சிறுமியர் மீதான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை – சட்ட திருத்தம் குற்றவாளிகளை தண்டிக்குமா?

செய்தி :

அவசர சட்டம் அமலுக்கு வந்தது, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

கண்ணோட்டம்:

2012-ல் மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளானதைத் தொடர்ந்து பெருமளவு போராட்டங்கள் நடைபெற்றன. சட்டங்களை கடுமையாக்குவதன் மூலம் பெண்களை பாதுகாப்போம் என்று “நிர்பயா சட்டம்” என்ற பெயரில் குற்றவியல் சட்டத்தை திருத்தினர் நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

நாடு முழுவதும் பெண்கள் எதிர்கொள்ளும் தாக்குதல்களில் குற்றவாளிகளாகவும், குற்றவாளிகளை பாதுகாப்பவர்களாகவும் போலீஸ்/ராணுவம், நீதிபதிகள் மீது பாலியல் குற்றச்சாட்டு என்ற நிலையில் சட்டத்தை கடுமையாக்குவதன் மூலம் குற்றங்களை ஒழித்து விட முடியாது என்பதை கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக நடந்த தாக்குதல்கள் காட்டியிருக்கின்றன.

நம் நாட்டில் போடப்படும் சட்டங்கள் யாருக்காக வேலை செய்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றெல்லாம் வாய்கிழிய பேசுகிறோம். உண்மையில் என்ன நடக்கிறது? அதிகாரம், பண பலம், சாதி ஆதிக்கம் இவற்றின் அடிப்படையில்தான் ஒருவரது குற்றம் தண்டிக்கப்படுகிறது அல்லது தண்டிக்கப்படாமல் விடப்படுகிறது.

பண பலம் இல்லாதவர் எந்த தவறு செய்தாலும் அவரை விடக்கூடாது சாகடிக்க வேண்டும் என்றெல்லாம் கோவப்படுகிறோம். ஆனால், இதே பணபலம் படைத்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்வது வெளியே வருவதில்லை. அப்படியே மூடிமறைக்கப்படுகிறது. ஒருவேளை வெளியே தெரிந்தாலும் தண்டனையில் இருந்து எளிதாக தப்பித்து விடுகிறார்கள். அப்படியிருக்கும்போது சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்று எப்படி கூற முடியும்.

சட்டங்களை கடுமையாக்கினால் அது யாருக்கு சாதகமாக வேலை செய்யும் என்பதை நாள்தோறும் வரும் தினச் செய்திகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம். உதாரணமாக, கொலை செய்வதற்கு , அதுவும் திட்டமிட்டு குறி வைத்து நூற்றுக் கணக்கானவர்களை கொலை செய்வதற்கு சட்டத்தில் கடுமையான தண்டனை உள்ளது. நடைமுறையில் என்ன நடக்கிறது?

பா.ஜ.க முக்கிய பிரமுகர் மாயா கோத்னானி என்பவர் குஜராத்தில் மோடி ஆட்சியின் போது அமைச்சராக இருந்தவர். அவர் 2002-ல் முஸ்லீம்களுக்கு எதிராக சங்க பரிவார அமைப்புகள் நடத்திய கலவரத்தில், முக்கிய புள்ளியாக செயல்பட்டார். நரோடா பாட்டியா குடியிருப்பு பகுதியில் 36 பெண்கள், 35 குழந்தைகள் உட்பட 97 இசுலாமியர்கள் கை கால்கள் வெட்டப்பட்டு, தீயிட்டு கொளுத்தி, படு கொலை செய்யப்பட்டார்கள். இந்த கொலை வெறியாட்டத்துக்கு தூண்டுதலாக இருந்தவர் மாயா கோத்னானி. தூக்குத் தண்டனை விதிக்க வேண்டிய குற்றவாளி, இருந்தாலும் கருணை அடிப்படையில் இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பதாக விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அப்படிப்பட்ட மாயா கோத்னானி இப்போது குஜராத் உயர்நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி, மத்தியில் மோடி ஆட்சி என்ற நிலையில் இந்துத்துவ கொலையாளிகள் ஒவ்வொருவராக விடுவிக்கப்படுகின்றனர்.  போலி என்கவுண்டர் கொலை வழக்குகளில் இருந்து அமித் ஷா மீது வழக்கு  அடுத்தடுத்த நீதிபதிகள் மாற்றத்துக்குப் பிறகு (அதில் ஒரு நீதிபதி மர்மமான முறையில் உயிரிழந்தார்)  விசாரணையே நடக்காமல் தள்ளுபடி செய்யப்பட்டது. மக்கா மசூதி, அஜ்மீர் தர்கா, சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் குண்டு வழக்குகளில்  அசீமானந்தா விடுவிக்கப்பட்டிருக்கிறார். குஜராத் படுகொலைகள் தொடர்பான மாநில முதல்வராக இருந்த மோடியின் ஈடுபாடு குறித்து வழக்கு பதிவே செய்யப்படவில்லை.

எனவே, சிறுமியர் மீதான பாலியல் தாக்குதல்களுக்கு மரண தண்டனை என்ற சட்ட திருத்தமும் நடைமுறையில் என்ன செய்து விடும்? உண்ணாவ் பாலியல் வன்கொடுமை குற்றவாளி பா.ஜ.க சட்ட மன்ற உறுப்பினர். அவருக்கு ஆதரவாக போலீஸ், அதிகார வர்க்கம் செயல்பட்டு குற்றத்தை பதிவு செய்யக் கூட மறுத்தது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை போலீஸ் காவலில் கொல்லப்பட்டிருக்கிறார்.

ஜம்முவில், கத்துவா சிறுமி மீது பாலியல் தாக்குதல் நடத்திய பிரமுகர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க அமைச்சர்களும், ஜம்மு வழக்கறிஞர்கள் கவுன்சிலும் பேரணி நடத்தியிருக்கின்றனர். வழக்கு தாக்கல் செய்ய வந்த பெண் வழக்கறிஞரை தாக்கியிருக்கின்றனர்.

இந்நிலையில்தான் சட்டத்தை கடுமையாக்குகிறோம் என்று புற்றுநோய்க்கு பர்னால் தடவுகிறது மோடி அரசு.

சட்டம் இயற்றுவது ஒரு பிரிவு, அதை அமல்படுத்துவது இன்னொரு பிரிவு என்று இரட்டை ஆட்சி இருப்பது வரை சமூக குற்றங்களை தண்டித்து விட முடியாது.

இந்த நோயை தீர்க்க ஒரே வழி அறுவை சிகிச்சைதான். இந்த போலி ஜனநாயக அரசுக் கட்டமைப்பை அகற்றி விட்டு உண்மையான மக்கள் அதிகாரத்துக்கான ஜனநாயகத்தை நிறுவ வேண்டும். சட்டம் இயற்றுபவர்களே அதை அமல்படுத்துபவர்களாகவும் பணியாற்றும் சோசலிச முறையில்தான் பதவி, அதிகாரம், சமூக அந்தஸ்து இவற்றைத் தாண்டி அனைத்து குற்றவாளிகளும் தண்டிக்கப்படுவார்கள்.

– சுகேந்திரன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/tough-laws-will-not-punish-sexual-offences/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
இந்திய ஆங்கிலேயர்கள் : வேகமாக வளரும் இந்தியாவின் புத்தம் புதிய சாதி

கடுமையான போட்டி நிலவும் நுழைவுத் தேர்வுகள் ஏதுமின்றி, சர்வதேச முறைகளைக் கொண்டு மதிப்பீடு செய்து இடம் வழங்கப்படுகிறது. போட்டிகள் அதிகமற்ற, முழுமையான, ஆளுமைகளாக உருவாக இந்த வகை...

கார்ப்பரேட்டுகளின் சுமைதாங்கி மோடி – புதிய தொழிலாளி செப்டம்பர் 2016 : பி.டி.எஃப் டவுன்லோட்

பி.டி.எஃப் டவுன்லோட் 1. செப்டம்பர் 2 போராட்டக் களத்தில் பு.ஜ.தொ.மு 2. காவிரி : இனவெறியால் தீர்க்க முடியாது 3.  காதலாய் வந்தாலும் ஆதிக்கம் ஒழிக! ஆதிக்கம்...

Close