வட சென்னையில் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

முன்னுரை

திரைப்படங்களுக்கும் ஒரு ஐ.டி தொழிற்சங்கத்துக்கும் என்ன சம்பந்தம்?

vada-chennai-3சமீபத்தில் ஒரு சில வார இடைவெளிக்குள் வெளியான 5 திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் டெக்னிகல் தரத்தை உலக தரத்துக்கு உயர்த்துவதாக இருந்தன என்று விமர்சகர்கள் சொல்லியிருந்தனர். லெனின் பாரதியின் மேற்கு தொடர்ச்சி மலை, மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள், வெற்றி மாறனின் வடசென்னை, ராம் குமாரின் ராட்சசன், மற்றும் பிரேம் குமாரின் 96 ஆகிய படங்கள்தான் அவை.

பொதுவாக இத்தகைய ஒரு சிறந்த கலைப்படைப்புகள் சமூக வாழ்வின் ஒரு பகுதியின் குறுக்கு வெட்டை காட்டி நம்மை மேம்படுத்துகின்றன. அந்த வகையில் பரியேறும் பெருமாள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு கிராம இளைஞன் திருநெல்வேலி நகரில் எதிர் கொள்ளும் சாதிய அடக்குமுறையை முன் வைத்து அந்த மக்களின் வாழ்வை படம் பிடித்தது. மேற்கு தொடர்ச்சி மலை தேனி மாவட்டத்தில் மலைசார் மக்களின் வாழ்நிலையை காட்டியது. வட சென்னை படம் மீனவ குப்பத்து மக்களின் வாழ்க்கையை காட்டுகிறது.

இது போன்ற வெவ்வேறுபட்ட சூழல்களில் வளர்ந்த ஒவ்வொருவரும் இதுதான் உலகம் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள். ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் இத்தகைய வேறுபட்ட பின்னணி கொண்ட நபர்கள் வேலைக்கு வருகிறார்கள். நமது கலாச்சாரம், சிந்தனைப் போக்கு, மதிப்பீடுகள் வேறுபடுகின்றன. குப்பங்களில் இருந்து படித்து தப்பித்து விட வேண்டும் என்று வருபவர்களும், விவசாய கிராமத்தில் இருந்து போராடி படித்து வருபவர்களும், நகரங்களில் வசதியான பின்னணியில் வலி தெரியாமல் வாழ்ந்து வருபவர்களும் ஒரே இடத்தில் வேலை செய்கின்றனர். இவ்வாறு வழக்கறிஞர்களாக, வங்கி ஊழியர்களாக, கல்லூரி ஆசிரியர்களாக, ஐ.டி துறையில் சக ஊழியர்களாக பல தரப்பட்ட, வெவ்வேறு பின்னணி கொண்ட நண்பர்களை பார்க்கிறோம். நகரங்களில் நமது பணி வாழ்விலும் அதற்கு வெளியிலும் எதிர் கொள்கிறோம். இவ்வாறு நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பின்னணியும் வெவ்வேறானது என்பதை புரிந்து கொள்வது நாகரீக சமூகத்தின் அடிப்படையாக உள்ளது.

vada-chennai-2ஐ.டி துறையை பொறுத்தவரையில் ஒரு குறிப்பிட்ட கலாச்சார வார்ப்பில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதில் ஆரம்பத்தில் பணியாற்ற ஆரம்பித்த, நிறுனவங்களை ஆரம்பித்த பார்ப்பன – பனியா சாதியினரின் கலாச்சாரம்தான் ஏற்றுக் கொண்ட கலாச்சாரமாக கருதப்படுகிறது. மாட்டிறைச்சி கொண்டு வரக் கூடாது, கருவாடு சாப்பிடக் கூடாது, ஆயுத பூஜைக்கு கம்ப்யூட்டருக்கு பொட்டு வைக்க வேண்டும் என்ற கலாச்சாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கிடா வெட்டி கறி விருந்து வைக்கும் கலாச்சாரத்தைப் பற்றி பேசக் கூட முடியுமா? அது நாட்டுப்புறம் என்று ஒதுக்கப்படுகிறது. கருவாடு சாப்பிடுவது ஆரோக்கியக் குறைவு என்று முகச் சுழிப்பை பெறுகிறது.

இதே ஐ.டி துறையின் வளர்ச்சிதான் உழைக்கும் மக்களின் வீடுகளை தூக்கி எறிவதற்கான சாலை, கட்டிட உள்கட்டமைப்பு தேவைக்கும் அடித்தளமாக உள்ளது. எனவே, விவசாய வாழ்வையும், மீனவர் வாழ்வையும், சாதி ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வையும் புரிந்து கொள்வதுதான் நம்மை பொறுப்புள்ள, நாகரீகமுள்ள சமூக மனிதர்களாக மாற்றும். அதற்கு இத்தகைய கலைப்படைப்புகள் பெரும்பங்காற்றுகின்றன.

வட சென்னை படத்தில் நமக்கு இன்னும் ஒரு மெசேஜ் உள்ளது. அது விமர்சனத்தின் இறுதியில்.

வடசென்னை

சுமார் 20 ஆண்டுகளில் தமிழ் மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொண்ட காசிமேடு பகுதியில் நடப்பதாக சொல்லும் படம். வட சென்னையின் கடலோர மக்களின் வாழ்க்கை, மீன்பிடி தொழில்,  வறுமை இவற்றின் பின்னணியில் கடத்தல், போதை மருந்து வியாபாரம், கொலைகள் ஆகியவற்றில் ஈடுபடும் ரவுடிகளின் வாழ்க்கையை சித்தரிக்கிறது.

மீனவ மக்கள் எவ்வாறு தம் வாழ்க்கையை வாழ்வார்கள், பேச்சு மொழி, காதலை சொல்வார்கள். படிப்பை முடிக்க முடியாமல் குப்பத்து மக்கள் தங்களின் வாழ்க்கையை இழப்பது, கிடைக்கும் வேலையை செய்வது என்று நேர்த்தியாக சொல்லி இருக்கிறார்கள். விமர்சகர்கள் சொல்வது போல  படம் ஒரு மிகப்பெரிய ஒரு கேன்வாசில் விரிகிறது. சிக்கலான உறவுகள், உயிரோட்டமான பாத்திரங்கள், விபரமான பின்னணி, கிளைக்கதைகள் என்று பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார், இயக்குனர்.

சிறைக்குள் எப்படி பொருட்கள் கொண்டு வரப்படுகிறது? சிறைக்குள் இருக்கும் அரசியல் கட்சிகள், சிறைக்குள்ளும் எப்படி வியாபாரம் நடக்கிறது என்று கதையோட்டத்தில் சொல்லப்படுகிறது. காவல்துறை, சிறைத்துறை எப்படி, எப்போது ரௌடிகளை கையாளும்? எப்போது அமைதியாய் இருக்கும்? தேவைப்படும் போது சிறையில் சண்டையை தூண்டி விட்டு காரியத்தை முடித்து கொள்ளும் இயல்புகள். சிறையில் நடக்கும் செல்போன், பீடி, சிகரெட், கஞ்சா, உணவு வியாபாரம் பற்றியும் காவல்துறை லஞ்சத்தை பற்றியும் தெளிவாக சொல்லி இருக்கலாம். ஆனால் இலை மறை காய்மறை என்று இல்லாமல் வெளிப்படையாக சொன்னதே தெளிவாக உண்மையை உணர்த்தியுள்ளது.

vada-chennai-1ஒரு மீனவர் குப்பம் எப்படி இருக்கும்? எப்படி பேசுவார்கள்? எப்படி நடந்து கொள்வார்கள்? குப்பத்து மக்களின் கண்ணோட்டம் என்ன? எதற்கு ஏங்குவார்கள்? அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருக்கும்? என்று தெளிவாக சொல்லியுள்ளார்கள். இதுவரை தமிழ் சினிமாவில் பெண் பார்ப்பது என்றால் மணிரத்தினம், பாலச்சந்தர் என்று மேட்டுக்குடி, ஆதிக்க சாதி பெண் பார்ப்பாகவே அமையும். மெட்ராஸ் படத்தில் ஆரம்பித்துதான் அடித்தட்டு மக்கள் எப்படி ஆண்-பெண் உறவை கையாள்கிறார்கள். அதில் இளைஞர்கள் பெற்றிருக்கும் ஜனநாயகம். அதற்குள் பெருசுகளின் அலட்டல் என்று காட்டப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முதன் முதலில் கதாநாயகியை கெட்டவார்த்தை பேச வைத்து பேச வைத்த அறிமுக காட்சி ஒரு யதார்த்தமான முயற்சியே. அமீர் – ஆண்ட்ரியா காதல் கல்யாணமும் சரி, தனுஷ் – ஐஸ்வர்யா காதல் கல்யாணமும் சரி தனித்தனி சிறுகதைகள்.

இதற்கு மேல் சிறை வாழ்க்கை அரசியல், போலீசை எதிர்கொள்ளும் விதம் என்று கதைகளால் நிரம்பியிருக்கிறது. அரசியல்வாதி எப்படி குப்பத்து மக்களை மக்களை வைத்துக் கொண்டு அதிகாரத்துக்கு வந்து, தனது ஆட்சியில் அதே குப்பத்து மக்களின் முதுகில் குத்துவான். ஆட்சி நடத்தும் அரசியல்வாதிக்கு ஏன் குப்பத்து மக்கள் தேவை? குப்பத்தை சீராக பராமரித்து தரம் தாழ்த்துவான் அரசியல்வாதி. ஒவ்வொரு அடித்தட்டு மக்களின் வாழ்வும், குப்பமும் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்க முடியாத காரணம் பார்க்கும் மக்களுக்கு தெரியும்.

ரவுடிகளை எப்படி வளர்த்து விடுவார்கள்? மாதம் எவ்வளவு கப்பம் வாங்குவது? அரசியல்வாதி தனது அரசியல் வாழ்க்கைக்காக குப்பத்து தாதாக்களின் குறிப்பிட்ட குற்றச் செயல்களை ஏன் செய்யச் சொல்கிறான்?

அரசியல்வாதி காவல் துறையை குப்பத்து ரவடிகளின் குறிப்பிட்ட குற்றச் செயல்களை கண்டுகொள்ளாமல் விடும்படி எப்படி செய்வான் என்பதை இப்படத்தில் சமரசமின்றி காணலாம். கடத்தல் சரக்கை எப்படி கடலில் இருந்து எடுத்து வருவது? கடத்தல் சரக்கை எடுத்து வர அரசியல் எப்படி உதவி செய்கிறது? இந்தப் படத்தில் அரசியல்வாதிகளுக்கு கடத்தலில் பங்கு எவ்வளவு என பேரம் பேசும் காட்சிகள் சூப்பர்.

ஒரு படித்த ஐ.பி.எஸ் ஆஃபீசர் வளர்ச்சி திட்டத்திற்கு எதிராக ஏன் இருக்கிறாய் என்பதை கேட்கும் போது பதில் சொல்லும் ரௌடி தலைவன் தெரிவிக்கும் நிஜத்தை பொறுக்காமல், பேசும் போதே ஐ.பி.எஸ் ஆஃபிசர் கை ஓங்கும் போது ரௌடிகளின் தலைவன் திருப்பி அடிக்கும் தைரியம் உண்மையான ஹீரோயிசம். அடுத்த ஷாட்டே IPS ஆஃபீசர் முட்டி போட்டு இருக்கும் காட்சி அமைப்பு. ஹாலிவுட்க்கு இணையான காட்சி அமைப்பு நேர்த்தி. கடத்தல் தாதாவுக்கு கோபம் வரும் காரணம் நிஜமான சமுதாய கோபம் இன்றைய எதார்த்தம்.

விசாரணை படத்தில் சொல்லிய காவல்துறையின் அடக்குமுறை ஒரு உண்மை என்றால், இதில் மீனவர் குப்பத்தின் அடித்தட்டு மக்களுக்கு எளிய முறையில் புரியும் வகையில் குற்றச்செயலின் அரசியல் பின்னணியை சொல்லிய இயக்குனருக்கு கோடான கோடி நன்றி.

ஒரு ரவுடி தனது சமுதாய மக்களுக்காக சேவையாற்ற நினைக்கும் போது, செயலாற்றும் போது அந்த மக்கள் தலைவன் சக-கூட்டாளிகளால் அரசியல்வாதியின் தூண்டுதலால் கொலை செய்யப்படுவது சாதாரணமானதா? நிதர்சனமான உண்மையா? இந்த உண்மை கண் முன்னே ஒவ்வொரு மக்கள் தலைவன் கைது, சிறைவாசம், பொய் குற்றச்சாட்டு அடக்குமுறை செயலில் இருக்கும் நிஜத்தை சொல்லும். பிற ரவுடிகள் கட்சி விட்டு கட்சி தாவுவது தங்களுக்குத் தாங்களே மோதிக்கொள்வது சிறப்பாக கையாளப்பட்டிருக்கிறது.

மீனவர்களை எப்படி அரசியல்வாதிகள் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் புலம் பெயர சொல்வார்கள்? அரசு அதிகாரிகள், அரசியல் புள்ளிகள் மற்றும் கார்ப்பரேட் டெண்டர்கள் செயல்படும் முறை பாமரனுக்கு புரியும் முறையில் சிறப்பாக சொல்லப் பட்டு உள்ளது.

வாங்கிய கப்பத்திற்கு அக்ரீமெண்ட் இல்லாமலே எப்படி விசுவாசமாக நடந்து கொள்வார்கள் அரசியல்வாதியும், ரௌடியும்? என்பதும் இந்தப் படத்தில் அடங்கும். கோடிகளில் புரளும் டெண்டர்களை அரசியல்வாதிகள் தங்களது வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதற்கு ரௌடிகளை, குப்பத்து மக்களை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்கள்? அரசியல்வாதி குப்பத்து ரௌடியின் ஆசையை தூண்டி, பகையை வளர்த்துச் கொல்வது ஏன்? தேவை முடிந்தவுடன் அந்த ரவுடியை அவரது கையாட்களை வைத்து கொல்வது எப்படி? பிறகு அரசியல்வாதிகள் மற்றும் ரௌடிகள் சூழ்நிலைக்கு ஏற்ப நிறம் மாறுவது என்று நிஜத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கி இருக்கிறார்கள்.

“பேங்க்ல வேலை கிடைச்சுதுன்ன அப்பா அம்மாவ கூட்டிகிட்டு ஃபிளாட்டு வாங்கிட்டு போக வேண்டியதுதான” என்று படித்த குப்பத்து இளைஞனுக்கு ரவுடிகள் அட்வைஸ் செய்கிறார்கள். “ஒங்க ரெண்டு பக்கமும் லாஸ் இருக்கு, கோபம் இருக்கு. ஆனா இது மல்டிமில்லியன் புராஜக்ட். கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிகிட்டீங்கன்ன…” என்று சமாதானப்படுத்துகிறார் காண்டிராக்டர். “ஒரு ஆளுதானே, விட்டுக் கொடுத்துடுங்க, we will make it millions” என்று துரோகத்துக்கு நியாயம் கற்பிக்கிறார்.

வளர்ச்சி திட்டம், வேலைவாய்ப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரத்தை எப்படி அழிப்பது? அதற்கு எதிராக இருப்பவர்கள் தங்களது சக ஆட்களை வைத்துக்கொண்டு கொல்வது எப்படி? என்று நேர்த்தியாக சொல்கிறார்கள். வேலைக்கு சென்று உழைத்து வாழ்வதைவிட அரசு வேலைக்காக விட்டில் பூச்சியாக மாறுவது? ஆசை காட்டுவது? ஒடுக்கப்பட்டோரின் பார்வையில் பார்த்தால் ஜீரணிக்க முடியாத நிஜம்

வளர்ச்சிக்காக ஊரை காலிசெய்ய ஊர் கூட்டத்தில் பேசும் போது அரசு அதிகாரிகள் மற்றும் ரௌடிகளை பார்க்கும் போது

“நாங்க பேசுற பாஷையே புரியல.. நீங்க எப்படி எங்க வாழ்க்கையை முன்னேத்துவீங்க?”

“அவங்க அரசு அதிகாரிங்க எல்லாம் கூட பரவால்ல, அவங்களுக்கு எங்க வாழ்க்கை தெரியல. ஆனா எங்க கூடவே இருக்கற உங்கள மாதிரி கைக்கூலிகள் எங்களை வித்துடுறீங்க.. உங்கள பாத்தா தான் பயமா இருக்கு.”

ஒவ்வொரு குப்பத்தின், சேரியின் மக்களும் அரசியல் பேச வேண்டும், தங்களது வளர்ச்சிக்காக பேச வேண்டும், தங்கள் தடைகளை உயர்த்தி முன்னேற வேண்டும் என்பதே படம் உணர்த்தும் உண்மை. வடசென்னை மட்டும் அல்ல, இந்தியாவின் ஒவ்வொரு தெரு முனையில் இருக்கும் ரௌடிகள் அனைவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் காவியம் இந்தப் படம்!

கத்தியை தீட்டும் முன் புத்தியை தீட்டும் வழிமுறையை படம் சொல்லுகிறது. படித்து முன்னேறு? “Carom” விளையாடி முன்னேறு? உழைத்து முன்னேறு? பொறுக்கித்தனம் திருட்டு கொலை செய்யாதே? பொறுக்கித்தனம் யாருக்காக என்பது ரௌடியின் முன் வைக்கப்படும் கேள்வி? ஒவ்வொரு குற்றச்செயலும் தனது சொந்த சமுதாய தாழ்த்தி அரசியல்வாதியை முன்னேற்றும் கருவியாக ரௌடி இருக்கிறான் என்கிறது வடசென்னை கதை.. இல்லை இல்லை இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு ரௌடிகளின் வாழ்க்கை முறை.

தனுஷை அரசியல் பேசும் ரஜினிகாந்தின் மருமகனாக பார்த்தால், ரஜினியின் காலாவும் தனுஷின் வட சென்னையும் சரியான அரசியலை பேசி இருக்கிறது.. ஆனால் ரஜினியும், தனுஷும் அரசியல் பேச, அரசியல்வாதியாக மாற தகுதி இல்லாத நடிகர்கள் ஆனால் சிறந்த டைரக்டர் நடிகர்கள் என்பது உண்மையான நிஜம்.

வட சென்னை வெற்றிமாறனின் படைப்பு.
அவரின் படைப்பை கொண்டாடுங்கள்.
நடிப்பவனை புறம் தள்ளுங்கள்.
செய்தியை உள்வாங்குங்கள்

ராஜனாக மாறிய அன்பு கடைசியில் சொன்னது.

“நம்ம ஊருக்காக நாமதான் சண்டை செய்யணும். நான் எதுக்கு பயந்து ஓடணும்”

“எங்க போனாலும் திரும்பி வர்றதுக்கு ஊரு இருக்கும்கிற நம்பிக்கைலதான் ஊரை விட்டே போறாங்க, திருப்பி வரச்சொல்ல ஊரே இருக்காதுன்னா எப்பிடி போவாங்க. குப்பை மேடோ, குடிசையோ இது நம்ம ஊரு, நாமதான இதுக்கு சண்ட செய்யணும், நாமதான் அதுக்கு இம்புரூவ்மென்ட் செய்யணும்.”

“எத்தனை பேர் வேணா வரட்டும் நான் இங்கதான் இருப்பேன். செத்தாலும் பரவால்ல. என் ஊருல தான் இறங்கி என்னை சாகடிக்கணும். ஏன் செத்தேன்னு ஊருக்கு தெரியணும்.”

“ஒருத்தன் செத்தா முடியிற சண்டையா இது, இவனுங்களோட நாம சண்டை செய்றதே நம்மளும் ஆளுன்னு காட்றதுக்குத்தான், ஜெயிக்கிறோமோ இல்லையோ மொதல்ல சண்டை செய்யணும், திருப்பி அடிக்கலைன்ன இவனுங்க நம்மள அடிச்சி ஓட விட்டுன்னே இருப்பானுங்க”

“தம்மாத்தூண்டு ANCHOR தான் அம்மாம் பெரிய கப்பலை நிறுத்துகிறது.”

“நான் வருவேன். ஊருக்கு எதுனா பிரச்னைனா வருவேன், உன் சுயநலத்துக்கு ஊரை பலி கொடுக்கணும்னா மொத்த பேரையும் அடிச்சு விட்டுட்டு போயிட்டே இருப்பேன்.”

குப்பத்து மக்களின் மொழியில் சொல்லப்பட்டிருக்கும் “சண்டை செய்வது”, “ஜெயிக்கிறோமோ இல்லையோ மொதல்ல சண்டை செய்யணும்” “தம்மாத்தூண்டு ஆங்கர்தான் அம்மாம் பெரிய கப்பலை நிறுத்துகிறது” போன்றவை கார்ப்பரேட் சுரண்டலை எதிர்த்து போராடும் ஐ.டி ஊழியர்களாகிய நமக்கும் பொருந்தும்.

எனவே, வடசென்னை மக்களுக்காக நி்ற்கும் ராஜன் போல 34 கோடி உழைப்பாளர் சமூக நலனுக்கு, தொழில்சங்க வளர்ச்சிக்கு ஐ.டி துறையிலிருந்து ராஜன், அன்பு போன்ற போராளிகள் தேவை .

குணா, செந்தில், ஜாவா பழனி, வேலு போன்ற உழைப்பாளர்களை காட்டிக்கொடுக்கும், விற்கும் இடைத் தரகர்களை எதிர்த்து முறியடித்து உண்மையான தொழிற்சங்க வளர்ச்சிக்கு ராஜன், அன்பு போன்ற உண்மையான போராளிகள் தேவை.

அன்பு, ராஜன் போன்ற தொழில்சங்க நபர்களாக நாம் உருவெடுப்போம்.

– Kasirajan.A

Permanent link to this article: http://new-democrats.com/ta/vada-chennai-movie-review/

Leave a Reply

Your email address will not be published.

%d bloggers like this:
Read more:
அரசு பணத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை அதானி பிடியில்

2017-ம் ஆண்டின் பட்ஜெட்டில் குஜராத் மாநிலத்தில் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டமும், நிதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2001-ல் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பூஜ்-ல் மத்திய அரசின் செலவில் கட்டப்பட்ட மருத்துவமனை...

எச்1பி, டிரம்ப், ஊழல் தீர்ப்பு – ஐ.டி சங்கக் கூட்டம்

தேதி : சனிக்கிழமை பிப்ரவரி 18, 2017 நேரம் : 5 pm to 8 pm இடம் : திருவான்மியூர் கடற்கரை

Close