அத்தியாவசிய மருந்துகளும் கொள்ளை லாபமும் – நிதி மூலதனத்தின் கிடுக்குப்பிடி

திகரித்து வரும் மருந்து விலைகள் பற்றிய தகவல்கள் வெளியாகும் போது மக்கள் மத்தியிலும், அதன் விளைவாக அரசியல்வாதிகள் சார்பிலும் எதிர்ப்பு அலைகளை அது உருவாக்குகிறது.

 • உதாரணமாக டூரிங் பார்மா என்ற நிறுவனம், 2015-ல் தொற்றுநோய்க்கான ஒரு மருந்தின் விலையை 5000 மடங்கு உயர்த்தியது.
 • வேலியண்ட் பார்மா என்ற நிறுவனம் பல்வேறு மருந்து நிறுவனங்களை விலைக்கு வாங்கி பின்னர் மருந்துகளின் விலையை உயர்த்தியது.

இது தொடர்பாக எழுந்த எதிர்ப்புகளை தொடர்ந்து இரு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளும் பதவி விலகியுள்ளனர்.

 • மைலன் என்னும் நிறுவனம் அது தயாரிக்கும் உயிர் காக்கும் மருந்தான எபிபென் என்னும் மருந்தின் விலையை கடந்த 7 ஆண்டுகளில் 400% அதிகரித்துள்ளது. இதனால் அதன் தலைமை நிர்வாகி சிக்கலில் உள்ளார்.

இருப்பினும், இவ்வாறு வானளாவிய விலை உயர்வின் மூலம் கொள்ளை லாபம் ஈட்டும் ராயல்டி பார்மா போன்ற நிதி நிறுவனங்களின் பெயர் வெளியில் யாருக்கும் தெரிவதில்லை. மேலும் முதலாளி வர்க்கத்தின் லாப வேட்டைக்காக மருந்து விலைகள் கட்டுக்கடங்காமல் அதிகரிப்பது ஒரு போக்காக தொடர்ந்து வருகிறது.

பொதுவாக மருந்து விற்பனை மூலம் மிக அதிக பணம் ஈட்டுவதற்கு ஆராய்ச்சிக் கட்டத்தில் இருக்கும் மருந்துப் பொருட்களின் மீது முதலீடு செய்கின்றன, நிதி நிறுவனங்கள். ஆனால், இந்த சூது விளையாட்டில் ராயல்டி பார்மா பிந்தைய கட்டத்திலேயே தனது கால்களை வைக்கிறது. அதிகம் அறியப்பட்டாத தனியார் முதலீட்டாளரான ராயல்டி பார்மா, $15 பில்லியன் மதிப்புள்ள ஒரு அசாதாரண முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இது விற்பனைக்கு ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட மருந்துகளின் எதிர்கால விற்பனை உரிமைகளை விலை கொடுத்து வாங்குகிறது. இந்த உரிமைகளை காப்புரிமை வைத்திருப்பவர்களிடமிருந்தோ, மருத்துவமனைகளிடமோ அல்லது ஆராய்ச்சியில் ஈடுபடும் பல்கலைக்கழகங்களிலிருந்தோ வாங்குகிறது. ஆராய்ச்சி நிறுவனங்கள் தமது நிதி தேவைகளுக்காக சந்தையை சார்ந்திருக்கும்படி விடப்பட்ட நிலையில் வருங்கால காப்புரிமைகளை உடனடியாக பணமாக மாற்றி பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தை நிதி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்கின்றன.

ராயல்டி ஃபார்மா தனது செயல்பாடுகள் தொடர்பான தகவல்கள் வெளியாவதையும், பொது விவாதப் பொருளாவதையும் தவிர்க்கிறது.

 • ராயல்டி பார்மாவின் கணக்குப்படியே ஹுமிரா என்னும் மிக அதிக விற்பனையாகும் மருந்து உட்பட அதிக அளவில் விற்பனையாகும் 30 மருந்துகளில் 7 மருந்துகளுக்கான 50% உரிமையை அது கைப்பற்றியுள்ளது.
 • ஹுமிராவோடு அமெரிக்காவில் அதிகமாக விற்கும் மருந்துகளில் 4-ம் இடத்தில் இருக்கும் ரெமிகேட் என்னும் மருந்தின் மீதான பாதி உரிமத்தையும்
 • லிரிகா என்ற சர்க்கரை நோய் தொடர்பான மருந்தின் உரிமத்தையும் தன் வசம் கொண்டுள்ளது.
 • மேலும் 30-க்கும் மேற்பட்ட மருந்துகளின் காப்புரிமத்தை கைப்பற்றி கட்டுப்படுத்துகிறது. அவற்றின் விற்பனை விற்பனை வருமானத்தில் 3 முதல் 5 சதவிகிதம் இந்த நிறுவனம் பெறுகிறது.

இந்த நிறுவனத்தின் தற்போதைய கட்டமைப்பு அதன் இணை நிறுவனரும் ஒரு முக்கிய வால் ஸ்ட்ரீட் முதலீட்டு வங்கியாளருமான மெக்சிகோவின் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த பப்லோ லியோரேட்டாவால் உருவாக்கப்பட்டது. ராயல்டி பார்மா தொடர்பான செய்திகளில் தன்னைப் பற்றிய விவரங்களை வெளியிடுவதை அவர் விரும்புவதில்லை. இந்நிறுவனம் குறைந்த அளவிலான ஊழியர்களைக் கொண்டு மன்ஹாட்டனில் இயங்கி வருகிறது. வெளி முதலீட்டாளர்களிடமிருந்து பணம் திரட்டி பலரது முதலீடுகளில் இயங்கி வருகிறது.

1990-களின் துவக்கம் வரை, பப்லோ லியோரேட்டா ஒரு சராசரா முதலீட்டு வங்கியாளராகத்தான் இருந்தார். பின்னர், 1987-ம் ஆண்டில் பெய்ன்வெப்பெர் என்னும் நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் புற்றுநோய் சிகிச்சையான கீமோதெரபி உரிமத்தின் மூலம் ஈட்டும் கொள்ளை இலாபம் பற்றி அறிந்தார். காப்புரிமை வணிகம் தரக்கூடிய இலாபம் அவரை அவரது $60 மில்லியன் முதலீட்டில் “ராயல்டி பார்மா” வைத் தொடங்கத் தூண்டியது.

ராயல்டி ஃபார்மா பல்வகைப்பட்ட காப்புரிமை தொகுப்புகளை ஒன்றுதிரட்டி, புற்றுநோய்க்கான முக்கியமான மருந்தின் காப்புரிமம் மூலம் தனது முதலீட்டை மூன்று மடங்கு பெருக்கியது. திரு.லியோர்ரெட்டா 2003-ல் $190 மில்லியன் கடனாக திரட்டினார். 2005-ம் ஆண்டில் $161 மில்லியனாக இருந்த இந்நிறுவனத்தின் வருமானம், வருடத்திற்கு 30% என வளர்ந்து 2016-ல் $2.47 பில்லியனாக உயர்ந்தது.

ராயல்டி பார்மா நிறுவனர் லேகொரெட்டா இந்த நிதிமூலதன ஆயுதப் போட்டியில் பங்குச்சந்தை முதலீடுகளை ஒரே நிதியத்தில் வைத்திருக்கிறார். அது ஆண்டுதோறும் தொடர் வருவாயைப் பெற்றுத்தருகிறது. பால் காபிடல் நிறுவனத்தின் நிறுவனர் லயனல் லெவெந்தல் ராயல்டி பார்மா பற்றிக் கூறும்போது, “அவர்கள் என்றுமே ஏறுமுகத்தில் இருக்கக்கூடிய நிதிகளில் மட்டுமே தங்களது அனைத்து முதலீடுகளையும் செய்கின்றனர். இது அவர்களது வளர்ச்சியையும், பன்முகத்தன்மையையும் உறுதி செய்கிறது. பதினைந்துக்கும் மேற்பட்ட மருந்து காப்புரிம நிதிகள் ஒன்றாக ராயல்டி பார்மாவை நிர்வகிக்கின்றன” என்கிறார்.

சமீப காலமாக, ராயல்டி பார்மா அதன் நிதி ஆதாரங்களை பல்வகைப்படுத்தியது. பாங்க் ஆஃப் அமெரிக்கா உதவியுடன் சேர்த்த $4.5 பில்லியன் உட்பட ராயல்டி பார்மாவுடன் நெருங்கிய தொடர்புடைய பயோ பார்மா நிறுவனம் $762 மில்லியனை லண்டன் பங்குச்சந்தை மூலம் திரட்டியது.

இந்தப் பணத்தை எல்லாம் பயன்படுத்தி மேலும் பல முக்கிய மருந்துகளை வாங்கி, மேலும் பல பில்லியன் டாலர் வருமானத்தை ஈட்ட ஏற்பாடு செய்து கொள்கிறது. ஆராய்ச்சிக் கட்டத்தில் இருக்கும் மருந்துகள் மீது தனது கிடுக்கிப் பிடியை போடுவதன் மூலம் அதை செய்கிறது ராயல்டி ஃபார்மா. சர்க்கரை நோய்க்கான மருந்தின் ஆராய்ச்சியின் மீது $1 பில்லியன் முதலீடும், மார்பக புற்றுநோய்க்கான மருந்தின் ஆராய்ச்சியிலும் முதலீடு செய்துள்ளது. சோதனை மற்றும் ஒழுங்குமுறை ஒப்புதல் நிறுவனமான அவில்லியானிலும் முதலீடு செய்துள்ளது ராயல்டி பார்மா.

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிஸ் ஸ்லொன் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டின் நிதிப் பேராசிரியர் அவுஸ்ரூ லோ மற்றும் டியூக் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் சௌர்யா நரஹரிசெட்டி சேர்ந்து 2014-ல் மேற்கொண்ட ஆய்வில் கூறுவதாவது, “ராயல்டி பார்மா தனது வணிக நடவடிக்கைகள் மூலம் முதலீட்டு மேலாண்மைத்துறையில் ஒரு புதிய பிரிவை உருவாக்கியுள்ளது. இது மருந்தக முதலீட்டிற்கான மற்ற வகை நிதிகளின் சரிவை ஈடுசெய்ய உதவியது”.

கே.கே.ஆர் என்னும் தனியார் முதலீட்டு நிறுவனத்தின் உதவியுடன் துவங்கபட்ட பிரிட்ஜ்பயோ பார்மா நிறுவனம் மரபணு நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் தலைமை அதிகாரி நீல் குமார் ராயல்டி பார்மா பற்றிக் கூறும்போது, “குறைந்த செலவிலான நிதி மூலதனத்தின் மூலம் இந்த ஆயுதப் போட்டியில் பாப்லோ வென்றுவிடுகிறார். மேலும், ராயல்டி பார்மா மிகக் குறைந்த செலவில் கடன் நிதி திரட்டி தனது போட்டியாளர்களை நசுக்கிவிடுகிறது.” என்றார்.

இவ்வாறு வெகுமக்களின் துயரத்தில் லாபம் அடிக்கும் இந்தப் போட்டியில் ராயல்டி ஃபார்மா தனது சக கொள்ளைக்காரர்களி விஞ்சியிருக்கிறது. உயிர்காக்கும் மருந்துகளின் மீது சூதாடி கொள்ளை லாபம் அடிக்கும் தனது அணுகுமுறையை நியாயப்படுத்தவும் தவறவில்லை ராயல்டி ஃபார்மா.

“மருந்து தயாரிக்கும் நிறுவனங்களே விலை நிர்ணயம் செய்கின்றன. ராயல்டி பார்மா மருந்துகளின் விலையைத் தீர்மானிப்பதில் எந்தவிதமான செல்வாக்கும் செலுத்துவது இல்லை. அம்மருந்துகளுக்கான சந்தையே அதன் விற்பனை விலையைத் தீர்மானிக்கின்றன.” என்கிறார் ராயல்டி பார்மாவின் துணைத் தலைவரும் பொது ஆலோசகருமான ஜார்ஜ் லாயிட். ஆனால், மருந்துகளின் காப்புரிமையை தம் வசம் வைத்திருப்பதன் மூலம் மருந்து நிறுவனங்களின் விலை நிர்ணயம் மீது கொடுக்கும் அழுத்தம் பற்றி அவர் பேசவில்லை. பொதுவாக மருந்து விலையை நிர்ணயிப்பது மருந்து நிறுவனங்கள் என்றாலும், ராயல்டி பார்மா தான் காப்புரிமம் சொந்தமாக வைத்திருக்கும் சில மருந்துகள் பல மடங்கு உயர்ந்த விலைக்கு விற்கப்படுகின்றன.

எல்சிவியர்ஸ் கோல்ட் ஸ்டாண்டர்ட் மருந்து தரவுத்தளத்தின்படி கடந்த 3 ஆண்டுகளில், ராயல்டி பார்மாவின் முக்கியமான 3 மருந்துகளின் விலை, ஆண்டொன்றுக்கு சராசரியாக 15.7% உயர்ந்துள்ளது.

 • ஸ்டண்டி என்ற மருந்து அமெரிக்காவில் ஆண்டுக்கு $129,000 மொத்த விலைக்கு விற்கப்படுகிறது. இது ஜப்பான், சுவீடன், கனடா ஆகிய நாடுகளில் விற்கப்படுவதை விட மூன்று மடங்கு அதிக விலையாகும்.
 • இதே போல் ஹுமிரா, காலிடேகோ (விலை – ஒரு ஆண்டுக்கு $311,000) ஆகிய மருந்துகளின் விலையும் ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளதால், இவை மீதான ராயல்டி பார்மாவின் உரிமத்தை ரத்து செய்யுமாறு தேசிய சுகாதார நிறுவனத்திற்க்கு அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பெர்னி சாண்டெர்ஸ் வலியுறுத்தியுள்ளார்.

ராயல்டி ஃபார்மா காப்புரிமையை வாங்குவதற்கு விலையாகக் கொடுக்கும் தொகை ஆராய்ச்சி செலவுகளுக்கு பயன்படுவதை வைத்து அதன் லாபத்தை நியாயப்படுத்துபவர்களும் இருக்கிறார்கள்.

 • எமோரி பல்கலைக்கழகத்தில் மூன்று ஆராய்ச்சியாளர்கள் கூட்டாக எய்ட்ஸ் நோய்க்கான மருந்து விற்பனை உரிமத்தின் வருவாயான $525 மில்லியனில் 40% பெற்றனர்.
 • வடமேற்கு பல்கலைக்கழகத்தில் நரம்பு வலிக்கான மருந்தான லிரிகா தொடர்பான வேலைக்கு ரிச்சர்ட் சில்வர்மேன் $100 மில்லியனுக்கும் மேலான மதிப்பை பெற்றார். 2007-ம் ஆண்டில் சில உரிமங்களை $700 மில்லியனுக்கு விற்றுவிட்டார். இந்த வருவாயில் $100 மில்லியன் தொகையை கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு ஆராய்ச்சிக்கூடம் நிறுவ உதவினார்.
 • ஸ்லோன் கெட்டெரிங்க் நினைவு புற்றுநோய் மையம், 2004-ல் ஈட்டிய வருவாய் ($400 மில்லியன்) மற்றும் 2005-ல் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கான 2 மருந்துகளின் மூலம் ஈட்டிய $500 மில்லியன் ஆகியவற்றைக் கொண்டு ஒரு ஆராய்ச்சி மையம் நிறுவியது.
 • லைரிகா எனும் மருந்தின் உரிமத்தை விற்ற பல்கலைக்கழகம் அதன் வருங்கால விற்பனை வருவாயில் 10% தள்ளுபடி பெற்று அந்தத் தொகையை இளங்கலை பட்டதாரிகளுக்கான நிதியுதவி போன்றவற்றுக்கு செலவிட்டதாக யூஜின் சன்ஷைன் கூறுகிறார்.

பொது வரிப்பணத்திலிருந்து ஆராய்ச்சி தேவைகளுக்கான நிதி மறுக்கப்படும் நிலையில் வேறு வழியில்லாமல் இந்த நிதிக் கொள்ளை நிறுவனங்கள் கொடுக்கும் தொகையை சார்ந்திருக்கும்படி ஆராய்ச்சியாளர்கள் தள்ளப்படுகின்றனர். மேலும், ராயல்டி ஃபார்மாவும் அதில் மூலதனம் போட்டு லாபம் ஈட்டும் பண முதலைகளும் ஈட்டும் பல பில்லியன் டாலர் லாபத்தில் இந்தத் தொகைகள் 20-30% அளவிலேயே உள்ளன. அதாவது அடிப்படை ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு கிடைப்பதை விட 2-3 மடங்கு தொகை நிதி சூதாடிகளுக்கு செல்கிறது.

சமீபத்திய ஆண்டுகளில், ராயல்டி பார்மா ஒப்பந்தங்கள் பெரிய அளவில் வளர்ந்தன.

 • 2014-ம் ஆண்டில் சிஸ்டிக் ஃபைப்ரொஸிஸ்க்கான (Cystic Fibrosis) மருந்து தயாரிக்கும் நிறுவனத்திற்கும், அதை சந்தைப்படுத்தும் நிறுவனமான வெர்டெக்ஸ் பார்மாவிற்கும், கேலிடெகோ என்ற மருந்திற்கான உரிமம் தொடர்பாக $3.3 பில்லியன் தர ஒப்புக்கொண்டது.
 • கடந்த ஆண்டு, முற்றிய ப்ரொஸ்டேட் புற்றுநோய் மருந்தான ஃஸ்டண்டிக்கு உரிமம் பெற கலிஃஃபோர்னிய மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைகழகங்களுக்கும், அதன் இணை உரிமையாளர்களுக்கும் ராயல்டி பார்மா $1.4 பில்லியன் கொடுத்தது.
 • இந்த ஆண்டு, ஸ்க்லரோஸிஸ் நோய்க்கான மருந்தின் உரிமை பெறும் நிமித்தம் பெர்ரிகோ நிறுவனத்திற்க்கு $2.85 பில்லியன் கொடுத்தது.

இதை ஒட்டி எதிர்கால மருந்துகளின் விலையும், ராயல்டி ஃபார்மாவின் லாபமும் இன்னும் பெரிய அளவில் அதிகரிக்கும் என்று எதிர் பார்ககலாம். ராயல்டி பார்மா அமெரிக்க மருந்து சந்தையில் கணிசமான விலை அதிகரிப்புகளால் பயனடைந்திருக்கிறது. புதிய சட்டம் இயற்றியோ அல்லது அமெரிக்காவில் மருந்து விலை நிர்ணயத்தில் வியத்தகு மாற்றங்களைச் செய்தாலன்றி நிலைமை இன்னும் மோசமாகும்.  இதை நிதிமூலதனத்துக்கு தண்டனிட்டு சேவை செய்யும் அரசுகள் செய்யப் போவதில்லை என்பது நிதர்சனம்

குடிநீர் முதல் கல்வி வரை, மருத்துவமனைகள் முதல் மருந்துகள் வரை, சாலைகள் முதல் பாலங்கள் வரை அங்கிங்கெனாதபடி எங்கும் தனது விஷக் கரங்களை பரப்பி உலக மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் இந்த நிதி மூலதன இரத்தக் காட்டேறியை ஒழித்துக் கட்டுவதற்கான பணியில் ஈடுபடுவது அனைத்து உழைக்கும் மக்களின் முதன்மை கடமையாக உள்ளது.

– பிரியா

செய்தி ஆதாரம் – an article by Randal Smith published in The New York Times.

Permanent link to this article: http://new-democrats.com/ta/the-private-equity-firm-that-quietly-profits-on-top-selling-drugs-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கொரோனா அவசரநிலை:  தகவல் தொழில் நுட்பத்துறை தொழிலாளர்கள் நலன்.

நம்முடைய தாத்தா பாட்டி காலத்தில் பிளாக் நோய், காலரா, பெரியம்மை போன்ற கொள்ளை நோய்களுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக இறந்து போனதாக நமது குழந்தைப் பருவத்தில் கதைகளாகக்...

அமெரிக்காவுக்கு டஃப் கொடுக்கும் சீனா, நம்மால் முடியுமா?

ஏற்றுமதியில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் அதைச் சரிக் கட்டுவதற்காக உள்நாட்டு வேண்டலை அதிக்ரிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக கட்டுமான திட்டங்களில் பொதுத்துறை முதலீட்டை திட்டமிட்ட முறையில் அதிகரித்துள்ளது.

Close