“ஐ.டி ஊழியர்களின் ஐக்கியம் நாட்டையே மாற்றியமைக்க வல்லது” – ஐ.டி சங்கத்தின் அறைக்கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி ஊழியர்கள் பிரிவின் அறைக் கூட்டம் ஏப்ரல் 22 அன்று காலை 11 மணிக்கு திருவான்மியூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் அமைப்பாளர் தோழர் கற்பகவிநாயகம் தலைமை வகித்து நடத்தினார். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான ஆசான்களில் ஒருவரான லெனின் பிறந்த நாளில் இந்தக் கூட்டம் நடப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக் காட்டி கூட்டத்தை ஆரம்பித்து வைத்தார், தோழர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவாக பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்திய ஐ.டி ஊழியர்கள் (கோப்புப் படம்)

முதலில் தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஐ.டி ஊழியர்களின் ஆதரவை காட்டுவதற்கு நமது சங்க செயல்பாடுகள் பற்றி விளக்கப்பட்டது. மெப்ஸ், டைடல் பார்க்கில் பணி புரியும் ஊழியர்கள் விவசாய சங்கங்கள் அறிவித்த வேலை நிறுத்த நாள் மாலையில் தமது அலுவலகங்களுக்கு வெளியில் கூடி ஆதரவு தெரிவிக்க திட்டமிட்டு செயல்படுத்தியது குறித்தும், அதைத் தொடர்ந்து மெப்ஸ் ஊழியர்கள் பு.ஜ.தொ.மு – ஐ.டி ஊழியர்கள் பிரிவு வழிகாட்டலில் காவல்துறை அனுமதி பெற்று பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் ஏற்பாடு செய்து நடத்திய ஆர்ப்பாட்டம் பற்றியும் விளக்கப்பட்டது.

1. விவசாயிகள் பிரச்சனை குறித்து

விவசாயிகள் பிரச்சினை என்பது ஏதோ தனியான பிரச்சினை இல்லை, பல தொழில்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் விவசாயத்தை நம்பித்தான் உள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்டால் தொடர்புடைய அத்தனை தொழில்களும் நலிவடையும். அத்தோடு வெவ்வேறு தொழில்கள் செய்து வந்தாலும் அனைவரும் உணவு உட்கொண்டாக வேண்டும். உணவின்றி என்ன செய்வது? யாராக இருந்தாலும் விவசாயம் அழிவதை வேடிக்கை பார்த்தால் நமது எதிர்காலத்தின் அழிவை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதற்கு சமம்.

முன்னர் அரசியல்லாம் எதுக்குசார் என்று பேசியவர்கள் இன்றைக்கு அரசியல் பேசுகிறார்கள். புதிதாக இளைஞர்களும் பெண்களும் அரசியல் பேசுவது ஓர் சிறப்பு என்றால் அதில் உள்ள குறைகளை கவனித்து விளக்குவதும் மிக அவசியமானது.

தற்போது ஐ.டி ஊழியர்கள் சிலர் முன் வைப்பது, “விவசாயக் கடன்களை நாமே மக்கள் மத்தியில் நிதி திரட்டி அடைத்து விடலாம்” என்ற திட்டம். உண்மையில் பார்க்க நல்ல யோசனைபோல உள்ளது. ஆனால் இது தவறான தீர்வு.

இன்றைக்கு விவசாயிகளின் இந்த பஞ்ச பராரி நிலை ஏதோ தெரியாமல் நேர்ந்தது அல்ல, திட்டமிட்டே நாட்டை விவசாயத்தை அழிவின் விளிம்பில் நிறுத்தியுளளார்கள். நாம் விவசாயிகளுக்கு உதவுவது என்பது நிதி உதவி இல்லை விவசாயிகளின் இந்த அழிவிற்கு காரணமான கொள்கைகளை புரிந்து கொண்டு அவற்றை தடுத்து நிறுத்தப் போராடுவதுதான். நமது நாட்டில் புதிய பொருளாதார கொள்கை புகுத்தப்பட்ட 1990களுக்குப் பிறகுதான் விவசாயிகள் இவ்வளவு பாதிப்புகளுக்கு உட்படுத்தப்பட்டு சாவின் வாயிலில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்தக் கொள்கைகளை மாற்றாமல் விவசாயிகளை மட்டுமல்ல, விவசாய நிலத்தையும் காப்பாற்ற முடியாது. அதற்கு ஐ.டி ஊழியர்களின் பங்கு என்ன?

2. ஆர்.கே நகரில் பல்லிளித்த ஜனநாயகம்

ஆர்.கே நகர் தேர்தல் படம் பிடித்து காட்டிய நமது தேர்தல் ஜனநாயகத்தின் யோக்கியதை பற்றி பேசப்பட்டது. ஏதோ இந்த தொகுதியில் மட்டும் இந்த தேர்தலில் மட்டும் தான் ஓட்டுக்கு பணம் கொடுத்தார்கள் என்பது போல தேர்தல் ஆணையம் ஓர் பிம்பத்தை உருவாக்கி தேர்தலை ரத்து செய்துள்ளது. கடந்த கால அனுபவம் என்ன?

மோடி, சுப்ரதா ராய்

வருமான வரி சோதனை தான் தேர்தலலுக்கு தடைவிதிக்க ஆதாரம் என்றால், சகாரா பிர்லா குழுமங்களில் வருமானவரி சோதனை நடத்தியபோது அன்றைய குஜராத் முதல்வர் மோடிக்கு பணம் கொடுத்ததாக அந்நிறுவனங்களில் சிக்கிய ஆவணங்களும் இதே அளவிற்கு முக்கியமானவையும் தண்டிக்கப் போதுமானவையும் தான்

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மக்கள் பிரச்சினை மாறுவதில்லை, மாறாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அப்படி இருக்கையில் மக்கள் இந்த தேர்தலை எப்படி பார்க்க வேண்டும்?

முக்கியமாக தேர்தல் ஆணையம் என்பது என்ன? பதவிக்கு வந்த காலம் முதல் பல துறைகளில் லஞ்சம் வாங்கி, மக்கள் விரோத கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் அரசு அதிகாரிகள் தேர்தல் நேரத்தில் திடீரென்று நேர்மையாக மாறி தேர்தல் அதிகாரிகளாக நேர்மையாக தேர்தலை நடத்தப் போகிறார்கள் என்று நாம் நம்ப வேண்டுமாம்.

இந்த ரெய்டுகள் எல்லாம் என்ன விளைவை ஏற்படுத்தும்? ஏற்கனவே பிடிபட்ட அன்புநாதன், ராம் மோகன் ராவ் மீது போடப்பட்ட வழக்குகள் என்ன ஆயின? அத்தனையும் இன்று மறந்து புதிதாக அந்த தொகுதியில் மட்டும் பணம் வாங்கியதாக தேர்தல் ஆணையம் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஆதரவாக துணை நின்று செயல்படுகிறது.

நம்நாடடில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது இன்று புதிதாக நடக்கும் ஒன்றல்ல என்று பெரியார் குடியரசு நாளிதலில் எழுதிய ஆதாரத்தை காட்டி தேர்தல் என்பது எந்த காலத்திலும் நேர்மையாகவோ, மக்களுக்காகவோ நடந்தது இல்லை.

மேலும் இந்த வருமான வரி சோதனை தான் தேர்தலலுக்கு தடைவிதிக்க ஆதாரம் என்றால், சகாரா பிர்லா குழுமங்களில் வருமானவரி சோதனை நடத்தியபோது அன்றைய குஜராத் முதல்வர் மோடிக்கு பணம் கொடுத்ததாக அந்நிறுவனங்களில் சிக்கிய ஆவணங்களும் இதே அளவிற்கு முக்கியமானவையும் தண்டிக்கப் போதுமானவையும் தான். ஆனால் அதை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டது மோடி அரசு, ஏற்றுக்கொள்ள முடியாது என்று நிராகரித்துவிட்டது, உச்சநீதிமன்றம். தமிழகத்தில் அதே போன்ற ஆதாரத்தை வைத்து தேர்தலையே ரத்து செய்கிறது.

இதற்கு பெயர்தான் சட்டத்தின் ஆட்சியா? இவர்கள்தான் நியாயமாக தேர்தலை நடத்தப் போகிறார்களா?

சகாயம் மாதிரியான நேர்மையானவர்கள் ஆட்சிக்கு வந்தால் எலலாம் சரியாகிவிடும் என்று அப்பாவித்தனமாக சிலர் கூறுகிறார்கள். சகாயம் என்ற தனிநபர் ஒருவரின் ஒழுக்கம் பாராட்ட வேண்டிய ஒன்று. அதே நேரம் நாட்டை ஆளும் பல நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளில் விரல் விட்டு எண்ணும் அளவிலான ஒரு சிலர் மட்டுமே தனிப்பட்ட நேர்மையை கடைப்பிடிக்கின்றனர். ஆனால், அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை அமல்படுத்துவதில் எந்த மாற்றமும் செய்ய முடிவதில்லை.

ஒரு மாவட்ட ஆட்சியர் தனது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் டாஸ்மாக அனுமதிக்க முடியாது என்றோ, தனது பகுதியில் நீர்நிலைகளை பாதுகாக்க தேசிய நீர்க் கொள்கையை நடைமுறைப்படுத்த முடியாது என்றோ பேச முடியுமா?

சங்கமாக அணி திரள்வோம்

“ஐடி துறையில் நடக்கும் மோசடியான பணிநீக்கம் என்பதை எதிர்கொள்ள தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரள்வது அடிப்படையான தேவை”

முக்கியமாக திரு சகாயம் ஆதரவாளர்கள் கூறுவது என்ன, நமக்கு நாமே குளங்களை தூர்வாருவது, போன்ற பாதையை தான். அதாவது மக்களுக்கு எதிராக, இயற்கைக்கு விரோதமாக நாட்டை சூறையாடியவர்களை எதுவும் செய்ய முடியாது என்ற கருத்தையும், நாம்தான் நமது பகுதியை பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டுகிறார்கள். நமக்கு நாமே என்ற சகாயாம் பாதையில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய முடியுமா? கூடங்குளம் அணுஉலையை தடுத்து நிறுத்த முடிந்ததா? கிரானைட் கொள்ளையர்களை தண்டிக்க முடிந்ததா?

3. சி.டி.எஸ் லே-ஆஃப்-ஐ எதிர்கொள்வது எப்படி?

இறுதியாக சிடிஎஸ் செய்யும் சட்டவிரோத பணி நீக்கம், ஊதியத்தை வெட்டியது போன்ற விவரங்களை விளக்கி இதை எவ்வாறு நமது சங்கம் எதிர்கொள்வது என்று சங்க வழக்கறிஞரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன.

பல்வேறு உற்பத்தி துறைகளில் இப்படி ஒரு சூழல் வரும்போது நமது சங்கம் மேற்கொண்ட வழிகளை உதாரணமாக கூறினார். நாம் வெறுமனே சட்டத்தையும் அதிகாரியையும் மட்டும் நம்பினால் ஏமாந்துபோவது உறுதி. எனவே, வேறு மாற்று கோணத்தில் சிந்திக்க வேண்டும் என்று உதாரணங்களோடு விளக்கினார். கார்ப்ரேட் நிறுவனங்களும் தொழிலாளர் நல அதிகாரிகளும் கூட்டாக இணைந்து தொழிலாளர் விரோத வேலைகள் செய்வதையும் அதை உடைக்க மேற்கொண்ட நடவடிக்கையையும் எடுத்துரைத்தார்.

சட்டத்தில் அவர்கள் காட்டும் பாதையில் தேடினால் விடை கிடைக்காது. குறிப்பிட்ட துறை, நிறுவனத்தின் நடைமுறையிலிருந்து புதிதாக வழிகளை கண்டுபிடிக்க வேண்டும் என்றார். இப்போது ஐடி துறையில் நடக்கும் மோசடியான பணிநீக்கம் என்பதை எதிர்கொள்ள தொழிலாளர்கள் சங்கமாக அணிதிரள்வது அடிப்படையான தேவை என்று வலியுறுத்தினார்.

நமது துறையின் சிறப்பு நமக்கே சரியாக தெரியவில்லை. உலகத்தையே இணைக்கும் பல மாநிலங்கள், நாடுகள் இணைந்து உள்ள இந்தத் துறை ஊழியர்கள் சங்கமாக வலுப்பெற்றால் நமது நாட்டில் பெரிய மாற்றங்களை சாதிக்க முடியும் என்று சுட்டிக் காட்டப்பட்டது.

நமது சங்கக் கூட்டம் மாதா மாதம் மூன்றாவது சனிக்கிழமை அன்று நடைபெறுகிறது. இதுவரை கலந்துகொள்ள முடியாதவர்கள் அடுத்த மாதம் நடக்கும் கூட்டத்திற்கு இப்போதே திட்டமிட்டுக் கொள்ளுங்கள். கலந்துகொண்டவர்கள் இன்னும் சிறப்பாக கூட்டத்தை நடத்துவதற்கும் சங்கத்தை பரவலாக எடுத்துச் செல்வதற்கும் ஆலோசனைகளைக் கூறுங்கள்.

– தொகுப்பு பிரவீன்

More from New Democrats

Permanent link to this article: http://new-democrats.com/ta/union-of-it-employees-can-change-the-face-of-india-it-union-meeting/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
இயற்கை பேரிடர் காலத்தில் நமது பணி பற்றி – ஒரு ஐ.டி ஊழியர்

நாம் வேலை செய்யும் துறைதான் நம்மை இணைக்கும் ஒரு பொதுவான அம்சமாக உள்ளது. ஐ.டி. துறையில் செயல்படும் ஒரு தொழிற்சங்கம் இது போன்ற பேரிடர் கால தன்னார்வலர்களை...

தேர்ந்தெடுக்கப்படும் தற்காலிக அரசாங்கமும், நிரந்தரமாக ஆளும் அரசும்

அரசாங்கம் பிரதிநிதித்துவ சபையில் தேர்ந்தெடுக்கப்படுவதே இல்லை; நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற குழுவின் தலைவர் ஆளுநரால் அரசாங்கம் அமைக்க அழைக்கப்படுகிறார். அவர் தனது விருப்பப்படி அமைச்சர்களை...

Close