வெரிசான் அலுவலகத்தின் முன்பு யூனியன் பிரச்சாரம்

வெரிசான் கம்பெனி தகவல் தொழில்நுட்பத் துறையில் செயல்படும் பன்னாட்டு நிறுவனம். இது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட $12,600 கோடி வருவாய் ஈட்டக்கூடிய நிறுவனமாகும்.
இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் சென்னையிலும் தெலங்கானாவில் ஹைதராபாத்திலும் இயங்கி வருகிறது. சென்னையில் தரமணியில் உள்ள RMZ மற்றும் கிண்டியில் உள்ள ஒலிம்பியா பார்க்கிலும் இயங்கி வருகிறது.

ஐ.டி துறை சட்ட விரோத ஆட்குறைப்புகளை கண்டித்து பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு கடந்த மே 2017ல் சோழிங்கநல்லூரில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

இப்படி பல பில்லியன் கணக்கில் வருவாய் ஈட்டக்கூடிய நிறுவனம் ஒருசில நாளில் 993 பேருக்குமேல் வேலை நீக்கம் செய்துள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு NDLF IT (New Democratic Labour Front IT Employees Wing ) யூனியன் பற்றிய தகவலை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் நண்பரோடு ஒலிம்பியா பகுதியில் இயங்கும் வெரிசான் நிறுவனத்தின் நுழைவாயில் பிரசுரம் விநியோகம் செய்தோம்.

பிரசுரத்தில் அடங்கிய தகவல் “விப்ரோ நிறுவனத்துக்கு எதிரான தொழிற்தாவாவில் NDLF IT யூனியன் சார்பாக சட்ட ரீதியான பதில்கள்”

அவ்வாறு வெரிசான் நிறுவனத்தின் நுழைவாயில் பிரசுர விநியோகம் செய்து கொண்டிருந்தபோது சிக்னல் காரணமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த ஊழியர்களிடம் பிரசுர விநியோகம் செய்தோம்.

அப்போது அதிக அனுபம் உள்ள ஊழியராக தோற்றமளித்தவரிடம் “இந்தாங்க இந்த பிரசுரத்தை படிச்சி பாருங்க ஐ.டி யூனியன் இருந்து வந்திருகோம்” என்று சொன்னதும் சரமாரியாக சில கேள்விகளை கேட்டார்.

“இந்தத் துறைதான் ஓரளவுக்கு வளர்ச்சியில் இயங்கிட்டு வந்துட்டு இருக்கு. அதையும் கெடுக்க வந்துட்டிங்களா? “

“நாங்க யாரையும் கெடுக்க வரலைங்க வாழவைக்க வந்திருக்கோம். அப்படி பார்த்தா ஐ.டி. கம்பெனிதான் ஊழியர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாம மிரட்டி வெளியே அனுப்பி ஊழியர்களின் வாழ்க்கையை கெடுத்துட்டு இருக்காங்க. அதுக்கு என்ன சொல்றிங்க” என்றதும் அடுத்த கேள்விக்கு தாவிவிட்டார்.

“நீங்க கவர்மென்ட் கிட்டதான கேட்கணும் இங்க வந்து கேட்டா எப்படி?”

“கம்பெனியில் நடக்கும் எதையும் வெளியே சொல்ல கூடாது அவ்வாறு சொன்னால் ப்ளாக் லிஸ்ட்ல போட்டுவிடுவேன். இனி வேலை எங்கும் கிடைக்காது என்று ஊழியர்களை பயமுறுத்தி வச்சிருக்காங்க. அப்புறம் எப்படி ஐ.டி.ஊழியர்கள் பிரச்சனைனா வெளியே சொல்ல வருவாங்க, கவர்ன்மென்ட் கிட்ட பிரச்சனையை பற்றி பேச போறதுக்கு.

இப்ப கொஞ்ச நாளாதான் படிப்படியாக அந்த பயம் போய் யூனியன் மூலமாக தன்னோட வேலையை பாதுக்காத்துக் கொள்ளலாம் என்ற விழிப்புணர்வு ஐ.டி. ஊழியர்களிடையே பெருகிக் கொண்டு வருகிறது.”

சொல்லி முடித்ததும் இடைவெளி விடாமல் அடுத்த கேள்வி கேட்க ஆரம்பித்தார். “மற்ற துறையை விட இந்த துறையில்தான் ஸ்ட்ரைக் எதுவும் நடக்காமல் வளர்ச்சியில் சென்று கொண்டிருக்கிறது அங்கயும் ஸ்ட்ரைக் பண்ண வந்துடிங்களா”

“ஐ.டி. ஊழியர்களுக்கு தேவையானதை சட்டத்தின்படி செய்து கொடுத்தால் அவர்கள் எதற்காக வேலை நிறுத்தம் செய்ய போகிறார்கள். நிறுவனங்கள் பல கோடி ருபாய் லாபத்தை குவிக்கும்போது அதை உருவாக்கிய ஊழியர்களுக்கு எதுவும் சட்டப்படி செய்ய மாட்டேன் என்றால் எந்த விதத்தில் நியாயம்.

மாறாக ஐ.டி ஊழியர்களை வேலையை விட்டு அனுப்புவது எவ்வளவு பெரிய கொடுமை. அதிலும் 10லிருந்து 20 வருடம்வரை கம்பெனிக்காக உழைத்தவரை மனிதத் தன்மையே இல்லாமல் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வெளியேற்றுகிறார்கள். அவர்களுடைய குடும்பம் என்னவாவது? வேலையை நம்பி வாங்கிய வங்கிக்கடன் என்னவாவது? கல்வி, மருத்துவம், ஏன் குடிநீர் வரை நாட்டில் எதை எடுத்தாலும் பணம் கொடுத்தால்தான் நடக்கும் என்று மாற்றி விட்ட பிறகு வேலை இல்லாமல் எப்படி உயிர் வாழ்வது? இந்த கஷ்ட நிலைக்கு ஊழியர்களை தள்ளியது நிறுவனம்தான், அதைவிட கொடுமை அந்த நிறுவனத்துக்கு சப்போர்ட் பண்ணி பேசுவதுதான்.”

என்று பேசி முடித்ததும் பச்சை விளக்கு சிக்னல் போட்டதும் “ சரிங்க நல்லது பண்ணுங்க” என்று தோள்மீது தட்டிக் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

என்னுடன் வந்த நண்பர் ஒலிம்பியா கேட்-2 ல் பிரசுரம் விநியோகம் செய்து கொண்டிருந்தார். “நான்கு வெரிசான் நிறுவன ஊழியர்களும் நம்முடைய சங்க பிரசுரத்தை வாங்கி சென்றார்கள்” என்றார். வெரிசான் ஊழியர்களுக்கு நம்முடைய சங்கத்தை பற்றிய விழிப்புணர்வை கொண்டு சேர்த்தது நிறைவாக இருந்தது

– சுகேந்திரன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-membership-campaign-infront-of-verizon-office/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
போக்குவரத்து தொழிலாளர் வேலைநிறுத்தம் – ஒரு விளக்கம்

மோசமான பேருந்து என்று ஓட்டுநரையும், நடத்துனரையும் கேள்வி கேட்கும் முன் அதை வழங்கிய அரசை எதிர்க்க பழகுங்கள். ஆணிவேரை மறந்து விழுதை குறை சொல்லி பயனில்லை.

Menporul Mugathirai / மென்பொருள் முகத்திரை – Tamil Short Film

இரண்டு முன்னாள் கல்லூரி நண்பர்களின் சந்திப்பின் ஊடாக அவர்களது வாழ்க்கை நிலை, உலகக் கண்ணோட்டம், திறமை ஆகியவற்றை நுணுக்கமாக வெளிப்படுத்துகிறது. சிகப்பு என்பது அழகல்ல நிறம் ஆங்கிலம் என்பது அறிவு...

Close