுச் சொத்தான அலைக்கற்றை, அதனை பல்வேறு வகையில் பயன்படுத்த மாற்றித்தரும் தொழில் நுட்பம், பொதுத்துறை நிறுவனம், பயன்படுத்தும் மக்கள் என்றிருந்ததை தனியார் கார்ப்பரேட்டுகள் இதில் நமக்கு என்ன கிடைக்கும் என்று பார்க்கிறார்கள். தங்களது அடிமைகளான அரசியல்வாதிகளை வைத்து பொதுத்துறை நிறுவனத்தை ஓய்த்துக் கட்டுகிறார்கள்; தனியாரை அனுமதிக்க வைக்கிறார்கள். தங்களது நிறுவனங்களுக்கு இவ்வளவு நற்பெயர் உள்ளது, நடைமுறை அறிவு உள்ளது என்று வெற்று காகிதத்தை காட்டி லட்சக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்குவது, பொதுத்துறையை ஒழித்துக்கட்டுவது, லாபம் என்ற பெயரில் கொள்ளையடிப்பது இதுதான் நடந்துகொண்டிருக்கிறது.

இப்படி சமூகத்துக்கு தேவையில்லாத ஒரு வர்க்கமான இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் ஆடம்பர, சூதாட்ட வாழ்க்கைக்கு பல நூறு கோடி ஏன் அழுது கொண்டிருக்கிறோம். அவர்களது சூதாட்டத்துக்கு நமது வாழ்க்கையை பகடைக் காயாக பயன்படுத்துவதை ஏன் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம்?

– பிரவீன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/telecom-companies-spectrum-bank-loan-profits/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
லே ஆஃப் அச்சுறுத்தல் : எதிர்கொள்ளும் வழி – eBook டவுன்லோட்

தவறான கருத்துக்களை உடைக்கும் இந்த தகவல்களும், அவை அளிக்கும் தன்னம்பிக்கை/சட்ட அறிவும் ஊழியர்கள் தங்களை வேலை இழப்பு நெருக்கடியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள பயன்படும் என்று கருதி...

புதிய தொழிலாளி – பிப்ரவரி 2017 பி.டி.எஃப்

வென்னீரு எதற்கு? பன்னீரு எதற்கு? மெரினாவே வேண்டும் நமக்கு! , சுரங்கத்தில் வேலை வேண்டுமா? வீட்டை காலி பண்ணு!, காடு வா வா என்கிறது, கவர்மெண்டு போ...

Close