வெரிசான் இறக்கிய பேரிடி தாக்குதல் : ஐ.டி ஊழியரின் நேரடி அனுபவம்

காலையில் வழக்கம் போல வேலைக்கு வந்த ஊழியர்களில் ஆயிரக்கணக்கான பேரை உடனடியாக சீட்டு கிழித்து, செக்யூரிட்டி காவலுடன் வீடு வரை கொண்டு விட்டு வந்திருக்கிறது வெரிசான் நிறுவனம். இது ஐ.டி ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வெரிசான் நிறுவனத்தின் இந்த பயங்கரவாதத்தின் விளைவை நேருக்கு நேர் பார்த்த ஒரு ஊழியரின் அனுபவத்தை கீழே கேட்கலாம்.

பதிவு செய்த நாள் 13-12-2017

ஒலிப்பதிவின் உரை வடிவம்

வணக்கம்.

நான் சென்னையில் உள்ள ஒரு பன்னாட்டு ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். இந்தத் துறையில் 6 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். டி.சி.எஸ், எச்.சி.எல், காக்னிசன்ட் போன்ற உற்பத்தி சாராத சேவை நிறுவனங்களில் நான் வேலை செய்து வருகிறேன். இவர்களுக்கு என்று ஒரு கிளையன்ட் இருப்பார்கள். ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்துக்கு மென்பொருள் தயாரித்து கொடுப்பார்கள், அல்லது மென்பொருள் பராமரிப்பு வேலைகள் செய்து கொடுப்பார்கள். Amex, வெரிசான், சிட்டி பேங்க் போன்ற உற்பத்தி சாராத அல்லது நிதி நிறுவனங்களுக்கு மென்பொருள் சேவை செய்து கொடுக்கும் நிறுவனங்களில்தான் நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கான சில சவால்கள் இருந்தாலும் அதை சமாளித்துக் கொண்டுதான் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில் புதிய புராஜக்ட்டில் இணைக்கப்பட்டேன். அதன் கிளையன்ட் அமெரிக்காவில் உள்ள வெரிசான். அந்த நிறுவனத்திலிருந்து எனக்கு வேலை ஒதுக்குபவர்கள் முக்கால்வாசி பேர் இந்தியர்களாக இருந்தார்கள். சிலர் அமெரிக்காவில் இருந்தார்கள், இன்னும் பலர் சென்னையில் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள ஆர்.எம்இசட் (RMZ), ஒலிம்பியா டெக் பார்க்கில் இருக்கும் அலுவலகத்தில் இருப்பவர்கள்.

2-3 மாதங்களுக்கு அமெரிக்காவில் இருந்து வேலை ஒதுக்கி வந்தார்கள். 2 மாதங்களுக்கு முன்பு ஹைதராபாதில் இருந்து ஒருவரை எனக்கு மேலாளராக மாற்றினார்கள். அவர்தான் எனக்கு வேலை ஒதுக்குவார். நாம் செய்ய வேண்டிய வேலை, அதில் இருக்கும் சந்தேகங்களை அவரிடம் கேட்கலாம். 10 ஆண்டுகளுக்கு மேல் வெரிசானில் வேலை செய்பவர். அவரிடம் சந்தேகங்கள் கேட்டால் தெள்ளத் தெளிவாக விளக்கக் கூடியவராக இருந்தார். சிரித்துக் கொண்டே விளக்குவார். எனக்கு ஆங்கில தகவல் பரிமாறும் திறன் கொஞ்சம் குறைபாடாக இருந்தாலும் அவர் சொல்லும் விதத்தில் புரிந்து கொள்வது எளிதாக இருந்தது. அடுத்தவர்களை எளிமையாக போய்ச் சேரும் விதத்தில் தன்மையாக விளக்குவார். அவர் செய்த வேலைகளை மேல் அதிகாரிகளுக்கு எளிமையாக புரிய வைக்கக் கூடியவராக இருந்தவராக அவரை புரிந்து கொண்டேன்.

  • முந்தா நேற்று (11-12-2017) எனக்கு ஒதுக்கிய வேலை தொடர்பாக சந்தேகம் கேட்டு மின்னஞ்சல் அனுப்பியிருந்தேன். அதற்கு விளக்கம் தாருங்கள் என்று கேட்டிருந்தேன்.
  • நேற்று (12-12-2017) காலையில் மறுபடியும் பதில் கேட்டு அனுப்பினேன். மாலை வரையில் அவர் கணினியில் away-ல் இருந்தார்.
  • இன்றைக்கு ஆஃப்லைனில் (offline) இருந்தார்.

மாலையில் அவருடன் வேலை பார்க்கும் இன்னொரு சக ஊழியரிடம் விசாரித்தேன். “என்னா ஆச்சு காலையிலிருந்து away-ல் இருக்கார், லீவா” என்று கேட்டதற்கு,

“he has left” என்று சொன்னார்.

“அப்படின்னா என்னன்னனு புரியவில்லை, வீட்டுக்கு போய் விட்டாரா, காலையில் வேலைக்கு வந்தாரா” என்று கேட்டேன்.

“இனிமேல் வர மாட்டார்” என்றார்.

எனக்கு அப்பதான் ஸ்ட்ரைக் ஆனது, வெரிசானில் லேஆஃப் நடந்து கொண்டிருக்கிறது என்று.

“லே ஆஃப் பண்ணிட்டாங்களா” என்று கேட்டதற்கு

“ஆமாம்” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

எனக்கு ஒரு மாதிரியாக ஆகி விட்டது. திறமையானவர்களையே வேலையை விட்டு தூக்குகிறார்கள் என்றால். நல்ல வேலை செய்து கொண்டிருந்தவரை திடீரென்று எந்த வித காரணமும் இல்லாமல் வேலையை விட்டு தூக்குகிறார்கள் என்றால், இதன் பொருள் என்ன, அவர்கள் நோக்கம் என்ன, அந்த ஊழியரின் நிலை என்ன, அவர் என்ன செய்வார்? 10 வருடத்துக்கு மேல் அனுபவம் உள்ளவர் இன்னொரு கம்பெனியில் வேலை தேடினால் வேலை கிடைக்குமா? அது மாதிரியான துறையா இது? அப்படிப்பட்ட துறை இல்லைதான்.

எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல், எந்த மனசாட்சியும் இல்லாமல், அட்டூழியமாகத்தான் தகவல் தொழில்நுட்பத்துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு முடிவு கட்டுவதற்கு எல்லோரும் யூனியனா இணைந்து தடுத்தால்தான் உண்டு என்பதை பதிய வைக்க விரும்புகிறேன். வேறு எந்த ஒரு வழியும் இல்லை என்பதை எனது கருத்தாக பதிவு செய்ய விரும்புகிறேன்.

***

ஐ.டி துறையில் பணி புரியும் இந்த நண்பர் கூறுவது போல, கேட்பாரற்று நடக்கும் இந்த கார்ப்பரேட் பயங்கரவாதத் தாக்குதலை எதிர் கொள்வதற்கு ஐ.டி ஊழியர்கள் அனைவரும் வலுவான யூனியனாக இணைவதுதான் ஒரே வழி. வங்கி ஊழியர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள், செவிலியர்கள், ஏன் தனித்தனியாக விவசாயம் செய்யும் விவசாயிகள் கூட சங்கமாக அணிதிரண்டு போராடுகிறார்கள். உயர்கல்வி பயின்ற, தொழில்நுட்ப அறிவு உடைய ஐ.டி ஊழியர்கள் தொழிற்சங்கமாக இணையும் போது கார்ப்பரேட் நிறுவனங்களையும், அவர்களுக்கு ஆதரவாக செயல்படும் இந்த அரசையும் நாம் மாற்றியமைக்க முடியும்.

Permanent link to this article: http://new-democrats.com/ta/verizons-blitzkrieg-a-firsthand-experience/

Leave a Reply

Your email address will not be published.

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this:
Read more:
மோடியைத் தாக்கும் யஷ்வந்த் சின்ஹா

"மோடி அரசின் இந்த நான்கு வருட ஆட்சி இந்தியாவை பின்னோக்கி கொண்டு சென்று இருப்பதுடன், சுதந்திர இந்தியாவில் இதுவரை கட்டிகாக்கப்பட்ட நடுவண் அரசின் மாண்பை சீர்குலைத்திருக்கிறது. பிஜேபி...

உழவர்களின் துயரத்தில் குளிர்காயும் நிதி மூலதனம்

உழவர்களுக்கு பயிர் காப்பீட்டு திட்டத்தை கொண்டு வருவதில் அரசுக்கு என்ன பலன்? இது ஒரு புதிரான கேள்வி, ஏனென்றால் பயிர் காப்பீட்டுத் திட்டம் அரசுக்கு பொருளாதார ரீதியாக...

Close