வெரிசான் அராஜகம் : 21-ம் நூற்றாண்டில் நடப்பது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியா?

ஒலிம்பியா டெக் பார்க்

சென்னையில் வெரிசான் அலுவலகம் அமைந்திருக்கும் ஒலிம்பியா டெக் பார்க்

வெரிசான் நிறுவனம் தனது 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் பாதிக்கப்படுவது 1000 ஊழியர்களும் அவர்களது குடும்பங்களும் மட்டுமல்ல. பணியிழந்த ஊழியர்களுக்கு என்ன மாதிரியான மன அழுத்தம் இருந்திருக்குமோ அதே அளவிற்கு மன அழுத்தம் பணியில் இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.

சக தொழிலாளியாக நமக்கு இதுபோல தோன்றுகிறது. ஆனால் இதற்கு அந்த நிறுவனம் கூறும் காரணம் என்ன என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

“சந்தையில் அவர்கள் டெக்னாலஜிக்கு தேவைகள் குறைந்துவிட்டது, ஐ.டி துறை நிறுவனங்களுக்கிடையிலான போட்டி அதிகமாகிவிட்டது. போட்டியை சமாளிக்க தவிர்க்க முடியாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்க வேண்டியுள்ளது.”

வெரிசானின் இந்த விளக்கத்தை அப்படியே ஏற்று, சட்டப்படியும் நியாயப்படியும் பரிசீலிப்போம்.

கிழக்கிந்திய கம்பெனி

கார்ப்பரேட்டுகள் 21-ம் நூற்றாண்டின் கிழக்கிந்திய கம்பெனிகள் போல நம் நாட்டை நடத்துகின்றன

கல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற அறிவுத்துறையினருக்கு புதிய விஷயங்களை படிக்கவும், ஆய்வு செய்யவும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் பணி நேரம் குறைவாகவே இருக்கும். ஐ.டி துறையிலும் தொழில்நுட்ப அறிவை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும் நிலையில் ஊழியர்களுக்கு கணிசமான ஓய்வு நேரம் தேவைப்படுகிறது.

மேலும், ஐ.டி துறையில் அடுத்த புதிய டெக்னாலஜி என்ன என்பதும், தனக்கு என்ன டெக்னாலஜி தேவை என்பதும் நிறுவனத்திற்குதான் தெரியும். அப்படியிருக்கும் போது பணியில் இருக்கும் ஒருவர் வெளியில் சென்று படித்து கற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்பதோடு, ஊழியர் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே புதிதாக கற்கிறார் என்பதாலும் அதற்கான செலவும் நிறுவனத்தாலேயே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

ஆனால், லாபத்தின் அடிப்படையில் இயங்கும் முதலாளித்துவ நிறுவனத்தில் அத்தகைய நீண்ட கால கண்ணோட்டம் இல்லாமல் உடனடி செலவு குறைப்பு என்ற நோக்கத்தில் ஊழியர்களை கசக்கி பிழிகின்றனர்.

சட்டமும் புதிய டெக்னாலஜிக்கு ஏற்ப ஊழியர்களை பயிற்றுவிப்பதற்கான அதற்கான பொறுப்பு நிறுவனத்தினுடையது என்கிறது சட்டம். தற்போது வெரிசான் தரப்பு நியாயத்தை சட்டப்படி பரிசீலித்தால் மேற்கூறியவற்றை நிறுவனம் நிறைவேற்றியிருக்க வேண்டும்.

செய்தார்களா?

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியா நடக்கிறது?

அடுத்ததாக, “டெக்னிக்கலாக ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆர்டர் குறைவாக உள்ளது அதனால் தனக்கு இவர்கள் தேவையில்லை” என்று நிறுவனம் முடிவு செய்கிறது என்றால், அப்படி வெளியேற்றும் முன்னர் யார் யாரையெல்லாம் வெளியேற்றப் போகிறோம், என்னென்ன காரணங்களுக்காக வெளியேற்றப் போகிறோம் என்று தொழிலாளர் நல அதிகாரியிடம் சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும் என்கிறது சட்டம். ஆனால், மீண்டும் பணிக்கு ஆட்கள் தேவை என்றால் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப் பட்டவர்களுக்கே முன்னுரிமை என்கிறது அதே சட்டம்.

இப்படி இன்னும் பல சட்டப்படியான வழிகாட்டல்கள் நிறுவனங்களுக்கும், தொழிலாளிகளுக்கும், தொழில் தகராறு சட்டம், 1947-ல் வழங்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் படித்து முடித்து வேலை கிடைத்தால் போதும் என்று அலைந்து திரியும் இளைஞர்களுக்கு இதுபோன்று சட்டங்கள் இருப்பது தெரிவதைவிட, தொழில் நடத்தும் நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும். வெரிசான் என்னதான் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் தனக்காக லீகல் டீம் ஒன்றை வைத்திருக்கும். அப்படிப்பட்ட வெரிசான் நிறுவனம் இந்த சட்டங்களில் ஒன்றையாவது கடைப்பிடித்ததா? கடைப்பிடிக்கவில்லை.

ஆனால், இந்த நிறுவனங்கள் பற்றி ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்.

“இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களும், டாடா போன்ற நமது நாட்டு நிறுவனங்களும் தான் நிறைய கிளைகளை தொடங்கவேண்டும், தொடங்கினால்தான் நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும், நாடு வளரும், வல்லரசாகும்” என்கிறார்கள்.

வெரிசான் நிறுவனம், தன்னுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்த ஊழியர்களை மதிக்கவில்லை, குப்பையை கூட்டி தள்ளுவதுபோல் தள்ளியுள்ளது என்பது மட்டுமல்ல, பிரதமர், முதல்வர், துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிமன்றம், அத்தனைக்கும் மேலான இந்திய சட்டம் என அனைத்தின் மேலும் காரித்துப்பி, “நீங்கள் எல்லாம் என் கால் தூசிக்கு சமம்” என்கிறது.

இப்படி எதையுமே மதிக்காத, தன்னுடைய நலனில் மட்டுமே குறியாக இருக்கும் நிறுவனம்தான் மக்களுக்கு வேலை வாய்ப்பும், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் என்று பல்வேறு வழிகளில் அரசே விளம்பரங்கள் செய்வது ஊழியர்கள் மத்தியில் மட்டுமல்ல, வெளியிலிருந்து பார்க்கும் மக்களுக்கும் இயல்பாக ஒரு கேள்வியை எழுப்புகிறது.

மேற்கூறிய அரசின் உறுப்புகள் யாவும் மக்களுக்கானவர்களா? வெரிசான் நிறுவனத்தின் பங்காளிகளா?

நியாயப்படியும் நடப்பதில்லை, சட்டப்படியும் நடப்பதில்லை, உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் 21-ம் நூற்றாண்டின் கிழக்கிந்திய கம்பெனிகள் போல நம் நாட்டை நடத்துகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நமது ஆட்சியாளர்களோ சமஸ்தான மன்னர்களைப் போல கைகட்டி மவுனம் சாதிக்கின்றனர். கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு சட்டங்களை இயற்றுகின்றனர், அமல்படுத்துகின்றனர்.

நாம் என்ன செய்யப் போகிறோம்?

– பிரவீன்

Permanent link to this article: http://new-democrats.com/ta/verizon-layoffs-are-we-living-under-21st-east-india-company/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
கார்ப்பரேட் தாக்குதல்களும், அரசு வன்முறையும் – பு.ஜ.தொ.மு அரங்குக்கூட்டம்

அரங்கக் கூட்டம் பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு நாள் : மே 20, 2017, சனிக்கிழமை நேரம் : மாலை 4 மணி முதல் 7...

விவசாய பேரழிவு : பொறுப்பை கைகழுவும் அரசு – 1/3

ஒரு அற்பத் தொகையை நிவாரணமாக அறிவித்த மாநில அரசு, காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து கூடுதல் நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி உழவர்களை விரட்டியிருக்கிறது. பயிர்க் காப்பீடு என்பது உழவர்களை மோசடி...

Close