பல்லாயிரம் ஐ.டி ஊழியர்கள் வேலைபறிப்பு: கார்ப்பரேட் கனவான்களின் கழுத்தறுப்பு!

.டி/ஐ.டி சேவைத் துறை நிறுவனங்கள் தமது ஊழியர்கள் மீது சட்டவிரோதமாகவும் மோசடியாகவும் ஆட்குறைப்பு என்ற தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

  • சி.டி.எஸ் எனப்படும் காக்னிசன்ட் நிறுவனம் 7% ஊழியர்களை 4-வது தரவரிசையில் சேர்க்குமாறு மேலாளர்களை கட்டாயப்படுத்தி, அப்படி 4-வது தரவரிசையில் சேர்க்கப்பட்டவர்கள் வேலையிலிருந்து போய் விட வேண்டும் என்று சுமார் 10,000 ஊழியர்களை தூக்கி எறிந்திருக்கிறது.
  • விப்ரோ நிறுவனம் ஒரே மட்டத்தில் 7 ஆண்டுகள் தொடர்ந்து இருப்பவர்கள் அனைவரையும் 4-வது தர வரிசையில் சேர்த்து அவர்களை வேலையிலிருந்து துரத்தி விட வேண்டும் என்று முடிவு செய்து அமல்படுத்தி வருகிறது.

இன்னும் டெக் மகிந்த்ரா, இன்ஃபோசிஸ், கேப் ஜெமினி, டி.சி.எஸ் என்று அனைத்து பெரிய ஐ.டி நிறுவனங்களிலும் ஆட்குறைப்பு நடைமுறைகள் அன்றாட நிகழ்வாக ஆகியிருக்கின்றன.

இது தொடர்பாக பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு இணையத்திலும், நேரிலும் நடத்திய பிரச்சாரத்தைத் தொடர்ந்து இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பலர் எம்மைத் தொடர்பு கொண்டு தங்களது கசப்பான, துயரம் மிக்க அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

ஐ.டி துறை கார்ப்பரேட்டுகளின் சட்ட விரோத, நியாயமற்ற, தொழில்முறையற்ற அப்ரைசல் முறையையும், கட்டாய பதவி விலகல் கடிதம் வாங்குவதையும் எதிர்ப்பது, தமக்கு வழங்கப்பட்ட அப்ரைசல் ரேட்டிங் நியாயமற்றது என்று போராடுவது, எச்.ஆர்.ன் மிரட்டலுக்கு பணிந்து பதவி விலகல் கடிதம் கொடுக்க மறுப்பது என நம்மை தொடர்பு கொண்ட ஊழியர்களுக்கு வழிகாட்டப்பட்டு பல ஊழியர்கள் அவ்வாறு போராடி வருகிறார்கள். அப்போது ஐ.டி ஊழியர்களிடமிருந்து திரட்டப்பட்ட கருத்துக்கள் மற்றும் அனுபவங்கள் சிலவற்றின் தமிழ் வடிவத்தை கீழே கொடுத்துள்ளோம்:

சரவணன்

“நான் சி.டி.எஸ்-ல் செப்டம்பர் மாதம் சேர்ந்தேன். எனக்கு 4-வது ரேட்டிங் கொடுத்தார்கள். இப்போது நான் செய்து கொண்டிருக்கும் வேலையிலிருந்து விடுவித்திருக்கிறார்கள்.

ஒரு சில மேனேஜர்களிடம் பேசியதில், 4-வது ரேட்டிங் கொடுக்கப்பட்ட ஊழியரை எந்த வேலையிலும் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று மேலே இருந்து உத்தரவு வந்திருப்பதாக சொல்கிறார்கள்.

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை!”

அருண்

“4-வது ரேட்டிங் கொடுக்கப்பட்ட ஊழியர்கள் ஏற்கனவே இருக்கும் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளார்கள். எச்.ஆர் அத்தகைய ஊழியர்களுக்கு மாற்றாக வேறு நபர்களை தேடுமாறு கூறியிருக்கிறார்கள். காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள்.

இதைத்தான் இப்போது சி.டி.எஸ் செய்து கொண்டிருப்பது.

ஊழியர்கள் வேலையை விட்டு நீக்கப்படுவது அவர்களே பதவி விலகல் கடிதம் கொடுத்து விட்டு போனது போல காட்டப்படுகிறது. அப்படி கடிதம் கொடுக்க மறுப்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள்.”

கோப்புப் படம்

ஜயந்த் ஆர்

“நானும் கடந்த 16 ஆண்டுகளாக விப்ரோவில் பணியாற்றுகிறேன். இந்த விஷயங்கள் தொடர்பாக ஏராளமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. 10-15 ஆண்டுகள் வேலை செய்யும் ஊழியர்கள் 2 மாத அவகாசம் கொடுத்து பதவி விலகல் கொடுக்கும்படி கட்டாயப்படுத்துகிறது விப்ரோ.

விருப்ப ஓய்வுத் திட்டம் எதையும் உருவாக்கவில்லை. ஊழியர்களின் எந்த நலன்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. எல்லா ஐ.டி ஊழியர்களும் ஒன்றிணைந்து இதை எதிர்த்து போராட வேண்டிய நேரம் இது.”

என்.ஜி.டி

“நான் தரவரிசை முறையின் சமீபத்திய பலிகடா. என்னை பதவி விலகல் கடிதம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். வெட்கங்கெட்ட நிறுவனம், வெட்கங்கெட்ட நிர்வாகம். உண்மையில் வேலை செய்யாதவர்கள், கடுமையாக உழைக்கும் ஊழியர்களை தமது சொந்த நலனுக்காக பலி கொடுக்கிறார்கள்.

இதன் மூலம் லாபத்தை காட்டி தமக்கும் தமது ஜால்ராக்களுக்கும் 1:1 போனஸ் கொடுத்துக் கொள்கிறார்கள். வெட்கக் கேடு!

இந்த உள்குத்து அரசியலும், நியாயமற்ற நடத்தையும் நாசமாகப் போகட்டும்.”

ஜானி

“நான் விப்ரோவில் 14 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். இப்போது ஒரு பெரிய வாடிக்கையாளர் நிறுவனத்துக்கான சேவை வழங்கும் குழுவின் தலைமைப் பொறுப்பில் இருக்கிறேன்.
ஏப்ரல் 3-வது வாரம் எனது மேலாளர் எச்.ஆரிடம் பேசச் சொன்னார். நான் B3 மட்டத்தில் 6 ஆண்டுகளாக இருப்பதால் உடனடியாக பதவி விலகும்படி சொன்னார்கள். அதே நாளில் பதவி விலகல் கடிதம் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தினார்கள். எனக்கு பலத்த அதிர்ச்சியாக இருந்தது.

அடுத்த வாரத்தில் என்னை அழைத்த எச்.ஆர், நானாக பதவி விலகல் கடிதம் கொடுக்கா விட்டால், அவர்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அது நல்லதாக இருக்காது என்றும் மிரட்டினார்.

நேற்று என்னுடைய L2 அப்ரைசல் முடிவு செய்யப்பட்டு “திருப்தியில்லை” என்ற மதிப்பீடு தரப்பட்டுள்ளது. இனிமேலும் இந்த நிறுவனத்தில் எனக்கு இடம் இல்லை.”

அஜய்

“எனக்கு விப்ரோவில் 16 ஆண்டு கால பணி அனுபவம் உள்ளது. நிர்வாகத்தின் இலக்குகளை நிறைவேற்றுவதற்காக நானே பலருக்கு குறைந்த ரேட்டிங் கொடுத்திருக்கிறேன். “மிகச்சிறந்த பங்களிப்பு” என்ற ரேட்டிங்கை, “திருப்தியற்ற செயல்பாடு” என்று மாற்றும்படி நான் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறேன்.

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட ஊழியர்களுக்கு வேலை நீக்கம் செய்வதற்காக குறைந்தபட்ச ரேட்டிங் கொடுக்கப்படுகிறது. நானே அதற்கு சாட்சி சொல்ல முடியும்.

இந்த நிறுவனத்தில் இத்தனை ஆண்டுகள் வேலை செய்ததை நினைத்து எனக்கே அவமானமாக உள்ளது. விசுவாசத்துக்கும், நேர்மைக்கும் எந்த மதிப்பும் இல்லாமல், ஊழியர்களை எந்திரங்கள் போல நடத்தி அவர்களது வாழ்க்கையுடன் விளையாடுகிறார்கள்.

தனிநபர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. அவர்களே முடிவெடுத்து, ஊழியர்களை ‘தாமாக’ பதவி விலகும்படி உத்தரவிடுகிறார்கள். அப்போதுதான் சுமுகமாக பிரிந்து செல்ல ஏற்பாடு செய்வோம். இல்லா விட்டால் தேவைப்படும் ஆவணங்களை தயாரித்து வேலை நீக்கம் செய்வதற்கான ஏற்பாடு செய்வோம் என்று மிரட்டுகிறார்கள்.”

அசோக்

“இது வழக்கமாக நடப்பது. குறைந்த ரேட்டிங் பெற்றவர்களை பதவி விலகல் கடிதம் கொடுக்கும்படி கேட்பது காக்னிசன்டின் வழக்கம். இது பல ஆண்டுகளாகவே நடக்கிறது. இதில் கடுப்பான விஷயம் என்னவென்றால், ஒரு ஊழியரை கூட இதுவரை வேலைநீக்கம் செய்ததில்லை என்று காக்னிசன்ட் சொல்லிக் கொள்கிறது.

அப்படி குறைந்த ரேட்டிங் பெற்ற ஊழியர்கள் தாமாக பதவி விலகல் கடிதம் கொடுக்கா விட்டால், முறைகேடாக நடந்து கொண்டதாகவோ வேறு ஏதாவதோ குற்றம் சாட்டி வேலையை விட்டு நீக்குவதாக எச்.ஆர் மிரட்டுகிறார்கள். அப்படி நடந்தால் அனுபவ சான்றிதழ் கிடைக்காது, அடுத்த வேலை தேடுவது கஷ்டமாகி விடும். எனவே, வேறு வழியில்லாமல் பதவி விலகல் கடிதம் கொடுக்க வேண்டியது நடக்கிறது.”

அம்மு

“இந்த எச்.ஆர் அதிகாரிகள் உண்மையிலேயே மிகவும் மோசமாக நடந்து கொள்கிறார்கள். செக்யூரிட்டியை அழைத்து வெளியில் துரத்தப் போவதாக சொல்கிறார்கள்.

அவர்களது வேலையைச் செய்வதில் கூட திறமை இல்லாதவர்கள். நிறுவனத்தின் கொள்கை மாற்றம் பற்றி ஊழியர்களுக்கு முறையாக தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. அதிலிருந்து தவறியதாக ஊழியரின் ஊதியத்தை வெட்டுகிறார்கள்.

எல்லாமே மிகக் கொடூரமாக உள்ளன. யார்தான் இதை தடுக்கப் போகிறார்களோ!”

மூத்த விப்ரோ ஊழியர் (பெயர் சொல்லத் தயங்குபவர்)

“நான் விப்ரோவில் சேர்ந்த போது ஊழியர்கள் எண்ணிக்கை 30,000 ஆக இருந்தது. இந்த 20 ஆண்டுகளில் ஊழியர் எண்ணிக்கை, மொத்த வருவாய், லாபம் என்ற ஒவ்வொரு வகையிலும் விப்ரோ பல மடங்கு வளர்ந்திருக்கிறது. அந்த வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருந்த மூத்த ஊழியர்கள் இப்போது வேண்டாதவர்கள் ஆகி விட்டிருக்கிறார்கள்.”

ஆமி

“கோடிக்கணக்கான டாலர்களை தரும காரியங்களுக்காக கொடுப்பவராக அறியப்பட்ட ஒருவர் (விப்ரோ முதலாளி அசீம் பிரேம்ஜி) தலைமை வகிக்கும் நிறுவனத்தின் இரட்டை முகத்தை இது காட்டுகிறது. அவர் என்னுடைய ஆதர்ச மனிதராக இருந்தார், ஆனால் இப்போது உண்மை முகம் தெரிந்து விட்டது.

குறுகிய கால வருவாயை அதிகரித்துக் காட்ட செய்யும் இந்த நடவடிக்கைகள் நீண்ட காலத்தில் நிறுவனத்தை முடக்கிப் போடுவதில்தான் முடியும்.”

“விப்ரோ பிம்பத்தை (branding) மாற்றுவதற்கு பல 10 கோடிகள் செலவிடப்படுகிறது. அதே நேரம் இன்னொரு பக்கம் ஆட்குறைப்பு நடைபெறுகிறது. ஒரு பக்கம் செலவுக் குறைப்பு, இன்னொரு பக்கம் செலவு. என்னதான் லாஜிக் என்று புரியவில்லை.

‘விட்டுக் கொடுக்காத நேர்மை’ – நல்ல பணியாற்றிய ஊழியர்களுக்கு திருப்தியில்லை என்று மதிப்பீடு கொடுக்கும்படி மேனேஜர்களை எச்.ஆர் கட்டாயப்படுத்துவது – இதுதான் நேர்மையா?

‘ஊழியர்களுக்கு மரியாதை’ – மோசமான செயல்பாடு என்று போலியாக காட்டி பதவி விலகல் கடிதம் கொடுக்கச் சொல்வதுதான் ஊழியர்களுக்கு மரியாதை காட்டுவதா?”

ராணா

“அசீம் பிரேம்ஜியும் அவரது மகனும் சேர்ந்து போட்ட திட்டம் இது. ஒரு பக்கம் அவரது சொந்த அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கிறார் (மற்ற அறக்கட்டளைகளுக்கு ஏன் கொடுப்பதில்லை???). அதன் மூலம் அவரது பணத்தை அவரே வைத்துக் கொள்கிறார். அவரது இன்னொரு மகன் அந்த அறக்கட்டளையை நடத்துகிறார்.

QPLC எனப்படும் முறையை பயன்படுத்தி ஊழியர்களின் ஊதியத்தை வெட்டுகிறது விப்ரோ. 50,000 ஊழியர்களை துரத்திய பிறகு பிரேம்ஜி இந்திய நிறுவனத்தை விற்று விடக் கூட செய்யலாம்.”

ஷைலேஷ்

“ஐ.டி நிறுவனங்கள் ஊழியர்களை பயன்படுத்திக் கொண்டார்கள். நிறுவனத்தின் லாபத்தில் ஒரு சிறு பகுதிதான் ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுக்கப்பட்டது.

நமக்கு ஐ.டி யூனியன் இல்லை. நமது கையில் எதுவும் இல்லை, எதிர்காலம் என்னவாகும் என்று தெரியவில்லை.”

டி.ஆர்

“தேவைப்படும் போது ஆள் எடுப்பது, தேவை இல்லாத போது தூக்கி எறிவது எல்லா இடங்களிலும் நடக்கிறது. ஆனால், நாம் இந்த அப்ரைசல் முறையை எதிர்த்து போராட வேண்டும். அடக்குமுறை கருவியான அப்ரைசல் முறையில் மேனேஜர்களை பொறுத்துதான் ஊழியரின் தலைவிதி இருக்கிறது.

திறன் மேம்பாட்டு பயிற்சி என்று பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், உருப்படியாக எதையும் நான் பார்த்ததேயில்லை. நீண்ட காலமாக சரியாக வேலை கொடுக்காமல் வைத்திருந்து விட்டு அதன் பிறகு “உனக்கு வேலை செய்யத் தெரியவில்லை” என்று சொல்வார்கள்.

எல்லாமே மூத்த மேலாளர்கள், பங்குதாரர்கள், முதலீட்டாளர்கள் சேர்ந்து நடத்தும் மோசடி நாடகம். அவர்களுக்கு சொத்தை பெருக்குவதுதான் நோக்கம்.
இது போன்ற முதலாளித்துவ கொடுங்கோலர்களுக்கு எதிரான ஒழுங்குமுறை விதிகள் கட்டாயம் இருக்க வேண்டும்.”

***

கொத்தடிமைக்காவது உணவு உத்திரவாதம் இருக்கிறது. ஆனால், ஐ.டி ஊழியர்களுக்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. இலட்சக்கணக்கில் சம்பளம் வாங்கினாலும், கார்ப்பரேட் உலகம் உருவாக்கிய நுகர்பொருள் மோகமானது ஆடம்பர வீடுகள், கார்கள், பகட்டான உணவுப் பழக்கம் ஆகியவற்றை தலையில் கட்டி சம்பளத்தை அபகரித்துக் கொண்டது. இந்தச் சூழலில் வேலை பறிக்கப்பட்டால்? வருவாய் பறிக்கப்பட்டால்? ஐ.டி ஊழியர் என்ற அடையாளம் நம்மை சமூகத்திலிருந்து பிரித்து வைத்திருக்கிறது. நமது உலகம் தனி உலகம் என்றிருந்த அலட்சியம் கார்ப்பரேட் காரிருளை எதிர்கொள்ள முடியாத கோழையாக மாற்றியிருக்கிறது.

இணையத்தில் மட்டுமே குமுறல்களை பகிர்ந்து கொள்கிறோம். இணையத்தை விட்டு வெளியில் வந்தாக வேண்டிய தருணத்தில் இருக்கிறோம். நாஸ்காம் கருப்புப் பட்டியலில் சேர்த்து விட்டால் எந்த ஜென்மத்திலும் வேலை கிடைக்காது என்கிற அச்சத்தை தூக்கியெறிந்தாக வேண்டும். இன்னொரு வேலையே கிடைத்தாலும் சில ஆண்டுகள்தான் இருக்கும். எத்தனை ஆண்டுகள் வேலைகளை மாற்றிக் கொண்டிருப்பது?

வேலை கொடுத்தும், வேலையைப் பறித்தும் சுரண்டுகின்றன முதலாளித்துவ பயங்கரவாதம்தான் நாட்டின் கோடிக்கணக்கான விவசாயிகளையும், ஆலைத் தொழிலாளர்களையும் முறைசாரா தொழிலாளர்களையும் சுரண்டிக் கொழுக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, முதலாளித்துவ பயங்கரவாதத்தை வீழ்த்துகின்ற போரில் ஐ.டி ஊழியர்கள் முன்னணிப் படையாக செயல்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

– குமார்

புதிய தொழிலாளி, மே 15 – ஜூன் 14, 2017

 

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/thousands-of-employees-retrenched-corporate-terror/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
வாட்ஸ்ஆப் குழுவில் அடாவடி செய்பவர்களை எப்படி கையாள்வது? – ஒரு அனுபவம்

நான் பேசுவதற்கு முன்னும் பலரும் அவரது அரசியல் மொக்கையையும், அறுவையையும் கண்டித்த பிறகும், நிராகரித்த பிறகும் அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். தனது மேலிடத்து தொடர்புகள் மூலம்,...

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் : அதிகாரத்தின் கேளாக் காதுகளை எப்படி திறப்பது?

அங்கே உட்கார்ந்திருந்த வயது முதிர்ந்த விவசாயிகளின் முகங்களைக் காணும்போது மனம் கனத்துவிட்டது. " அய்யா நீங்க இதையெல்லாம் டிவில பேசுங்கய்யா" என்று அவர்கள் திரும்பத் திரும்பச் சொன்னபோது...

Close