19ம் நூற்றாண்டின் மிகப் பிரபலமான அபினிப் போர் பிரதானமாக அன்றைய பம்பாயின் தொழிலதிபர்களின் முதலீட்டில் நடத்தப்பட்டது. குறிப்பாக, ஆங்கிலேயனுக்கு கஞ்சா கடத்திப் பொருளீட்டியதில் ஜாம்ஷெட்ஜி டாடா முதன்மையானவர், இவர்தான் இந்தியத் தொழில் வளர்ச்சியின் முன்னோடியாகச் சித்தரிக்கப்படுகிறார்.
ஜார்டின் மேத்சன் என்ற நிறுவனம் அபினி வர்த்தகத்தில் பிரதான பங்கு வகித்தது. அவர்களது இந்திய கூட்டாளிதான் ஜாம்ஷெட்ஜி டாடா.
அமெரிக்கத் தொழிலதிபர்களில், பிரபலமான குடும்பங்களில் அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்ளின் ரூஸ்வெல்ட் குடும்பம், கேல்வின் காலிட்ஜ் குடும்பம், ஃபோர்ப்ஸ் குடும்பம், ஜான் கெர்ரி குடும்பம் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். பிரபலமான யேல் பல்கலைக் கழகமும், இன்றைய சிங்கப்பூரும், ஹாங்காங்கும் போதைப் பொருள் வர்த்தகத்தைத் தவிர்த்து செழித்து வளர்ந்திருக்கவே முடியாது. அபின்தான் 19-ம் நூற்றாண்டின் பிரதானமான சரக்காக இருந்தது.
அபினிப் போர் மிகவும் நவீன கார்ப்பரேட் பாணியிலான நவீன போர்களுக்கெல்லாம் முன்னோடி. போதைப் பொருள் விற்று அதன் மூலம் கிடைத்த வருவாயில் நிதி திரட்டி அபின் வியாபாரிகள் இங்கிலாந்து அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்தனர். இந்தப் போர் அரசும், கார்ப்பரேட்டுகளும் நடத்திய போர். போர் தொடர்பான ஒப்பந்தங்கள் மூலமாகவும் முதலாளிகள் லாபமடைந்தார்கள். ஈராக் போருக்கு 150 ஆண்டு கால முன்னோடி என்று இந்தப் போரை சொல்லலாம். முதலில் ஒரு கதையை உருவாக்கி அதை ஊதிப் பெருக்கி கட்டுரைகளில் எழுதுவது, மக்கள் மத்தியில் சீற்றம் பரவியதும் போரை ஆரம்பிப்பது என்ற செயல்முறை இந்தப் போரிலேயே ஆரம்பித்து விட்டது.
முதலாளிகளின் வரலாறு இத்தகைய உண்மைகளை மறைத்து கட்டுக்கதைகளால் நிரப்பப்படுகிறது. முதலாளித்துவம் பற்றிய வரலாறு மொத்தமுமே கட்டுக்கதைதான்.
இன்று வாழும் அவர்களது வாரிசுகள் இப்படியான ஒரு வணிகத் தொடர்பு நிலவியதை வெளிப்படுத்துவதில் மிகவும் தயக்கம் காட்டுகின்றனர். அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசுவதை அவர்கள் விரும்புவதில்லை. அது குறித்துப் பேசவும், எழுதவும் முற்படும் பத்திரிக்கையாளர்களை மிரட்டவும் உள்ளனர்.
தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக சமூக வலைத்தளங்கள் இது போன்ற செய்திகளை வீச்சாக கொண்டு சென்றாலும் எது மறைக்கப் பட வேண்டுமென முதலாளிகள் கருதுகிறார்களோ அது என்றுமே மறைக்கப்படும்.
மோசமான முதலாளித்துவம் என்று இப்போது விவாதிக்கப்படுகிறது. வேறு வகையிலான முதலாளித்துவம் இருக்கிறதா என்ன? இந்தப் பகுதியைத்தான் அவர்கள் முதலாளிகளின் வாழ்க்கை வரலாற்றில் சொல்வதில்லை. உதாரணமாக, திருபாய் அம்பானி செய்தியையும், அரசியலையும் கவனமாக பின்பற்றியவர். அரசு எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்வதுதான் பணம் பண்ணுவதற்கான வழி என்பதை அவர் புரிந்து வைத்திருந்தார். தொழில்முனைவர்கள் சுயேச்சையாக கோடிகளை குவிக்கிறார்கள் என்பது ஒரு கட்டுக்கதை. அனைத்தும் இத்தகைய கூட்டு செயல்பாட்டின் மூலமாகவே நடைபெறுகிறது.
இப்போது பிம்பங்களும், ஊடகங்களும் பகுத்தறிவு சிந்தனையை மூழ்கடித்துக் கொண்டிருக்கின்றன. டிரம்ப் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்பட்ட ஒரு பிம்பம். அவரைப் போன்ற [மோடி போன்ற] அதிபர்கள் உலகின் பல்வேறு நாடுகளிலும் தேர்வு செய்யப்படலாம். அவற்றை எதிர்கொள்ள நம்மை நாம்தான் தயார் செய்துகொள்ள வேண்டும்.
ஆங்கிலக் கட்டுரை : எகனாமிக் டைம்சில் வெளியானது
மொழிபெயர்த்தவர் : ஜான்சி
1 ping