சோஃபியாவின் குரலில் ஒலிக்கும் தமிழகத்தின் முழக்கம் : “பாசிச பாஜ.க ஒழிக”!

நேற்றைய தினம் சமூக ஊடகங்கள் அனைத்திலும் “பாசிச பா.ஜ.க ஒழிக” என்ற முழக்கம் பரவலாக இருந்தது. அந்த முழக்கத்தை உருவாக்கிய சோஃபியா என்ற மாணவியை தமிழச்சி, தங்கை, அக்காள், அர்பன் நக்சல் என்று அடைமொழியிட்டு கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள், நெட்டிசன்ஸ்.

இந்தச் சூழலில், அந்த முழக்கத்தின் இலக்கான பா.ஜக. தமிழக தலைவர் தமிழிசையோ, “சக அரசியல் கட்சிகளும் நாகரீகமில்லாமல் நடந்துகொள்கின்றனர், என் பின்னால் தமிழக மக்கள் உள்ளார்கள்” என்கிறார். சோஃபியா மீது புகார் கொடுத்து கைது செய்ய வைத்தார், பா.ஜ.க குண்டர்கள் மூலம் சோஃபியாவை அச்சுறுத்தவும் செய்தார். அதற்கும் சமூக ஊடகங்களில் தமிழிசை சொன்ன தமிழக மக்கள் தக்க பதிலளித்துவிட்டனர்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் சோபியா இந்த விசயத்தில் செய்தது தவறென்றும் கூறுகிறார்கள்.

தேர்தல் காலங்களில் ஓட்டுக்கட்சிகள் திருவிழாக்கோலம் பூணுகிறார்கள். போராட்டக் காலங்களில் மக்களே திருவிழா கொண்டாடுகிறார்கள்.

தமது பிரச்சனைகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தும் மக்கள், அவற்றுக்குக் காரணமான அரசியல்வாதிகளை, அடுத்த தேர்தலின் போதுதான் காணமுடியும் என்று நினைத்திருந்த அரசியல்வாதிகளை காண நேர்ந்தால் என்ன செய்வார்கள்?

அதுவும் பல இடங்களில் நடந்துள்ளது. காரில் சென்றால் மறியல் செய்வார்கள். நகர முடியாதவாறு வழியை மறித்து விடுவார்கள்.

இது எட்டாத கனி கிட்டத்தில் இருக்கையில் உண்டாகும் உணர்வு. இதை தவறென்று எவ்வாறு சொல்லமுடியும்.

அரசியல்வாதிகள் ஓரிரு மாதங்கள் மட்டுமாவது சாலைகளில் சாதாரணமாக உலா வாருங்கள், உங்கள் திருவிளையாடல்களுக்கான எதிர்வினையாக உங்களுக்கான சிறப்பு அபிசேகங்களை மக்கள் நடத்துவார்கள்.

பா.ஜ.க.-வின் 4 1/2 ஆண்டு ஆட்சியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு, அரசு பள்ளிகள் பராமரிப்பில்லாதது, நீட் தேர்வு-அனிதாவின் மரணம், பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம், 13 பேர் சுட்டு கொலை, எட்டு வழிச் சாலை, பசு பாதுகாப்பு என்ற பெயரில் தலித், இசுலாமிய மக்கள் தாக்கப்படுதல் என்று பல்வேறு ஒடுக்குமுறைகள் ஒருபக்கம். விஜய் மல்லையா, நீரவ் மோடி என்று பல்வேறு கார்ப்பரேட் முதலாளிகளை தப்பிக்க வைத்து காப்பாற்றியது, அம்பானி, அதானி உள்ளிட்ட பல்வேறு முதலாளிகளுக்கு வங்கிக்கடன் வழங்கியது, கடன் தள்ளுபடி செய்தது என்பவை மற்றொரு புறம்.

இத்தனையையும் செய்து மக்களை துயரத்தில் ஆழ்த்தியபோதும், பா.ஜ.க-வினர் எந்த ஒரு உறுத்தலும் இல்லாமல் டிவி மேடைகளில் அடாவடியாக பேசுவது, திமிராக நடப்பது எல்லாவற்றையும் மக்கள் கவனித்துக்கொண்டுதான் உள்ளார்கள்.

இத்தனையையும் எதிர்க்க எந்த வழியும் தெரியாமல், அடுத்த வேளை சோத்துக்கு ஓடிக்கொண்டிருக்கும் மக்கள் மத்தியில், அவர்களிலிருந்து வந்த, அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் படித்த சோபியாக்கள் ஏராளம் உள்ளார்கள்.

சோபியா பா.ஜ.க.-விற்கு தெரிவித்த எதிர்ப்பு நாடு முழுவதும் பற்றிக்கொண்டது நாட்டில் எண்ணற்ற சோபியாக்கள் உள்ளதை கண்முன் நிறுத்துகிறது. இந்த சோபியாக்கள் அனைவரும் எழுப்பிய கேள்விகளுக்கு பா.ஜ.க வினரிடம் எந்த பதிலும் இல்லை.

இதற்கிடையில் பா.ஜ.க வினர் பரப்பும் ஒரு செய்தி உலாவருகிறது.  பதுங்கியிருந்த பா.ஜ.க.-வினர் தலையை வெளிக்காட்டுகிறார்கள்.

‘சோபியா கிருத்தவத்திற்கு மாறியவர், கனடாவில் படிப்பதற்காக மதம் மாறியவர், பணத்துக்காக மதம் மாறியவர், பல்வேறு போராட்டங்கள் பற்றி பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார், தீவிரவாதி’ என்றெல்லாம் பரப்புகிறார்கள். அதை எடுத்துக் கொடுத்தவரே அவர்களது தலைவர் தமிழிசைதான். இதையே பல்வேறு இடங்களிலும் மாற்றி மாற்றி பேசுகிறார்கள் பா.ஜ.க அனுதாபிகள்.

நாட்டின் இன்றைய நிலையில் “பா.ஜ.க ஒழிக” என்பதை சோபியா சொன்னதை விட பெரும்பாலான இளைஞர்கள், தமிழக மக்கள் சொல்லியதன் பின்னணி முதலாளிகளுக்காக மக்களை புழுவென நினைத்து ஆட்சியை நடத்தும் ஆட்சியாளர்கள் மேல் இருக்கும் வெறுப்புதான். இந்த வெறுப்புதான் பா.ஜ.க ஒழிக என்ற முழக்கத்துடன் பற்றிப் பரவுகிறது.

சோபியா எழுப்பிய இந்த முழக்கம் இன்னொன்றையும் கற்றுக்கொடுத்துள்ளது. உண்மையில் இது பாசிச ஆட்சிதான், ஒரு அரசியல்வாதியை எதிர்த்து கோஷம் எழுப்பினால் வழக்கு, கைது, சிறை என்று நிரூபித்துக் காட்டியுள்ளது.

இந்த ஆட்சி மக்களுக்கானது அல்ல, இதை தூக்கி எறிய உழைக்கும் மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதுதான் அது கற்பிக்கும் பாம்

ஒன்றுபடுவதற்கு எங்கு போவது என்ன செய்வது என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.

  • தங்களது துறையில் உள்ள தொழிற் சங்கங்களில் இணையுங்கள்.
  • மகளிர் குழுக்களை அணி திரட்டுங்கள்.
  • மாணவர்கள் சங்கமாக திரளுங்கள்
  • விவசாயிகள் நகர்ப்புற தொழிற்சங்கங்களுடன் இணையுங்கள்
  • அனைத்தையும் எவ்வாறு வழிநடத்துவது என்பதை தொழிற்சாலைகளில் விடாப்பிடியாக போராட்டம் நடத்தி பன்னாட்டு நிறுவனங்களை திக்குமுக்காட வைக்கும் தொழிலாளிகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் முழங்கியதை தெருக்களில் முழங்குங்கள், தெருக்களை பிரதான சாலைகளை நோக்கி நகர்த்துங்கள்.

இந்த ஆட்சி மட்டுமல்ல, இதுபோல கார்ப்பரேட்டுகளுக்காக தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, மக்கள் நலன் விரோத ஆட்சி நடத்த எந்தக் கட்சியும் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என்ற நிலையை உருவாக்குங்கள்.

இதை ஏதோ அதீத உணர்வால் சொல்லவில்லை, தொடர்ச்சியாக தொழிலாள சட்ட திருத்தங்கள், கனிமவளக் கொள்ளைக்கான திட்டங்கள், சுற்றுச்சூழலுக்கு எதிரான தாக்குதல்கள், சமூக ஆர்வலர்கள், போராடும் மக்கள் மீதான தாக்குதல்கள், சிறை, ஆற்று மணல் கொள்ளை போன்ற சமூகத்தை சீரழிக்கும் திட்டங்களை தடுக்க தனித்தனியாக போராடி வெற்றிபெற முடியாது.

ஒட்டுமொத்தமாக ஒரே குரலாக “கார்ப்பரேட்டுகளுக்காக ஆட்சி நடத்தும், மதவெறி கட்சியே ஆட்சியை விட்டு இறங்கு, உனது ஆட்சியில் போட்ட சட்டங்கள் எதுவும் செல்லாது” என்று முழங்க வேண்டும்.

ஆட்சியாளர்கள் காகிதப்புலி என்பதை இந்த சம்பவம் தெளிவாக உணர்த்திவிட்டது.

தமிழிசைக்கு உள்ளுக்குள் அச்சம். “செல்லும் இடமெல்லாம் பா.ஜ.க ஒழிக என்பார்களே, இந்தப் பொண்ணுக்கு பயத்தை காட்டினால் மற்றவர்கள் பயந்துவிடுவார்கள்” என்று நினைத்திருப்பார்.

நடந்தது வேறாக போனது!

அரசியல் முழக்கத்தை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் தங்கள் கட்சி அடியாட்கள், அரசு அடியாட்களை நாடுவதற்கு இதுதான் காரணம். இல்லையென்றால் அந்த பெண்ணிடம் பேசி விவாதித்திருப்பார்.

– பிரவீன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/tn-echoes-sofias-call-down-with-fascist-bjp/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
ஐ.டி-ல என்ன சார் நடக்குது? – வீடியோ

“யூனியன்றது நம்மெல்லாம் சேர்ந்தாதான் யூனியன். உங்களுக்கு இருக்கிற பிரச்சனை எல்லாத்துக்கும் இருக்குன்னு புரிஞ்சுக்குங்க, நம்ம செக்டார் மட்டுமில்ல, இன்னும் அன்ஆர்கனைஸ்ட் லேபர் இருக்காங்க, அந்த மாதிரி இருக்கறவங்களயும்...

ஊழியர்களின் வாழ்க்கையை அழிக்கும் “பத்ம விபூஷண்” பிரேம்ஜி-ன் இதயமற்ற விப்ரோ

சத்யராஜ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்திலிருந்து வருபவர். அவர் ஒரு முதல் தலைமுறை பட்டதாரியாகவும், அவருடைய கிராமத்தில் இருக்கும் வெகுசில...

Close