பிளாஸ்டிக் தடை : சுற்றுச் சூழல் பால் மீது அரசு பூனையின் அக்கறை!

னவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடைவிதித்துள்ளது தமிழக அரசு. இந்தத் தடை குறித்து பொதுமக்களும் சிறு வணிகர்களும் என்ன நினைக்கிறார்கள் என்று நேரில் சென்று விசாரித்தோம்.

பேசியவர்களில் பெரும்பாலானவர்கள் பிளாஸ்டிக் தடையை வரவேற்றார்கள். அதற்கான காரணங்களாக கூறியவைகளில் சில

  1.  சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிப்படைந்து வருகிறது. எனவே இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.
  2. எதிர்கால சந்ததியினருக்கு நல்ல சூழ்நிலையை உருவாக்க இது உதவும்
  3. மாடு, ஆடு ஏன் கடலில் மீன்கள் கூட இதுபோல பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொண்டு பாதித்துள்ளது எனவே இந்தத் தடை சரிதான்.

இதுபோன்ற பல்வேறு காரணங்களைக் காட்டி இந்தத் தடையை ஆதரிக்கிறார்கள். அதேநேரம் “இந்தத் தடையால் உங்களுக்கு ஏதும் பாதிப்பு இல்லையா” என்று கேட்கும் போது கூறிய கருத்துக்கள்

டீக்கடைக்காரர்

வியாபாரம் கொஞ்சம் பாதித்துள்ளது உண்மைதான். கட்டட வேலை செய்பவர்கள் தினக் கூலி வேலைகளுக்கு வருபவர்கள் பார்சல் டீ வாங்க வந்துவிட்டு பிளாஸ்டிக் கவர் இல்லை என்றதும் திரும்பிச் செல்கிறார்கள். சில நாட்களில் கொஞ்சம் மாறியுள்ளார்கள். சிலர் பாத்திரங்கள் எடுத்து வருகிறார்கள். வேலைக்கு அழைப்பவர்கள் உதாரணமாக, கட்டிட வேலைக்கு அழைக்கும் வீட்டு உரிமையாளர்கள் டீ, வடை வாங்க பாத்திரங்கள் கொடுத்து உதவினால் நன்றாக இருக்கும். வியாபாரம் குறைந்துள்ளது, பாதிப்புகள் உள்ளதுதான் எனினும் நாட்டுக்கும் மக்களுக்கும் எதிர்வரும் சந்ததியினருக்கும் நன்மை பயக்கும் என்ற வகையில் இதனை ஆதரிக்கிறேன்.

மளிகைக் கடை நடத்துபவர்

கடைக்கு வருபவர்கள் பலர் புரிந்து கொண்டுள்ளார்கள், சிலர் மட்டுமே கோபப்படுகிறார்கள். சில பொருட்கள் முந்தி சின்ன சின்ன பாக்கெட்டுகளில் வரும் எடுத்துக் கொடுப்பதுடன் வேலை முடிந்துவிடும். தற்சமயம் கொஞ்சம் வேலை அதிகமாக இருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை, சுற்றுச்சூழல் நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. அதனால இதை சகித்துக் கொண்டு வேலை செய்ய வேண்டி இருக்கிறது. அதேநேரம் இதற்கு மாற்றாக எதை பயன்படுத்துவது என்ற குழப்பம் உள்ளது. சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடையில்லை என்கிறார்கள். ஆனால் சோதனைக்கு வரும் அதிகாரிகள் அந்தப் பொருட்களையும் சேர்த்து எடுத்து விட்டு செல்கிறார்கள். எந்தெந்த பொருட்களுக்கு தடை என்று அவர்களுக்கே தெரியவில்லையா அல்லது நாங்கள் தான் தவறாக புரிந்துள்ளோமா என்று குழப்பமாக உள்ளது.

பால், எண்ணெய் போன்ற பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆனால் பெரும் நிறுவனங்களின் பொருட்கள் பிளாஸ்டிக் பொருட்களில் பேக்கிங் செய்யப்பட்டு எந்த தடையும் இல்லாமல் வந்து கொண்டுதான் உள்ளது. எனவே இந்த தடை பற்றி ஒரு முழுமை புரியாமல் உள்ளது.

இல்லத்தரசி

இந்தத் தடை வந்த பிறகு வெளியில் செல்லும்போது கையில் ஒரு பையை எடுத்துக் கொண்டு செல்வது என்று மாறி உள்ளோம். அதனால் ஒன்றும் சிரமமாகத் தெரியவில்லை. வேலை முடிந்து வரும்பொழுது கணவரிடம் சில பொருட்கள் வாங்கி வரச் சொல்லும் போது மட்டும் சிரமமாக உள்ளது. அதையும் கொஞ்சம் காலம் சென்றால் சரிசெய்துவிட முடியும். இதனால் ஏதோ தலை போகும் பிரச்சினை எல்லாம் இல்லை. இந்த பிளாஸ்டிக் என்பது இடையில் வந்ததுதானே. எனவே கொஞ்சம் காலத்திற்கு தான் சிரமமாக இருக்கும் அதன் பிறகு பழக்கமாகிவிடும்.

மாணவர்

இது ஒன்னும் பெரிய பிரச்சனையா இல்ல பிளாஸ்டிக் இல்லாம சமாளிக்க முடியும் இன்னும் கொஞ்ச நாள் ஆச்சுனா சரியாயிடும்.

இப்படி நாம் பேசியவரைக்கும் பெரும்பாலானவர்கள் சில சிரமங்கள் இருந்தாலும் பரவாயில்லை என்று ஏற்றுக்கொண்டு நாட்டிற்கும் எதிர்காலத்திற்காகவும் பிளாஸ்டிக் தடையை ஆதரிக்கிறார்கள்.

அதேநேரம் சிலர் இன்னும் சில கோரிக்கைகளையும் கேள்விகளையும் முன்வைத்துள்ளார்கள்.

  1. பிளாஸ்டிக் தடை என்று வந்தவுடன் ஏற்றுக் கொண்டோம். அதற்கு மாற்றாக வீட்டிலிருந்து பையை எடுத்துச் செல்வது பாத்திரங்களை எடுத்து செல்வது என்று இருந்தாலும் சில இடங்களில் தவிர்க்க முடியாத நேரங்களில் மாற்று பொருட்களை பயன்படுத்த வேண்டிய தேவையும் மறுக்க முடியாது. அதற்காக பெரிய அளவில் செலவு செய்வது என்பது சிரமமாக இருக்கும். சிறு தொழில் செய்பவர்கள் அந்தச் செலவுகளை ஈடு செய்ய முடியாது. எனவே, அது மாதிரியான மாற்று பொருட்களுக்கு அரசு கைகொடுத்து தூக்கிவிட வேண்டும். அப்போதுதான் பிளாஸ்டிக் தடை என்பது இயல்பானதாகவும் நீண்டகாலம் பயனுள்ள வகையிலும் தொடரும். உதாரணமாக மஞ்சள் பை தயாரிப்பு, பனை ஓலை மட்டை பயன்படுத்தி டப்பாக்கள் தயாரிப்பது, தட்டு டம்ளர் போன்றவை தயாரிப்பது உள்ளிட்ட பொருட்களுக்கு அரசு மானியம் வழங்க வேண்டும். ஏற்கனவே பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பதை சிறு தொழிலாக செய்து வந்தவர்கள் அந்த இயந்திரங்களை கடனுக்கு வாங்கி இருப்பார்கள். அதுபோக மாற்றுப் பொருட்கள் தயாரிப்பதற்கான இயந்திரங்கள் வாங்குவது உடனடி சாத்தியம் இல்லை. எனவே, இதையும் கருத்தில் கொண்டு மானியம் வழங்குவது சிறு குறு தொழில் செய்பவர்களை சுய தொழில் செய்பவர்களை தூக்கிவிட வேண்டும். அப்போதுதான் இந்தத் தடையால் பெரும் பாதிப்பு இல்லாமல் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் கொண்டு செல்ல முடியும்.
  2. ஒரு மளிகைக் கடைக்கு சென்றால் சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு போன்ற ஏராளமான பொருட்கள் இரண்டு ரூபாய் ஐந்து ரூபாய் பாக்கெட்டுகளில் போட்டு வைத்திருப்பார்கள். அது போன்ற தொழில்களில் ஈடுபட்டுவந்த சிறுதொழில் செய்பவர்கள் மாற்று பொருட்கள் இல்லாமல் தொழிலை விட்டு தூக்கி எறியப்படுவார்கள். ரஸ்னா பாக்கெட், தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட நீராகார பொருட்களும் தயாரிப்பவர்கள் மாற்று பொருட்களுக்கு செல்வது சிரமம் தான். இதனால் ஏற்படும் வருவாய் மற்றும் வேலை இழப்புகளையும், அதேநேரம் பிளாஸ்டிக் உற்பத்தி மறு உற்பத்தி செய்பவர்களின் வருவாய் வேலை இழப்புகளையும் சரி செய்யும் வகையில் திட்டம் வகுத்து அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.

இது போல செய்யாவிட்டால் சிறு குறுந் தொழில்கள் அழிந்து வேலை வாய்ப்பற்றவர்கள் எண்ணிக்கை பெருகுவதோடு திருட்டுத்தனமாக பயன்படுத்துவது என்ற சூழல் உருவாகும். ஏழ்மையையும் வளர்க்கும்.

இதுதான் சாமானிய மக்களின் பார்வை. நாட்டிற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் நன்மை பயக்கும் என்பதற்காக அரசு எடுக்கும் முடிவை ஆதரிக்கவும் நடைமுறைப்படுத்தவும் அதில் வரும் சிக்கல்களை எதிர்கொள்ளவும் கூட தயாராக இருக்கிறார்கள்.

அதேநேரம் நாட்டிற்காக, எதிர்கால சந்ததியினருக்காக என்று சொல்லிக்கொண்டு முடிவெடுக்கும் அரசைப் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் காரணம் காட்டி தான் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு அரசு தடைவிதித்தது. ஆனால், உண்மையில் அரசிற்கு சுற்றுச்சூழல் மீது எந்த அக்கறையும் கிடையாது மக்கள் மீதும் எந்த அக்கறையும் கிடையாது.

இந்த பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியும், விற்பனையும் கடந்த சுமார் 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்தத் தொழிற்சாலைகளுக்கு அனுமதி கொடுத்து, உற்பத்தி வரி வசூலிப்பது, விற்பனை வரி விதிப்பது என்று தொடர்ந்து அரசு துறைகள் இதில் தொடர்பு கொண்டிருந்திருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு பெரிய பிரச்சனையாக இது உருவெடுக்கும் என்பதை ஆய்வு செய்வது யாருடைய பொறுப்பு?

மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரிப்பதைக் கூட ஒழுங்காக அமல்படுத்தாமல் விட்டிருப்பது எந்த வகையில் சுற்றுச் சூழல் மீதான அக்கறை.

மேம்பாலம் கட்டுவது, எட்டு வழிச் சாலை போடுவது, மெட்ரோ ரயில் திட்டம் என்று ‘சர்வதேச தரத்திலான’ திட்டங்களை சர்வதேய நிதி முதலீட்டுடன் அமல்படுத்தும் போது திடக் கழிவுகளை முறையாக பதப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை ஏன் இன்னும் அமல்படுத்தவில்லை.?

துப்புரவு தொழிலாளர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்து பயிற்றுவித்து கழிவுகள் கையாள்வை ஏன் முறைப்படுத்தவில்லை.

இது ஒரு புறம் இருக்க சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பல தொழிற்சாலைகளுக்கும் அரசு ஆதரவாக உள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை அரசு எவ்வாறு எதிர் கொண்டது என்று பார்த்தோம்.

உதாரணமாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டமானது சுற்றுச்சூழல் மாசுபடுகிறது, சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் வசிக்க முடியவில்லை ஆகிய காரணங்களால் தான் ஆரம்பமானது. ஆனால் அரசு அதை எவ்வாறு எதிர் கொண்டது என்பதை நாம் பார்த்தோம்.

இதற்கு இன்னொரு உதாரணமாக தமிழக அரசு இரண்டு தினங்களுக்கு முன்னர் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி கவனித்தவர்களுக்கு தெரியும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெரிய அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதற்காக தோல் தொழிற்சாலைகள் துவங்க கண்காட்சிகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள். ஏற்கனவே இருக்கும் தோல் தொழிற்சாலைகள் காரணமாக சுற்றுச்சூழல் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை பல்வேறு சமூக ஆர்வலர்களும், அரசுமே கூட அறிவித்துள்ளது. அப்படி இருக்கையில் எதற்காக மேலும் தோல் தொழிற்சாலைகளை ஈர்க்கும் விதமாக கண்காட்சிகள் நடத்த வேண்டும்?

தோல் தொழிற்சாலைகள் காரணமாக நிலத்தடி நீர், காற்று, மண் போன்றவை முற்றுமுழுதாக பாதிக்கப்படுகின்றன. திண்டுக்கல் அருகில் இருக்கும் ஒரு தோல் தொழிற்சாலை வெளியிடும் கழிவுகள் காரணமாக அந்த பகுதியில் மழை நீர் சேகரிக்க முடியாத அளவிற்கு நீர்நிலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வாணியம்பாடி பகுதிகளில் இந்த நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கண்கூடாக பிளாஸ்டிக்கிற்கு நிகராக சுற்றுச்சூழலை பாதிக்கும் இதுபோன்ற தொழிற்சாலைகளை அனுமதிக்கும் அரசு பிளாஸ்டிக் தடை விதித்ததற்கு வேறு உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது.

இந்திய அரசின் பொருளாதாரக் கொள்கை என்பது பெரு நிறுவனங்களை (கார்ப்பரேட்) ஊட்டி வளர்த்தால் அதன் விளைவாக நிறைய மக்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகள் உருவாகும் என்பதை மையமாக வைத்து சுழல்கிறது. அதனாலேயே பெரு நிறுவனங்களுக்கு வங்கி கடன்கள், கடன் தள்ளுபடி, வரிச்சலுகைகள் மானிய விலையில் மின்சாரம் நிலம் தண்ணீர் என ஏராளமான சலுகைகளை வாரி வழங்குகிறது. பெரு நிறுவனங்களின் லாபத்தை உத்தரவாதப் படுத்தும் விதமாக தொழிலாளர் நலச்சட்டங்களை திருத்துவதையும் செய்து வருகிறது. மற்றொரு பக்கம் சிறு குறு தொழில்களை அந்த தொழிலில் இருந்து விரட்டியடிப்பது மூலமாக பெருநிறுவனங்களுக்கு விரிவான சந்தையை உத்தரவாதப்படுத்த உதவுகிறது.

இந்த பிளாஸ்டிக் தடையிலும் கூட விலக்கப்பட்டிருக்கும் பொருட்களை பாருங்கள். அவை அனைத்தும் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளன. இந்த பிளாஸ்டிக் தடையால் ஒரு சில மாதங்களில் சிறு குறு நிறுவனங்கள் அழிந்து விடும் நிலையை உருவாக்கியுள்ளது. ஐந்து ரூபாய்க்கு டீக்கடைகளில் விற்பனையாகும் பன் பாக்கெட்டுகளுக்கு தடை ஆனால் 25 ரூபாய் விற்கும் பிரட் பாக்கெட்களுக்குத் தடை இல்லை.

மக்களிடம் நாட்டின் நலனுக்காக என்று சொல்லிவிட்டு பெரு நிறுவனங்களின் நலன்களுக்காக வேலை செய்வதே இந்த அரசு என்பதை பிளாஸ்டிக் தடையின் மூலமாக மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

– பிரவீன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/tn-plastic-ban-state-hypocrysy/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
பணி நீக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்ற அனுபவம்

எது எப்படி இருந்தாலும் பணி நீக்க நடவடிக்கை என்பது ஒரு ஊழியருக்கு கொடுக்கப்படும் மரணதண்டனைக்கு சமமானது என்பதை ஐடி ஊழியர்கள் உணர வேண்டும்.

தேவை – முதலாளிகளுக்கு ஒரு அப்ரைசல்!

தொழிலாளி தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறாரா, நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை எட்டியிருக்கிறாரா, தனது திறமைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறாரா என்றெல்லாம் அளக்கும் அதே நேரத்தில் உயர் மேலாளர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு...

Close