இந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்

மெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுடன் ஒரு வர்த்தக யுத்தத்தை தொடங்கி வைத்திருக்கிறார். அமெரிக்கா சீன நாட்டிலிருந்து இறக்குமதி ஆகும் சில பொருட்களுக்கு அதிக வரி விதிப்பது, அதற்கு பதிலடியாக சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு வரியை உயர்த்துவது என்று மாற்றி மாற்றி வர்த்தகப் போருக்கான தயாரிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டும் என்பார்கள். டிரம்ப் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பலவும் தமிழ்நாட்டில் இப்போது நடந்து வரும் போராட்டங்களுடன் நேரடி தொடர்பு உடையவை. காவேரி மேலாண்மை வாரியம் முதல், நெடுவாசல், ஸ்டெர்லைட் ஆலை போராட்டங்கள் வரை அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலுடன் தொடர்புடையவை. எப்படி என்று பார்க்கலாம்.

மார்ச் 1-ம் தேதி எஃகு இறக்குமதி மீது 25 சதவீதம் வரியும், அலுமினியம் இறக்குமதி மீது 10 சதவீதம் வரியும் அமெரிக்க அரசு விதித்தது. அமெரிக்கா சீனாவிலிருந்துதான் இந்தப் பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்கிறது. மார்ச் 8-ம் தேதி இதற்கான உத்தரவை பிறப்பிக்கும் போது கனடா, மெக்சிகோவுக்கு விலக்கு அளித்தார், டிரம்ப். தொடர்ந்து மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய ஒன்றியம், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், தென் கொரியா ஆகிய நாடுகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டது. எனவே, இந்த வரி விதிப்புக்கான இலக்கு சீனா என்பது தெளிவானது.

இதற்கு இன்னொரு உதாரணமாக, சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அரசு கால் சென்டர் (call center-bpo)-களுக்கு ஒரு சட்ட முன்வரைவை கொண்டுவர முயற்சி செய்ததை குறிப்பிடலாம். இதுவரை ஒரு அமெரிக்க பயனீட்டாளர் ஒரு வாடிக்கையாளர் சேவை எண்ணை தொலைபேசியில் தொடர்புகொண்டால் அந்த அழைப்பு இந்தியா போன்ற வெளிநாட்டு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருடன் இணைக்கப்படும், அந்த ஊழியர் அந்த வாடிக்கையாளர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிப்பார். அமெரிக்காவிலிருந்து பேசும் அந்த வாடிக்கையாளர் தனக்கு தரப்பட்ட விவரம் எந்த நாட்டில் இருந்து தரப்பட்டது எண்று தெரியாத நிலையில் இருந்தார். ஆனால் இந்த புதிய சட்டவரைவு வெளிநாட்டு ஊழியர்கள் தாங்கள் எங்கிருந்து பேசுவதாக வாடிக்கையாளருக்கு முதலில் தெரியப்படுத்தவேண்டும். அந்த அமெரிக்க வாடிக்கையாளர் அந்த இணைப்பை அமெரிக்காவில் செயல்படும் மையத்திடம் மாற்றக் கோரினால் மாற்றித்தர வேண்டும். ஒவ்வொரு அமெரிக்கரும் இதுபோல செய்யத்துவங்கினால் BPO துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். இதுவும், அமெரிக்காவில் அதிக வேலை வாய்ப்புகளை கொண்டு வருவதற்கானது என்று சொல்லப்பட்டது.

ஆனால், நடைமுறையில் இவை இந்தத் துறைகளில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் முறையே, சீனா, இந்தியா போன்ற நாடுகளை மிரட்டி அமெரிக்கா தனது கார்ப்பரேட் நலன்களையும், அரசியல், இராணுவ குறிக்கோள்களையும் நிறைவேற்றிக் கொள்வதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதிதான்.

  • வர்த்தகப் போரை தொடங்கும் விதமாக அமெரிக்க அரசு மார்ச் 22-ம் தேதி சீனாவை நேரடியாக குறிவைத்து தாக்கத் துவங்கியது. விமான போக்குவரத்து, தொழில்நுட்பம், எரிசக்தி துறைகளில் பயன்படுத்தப்படும் $5,000 கோடி (இந்திய மதிப்பில் ரூ 3.25 லட்சம் கோடி) மதிப்பிலான பொருட்கள் மீது இறக்குமதி வரி வசூலிக்கப் போவதாக அறிவித்தது. ‘சீன அரசு அமெரிக்க நிறுவனங்களுடன் கூட்டணி வைத்து பல புதிய தொழில் நுட்பங்களையும், கண்டுபிடிப்புக்களையும் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து திருடி விடுகிறது. அதைப் பயன்படுத்தி, குறைந்த விலையில் பொருட்களை தயாரித்து விற்று, அதே அமெரிக்க பொருட்களுடன் போட்டி போட்டு உலகச் சந்தையில் தன்னை வளர்த்துக் கொள்கிறது’ என்று குற்றம் சாட்டியது.
  • அமெரிக்க வரி விதிப்புக்கு பதிலடியாக ஏப்ரல் 3, 2018 அன்று சீனா கொட்டைகள், பன்றி இறைச்சி, பழங்கள், ஒயின் உள்ளிட்ட 128 அமெரிக்க பொருட்கள் மீதான இறக்குமதி வரி 25 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்தது. மேலும் 120 அமெரிக்க இறக்குமதி பொருட்கள் மீது புதிதாக 15 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் 3-ம் தேதி டிரம்ப் அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினார். தொலைக்காட்சிகள், பாத்திரம் கழுவும் எந்திரம், பனி அகற்றும் எந்திரம், தடுப்பூசிகள் உள்ளிட்ட பல்வேறு வீட்டு பயன்பாட்டு பொருட்கள் 1,300 மீது 25 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
  • ஏப்ரல் 4-ம் தேதி சீனா இன்னும் அதிகமான அமெரிக்க பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதிப்பதாக அவற்றின் பட்டியலை வெளியிட்டது. விஸ்கி, கார்கள், சோயாபீன் ஆகியவை உள்ளிட்ட இந்த 106 பொருட்களின் இறக்குமதி மதிப்பு சுமார் $5000 கோடி ஆகும்.
  • இதைத் தொடர்ந்து, இன்னும் $10,000 கோடி மதிப்பிலான பொருட்கள் மீது வரி விதிக்க முடியுமா என்று பரிசீலிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக டிரம்ப் ஏப்ரல் 5-ம் தேதி கூறினார்..

இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து உலகெங்கும் உள்ள பங்குச் சந்தைகள் உட்பட நிதிச் சந்தைகள் விலை வீழ்ச்சியையும் ஊசலாட்டத்தையும் எதிர்கொண்டன.

இந்த நடவடிக்கைகளை மேலோட்டமாகப் பார்த்தால் அமெரிக்க அரசு தனது உற்பத்தித் துறையை மேம்படுத்தவும், அமெரிக்கர்களுக்கு வேலையளிக்கவும் செய்வது போல உள்ளது. ஆனால், இந்த அதிகப்படியான விலை அமெரிக்காவில் விலைவாசியை ஏற்றிவிடும். புதிதாக, உள்நாட்டில் இரும்புத் தொழிற்சாலைகளோ, அல்லது பிற தொழிற்சாலைகளோ அமெரிக்க அரசாங்கம் அமைக்கும் முயற்சி செய்யாமல் இந்த அதிக வரி எந்த விதத்தில் பயன் அளிக்கும்? அமெரிக்கா, தனது நாட்டுக்குள் உற்பத்தி ஆலைகளை உண்மையில் அமைக்க விரும்புகிறதா?

நிலப்பரப்பின் அடிப்படையில் உலகில் உள்ள 7 மிகப்பெரிய நாடுகள் 1 ரஷ்யா 2 கனடா 3 அமெரிக்கா 4 சீனா 5 ஆஸ்திரேலியா 6 பிரேசில் 7 இந்தியா ஆகும். ரஷ்யா, கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் ஆகும். எனவே, அதிக பரப்பளவும், மக்கள் தொகையும் கொண்டுள்ள இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் அமெரிக்கா போன்ற முன்னேறிய முதலாளித்துவ நாடுகளின் இலக்காக உள்ளன.

இந்த ஏகாதிபத்திய அரசியலை புரிந்து கொள்ள தோல் பதனிடும் தொழிலை எடுத்துக் கொள்வோம். சிறந்த தோல் காலணி, செருப்பு தயாரிப்பு நிறுவனங்கள் பல இத்தாலியைத் தலைமையிடமாகக் கொண்டு உள்ளவை. ஆனால், அமெரிக்கா, ஐரோப்பாவில் விற்பனையாகும் தோல் பொருட்களில் பெரும்பகுதி இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்படுகின்றன..

இது ஏன்?

தோல் பதனிடும் ஆலைகளுக்கு அதிக அளவில் தண்ணீர் தேவைப்படுகிறது. அதன் கழிவு நீரும், திடக்கழிவும் எளிதில் மண்ணில் மக்காமல் மிகப்பெரிய மாசை (சுற்றுச் சூழல் கேட்டை) உண்டாக்குகின்றன. ஐரோப்பிய, அமெரிக்க மக்கள் மத்தியில் இத்தகைய மாசு படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிரான எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து, 1970-களுக்குப் பிறகு அவற்றை இந்தியா, சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு இடம் மாற்றினர், அந்த நாட்டு முதலாளிகள் தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை, ஆம்பூர், வாணியம்பாடி, ஈரோடு, திண்டுக்கல் போன்ற பகுதிகளில் நிலமும் நீரும் தோல் தொழிலால் நஞ்சாக்கப்பட்டுள்ளது. இதே போல் சாயப்பட்டறைகள் (ஈரோடு, திருப்பூர்), இரும்பு தொழிற்சாலைகள், இரசாயன தொழிற்சாலைகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் போன்ற சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகள் நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளன.

தூத்துக்குடியில் எங்கிருந்தோ இறக்குமதி செய்யப்படும் தாமிர தாதுவை பதப்படுத்தி, தயாரிக்கப்படும் தாமிரத்தை எங்கெங்கோ ஏற்றுமதி செய்யும் ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியின் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி வருவதன் பின்னணி இதுதான். இந்தியா, சீனா போன்ற நாடுகள் இது போன்ற கழிவுகளை தள்ளி விடும் நாடுகளாக மாறியிருக்கின்றன.

Employees of Hon Hai Precision Industry Co. Ltd. work along a production line in the Longhua Science and Technology Park, also known as Foxconn City, in Shenzhen, China, on Saturday, Sept. 4, 2010. Foxconn Technology Group Chairman Terry Gou cut his long-term growth target for the world’s largest contract manufacturer of electronics by 50 percent as demand for Apple Inc. iPhones and iPads fails to offset slowing computer sales. Photographer: Thomas Lee/Bloomberg via Getty Images

அதே நேரம், அமெரிக்கா உயர் தொழில்நுட்பங்கள் அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. அதன் மூலம் ஈட்டும் உயர் லாபத்தையும் நிதி மூலதன நிறுவனங்களையும் ஆதாரமாகக் கொண்டு அமெரிக்க கார்ப்பரேட்டுகள் ஆராய்ச்சிகளுக்காகவும், விளம்பரங்களுக்கும், சந்தைகளை கைப்பற்றவும் பெரும் தொகை செலவு செய்கின்றனர். இத்தகைய தொழில்நுட்பங்களை 1995-ல் போடப்பட்ட அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம் மூலம் தமது கட்டுப்பாட்டில் வைத்து ஏகபோக லாபம் சம்பாதிக்கின்றனர். Microsoft, IBM, போன்ற கம்ப்யூட்டர் நிறுவனங்களையும், intel போன்ற சிப் தயாரிக்கும் நிறுவனங்களையும் apple போன்ற மொபைல் நிறுவனங்களையும், நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்ட இராணுவ தளவாட நிறுவனங்களையும் கொண்டிருக்கும் அமெரிக்கா இந்தியா போன்ற நாடுகளிலிருந்து ஆண்டு தோறும் பல ஆயிரம் கோடி டாலர்களை லாபமாக ஈட்டுகிறது அமெரிக்கா.

இவ்வாறு சீனா, இந்தியா முதலான நாடுகள் தொடர்ந்து பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அடிமைகளாகவே இருக்க வேண்டும்; இந்நாடுகள் தனக்குத் தேவையான உற்பத்தி பொருட்களையும், இயற்கை வளங்களையும், ஏன் ஐ.டி சேவையையும் அடிமாட்டு விலைக்கு தனக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். பதிலாக உயர் விலை கொடுத்து ராணுவ தளவாடங்களையும், உயர் தொழில்நுட்ப பொருட்களையும் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது அமெரிக்கா வகுத்திருக்கும் உலக சட்டம்.

ஆனால், ஆயத்த ஆடை, தோல் பொருட்கள், விளையாட்டு பொருட்கள் போன்ற உழைப்பு அதிகம் தேவைப்படும் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வந்த சீனா, அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக படிப்படியாக உயர் தொழில்நுட்பத்தில் பெருமளவு வளரத் தொடங்கியது. மின்னணு பொருட்கள், தகவல் தொழில்நுட்ப கருவிகள், சூரிய மின்சக்தி தொழில்நுட்பம் முதலான உயர் தொழில்நுட்ப துறைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. உலகச் சந்தையில் அது அமெரிக்காவிற்கு போட்டியாக வளரத் தொடங்கியுள்ளது.

மேலும், சீனா அமெரிக்க நிறுவனங்களின் செயல்பாடுகளை சீனச் சந்தையில் கட்டுபடுத்தியது அல்லது முற்றிலும் தடை செய்தது. உதாரணமாக, சீனாவின் அலிபாபா அமெரிக்காவின் அமேசானை பின்னுக்குத் தள்ளி விட்டது. சீனாவுக்குள் கூகிள், ஃபேஸ்புக், டுவிட்டர் ஆகியவை தடை செய்யப்பட்டு அவற்றுக்கு இணையான சேவை வழங்கும் சீன நிறுவனங்கள் ஏகபோகம் செலுத்துகின்றன.

மேலும், சீனா கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்கும் தோல் பதனிடும் ஆலைகள் போன்றவற்றை மூடத்துவங்கியது.

இவ்வாறு சீனா தனக்கு சவால் விடும் விதமாக வளர்வதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிதான் இப்போது டிரம்ப் அறிவித்துள்ள வர்த்தகப் போர்.

ஆசிய நாடுகள் இரண்டாம் கட்ட தொழில்நுட்பத்துடனான தொழில்களில் மட்டுமே வளர்ச்சி பெற வேண்டும் என்ற அமெரிக்காவின் நோக்கமே இந்த வர்த்தக போரின் நோக்கம். சீனா உயர் தொழில் நுட்ப துறைகளில் வளர்வதை தடுத்து நிறுத்தி, இரண்டாம் கட்டத் தொழில்களை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்றும், அதன் மூலம் பணக்கார நாடுகள் மேலும் பணக்காரர்களாக வேண்டும் என்ற அமெரிக்காவின் அரசியல் இதன் பின் உள்ளது. இதற்கு பயந்து சீனா பின்வாங்கப் போகிறதா அல்லது அமெரிக்காவை எதிர்த்து மோதப் போகிறதா என்பது வரும் கால நிகழ்வுகளை முடிவு செய்யும்.

மோடியின் இந்திய அரசு அமெரிக்காவின் செல்லக் குழந்தையாகத் திகழ்கிறது என்று இந்திய ஊடகங்களில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. உண்மையில் இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசும் அமெரிக்காவிற்கு தலையாட்டி பொம்மையாகத்தான் இருந்தது. இந்தியாவை மிரட்டுவதற்கு அமெரிக்க அரசின் துருப்புச் சீட்டே இந்தியர்களுக்கு H1B விசாவில் கெடுபிடி, BPO வின் புதிய கொள்கைகள் போன்றவை. ஆனால் நமக்கு வாய்த்த அரசுகள் அமெரிக்காவின் ஆணைக்கு அடிபணிந்தே நடக்கின்றன என்பதையே நமது நாட்டில் நடக்கும் பல நிகழ்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போலத் தோன்றினாலும் இதற்கும் இப்போது தமிழ்நாட்டில் நாம் எதிர்த்து போராடி வரும் சில பிரச்சனைகளுக்கு என்ன தொடர்பு என்று பார்க்கலாம்.

  • நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டமும், மீத்தேன் எடுக்கும் திட்டமும் டெல்டா விவசாயத்தை அழிக்கும் என்று தெரிந்தே ஏன் மோடி அரசு அதனை அமல்படுத்த முயற்சி செய்கிறது.
  • காவிரி நீர் இல்லை என்றால் டெல்டா விவசாயம் அழிந்து விடும் என்று தெரிந்தே ஏன் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கிறது?

உரம், விதைகள், பூச்சி மருந்து செலவு அதிகரிப்பு, விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்காதது, இயற்கை சீற்றங்களுக்கு போதுமான நிவாரணம் மறுப்பு போன்ற காரணங்களால் பெரும்பாலான விவசாயிகளுக்கு விவசாயம் கட்டுப்படியாகாததாக மாற்றப்பட்டு விட்டது. பல விவசாயிகள் விவசாயிகள் ஏற்கனவே விளை நிலங்களை விற்று விட்டு பிற தொழில்களுக்கு சென்றுவிட்டனர். இந்நிலையில் காவிரி நிரை மறுத்து விவசாயிகளை ஒட்டு மொத்தமாக விவசாயத்தை விட்டே ஓடும் நிலையை உருவாக்கி விட்டால் மீத்தேன் திட்டம், பெட்ரோ கெமிக்கல் மண்டலம், அனல் மின் நிலையங்கள் அமைப்பது என்று டெல்டா மாவட்டங்களை பன்னாட்டு கார்ப்பரேட் நலனுகு இரையாக்குவது எளிதாகி விடும்.

இதை காரணத்தினால்தான் இப்பொழுது பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஸ்டெர்லைட் விரிவாக்கத்துக்கு எதிராக போராடி அந்த ஆலையை இழுத்து மூட வேண்டும் என்று கோரினாலும், அரசும் நீதிமன்றங்களும் வேதாந்தாவுக்கு ஆதரவாக வெளிப்படையாக செயல்படுகின்றன.

இவற்றை எதிர்த்து எத்தனை மக்கள் போராட்டங்கள் நடைபெற்றாலும் பேச்சு வார்த்தை நடத்துவது, அரசு உத்தரவு போடுவது, வழக்கு நடத்துவது, உச்சநீதி மன்ற தீர்ப்பு என்று இழுத்தடித்து கார்ப்பரேட் நலனை உறுதி செய்வதே இந்த ஒட்டு மொத்த அரசு அமைப்பின் செயல்பாடாக உள்ளது என்பதை பல வழக்குகளில் நாம் பார்த்திருக்கிறோம்.

நம் நாடு அன்னிய ஆதிக்கத்தை எதிர்த்து வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்திய பாரம்பரியத்தைக் கொண்டது. அத்தகைய பெருமை பெற்ற நமது நாடு இப்போது பா.ஜ.க-காங்கிரஸ் ஆல் அமெரிக்காவுக்கு அடிமையாக்கப்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்தி மக்களின் நலனுக்கான ஒரு பொருளாதார அமைப்பை உருவாக்குவது இப்போது நடக்கும் போராட்டங்களின் ஊடாகவே சாத்தியமாகும்.

– சியாம் சுந்தர்

Permanent link to this article: http://new-democrats.com/ta/us-imperialism-exploits-asian-countries/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கஜா புயல் நிவாரண பணியில் நாமும் இறங்க வேண்டும், ஏன்? – பு.ஜ.தொ.மு

கஜா புயல் நிவாரணப் பணியில் இறங்குவோம்! துயர் துடைப்போம்! மக்களை பாதுகாப்போம்! மாற்று அதிகாரங்களை கட்டியமைப்போம்!

சேலம் – சென்னை மட்டுமல்ல, தமிழகத்தை தாக்கும் இன்னும் 8 பசுமைவழி திட்டங்கள்

"தற்போதைய சாலைகளை ஒட்டிய நிலங்களில் பெரும்பாலும் கட்டிடங்கள் இருக்கும் என்பதால் அவற்றை விட விவசாயிகளின் நிலத்தை கையகப் படுத்துவது மிகவும் மலிவு"

Close