தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு தொடர்பான செய்திகளிலும், விவாதங்களிலும் கேட்கக் கிடைக்கும் ஒரு சொல் அரச வன்முறை அரசு பயங்கரவாதம் – State terrorism.
ஸ்டெர்லைட் என்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக ஒட்டு மொத்த அரசும், அதன் போலீஸ் படையும், ஊடகங்களும், பா.ஜ.க போன்ற கட்சிகளும் ஒரே பக்கத்தில் நின்றதை எப்படி புரிந்து கொள்வது?
பாரளுமன்ற ஜனநாயகமே உச்சபட்சமானது என்று கற்பூரம் அணைத்து சத்தியப் பிரமாணம் செய்யும் மேலோரின் கவனத்திற்கு.
அரசு எல்லாக் காலங்களிலும் இருந்ததில்லை என்பது வரலாறு! பழங்குடி மக்கள் தமக்குள் ஒருவகை புராதன பொதுவுடைமை முறையில் வாழும் போது அங்கு மக்களிடமிருந்து பிரிந்த, தனிச்சிறப்பான ஆயுதப் படையையும், வரி வசூல் கட்டமைப்பையும், சட்டமியற்றும் அதிகாரத்தையும் படைத்த ஒரு கருவி தேவைப்படுவதில்லை.
சமூகத்தில் உழைப்பவன், உழைக்காமல் வாழ்பவன் என்ற வர்க்கப் பிரிவினை தோன்றியபோதே அரசின் தேவையும் எழுந்தது. வர்க்கப் பிரிவினைகள் வளர்ந்து வலுவடைந்து நிற்கும்போது இந்த தனித்த ஏற்பாடான அரசு அவசியமாகிறது. இந்த ஏற்பாடு என்றுமே ஆண்டைகளுக்கானதாக, அவர்களை பாதுகாக்க மட்டுமே செயல்படுகிறது. அவர்கள் மட்டுமே முழு உரிமை பெற்ற குடிமக்களாகக் கருதப்படுவர். அரசு எதற்காகத் தோன்றியதோ அந்தக் கடமையை அது செவ்வனே செய்கிறது.
சமுதாயத்தில் உழைக்காமல் உண்டு களிக்கும் சலுகை மிக்கோரின் (அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியான) இருத்தலை நியாயப்படுத்தவும், அவர்களுக்காக உழைக்கும் மக்கள் மீது நடத்தப்படும் சுரண்டலைப் போற்றிப் பாதுகாக்கவும் அரசு என்ற போதனை மிக அவசியமாகிறது. அரசு (state) எனும் இந்தப் பொறியமைவு சுரண்டும் வர்க்கங்களின் நலன்களையே பாதுகாக்கிறது.
இதற்காக, வன்முறை மூலம் மக்களைத் தனக்குக் கீழ்ப்படுத்தும் ஒரு இயந்திரமே அரசு. சமூகத்திலிருந்தே தோன்றும் அது சமூகத்திலிருந்து மேலும் மேலும் தன்னை தனிமைப் படுத்திக் கொண்டு, முழுமையாக புறத்தே நின்று, தன்னை மேலானதாக அமர்த்திக் கொள்கிறது !
தனது சித்தத்தை கட்டாயப்படுத்தி மக்கள் மேல் திணிப்பதற்கு போலீசு, நீதித்துறை சிறைச்சாலைகள், தனிப்படைப் பிரிவுகள், இராணுவம் என ஒடுக்குமுறை கருவிகளை பராமரிக்கிறது.
பெரும்பான்மை உழைக்கும் மக்கள் மீது சுரண்டும் வர்க்கத்தின் சார்பில் அதிகாரம் செலுத்தும் அரசு, தொழில் நுட்பங்கள் படைத்தளித்த நவீன கருவிகள் மூலம் வன்முறையை மக்கள் மீது செலுத்துகிறது. இதன் மூலம் தான் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்துகிறது.
சொத்துடையோரின் சொத்துக்களை சொத்தில்லாத மக்கள் திரள் “கலவர வெறியாட்டம் நடத்தி சூறையாடாமல்” பாதுகாத்து நிற்கிறது. மூலதனத்தின் மீதான தாக்குதலே வன்முறை என சித்தரிக்கப்படுகிறது !
வெளித்தோற்றத்தில் சுதந்திரமானது போலவும், அனைத்து மக்களுக்குமான வாக்குரிமையை பிரகடனப்படுத்தி, தனது அறிஞர்கள், தத்துவ ஞானிகள், பிரச்சாரகர்கள் மூலம் தான் “அனைத்து” மக்களுக்குமான அரசு என்று தொடர்ந்து அறிவித்துக் கொண்டே இருக்கிறது.
மூலதனத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அடிபணிந்து நடக்கும் அரசு, வாக்குரிமை, நாடாளுமன்றம், அரசியல் நிர்ணய சபை என்று எத்தனை மாய்மாலங்கள் செய்தாலும் அதிகாரம் யார் கையில் உள்ளது என்பது அந்த மூலதனத்திற்கு ஒரு சிறு கீறல் ஏற்படும்போது வெளிப்பட்டு விடுகிறது.
மூலதனத்தின் பலம் தான் எல்லாம். பங்குச் சந்தை தான் எல்லாம். நாடாளுமன்றமும் , தேர்தல்களும் மூலதனத்தின் கவசங்கள்! கைப்பாவைகள் !
அரசு என்பது அனைத்து மக்களுக்கான சமத்துவத்தை ஆதாரமாகக் கொண்டது என்பது வஞ்சனையான வாதம்.
அவர்களுக்கு புரியும் மொழியில் இனி பேசுவோம் !
சுரண்டலையும், அதைப் பாதுகாக்கும் இந்த அரசமைப்பையும், அதன் ரத, கஜ, புஜ பராக்கிரம சேனைகளையும் மக்கள் படை கட்டி குப்பையில் வீசுவோம்.
– பிரியா