70 குழந்தைகளை பலிவாங்கிய உ.பி. பா.ஜ.க அரசின் கிரிமினல் அலட்சியமும் ஊழலும்

டந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக கோரக்பூர் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் யோகி ஆதித்யநாத். இப்போது கோரக்பூர் அரசு மருத்துவமனையின் இந்த அவல நிலைக்கான பழியை முந்தைய ஆட்சியாளர்களை நோக்கித் திருப்புகிறது பா.ஜ.க.

யோகி மாநிலத்தின் முதல்வராக நியமிக்கப்பட்ட போது உத்தரப்பிரதேசத்தின் பிற நகரங்களை விடவும் அவர் தனது சொந்த தொகுதியை வளர்ச்சிக் குறியீடுகளில் எந்த அளவுக்கு முன்னேற்றியிருக்கிறார் என்றெல்லாம் இது போன்று பல செய்திகள் வந்தன.

இப்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க.வின் நான்கு மாத ஆட்சிக்குப் பிறகு இந்த அரசின் கிரிமினல் அலட்சியமும் லஞ்ச ஊழலும் 70 குழந்தைகளின் உயிரைப் பறித்துள்ளது.

ஒன்றுமில்லை ஒன்றுமில்லை ஒன்றுமில்லை – ஆக்சிஜன் விநியோக நிலுவைத்தொகை தொடர்பான தொடர்ந்த நினைவூட்டல்களுக்கான பதில் – பியூஷ் சிறீவஸ்தவா

டந்த வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஆகஸ்ட் 10, 11) ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதால் 30 குழந்தைகள் உயிரிழந்தன. இது பற்றி, “கோரக்பூர் மருத்துவமனையின் ஆக்சிஜன் விநியோக பற்றாக்குறை பற்றி ஆகஸ்ட் 4 அன்றுதான் அரசுக்கு தெரிய வந்தது” என்ற யோகி ஆதித்யநாத் அரசின் பதில் ‘தி டெலிகிராஃப்’ பத்திரிகைக்கு கிடைத்த ஆவணங்களுடன் முரண்படுகிறது.

ஆக்சிஜன் விநியோக ஒப்பந்ததாரருக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை தாமதப்படுத்தியதற்காக கோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி முதல்வர் ராகவ் மிஸ்ரா-வை அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்பதற்கு முன் பணியிலிருந்து நீக்கியுள்ளது உ.பி. அரசு.

இந்த சம்பவம் தொடர்பான மாநில மருத்துவக் கல்வித்துறையின் ஆவணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன (நாட்காட்டி வரிசைப்படி) :

மார்ச் 22: சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வுத்துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங் தலைமையின் கீழ் வரும் மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறையின் இயக்குனருக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராகவ் மிஸ்ரா ஆக்சிஜன் விநியோக ஒப்பந்ததாரருக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை தரவேண்டி கடிதம் எழுதுகிறார். இத்துடன் அவர் ஆக்சிஜன் ஒப்பந்த நிறுவனத்திடம் (புஷ்பா சேல்ஸ்) இருந்து வரப் பெற்ற நிலுவைத்தொகை தொடர்பான கடிதத்தையும் இணைக்கிறார். இக்கடிதத்தின் பிரதியை சித்தார்த்நாத் சிங், மருத்துவக் கல்வி அமைச்சர் அசுதோஷ் தாண்டன் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கிறார்.

விளைவு: ஒன்றுமில்லை

ஏப்ரல் 3: அதே போன்றதொரு கடிதத்தை மருத்துவக் கல்வித்துறையின் கூடுதல் தலைமைச் செயலருக்கும், பிரதியை சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்வித்துறையின் இயக்குனர்களுக்கும் அனுப்பி வைக்கிறார் மிஸ்ரா. இக்கடிதத்துடன் அன்று பெறப்பட்ட ஒப்பந்ததாரரின் நினைவூட்டல் கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது

விளைவு: ஒன்றுமில்லை

ஏப்ரல் 17: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் ஏப்ரல் 17 அன்று கிடைத்த ஒப்பந்ததாரர் கடிதத்தை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.

விளைவு: ஒன்றுமில்லை

ஏப்ரல் 24: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.

விளைவு: ஒன்றுமில்லை

மே 2: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.

விளைவு: ஒன்றுமில்லை

மே 6: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.

விளைவு: ஒன்றுமில்லை.

மே 29: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.

விளைவு: ஒன்றுமில்லை

ஜூன் 28: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.

விளைவு: ஒன்றுமில்லை

ஜூலை 6: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.

விளைவு: ஒன்றுமில்லை

ஜூலை 18: மறுபடியும் கூடுதல் தலைமைச் செயலருக்கும் இயக்குனர்களுக்கும் சமீபத்தில் பெறப்பட்ட ஒப்பந்ததாரர் நினைவூட்டலை இணைத்து கடிதம் எழுதுகிறார் மிஸ்ரா.

விளைவு: ஒன்றுமில்லை

(மிஸ்ராவின் கடிதங்களோடு இணைக்கப்பட்ட புஷ்பா சேல்ஸ் நிறுவனத்தின் நினைவூட்டல் கடிதங்களில் குறைந்தது ஐந்தில் ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்தப் போவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது)
ஆகஸ்ட் 1: மிஸ்ரா கூடுதல் தலைமைச் செயலருக்கு எழுதிய கடிதத்துடன் இணைக்கப்பட்ட நினைவூட்டல் கடிதத்தில் புஷ்பா சேல்ஸ் நிறுவன நிர்வாகி, “நிலுவைத்தொகை ரூ.63.65 லட்சம் அளவுக்கு உயர்ந்துவிட்டதால் தடையற்ற ஆக்சிஜன் விநியோகம் தொடர நிலுவைத்தொகை உடனடியாக கட்டப்பட வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த கடிதத்தின் நகல் அமைச்சர் தாண்டனுக்கு அனுப்பப்படுகிறது.

ஆகஸ்ட் 4: அமைச்சர் தாண்டன் மிஸ்ரா எழுதிய கடிதம் பற்றியும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள எச்சரிக்கை பற்றியும் முதன்முறையாக அறிய வருவதாக கூறுகிறார் .

ஆகஸ்ட் 5: ஒப்பந்ததாரருக்கான நிலுவைத்தொகையை கட்ட ரூ 2 கோடி கோரக்பூர் கருவூலத்திற்கு ஒதுக்குமாறு அமைக்கிற தாண்டன் உத்தரவிடுகிறார். அரசுத் தரப்பின்படி பணம் அதே நாளில் கருவூலத்தை அடைகிறது.

ஆகஸ்ட் 7: கல்லூரி முதல்வர் மிஸ்ராவின் கூற்றுப்படி பணம் கருவூலத்திற்கு வந்து சேர்கிறது.

ஆகஸ்ட் 8: மிஸ்ரா கல்லூரி கணக்காளரை நிலுவைத்தொகைக்கான ஒப்புதலைப் பெற கருவூலத்திற்கு அனுப்புகிறார்.

ஆகஸ்ட் 9: ஒப்பந்ததாரர் புஸ்பா சேல்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் மனிஷ் பண்டாரி அமைச்சர் தாண்டனுக்கு அனுப்பிய கடிதத்தில் “கடிதங்கள் மூலமாகவும், நேரிலும், தொலைபேசியிலும், மின்னஞ்சல் மூலமாகவும் மற்றும் சட்ட ரீதியாகவும் பலமுறை கல்லூரி முதல்வருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் நிலுவைத்தொகை ரூ.68.65 லட்சம் அளவுக்கு உயர்ந்துள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.

“ஆகஸ்ட் 9 அன்று காலை நாங்கள் நேரடியாக அமைச்சரை சந்தித்து இந்தக் கடிதத்தை கொடுத்தோம். அதே நாள் மாலையே அமைச்சரும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மருத்துவக் கல்லூரி பரிசீலனைக் கூட்டத்திற்கு சென்றனர்” என்கிறார் புஷ்பா சேல்ஸ் நிர்வாகி.

“மருத்துவமனை அதிகாரிகள் இந்த பிரச்சினையைப் பற்றி முதலமைச்சரிடம் கூறியதாகவும் அதற்கு அவர் அமைச்சர் தாண்டனை ஒரு முறை ஏறிட்டு பார்த்து விட்டு அமைதியாகி விட்டதாகவும் எங்களுக்கு தெரிய வந்தது.”

ஒப்பந்ததாரருக்கு இன்னும் நிலுவைத்தொகை ஒப்படைக்கப்படவில்லை.

“முதலமைச்சர் மருத்துவக் கல்லூரியில் இருந்ததால் நாங்கள் அது தொடர்பான வேலைகளில் மூழ்கி விட்டதால் வேறு வேலைகள் சாத்தியமில்லை” என்று கூறுகிறார் மிஸ்ரா. ஆனால் சில நிமிடங்களில் நடக்கக் கூடிய இணையப் பரிவர்த்தனையை கணக்காளர் ஏன் செய்யவில்லை என்பதற்கு அவரிடம் எந்த பதிலும் இல்லை.
ஆதித்யநாத் சென்ற பின்னர் அன்று மாலை ஆக்சிஜன் விநியோகத்தை நிறுத்துகிறார் ஒப்பந்ததாரர்.

ஆகஸ்ட் 10: 23 குழந்தைகள் இறப்பிற்கு பிறகு, “நிலுவைத் தொகை தாமதம் பற்றியோ அல்லது ஆக்சிஜன் தட்டுப்பாடு பற்றியோ தனக்கு முன்பே எதுவும் தெரியாது” என்று செய்தியாளர்களிடம் கூறுகிறார் ஆதித்யநாத். 18 ஆண்டுகளாக தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருக்கும் தொகுதியில் வருகிறது கோரக்பூர் மருத்துவமனை.
நிலுவைத்தொகை இன்னமும் வழங்கப்படவில்லை, அதற்கான எந்த விளக்கமும் மிஸ்ராவிடம் இல்லை.

ஆகஸ்ட் 10 அன்று மிஸ்ரா ரிஷிகேஷில் இருந்தாக வெளியான செய்திகள் தொடர்பான அவரின் பதிலைப் பெறுவதற்கு ஆகஸ்ட் 14 அன்று மேற்கொள்ளப்பட்ட இந்த பத்திரிகையின் அழைப்புகளை அவர் எடுக்கவில்லை

ஆகஸ்ட் 11: 52 லட்சம் ருபாய் நிலுவைத்தொகை இறுதியாக நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு இணையம் மூலம் அனுப்பப்படுகிறது. ஆக்சிஜன் விநியோகத்தை தொடர்வதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார் ஒப்பந்ததாரர்.

ஆகஸ்ட் 12: நிலுவைத்தொகை தாமதத்திற்கு குற்றம் சாட்டி மிஸ்ராவைப் பணிநீக்கம் செய்து உத்தரவிடுகிறார் அமைச்சர் சித்தார்த் நாத். விசாரணை தொடங்குவதற்கு முன்னரே குழந்தைகள் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் இறக்கவில்லை என்று அரசுத் தரப்பிலிருந்து அறிவிக்கப்படுகிறது. அதே நாள் இரவு மிஸ்ராவின் ராஜினாமாக் கடிதத்தை ஏற்றுக் கொள்கிறது அரசு.

ஆகஸ்ட் 14: “சில நபர்கள் லஞ்சம் கேட்டதால்” ஆக்சிஜன் விநியோகம் நிறுத்தப்பட்டதாக அலகாபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகிறார் அமைச்சர் சித்தார்த்நாத். ஆனால் அந்த நபர்கள் யாரென்று அவர் கூறவில்லை

(ஆகஸ்ட் 12-ம் தேதி சுகாதாரத்துறையில் உள்ள ஒரு நபர் இந்த பத்திரிகையாளரிடம் ஆகஸ்ட் 9 அன்று மருத்துவக் கல்லூரியின் கணக்கில் 3.86 கோடி ரூபாய் பணம் இருந்ததாகவும் ஆனால் அந்த ஒப்பந்ததாரர் உயர் மட்டத்திலுள்ள சில அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பணிந்து போகாததால் நிலுவைத்தொகை நிறுத்தி வைக்கப் பட்டதாகவும் கூறியுள்ளார்)

(“லஞ்சம் இல்லாமல் இந்த மாதிரியான எந்தத் தொழிலும் நடப்பதில்லை” என்ற அந்த நபர் “ஆனால் பணப் பரிமாற்றத்தை நிறுத்தி வைக்குமாறு லக்னோவிலிருந்து கல்லூரி முதல்வருக்கு உத்தரவுகள் வந்தது” அன்றும் கூறியுள்ளார்.)

பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாதி கட்சியின் முறைகேடுகளுக்கு எதிராக வழக்கமாக கோரக்பூர் வேலை நிறுத்தங்களை அறிவிக்கும் யோகி ஆதித்யநாத் இன்று தனது அரசியல் வாழ்க்கையில் முதன் முறையாக தனது சொந்தத் தொகுதியில் தனக்கு எதிரான முழு அடைப்பை சந்திக்க இருக்கிறார்.

அநேகமாக எல்லா எதிர்க்கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. ஒருகாலத்தில் ஆதித்யநாத்துக்கு மிக நெருக்கமாக அறியப்பட்ட இந்து சமாஜ் கட்சி மற்றும் நாக்ரிக் மஞ்ச் அமைப்புகள் உட்பட.

மொழிபெயர்ப்பு : மணி

Permanent link to this article: http://new-democrats.com/ta/up-bjp-governments-criminal-negligence-and-corruption-killed-70-children-ta/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
விவசாயம், வேலை வாய்ப்பு, என்.ஜி.ஓ – என்ன செய்ய வேண்டும்?

அரசு கார்ப்பரேட் முதலாளித்துவத்துக்காக, விவசாயத்தையும், தொழிலாளிகளையும், சிறு முதலாளிகளையும் ஒடுக்குவது தான் இது போன்ற குற்றங்களுக்கு மூல காரணமாக உள்ளது. வாழ்வாதாரம் இழக்கும் விவசாயிகளும் சிறு உடைமையாளர்களும்...

“இல்லுமினாட்டி” – புத்திசாலித்தனமான ஏமாற்று கட்டுக்கதை

இது முதலாளித்துவம் தோல்வியடைந்து வருவதன் அறிகுறி. முதலாளித்துவம் நெருக்கடிக்குள்ளாகும் நேரத்தில், மக்களின் சிந்தனையை திசைதிருப்பவும், அறியாமையில் வைத்திருக்கவும் இந்தக் கதையாடல்கள் உதவுகின்றன.

Close