ஊடகக் கதாநாயகன் மோடியும், நாட்டின் நிஜ நாயகர்களும்!

புராணக் கதைகளை கதா காலட்சேபங்களில் கேட்டு அல்லது தொலைக்காட்சிகளில் பார்த்து விவாதிப்பதும், காவிய நாயகனின் வீரத்தையும் ஒழுக்கத்தையும் வியந்து போற்றுவதும் இந்துமத நடைமுறைகளில் ஒன்று. 21-ம் நூற்றாண்டின் அப்படிப்பட்ட ஒரு காவிய நாயகன் வழக்கமான காவிய நாயகர்களைப் போலவே தனது மேட்டுக்குடி நண்பர்களுக்காக பெருவாரியான உழைக்கும் மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்திய நிகழ்வுதான் பணமதிப்பு நீக்க நடவடிக்கை. அந்த காவிய நாயகன் வேறு யாருமில்லை, அவரது நண்பர்கள் நடத்தும் ஊடகங்களால் ஊதிப் பெருக்கப்பட்ட 56 இஞ்ச் பலூன் ஆன காவி நாயகன் மோடிதான்.

இந்தியாவின் உழைக்கும் நாயகர்கள்

நமது உண்மையான நாயகர்களில் முதலில் வருபவர் உண்மையான உழைப்பைத் தவிர வேறொன்றையும் அறியாதவர். அவர் பெயர் யஸ்பால்சிங் ராத்தோர். இவர் ஹீரோ மோட்டார் நிறுவனத்தில் வேலைபார்த்த 20 வயது தொழிலாளி. முதலில், இவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் பணப்பற்றாக்குறையால் பெண் வீட்டாரால் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு ஹீரோ மோட்டார் தயாரிக்கும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டதால் நிறுவனம் அவரை வேலையை விட்டே நீக்கியது.

காவி கதாநாயகன் மோடி எடுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் வேலை இழந்த இந்தியர்களில் ஒருவர் ராத்தோர். மொத்தம் வேலை இழந்தவர்களின் எண்ணிக்கையை யாரும் கணக்கெடுக்கவில்லை.

காவி கதாநாயகனின் பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, புராண நாயகர்கள் உலகின் மீது அவிழ்த்து விடும் பயங்கரவாத நடவடிக்கைகளை விட பயங்கரமானதாக இருந்தது. அன்றாட பொருட்களை வாங்கக் கூட முடியாமல் கோடிக்கணக்கான மக்கள் அவதிப்பட்டனர். காய்கறி, மளிகை, இறைச்சி விற்பனை பலமாக பாதித்தது.

காவி கதாநாயகனை ஊதிப் பெருக்கும் ஊடகங்களால் கூட இந்த நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை மறைக்க முடியவில்லை. சர்வதேச நிதி நிறுவம் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று கூறியிருக்கிறது. எச்.டி.எஃப்.சி மற்றும் டாடா மோட்டார் நிறுவனங்களில் இயக்குனராகவும் டி.சி.பி வங்கியின் சேர்மனாகவும் செயல்படும் நாசர் முஞ்சி, “இந்த பணமதிப்பு நடவடிக்கையால் ஏழைகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறியிருக்கிறார்.

இந்தியாவின் உழைக்கும் நாயகர்கள்

நமது நாட்டின் உண்மையான நாயகர்களான உழைக்கும் மக்கள் இந்த 56 இஞ்ச் காவி கதாநாயகன் கண்ணீர் விட்டு அழுததையும், எல்லையில் கால்கடுக்க நிற்கும் ராணுவ வீரர்களை உதாரணம் காட்டியதையும் பார்த்து தங்களது கஷ்டங்கள் தற்காலிகமானது என்று நம்பும்படி கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஆனால், முடிவில்லாமல் தொடரும் காவி நாயகனின் கோமாளித்தனங்கள், உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேலும் மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன. கிராமப் புறங்களில் இருந்து நகரங்களுக்கு முறைசார தொழில்களில் வேலை செய்ய வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தத்தமது கிராமங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கிராமத்தில் உள்ள குடும்பங்களுக்கு பணம் அனுப்புவது சாத்தியமில்லாமல் போயிருக்கிறது. குழந்தைகளுக்கு பால் வாங்குவதற்கும், ரொட்டி, காய்கறி வாங்குவதற்கும் கூட வருமானம் போதாமல் அவை ஆடம்பர பொருட்களாக ஆகி விட்டன.

இந்தியாவின் உழைக்கும் நாயகர்கள்

ஹீரோ மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயதான சுனில்குமார் மாதம் ரூ 15,000 வருமானம் ஈட்டி வந்தார். காவி கதாநாயகன் அம்பானிக்கும், அதானிக்கும், ஜக்கி வாசுதேவுக்கும் உழைத்துக் கொண்டிருக்கும் போது உண்மையான நாயகன் சுனில்குமார் தனது இரண்டு குழந்தைகளுக்கும் பால், காய்கறி வாங்குவதற்குக் கூட பணம் இல்லை என்கிறார். தங்களைப் போன்றோருக்கு ஏற்பட்ட கொடுந்துயரம் இது என்கிறார்.

அத்தியாவசியப் பொருட்களின் வேண்டல் பெருமளவு வீழ்ச்சியடைந்ததால் உருளைக் கிழங்கு, தக்காளி போன்ற காய்கறிகளின் விலை 42% முதல் 72% வரை வீழ்ச்சியடைந்தது (NCDEX institute of Commodity Marker and Research). பணமதிப்பு நடவடிக்கையின் முதல் மாதத்தில் மட்டும் சிறு மற்றும் குறுந்தொழில்கள் 35% தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பியதாக அகில இந்திய உற்பத்தியாளர்கள் சங்கம் கூறுகிறது. இவ்வேளையில் காவி கதாநாயகன், எல்லாம் 50 நாளில் சரியாகி விடும், இல்லையென்றால் தன்னை தூக்கிலிடுங்கள் என்று சவடால் விட்டுக் கொண்டிருந்தார். அடுத்து வந்த மாதங்களில் கட்டுமான, மற்றும் வாகன உதிரிபாகங்கள் தயாரிப்புத் துறைகளில் 35%-க்கு மேல் வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

மூன்றாவதாக நாம் பார்க்கப் போகும் நாட்டின் நாயகன் தினக்கூலி வேலை செய்யும் 46 வயதான ரபிக் அலி. நவம்பருக்குப் பிந்தைய இரண்டு மாதங்களில் மொத்தம் 12 நாட்களே வேலை கிடைத்ததாக கூறுகிறார். மனைவி மற்றும் குழந்தைகளை ஊருக்கு அனுப்பி விட்டு தான் ரொட்டி, உருளைக் கிழங்கு மட்டும் சாப்பிட்டு தாக்குப் பிடிப்பதாக சொல்கிறார். டீ குடிப்பதை விட நிறுத்தி விட்டதாக கூறுகிறார். இந்த நேரத்தில் காவி கதாநாயகன் உலகம் முழுவதும் சுற்றி வந்து விருந்து உண்டதால் ஏற்பட்ட வயிற்றுக் கோளாறை சரி செய்ய இப்போதெல்லாம் தான் சமையலறையில் சமைத்த உணவை மட்டும் உண்டு வருகிறாராம். இலட்சக்கணக்கான மதிப்பிலான கோட்டை துறந்து பல ஆயிரம் மதிப்பிலான உடைகளை மட்டும் அணிகிறாராம். தனது மித்ரன்களான அம்பானி, அதானிகளுடன் அவர் டீ குடிக்கும் நேரத்தில்தான் நமது நாட்டின் நாயகர்களில் ஒருவரான ரஃபீக் தனது குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்.

காவி கதாநாயகர் சொல்லி வரும் வல்லரசு உல்லாசக் கதைகளுக்கு மாற்றாக உழைக்கும் மக்களின் வாழ்வை போற்றும் காவியங்களை சொல்லப் புறப்பட்டால், அவர்களது துயரங்களை பதிவு செய்ய வேண்டியுள்ளது.

நான்காவதாக நாம் பார்க்கும் நாட்டின் நாயகன் 38 வயதான ஹோட்டிலால். கடந்த 2 மாதங்களில் 6 நாட்கள் மட்டும் அவருக்கு வேலை கிடைத்துள்ளது. அவரது 18 வயது மகன் அலுவலகம் ஒன்றில் துப்புரவு வேலை செய்து சம்பாதிக்கும் ரூ 7000 வருமானத்தில்தான் குடும்பம் நடக்கிறது என்கிறார். பையன் வேலைக்குப் போவதை நிறுத்தி விட்டு கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கும் கனவு கானல் நீராகப் போய்க் கொண்டிருக்கிறது. லாலின் மகன் வாங்கும் சம்பளம் அவர் வழக்கமாக சம்பாதிக்கும் வருமானத்தில் பாதிதான். வருமானம் குறைந்து விட்டதால் கடந்த இரண்டு மாதங்களாக காய்கறிகள், பால் வாங்குவதை பெருமளவு குறைத்து விட்டதாக கூறுகிறார்.

காவி கதாநாயகனின் மேடை நடிப்புகள் தொடர்கின்றன, திரைமறைவில் அவரது மித்ரன்கள் கோடிகளை குவித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் உண்மையான நாயகர்கள் தமக்கு ஏற்பட்ட கஷ்டங்களை தாங்கிக் கொண்டு உழைப்பதன் மூலம் நாடு இயங்கிக் கொண்டிருக்கிறது. நாடக நடிகர்களையும், அவர்களை இயக்கும் சூத்திரதாரிகளையும் துரத்தி விட்டு, உண்மையான நாயகர்களான தாங்களே நாட்டை வழிநடத்த வேண்டும் என்று உணரும் போது இந்த உலகை அவர்கள் மாற்றி விடுவார்கள்.

– ஆசாத்

Permanent link to this article: http://new-democrats.com/ta/true-heroes-and-patriots-of-india/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
டெக் மகிந்திரா லேஆஃப், கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஜூன் மாத சங்க உறுப்பினர்கள் கூட்டம்

நிகழ்ச்சி நிரல் டெக் மகிந்திரா சட்ட விரோத பணிநீக்கங்கள் - எதிர்கொள்வது எப்படி? கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் - ஊடகங்கள் விற்பனைக்கு சங்க நடவடிக்கைகள் குறித்து

செல்வத்தை குவிக்கும் 1%, வேலை வாய்ப்பு இழக்கும் 99%

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையேயுள்ள இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வது சமூகத்தில் கலகங்களை உருவாக்கும் என்றும் கடந்த ஆண்டில் மட்டும் இது தொடர்பான போராட்டங்கள் கணிசமான அளவில் அதிகரித்துள்ளன...

Close