வட்டி : தொழிலாளியின் கூலியை அரிக்கும் முதலாளித்துவ காசநோய்

உழைக்கும் மக்களை சுரண்டும் வட்டி

ன்று அனைத்து பாட்டாளி வர்க்கத் தொழிலாளர்களையும், ஏழை விவசாயத் தொழிலாளர்களையும், சிறு வணிகர்களையும் சேர்த்து சுரண்டுகிற, வேகமாக வளர்ந்து கொண்டு வருகிற ஒரு கொடூரமான மிருகம் “வட்டி”. அரசுகளும் முதலாளிகளும் இந்த மிருகத்துக்கு இரை போட்டு வளர்த்து மக்களைச் சுரண்டி பிழைக்கின்றனர்.

தெருவுக்குத் தெரு அடகுக் கடைகளும், வீட்டுக்கே வந்து கடன் வசூலிக்கும் கந்துவட்டிக்காரர்களும், ஊதியத்திலிருந்தே பிடித்துக் கொள்ளும் வங்கிக் கடன்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதன் மூலம் சமூகத்தில் ஒரு சிறு பிரிவினர் எந்த வித உடல் உழைப்பிலும் ஈடுபடாமல் வட்டி வடிவில் அதிகமான பணத்தை தமக்கு ஒதுக்கிக் கொள்கின்றனர்.

உழைக்கும் வர்க்கத்தை வட்டி வடிவிலான இந்த பொருளாதார சுரண்டலில் இருந்து வெளியில் கொண்டு வருவதற்கு இந்தக் கட்டுரை உதவும் என நினைக்கிறேன்.

சுரண்டலில் பலவகை, அதில் வட்டி எல்லோருக்கும் ஒரே வகை

கூலி உழைப்பில் சுரண்டல், விவசாய பொருட்களை விற்பதில் சுரண்டல், விவசாய இடுபொருட்களை வாங்கும் போது சுரண்டல் என்று பலவிதமான சுரண்டல்களில் உழைக்கும் மக்கள் அனைவரையும் பாதிக்கும் பொதுவான ஒன்றாக இருப்பது பணம் கொடுத்து பணத்தை பெருக்கும் “வட்டி” சுரண்டல்.

வட்டியைப் பற்றி புரிந்து கொள்வதற்கு பணம் எதற்காக உருவாக்கப்பட்டது என்பதைப் பற்றியும் காலப் போக்கில் பணத்தை போட்டு உபரி பணத்தை எவ்வாறு தோற்றுவிக்கிறார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக பணம் என்பது சரக்குகளின் மதிப்பை தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான். உதாரணமாக ரூ 100-ஐ ரூ 100-க்கான மதிப்பு அடங்கிய சரக்குகளோடு பரிவர்த்தனை செய்ய வேண்டும். அதாவது, அந்தச் சரக்கில் ரூ 100 மதிப்பிலான உழைப்பு அடங்கியிருக்க வேண்டும்.

ஆனால் வட்டிக்குக் கடன் கொடுப்பவர் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு எந்த உழைப்பும் செலுத்தாமலேயே கொடுத்த பணத்தை விட கூடுதலாக பணத்தை வசூல் செய்கிறார். அதாவது, தான் உழைக்காமலேயே பிறர் உழைப்பின் பலனை பெற்றுக் கொள்கிறார்.

வட்டி பற்றி அரிஸ்டாட்டில் சொல்வதாக காரல் மார்க்ஸ் மேற்கோள் காட்டுவது:

“பணம் எதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டதோ, அந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படவில்லை. அது தோற்றமெடுத்தது சரக்குகளின் பரிவர்த்தனைக்காக; ஆனால் பணத்திலிருந்து இன்னும் அதிக பணத்தை உண்டாக்குகிறது வட்டி. ஆதலால்தான் அதற்கு வட்டியும் குட்டியும் என்ற பெயர். குட்டியும் தாயைப் போன்றதே. வட்டி என்பது பணத்திலிருந்து வரும் பணம் – ஆதலால் பிழைப்பு நடத்துவதற்கான எல்லா வழிகளிலும் இதுவே இயற்கைக்கு முற்றிலும் புறம்பான வழி..”

(மூலதனம் – 1 228 அத்தியாயம் 5 – மூலதனத்தின் பொது சூத்திரத்தில் உள்ள முரண்பாடுகள்)

பரிவர்த்தனையின்போது சம மதிப்புகள் பரிவர்த்தனை செய்யப்படுகின்றதா அல்லது ஒரு தரப்பு மற்றொரு தரப்பை ஏமாற்றி குறைந்த மதிப்பை கொடுகிறதா என்பதைக் கூட விட்டு விடுவோம். வட்டி என்ற வடிவில் மதிப்பு (உழைப்பு) எதையும் கொடுக்காமல் கூடுதல் பணத்தை வாங்கிக் கொள்ளும் பரிவர்த்தனை எல்லா வகைகளிலும் இயற்கைக்கு புறம்பானதுதான்.

முதலாளித்துவ சுரண்டலுக்குப் பிறகு கிடைக்கும் உழைப்பாளர்களின் கூலியை சுரண்டும் வட்டி

நம்முடைய சமூகத்தில் தொழிலாளர்களின் பெரும்பான்மையினருக்கு மிகக் குறைந்த கூலியும், ஒரு சில பிரிவு தொழிலாளர்களுக்கு அதிகக் கூலியும் கொடுக்கின்றனர், முதலாளிகள். இதன் மூலம் பொருளாதார ரீதியாக தொழிலாளர்களை பிரித்து வைக்கின்றனர் என்பது ஒரு புறம் இருக்க கூலி அதிகமாக பெறும் தொழிலாளர்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை விற்று அதிக இலாபம் ஈட்டுகின்றனர், பன்னாட்டு நிறுவனங்கள்.

குறைந்தபட்சம் ரூ 15,000-க்கு மேல் ஊதியம் வாங்கும் தொழிலாளர்களுக்கு வங்கிகள் கடன் கொடுக்க முன்வருகின்றன. அத்தகைய தொழிலாளர்கள் தமது அவசர தேவைகளை, அல்லது தேவையில்லாத ஆடம்பர பொருட்களை வாங்குவதை வங்கியில் கடன் வாங்கியோ, அல்லது கடன் அட்டை (credit card) மூலமாகவோ பூர்த்தி செய்கின்றனர். தனிப்பட்ட கடன் (personal loan), அல்லது கடன் அட்டை (credit card) மூலம் நாம் வாங்கும் பொருட்களுக்கு அதன் விலையை விட கூடுதல் பணத்தை வங்கி நம்மிடமிருந்து வசூலித்துக் கொள்கிறது.

உதாரணமாக, 6 மாதத் தவணை முறையில் கடன் அட்டையை பயன்படுத்தி ரூ 10,000-க்கு ஒரு செல்போன் வாங்கினால், 6 மாதங்களுக்குப் பிறகு நாம் செலுத்தியது மொத்தம் ரூ 11,200 என்று வைத்துக் கொள்வோம். ரூ 10,000-க்கு வாங்கும் போதே பொருள் உற்பத்தி செய்த முதலாளிக்கு இலாபம் கிடைத்து விடுகிறது. இந்தக் கூடுதல் ரூ 1,200 குறிப்பிட்ட தனியார் வங்கிக்கு லாபமாக போய் விடுகிறது. இதற்காக அந்த வங்கி எந்த வேலையையும் செய்யத் தேவையில்லை. பொருளை செய்து விற்று லாபம் ஈட்டுவது ஒரு முதலாளி, வாங்கியது நாம், நடுவில் 6 மாதங்கள் சும்மா இருந்து கொண்டு தனக்கு என்று லாபத்தை, அதாவது நமது உழைப்பை, பதிலுக்கு எதுவும் செய்யாமல் சுருட்டிக் கொண்டிருக்கிறது வங்கி.

வங்கிகளின் வருமானத்தின், லாபத்தின் அடிப்படை “வட்டி” என்ற பெயரில் நம்மிடம் ஈட்டும் பணம்தான். வங்கி சேவை என்பது பொதுமக்களின் சேமிப்பை உற்பத்திக்கு பயன்படுத்தும் வகையில் பரிவர்த்தனை செய்வதாக இருக்கும் வரையில் பிரச்சனையில்லை. ஆனால், இந்த தனியார் வங்கிகள் தொழிலாளர்களின் பணத்தை ஈவு இரக்கமில்லாமல் சுரண்டி பிழைக்கின்றனர்.

அன்னிய நிறுவனங்களுக்கு பணிந்து நமது பொருளாதாரத்தை நிதி மயமாக்கிய அரசுகளும், வங்கிகளும்

உலகமயமாக்கலுக்குப் பின் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மீது பன்னாட்டு நிறுவனங்கள் நுகர்வு கலாச்சாரத்தை ஏவி விட்டுள்ளனர். தேவைக்கு வாங்குவது என்பதிலிருந்து ஆடம்பரத்துக்கு வாங்குவது என்று நமது கலாச்சாரம் மாறி விட்டது. கிரிக்கெட் விளம்பரம், தொலைக்காட்சி விளம்பரங்கள் என்று தொடங்கி பல நூறு வழிகளில் பன்னாட்டு முதலாளிகள் நுகர்வு கலாச்சாரத்தை மிகத்தந்திரமாக மக்களிடம் எடுத்துச் செல்கின்றனர்

நமது அரசுகளும், அரசியல்வாதிகளும் இதைத் தடுக்கத் தவறி விட்டனர். சுரண்டலின் மூலம் பணம் குவித்திருக்கும் முதலாளிகள் ஆளும் அரசுகளை எல்லா வகையிலும் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டதன் விளைவு, தனியார் வங்கிகள் பெருகி, பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறைந்து விட்டது.

பன்னாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க வரும்போது அவர்களது நிதி நிர்வாகமும், தொழிலாளர்களின் கூலியும் தனியார் வங்கிகளாலேயே கையாளப்படுகின்றது. இந்தத் தனியார் வங்கிகள் “லாபம்” என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொழிலாளர்கள் உழைத்து ஈட்டும் கூலியை குறி வைக்கின்றனர். குறி வைத்து கடன் வழங்கி பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்.

இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வங்கிக்கு லாபம் உருவாக்கப்படுகிறது. பன்னாட்டு நிறுவனங்களும், அரசுகளும் தங்களுக்கு சாதகமாக சட்டங்களை உருவாக்கிக் கொள்வதால் தனியார் வங்கிகள் மக்களை பொருளாதார ரீதியாக சுரண்டுகின்றனர்.

இதைத் தடுப்பது எப்படி:

மக்கள் கூட்டாக சமூகமாக தமது விவகாரங்களை நிர்வகிக்கும் ஒரு சமூகத்தில் இத்தகைய தனியார் வங்கிகளுக்கு இடம் கிடையாது. மக்களை தனித்தனியாக பிரித்து, ஒற்றுமையை ஒழித்து விட்ட காரணத்தினால் அவர்களை சுரண்டுவது எளிதாகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது.

உதாரணமாக வட்டி பணப் பரிவர்த்தனையை முற்றிலும் தவிர்க்கும் ஒரு பரிசோதனை முயற்சியை நாம் பார்ப்போம்.

எங்கள் தொழிற்சாலையில் 10 பேர் சேர்ந்த தொழிலாளர் குழு ஒன்றை உருவாக்கினோம். ஒவ்வொருவரும் மாதா மாதம் ரூ 500 சந்தா செலுத்துவதாக வைத்துக் கொண்டோம்.

ஒரு மாதத்திற்கு 10×500=ரூ 5,000 சேமிப்புக் கணக்கில் சேர்ந்து வந்தது. 6 மாத கால சேமிப்புக்குப் பிறகு 6×5000=ரூ 30,000 சேர்ந்து விட்டது.

இந்த 10 பேர் கொண்ட குழுவில் ஒருவருக்கு பணம் தேவைப்பட்ட போது அவர் ரூ 10,000 பணமாக பெற்றுக் கொண்டு மாதத் தவணையாக ரூ 1,000 வீதம் 10 மாதம் செலுத்தினார். ஆனால், அதில் வட்டியோ, கமிஷனோ, கழிவோ கிடையாது. 10வது மாதக் கடைசியில் அவர் செலுத்தும் தொகை அவர் வாங்கிய தொகைக்கு சமமாகத்தான் இருக்கும்.

இப்படி ஒன்றை படிக்கும் போது பல கேள்விகள் மனதில் எழலாம்.

1. முதலில், வாங்கிய ரூ 10,000-ஐ விட 10-வது மாதத்தில் செலுத்தும் ரூ 10,000 மதிப்பு குறைந்தது என்ற கருத்து பற்றி.

இந்த உலகத்தில் “பணவீக்கம்” மற்றும் “வட்டி” என்ற பெயர்கள் முதலாளிகள் தங்கள் முதலாளித்துவ சுரண்டலுக்காக உருவாக்கிக் கொண்டவைதான். இவை அனைத்தும் இயற்கைக்கு மாறாக உடல் உழைப்பில் ஈடுபடாத முதலாளிகளின் கோட்பாடு ஆகும்.

அது ஒருபுறம் இருக்கட்டும். மேற்கூறிய உதாரணத்தில் என்ன நடக்கிறது? கடன் வாங்கிய தொழிலாளி தான் பெற்ற ரூ 10,000 கடனை மாதத் தவணை ரூ 1,000 வீதம் செலுத்தும் போது கூடவே ஒவ்வொரு மாதமும் சந்தாவாக ரூ 500 செலுத்துகிறார். இந்த 500 அவரது சேமிப்பு கணக்கில் வரவு வைத்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அவர் 10 மாதங்களில் ரூ 15,000 செலுத்தியிருப்பார். கடன் தொகை பெற்ற பிறகும் சேமிப்பானது கூடிக் கொண்டுதான் இருக்கும்.

2. இது போன்ற முயற்சிகளை தொழிற்சாலை நிர்வாகம் அனுமதிக்குமா?

உண்மையில் இதற்கு முட்டுக்கட்டை போடத்தான் செய்தார்கள். இதில் முன்னணி வகிக்கும் தொழிலாளர்களை கூப்பிட்டு மென்மையாக மிரட்டுவது, அவர் வேலை செய்யும் இடத்தை மாற்றுவது என்று இந்த முயற்சியை உடைக்க முயற்சித்தனர்.

3. தொழிலாளர்கள் மத்தியில் இதற்கு வரவேற்பு எப்படி இருந்தது?

ஒரு குழுவில் 10 தொழிலாளர்களோடு தொடங்கிய இந்த முயற்சி பற்றிய செய்தி பரவி 2-3 மாதங்களில் 8 குழுக்களில் 80 தொழிலாளர்கள் இந்த கூட்டுறவு முயற்சியை தொடங்கி விட்டார்கள்.

4. இதன் மூலம் வட்டியை ஒழித்துக் கட்டி விட முடியுமா?

முடியாதுதான். இதற்குள் பல பிரச்சனைகள் வரலாம். ஆனால், இந்த முயற்சி நாம் வாழும் இந்தக் கட்டமைப்பின் சுரண்டல் அநியாயத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. இந்தக் கட்டமைப்பை உடைப்பதற்கான திசைவழியை காட்டுகிறது.

இது போன்ற தொழிலாளர்களின் கூட்டு சோதனை முயற்சிகளின் மூலம்தான் வட்டி என்ற மிருகத்தை கொல்வதற்கான பாதையை உருவாக்க முடியும். முதலாளித்துவம் என்ற கொடூர மிருகத்தை வீழ்த்த முடியும்.

உழைப்பவரும், அவர் உழைப்பில் வாழ்பவரும் என்று சமுதாயம் பிளவுபட்ட போது ஆரம்பித்த சுரண்டல் இன்று பெரும் அளவு அதிகரித்திருக்கிறது. மனிதாபிமானமும், கூட்டு வாழ்க்கை முறையும் முற்றிலும் அழியும் விதத்தில் முதலாளித்துவ சுரண்டல் நம்மை எல்லாம் அச்சுறுத்தி வருகிறது. சுரண்டலை ஒழித்துக் கட்டுவதன் மூலம்தான் மக்களின் உண்மையான பொருளாதார விடுதலை அமைய முடியும். சுயநலமில்லாத மனிதர்களின் மனிதாபிமானமும், கூட்டாக சிந்தித்து உழைக்கும் திறனும் மட்டுமே மனிதகுலத்தின் விடுதலையை நோக்கி இட்டுச் செல்லும்.

கிராமங்களிலும், நகரங்களிலும் கூட்டு நடவடிக்கை மூலமே உழைக்கும் மக்களின் விடுதலையையும், நலவாழ்வையையும் நாம் உறுதி செய்ய முடியும். மனித உழைப்பை மதிக்கும் இத்தகைய செயல்களால்தான் நாம் பொருளாதார சுரண்டல்களிலிருந்து விடுபட்டு சமத்துவத்தை நோக்கி நகர முடியும்.

தோழர்களே இது அழைப்பு அல்ல … சுரண்டலுக்கு எதிரான அறைகூவல்

– விஜி குமார்

Permanent link to this article: http://new-democrats.com/ta/ususry-a-killer-disease-bred-by-capitalism/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
கால்நடை வர்த்தகத் தடை, தொழிற்சங்கம் – வரலாறும் அரசியலும் : அரங்கக் கூட்டம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி - ஐ.டி ஊழியர்கள் பிரிவு அரங்கக் கூட்டம் நாள் : சனிக்கிழமை ஜூன் 17, 2017 நேரம் : மாலை 4...

வீடு தேடி வரும் உணவு: நுகர்வு பசிக்கு வேட்டை; தொழிலாளிக்கு சாட்டை!

இந்த குறைகூலி தொழிலாளர்களின் வேலை, நடுத்தர வர்க்க நா சுவைக்கு தீனி போடும் பல்வேறு உயர்தர உணவகங்களை சார்ந்து இருந்தாலும், இவர்களுக்குக் கொடுக்கப்படும் ஊதியமானது ரோட்டோர கையேந்தி...

Close