ஐ.டி துறையில் தொழிற்சங்கம் : கார்ப்பரேட்டுகளது பூச்சாண்டி

KITU என்கிற பெயரில் உருவான ஐ.டி ஊழியர்கள் சங்கத்தை தொழிற்சங்க சட்டம், 1926-ன்படி பதிவு செய்திருக்கிறது, கர்நாடக மாநில அரசு. இந்த செய்தி வெளிவந்த உடனே கொந்தளித்து கிடக்கின்றன, ஐ.டி நிறுவனங்கள். ‘ஐ.டி நிறுவனங்களில் தொழிற்சங்கம் துவங்க அரசு அனுமதிக்காது என்று 2014-ம் ஆண்டில் கர்நாடக மாநில அரசு எங்களுக்கு கொடுத்த உறுதிமொழியை மீறிவிட்டதாக’ இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் மனிதவள தலைமை அதிகாரி மோகன்தாஸ் பை என்பவர் துள்ளிக் குதிக்கிறார். ‘ஐ.டி துறையில் சங்கத்தை பதிவு செய்ய அனுமதித்ததன் மூலம் பெங்களூரு நகரத்தின் இமேஜ் கெட்டுவிட்டது’ எனவும், இனிமேல் ‘இங்குள்ள ஐ.டி நிறுவனங்கள் விரிவாக்கம் செய்வதற்கு ஒன்றுக்கு இரண்டு முறை யோசிப்பார்கள்’ என்றும் மிரட்டுகிறார், மோகன்தாஸ்.

மோகன்தாஸ் பை

“தொழிற்தகராறு சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் சட்டங்கள் ஐ.டி ஊழியர்களுக்குப் பொருந்தும்” என்கிற அறிவிப்பை தமிழக அரசின் தொழிலாளர் துறை வெளியிட்டது. அப்போதும் மேற்குறிப்பிடப்பட்ட மோகன்தாஸ் பை புலம்பினார்.

தொழிற்சங்கம் அமைத்தால் நாட்டின் தொழில்வளம் கெட்டுவிடுமா? தொழிற்சங்கத்தை பதிவு செய்துவிட்டால் அந்த அரசு மக்கள்விரோத அரசாகிவிடுமா? அப்படித்தான் சொல்லுகின்றனர், முதலாளிகள். இது கர்நாடகாவில் மட்டும் நடக்கவில்லை. தமிழகத்திலும் நாம் இப்படிப்பட்ட மிரட்டல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறோம். குரல்களும், வாதங்களும் தான் வேறுவேறாக இருக்கிறதே ஒழிய முதலாளிகளது நோக்கம் ஒன்றாகத் தான் இருக்கிறது. எந்தத் தொழிலாளியும் அல்லது ஊழியரும் தொழிற்சங்கம் அமைக்கக்கூடாது என்பதுதான் அந்த பொதுநோக்கம்.

2015-ம் ஆண்டில் பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு எடுத்த முயற்சிகளின் பலனாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தலையீட்டின்பேரில், “தொழிற்தகராறு சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் சட்டங்கள் ஐ.டி ஊழியர்களுக்குப் பொருந்தும்” என்கிற அறிவிப்பை தமிழக அரசின் தொழிலாளர் துறை வெளியிட்டது. அப்போதும் மேற்குறிப்பிடப்பட்ட மோகன்தாஸ் பை புலம்பினார்.

தமிழக அரசின் அறிவிப்பையடுத்து, சென்னை மற்றும் கோவை நகரங்களில் பணிபுரியக்கூடிய ஐ.டி ஊழியர்கள் பு.ஜ.தொ.மு-வில் இணைந்து தங்கள் மீதான அடக்குமுறைகளுக்கெதிராக போராடத் துவங்கினர். முதல்கட்டமாக, சென்னையில் பணிபுரியக்கூடிய விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்கள் தொழிற்தகராறு சட்டத்தின்படி சென்னை தொழிலாளர் அலுவலர் முன்பாக தொழிற்தகராறு எழுப்பினர்.

தொழில் தாவாவில் பு.ஜ.தொ.மு எழுப்பிய பிரச்சினைகளூக்கு பதில் அளித்திருக்கும் விப்ரோ நிர்வாகம், ஒரு நயவஞ்சகமான பதிலை தெரிவித்துள்ளது. “எங்களுக்கு எதிராக தொழிற்தாவா பதிவு செய்திருக்கும் இந்த தொழிற்சங்கத்தில், எமது நிறுவனத்தின் ஊழியர்களை பிரதிநிதித்துவம் செய்வதற்குப் போதுமான எண்ணிக்கையில் எமது ஊழியர்கள் உறுப்பினர்களாக இல்லை, அதனால் இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது” என்று கூறியிருக்கிறது. இதை மேலோட்டமாகப் பார்த்தால், போதிய எண்ணிக்கையில் உறுப்பினர்கள் இருந்தால் சங்கத்தை அங்கீகரித்துவிடுவார்கள் போலிருக்கிறதே என்று எண்ணத் தோன்றும். ‘உங்களது சங்கத்தில் யார், யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்கின்றனர் என்கிற பட்டியலைக் கொடு; சங்கம் துவங்கிய கருப்பு ஆடுகள் யாரென்று கண்டுபிடித்து காவு போட்டுவிடுகிறேன்’ என்கிற சூது தான் இந்த பதிலுரையின் பின்னே ஒளிந்திருக்கிறது.

விப் ரோ ஊழியர்கள்

கைநிறைய சம்பளம் வாங்கிய நாங்கள் விருப்பப்பட்டு ராஜினாமா செய்து விட்டு, வழக்கு போடுவதற்கு கோமாளிகளா?

என்ன தான் முதலாளிகள் அறிவாளிகளாக காட்டிக்கொண்டாலும், இலட்சக்கணக்கில் சம்பளம் கொடுத்து சட்ட வல்லுநர்களை ஆலோசகர்களாக வைத்துக் கொண்டாலும், தங்களது சொந்த காசிலேயே சூனியம் வைத்துக் கொள்வதில் வல்லவர்கள் என்பதை விப்ரோ நிர்வாகமும் நிரூபித்துவிட்டது. போதிய எண்ணிக்கை உறுப்பினர்கள் இருக்கின்ற சங்கமே உண்மையான பிரதிநிதித்துவம் கொண்ட சங்கம் என்பதற்கு சான்றாக ஒரு தீர்ப்பை ஆவணமாக கொடுத்தது, நிர்வாகம். அந்த தீர்ப்போ சங்கத்தை எப்படி அங்கீகரிக்க வேண்டும் என்று நிர்வாகத்துக்கு அறிவுரை சொல்லக்கூடிய தீர்ப்பாக இருந்தது. ஒரேஒரு தொழிலாளிக்காககூட ஒரு சங்கம் தொழிற்தாவா எழுப்பவும், நீதிமன்றம் செல்லவும் உரிமை இருக்கிறது, என்கிறது உச்சநீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பு. இதை அறிந்தவுடன் சங்கத்தை அங்கீகரித்துவிடுமா விப்ரோ நிர்வாகம்?

சட்டத்தின்படி நடந்து கொண்டால் அவர்கள் முதலாளிகளாக இருக்கமாட்டார்கள் என்பது தான் வரலாற்றுவிதி. சட்டத்தை மதிப்பதும், மிதிப்பதும் அந்த சட்டத்தால் முதலாளிகளுக்கு கிடைக்கின்ற அனுகூலத்தைப் பொறுத்தது. அவர்களைப் பொறுத்தவரையில் சங்கத்தை ஏற்க இயலாது என்று நேரடியாகவோ, வெளிப்படையாகவோ தொழிலாளர் துறையில் தெரிவிக்க முடியாது. அதனை வேறு கோணத்திலிருந்து அணுக முயன்றனர்.அவ்வளவு தான்.

பைபிளில் ஆப்பிளை சாப்பிட்டால் பாவம், ஐ.டியில் தொழிற்சங்கம் தொடங்கினால் பாவம். இந்த ஐதீகங்களை தகர்ப்பது தானே தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையை பாதுகாக்கும்? அப்படிப்பட்ட ’தகர்ப்பு’ நடவடிக்கையின் விளைவே, ஐ.டி ஊழியர்கள் சங்கம். உயிரினங்களின் தோற்றம் பற்றிய அறிவியல் நிரூபணங்களுக்குப் பின், மதவாதிகள் “மனிதர்கள் கடவுளால் படைக்கப்படாமல் இருக்கலாம். ஆனால், மனிதனை உருக்கொண்டிருக்கும் மூலப் பொருட்களை இறைவன்தான் படைத்தான்” என்று பல்டி அடிப்பது போல இப்போது “போதுமான எண்ணிக்கையில் உறுப்பினர்களாக இல்லாததால் சங்கத்தை அங்கீகரிக்க முடியாது” என்று பல்டி அடிக்கிறது விப்ரோ நிறுவனம்.

ஏதோ சட்டப்படி நடந்து கொள்வதாக காட்டிக் கொண்ட விப்ரோ நிர்வாகம், அடுத்தடுத்த கடிதங்களில் தனது கோரமுகத்தை காட்டிவிட்டது. “அனுபவம் மிகுந்த ஊழியர்களை வேலையில்லை என்று சொல்லி ‘பென்ச்’–ல் உட்கார வைத்திருக்கிறாயே, இது சட்டப்படி தவறுதானே” என்று கேட்டால், “வேலைக்குத் தேவையான புதிய புராஜக்ட்கள் வரவில்லை” என்கிறது, நிர்வாகம். “ஒரு பணியிடத்தில் போதிய வேலை இல்லை என்றால் தற்காலிகமாக ஆலைமூடல் (லே ஆஃப்) செய்வது வழக்கம் தான். அந்த நிறுவனம் மீண்டும் முழுவேகத்தில் பணியை துவக்கும்போது, பழையவர்களுக்கு (அதாவது பென்ச்-ல் உள்ளவர்களுக்கு) தானே மீண்டும் வேலை தர வேண்டும்” என்று கேட்டால், “அது நிர்வாகத்தின் பாலிசி” என்கிற பதில் கிடைக்கிறது.

சட்டமா, பாலிசியா? எது மேலானது என்பதை யாராவது சொல்லித்தர வேண்டும் போலிருக்கிறது.

“இடிப்பது (Forecast – Profit) நீ, துடிப்பது நாங்களா? உன்னுடைய லாபவெறிக்கு பலிகடாவா நாங்கள் ஏன் இருக்கவேண்டும்” என்று ஆட்குறைப்பை எதிர்த்து வழக்குப்போட்டால். திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக, “ஆட்குறைப்பே செய்யவில்லை. வழக்கு போட்டிருப்பவர்கள் எல்லோரும் தாமாக ராஜினாமா செய்து விட்டு வெளியேறியவர்கள்தான்” என்று பச்சைப்பொய்யை வாரியிறைத்தது, நிர்வாகம்.

கைநிறைய சம்பளம் வாங்கிய நாங்கள் விருப்பப்பட்டு ராஜினாமா செய்து விட்டு, வழக்கு போடுவதற்கு கோமாளிகளா? எங்களது பெயரில் நிர்வாகமே ராஜினாமா கடிதம் தயார் செய்வது, ராஜினாமா செய்யும்படி மிரட்டுவது என்றெல்லாம் கைதேர்ந்த கிரிமினலைப் போல நட்ந்து கொள்வதை அம்பலப்படுத்திய பின்னர் தான் வாயடைத்து நின்றது, நிர்வாகம். நாம் பேசா மடந்தையாகிவிட்டால், பிணத்துக்கு சமமாக வீசியெறியப்படுவோமென்பதை விப்ரோ ஊழியர்களுக்கு டெமோ செய்து காட்டியிருக்கிறது நிர்வாகம்.

முதலாளிகள் கற்றுக்கொடுத்த இந்த பாடம் தான் உயர் ஊதியம் பெறுபவர்கள், அடக்குமுறைகளை சகித்துக் கொள்ளும் கோழைகள், சொந்த பிரச்சினைக்குக்குகூட வெளியில் வராத சுயநலமிகள் என்றெல்லாம் அடையாளப்படுத்தப்பட்ட ஐ.டி ஊழியர்கள் சங்கமாகத் திரள்கின்ற துணிச்சலுக்கு விதை போட்டது. அதுதான் தமிழகத்தில் கருக்கொண்டு,கர்நாடகத்தில் உருக்கொண்டு இந்தியாவெங்கும் இருக்கின்ற 30 இலட்சம் ஐ.டி துறை ஊழியர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறது.

பு.ஜ.தொ.மு-வின் புரட்சிகர அரசியல் சிலருக்கு ஏற்பில்லாததாக இருக்கலாம். ஆனால், தொழிலாளி வர்க்கத்துக்கு புரட்சிகர அரசியலைத் தவிர வேறுபாதையில் விடுதலை இல்லை.

– ராஜதுரை

புதிய தொழிலாளி, நவம்பர் 2017

(படங்கள் : கோப்புப் படங்கள்)

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-in-it-sector-corporate-scare-tactics/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
Modi - Harvard or Harwork or ...
5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு!

அம்மணமாக பவனி வரும் பேரரசர், அதைச் சுட்டிக்காட்டுபவர்களை பார்த்து "என்ன தப்புத் தப்பாக உளர்றீங்க. என்னோட அரசவை புலவர்கள், நான் முழு உடை உடுத்திருக்கிறேன் என்று நிரூபித்து...

பத்திரிகை செய்தி : டெக் மகிந்த்ராவில் சட்ட விரோத ஆட்குறைப்பை தடுத்து நிறுத்துவோம்

எச்.ஆர் மிரட்டலுக்கு பயந்து கட்டாய ராஜினாமா செய்ய மறுக்குமாறு டெக் மகிந்த்ரா ஐ.டி ஊழியர்களை பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர்கள் பிரிவு கேட்டுக் கொள்கிறது. டெக் மகிந்த்ரா ஊழியர்கள்...

Close