நாசகார ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி பத்தாயிரக்கணக்கான தூத்துக்குடி மக்கள் திரண்டு நடத்திய போராட்டத்தை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது அரசு. அதிகாரபூர்வ தகவல்களின்படியே 13 பேர் போலீஸ் துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகினர். நூற்றுக் கணக்கான பேர் காயமடைந்தனர்.
அதைத் தொடர்ந்து கடந்த 3 வாரங்களாக தூத்துக்குடி மாவட்டமும், பிற தென் மாவட்டங்களும் போலீசின் அடக்குமுறை நடவடிக்கைகளை எதிர் கொண்டுள்ளன.
அரசும் போலீசும் மக்களை எப்படி நடத்துகின்றன என்பதை தூத்துக்குடி அருகில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த இந்த ஐ.டி ஊழியரின் அனுபவத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
“பிரச்சனையைப் பற்றி எல்லோரும் நிறைய பேசி விட்டோம். 22-ம் தேதி பிரச்சனை நடந்தது. அதற்குப் பிறகு நடந்த சம்பவங்களைப் பற்றி நான் சொல்கிறேன்.
என்னுடைய குடும்பம் கோடை விடுமுறையை ஒட்டி கிராமத்திற்கு போயிருந்தார்கள். 22-ம் தேதி அன்று சென்னையிலிருந்து ஊருக்குக் கிளம்பினேன். திருநெல்வேலி போய் அங்கிருந்து பைக் எடுத்துக் கொண்டு ஊருக்குப் போனேன். ஏனென்றால், இங்கிருந்து நேரடியாக போக முடியவில்லை.
திருநெல்வேலியிலிருந்து பைக் எடுத்துக் கொண்டு போகும் போது, அதாவது தூத்துக்குடி – திருநெல்வேலி பைபாஸ் ரோட்டில் வழியில் நிறைய கிராமங்கள் இருக்கின்றன. தூத்துக்குடிக்கு வெளியில் கிராமங்களுக்கு பிரிந்து செல்லும் எல்லா ரோட்டிலும் ஒரு 3 அடி, 4 அடி சிமென்ட் கல் போட்டு ரோட்டை அடைத்து விட்டார்கள். கிராமத்தில் இருப்பவர்கள் ஆஸ்பிட்டலுக்கு வர வேண்டும், அவசர சிகிச்சைக்கு வர வேண்டும் என்றால் கூட வழியில்லை. உள்ளே ஆரம்ப சுகாதார நிலையம்தான் இருக்கும். மூன்று நாளைக்கு யாரும் வெளியில் வர முடியாமல் தடுக்கப்பட்டிருந்தனர்.
என்னால் எனது சொந்த கிராமத்துக்குள்ளேயே போக முடியவில்லை. பந்தோபஸ்துக்கு நின்றிருந்த போலீசுடன் பெரிய விவாதத்துக்குப் பிறகுதான் உள்ளே போக முடிந்தது.
பால் கிடையாது. ஆவின் பூத் நகரத்துக்குள்தான் இருக்கிறது. ஹெரிடேஜ், ஆரோக்யா என்று எல்லா பிரைவேட் பாலும் கடைகளில் கிடைக்கின்றன. அன்றன்று டெலிவரி ஆகும் கவர்ன்மென்ட் பால் ஆவின் கிடைக்கவில்லை. இதுதான் அந்த மூன்று நாள் நிலைமை. என் குழந்தைக்கு நாங்கள் ஆவின் பால்தான் குடுப்போம். அதை வாங்குவதற்கு நகரத்துக்குள்ளும் போக முடியவில்லை.
பவர் கட். மின் வினியோகத்தை முழுக்க துண்டித்து விட்டார்கள். ஏன், என்னவென்று விபரம் தெரியாது, யாரிடமும் கேட்கவும் முடியாது.
ஒவ்வொரு வீட்டிலிருந்தும் வயசு பையன்களை பார்த்து அழைத்துக் கொண்டு போய் விட்டிருந்தார்கள். அன்றைக்கு 22-ம் தேதி நான் கிளம்பினேன். நான் போவதற்கு முன்பு ஊரிலிருந்து அழைத்து போய் விட்டார்கள். நான் முன்கூட்டியே போயிருந்தால் என்னையும் கூப்பிட்டு போயிருப்பார்கள்.
23-ம் தேதி விடியற்காலையில் 5, 6 மணிக்கு போலீஸ் வந்து கிராமத்தில் இருந்து 50-70 இளைஞர்களை கொண்டு போய் விட்டார்கள். எங்கே அழைத்து போனார்கள், எதற்கு அழைத்து போனார்கள், எந்த காரணமும் யாருக்கும் தெரியாது. எங்கே இருக்கிறார்கள், எப்படி இருக்கிறார்கள் என்று தெரியாது. அந்தத் தகவலை பெற்றோர்களுக்குக் கூட சொல்லவில்லை. ‘சந்தேகத்தின் பேரில் கூப்பிட்டு போயிருக்கிறோம். சந்தேகம் தீர்ந்தபிறகு அனுப்புகிறோம். எந்தக் கேள்வியும் கேட்காதீர்கள். அவசர நிலைமை’ என்று சொல்லியிருக்கிறார்கள்.
எங்கள் கிராமத்துக்கு பக்கத்தில் செல்வசேகர் என்ற இளைஞரை போராட்டத்தில் சுட்டுக் கொன்று விட்டார்கள். 3 நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை அன்று அந்தக் குடும்பத்தை பார்ப்பதற்கு கலெக்டர் வந்தார். வரும் போது அவர் முன்பே இளைஞர்கள் எல்லாம் போய் நின்று, “இத்தனை பேரை கூப்பிட்டு போயிருக்கிறீர்கள், இவ்வளவு பேர் எங்கே போனார்கள், தகவல் சொல்லுங்கள்” என்று கேட்கும் போது கலெக்டருக்கே தெரியவில்லை, இங்கிருந்து 50 பேரை கூப்பிட்டு போயிருக்கிறார்கள் என்று.
போலீஸ் ஒருவரை அரெஸ்ட் செய்ய போகிறார்கள் என்றால், ஒரு எமர்ஜென்சி நிலையில், சாதாரண நிலை என்றால் பரவாயில்லை, எந்த கிராமத்திலிருந்து எத்தனை பேரை கூப்பிட்டு போயிருக்கிறோம் என்ற விஷயம் கலெக்டருக்கு தெரிய வேண்டும். கலெக்டரே சர்ப்ரைஸ் ஆகத்தான் கேட்கிறார். “இத்தனை பேரை கூப்பிட்டு போயிருக்கிறார்களா, தெரியவில்லை, நான் கேட்கிறேன்” என்கிறார். நாங்கள் விடவில்லை. அவர் முன்பே உட்கார்ந்து விட்டோம்.
மக்கள் காரின் முன் உட்கார்ந்து மறித்த பிறகு ஃபோன் பண்ணி பேசி தெரிந்து கொண்டு, “ அழைத்துச் சென்றவர்களை தூத்துக்குடிக்கு வெளியில் கல்யாண மண்டபத்தில் வைத்திருக்கிறார்கள். திங்கள் கிழமை suspect parade நடக்கிறது, அதன் பிறகு விபரங்களை வாங்கி விட்டு வெளியே அனுப்பி விடுவோம். யாரும் பயப்படத் தேவையில்லை, யாரையும் அடிக்கவில்லை, யாரையும் கொடுமைப்படுத்தவில்லை, எல்லோருக்கும் சாப்பாடு கொடுத்து, பிரியாணி வரைக்கும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நல்லா கவனித்துக் கொள்கிறோம். இங்கே இருப்பதை விட நல்லா பாதுகாப்பாக இருக்கிறார்கள். இங்கே இருந்தால் வெளியில் போய் பிரச்சனையில் மாட்டிக் கொள்வார்கள், அங்கு பத்திரமாக இருக்கிறார்கள்” என்கிறார்.
[அதாவது, கிராமத்துக்குள் வீட்டுக்குள் இருந்தால் அரசைப் பொறுத்தவரையில் இளைஞர்கள் குற்றவாளிகள், அவர்கள் போலீஸ் முகாமுக்குள் சென்று தங்களை நிரபராதிகள் என்று நிரூபிப்பது வரை அவர்களை பிடித்து வைத்திருக்கலாம்.]
இன்னொன்று பணம். ஏ.டி.எம் இருக்கிறது. பணம் எடுக்க முடியாது. இன்டெர்நெட் டவுன். சில ஏ.டி.எம்-களில் நகரத்தில் போய்தான் எடுக்க முடியும். வெளியே போக முடியாததால் பணம் தட்டுப்பாடு
பெட்ரோல்/டீசல் வாங்க முடியாது. விவசாயம் செய்யும் இடம். கரெண்ட் இல்லை. பெட்ரோல்/டீசல் கேனில் கொடுக்கக் கூடாது என்று சொல்லி விட்டார்கள். டிராக்டர் வைத்திருப்பவர்கள், ஜெனரேட்டர் வைத்திருப்பவர்களுக்கு சப்ளை கட்.
எங்கள் வீட்டு பக்கத்தில் ஒரு கட்டிட பணி நடந்து கொண்டிருந்தது. பக்கத்தில் 4 கூரை வீடு, பக்கத்திலேயே ஒரு புளியமரம். அந்த கட்டிடத்திலிருந்து 22 அடி இரும்பு கம்பி பெரிய கம்பி – தியேட்டர் போல கட்டுவதற்கான beam. அந்த இரும்பு கம்பி காற்றில் விழுந்து விட்டது. அது புளிய மரத்தில் சாய்ந்து தொங்கிக் கொண்டிருக்கிறது. கீழே குடிசை வீடுகள் இருக்கின்றன.
இடத்தின் ஓனர் புல்டோசர் வைத்து எடுத்து போகிறேன் என்று தயாராக இருக்கும் போது கல் போட்டு வைத்திருக்கும் போலீசிடம் போய், “இப்படி இரும்பு கம்பி சாய்ந்திருக்கிறது, விழுந்து விட்டால் குடும்பமே போய் விடும், 22 அடி கம்பி இதை எடுப்பதற்கு புல்டோசர் வர வேண்டும். பாளையங்கோட்டையிலிருந்து வருவிக்க வேண்டும். இந்தக் கல்லை தூக்கி புல்டோசரை மட்டும் விட்டு விடுங்கள்” என்று 23, 24, 25 மூன்று நாட்கள் கேட்கிறோம். மூன்று நாட்களும் அதை அகற்றவே இல்லை. “144 தடை போட்டிருக்கிறது, வண்டி எல்லாம் வர முடியாது” என்கிறார்கள். அந்த கம்பி விழுந்திருந்தால் அந்த குடும்பங்களுடைய நிலைமை என்ன ஆகும்?
இதை அந்த ஊராட்சி தலைவரிலிருந்து கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட போய் பேசியும் எடுபடவில்லை. இதை பெரிதாக ஆக்கி பிணம் விழும் என்ற நிலையை எப்படி வெளியில் கொண்டு போவது என்று தெரியவில்லை.
மின்சாரம் வெட்டு, இணைய இணைப்பு வெட்டு. போலீசும், “விழுந்தாலும் பரவாயில்லை, நாங்க விட மாட்டோம். 144 போட்டிருக்காங்க, முடியாது. இங்கு வரக்கூடாது. இங்கு ஏன் வந்தீர்கள். அரெஸ்ட் பண்ணி விடுவோம்” என்றார்கள்.
22-ம் தேதி துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு 23-ம் தேதி ஹாஸ்பிடல் வாசலில் கலவரம் நடந்தது, பிரச்சனை நடந்தது என்று கேள்விப்பட்டிருந்திருப்பீர்கள். அதற்கு என்ன பிரச்சனை என்றால், நிறைய பேர் உள்ளே போய் விட்டார்கள். உள்ளே இறந்தவரில் ஒருத்தருக்கு போஸ்ட்மார்டம் ரிப்போர்டில் “மாரடைப்பில் இறந்து விட்டார். குண்டு பட்டிருக்கிறது. ஆனால், அவர் இறந்ததற்கு காரணம் குண்டு கிடையாது. சுடப்போகிறார்கள் என்ற பயத்தில் மாரடைப்பில் இறந்து விட்டார்” என்று சொல்லியிருக்கிறார்கள். அவரது குடும்பத்தினர் வேதனையுடன் சண்டை போடும் போது, அதற்கு அங்கிருந்த போலீஸ் தரப்பாகட்டும், அந்த அரசு தரப்பி்ல், “மாரடைப்பில் இறந்தாலும் அரசாங்க நிவாரணம் கிடைத்து விடும்” என்று சமாதானப்படுத்தியிருக்கிறார்கள்.
இறப்புக்கான உண்மையான காரணத்தை எழுத வேண்டும் என்று கேட்டால், பணத்துக்காகத்தான் கேட்கிறார்கள் என்று பண கண்ணோட்டத்துடன்தான் போலீஸ், அரசு அதிகாரிகள் பேசியிருக்கிறார்கள். மக்களை இவ்வளவு அலட்சியமாகவும், அற்பமாகவும் பார்க்கிறார்கள். இதனால்தான் இரண்டாவது நாள் கொஞ்சம் வீரியம் ஆனது.
இது மாதிரி ஒரு விஷயத்தை அடக்குமுறையையும் உச்ச கட்ட அதிகாரத்தை வைத்து எதையும் செய்ய முடியும் என்ற வகையில்தான் அந்த விஷயத்தை அணுகியிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட எமர்ஜென்சி காலம் போலத்தான் இருந்தது. தூத்துக்குடி கஷ்டப்பட்டதை விட தூத்துக்குடியை சுற்றியிருக்கிற கிராமங்கள்தான் அதிகமாக கஷ்டப்பட்டன. தூத்துக்குடி நகரில் ஹாஸ்பிடல் போய் விடலாம், மருந்து கடை திறந்திருக்கும்.
அந்த நேரத்தில், சுற்றியிருக்கும் கிராமங்களில் எத்தனை குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தை பிறப்பை எல்லாம் எப்படி சமாளித்தார்கள். எத்தனை பேர் இருதய நோயாளிகள், உணவுக்கு என்ன செய்தார்கள். எப்படி இக்கட்டான நிலைமையை சமாளித்தார்கள் என்பது painful.
***
ஸ்டெர்லைட் முழுக்க முழுக்க அரசால் திட்டமிடப்பட்ட கலவரம்தான். இனிமேல் இது போன்ற போரட்டம் வரவே கூடாது என்று கிராம மக்களை சித்திரவதை செய்து இனிமேல் போராடுவதற்கு பயப்படுவார்கள் என்று செய்திருக்கிறார்கள். எப்படியானாலும் ஸ்டெர்லைட்டை திறக்காமல் விடப் போவதில்லை. 10,000 கோடி ரூபாய் முதலீடு. திறந்தால் இது போன்ற பிரச்சனை வரக்கூடாது என்றுதான் போலீஸ் இப்படி செய்கிறார்கள்.
ஒடிசாவிலும் வேதாந்தாவுக்கு எதிராக போராடிய பழங்குடி மக்களை தீவிரவாதிகள் என்றுதான் அரசு பிரச்சாரம் செய்தது. பழங்குடி மக்கள் போராடிதான் அதை வீழ்த்தியிருக்கிறார்கள். இங்கும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேசுபவர்கள் எல்லோரையும் தீவிரவாதிகள், நக்சலைட்டுகள், anti இந்தியன் என்று பிரச்சாரத்தை தினமலர் போன்ற பத்திரிகைகளும், பார்ப்பன கருத்தியல் கொண்டவர்களும் தொடர்ந்து செய்கிறார்கள். தூத்துக்குடிக்கு ராணுவம் வர வேண்டும் கேள்வி கேட்காமல் அடித்து நொறுக்க வேண்டும் என்று பேசுகிறார்கள்.
“உனக்கு இதுதான் நல்லது, நான் வீசுற அரிசியைத்தான் நீ சாப்பிட வேண்டும். நான் போடுவதுதான் வாழ்க்கை” என்பதுதான் அவர்களது அணுகுமுறையாக உள்ளது.